பைத்தான் படிக்கலாம் வாங்க – 19: வியன், பாரி வயதைக் கண்டுபிடித்த அன்வர்

யாழினி, குழலி, நிறைமதி மூவரும் தோசை சாப்பிட்ட கதையைப் பார்த்தோம் அல்லவா? அதில் யார் யார் எத்தனைத் தோசை தின்றார்கள் என்று பார்த்து விடுவோமா?

கடைசியில் மீதம் இருந்த தோசை 8. இது நிறைமதி தின்றது போக மீதி வைத்த எண்ணிக்கை. நிறைமதி தின்றது மூன்றில் ஒரு பங்கு. அப்படியானால் இப்போது இருக்கும் எட்டுத் தோசை என்பது மூன்றில் இரண்டு பங்கு. மூன்றில் இரண்டு பங்கு என்பது எட்டு என்றால், மூன்றில் ஒரு பங்கு நான்கு. அப்படியானால் நிறைமதி தின்ற தோசைகளின் எண்ணிக்கை நான்கு. [மீண்டும் ஒரு முறை சத்தமாக வாசித்து உறுதி செய்து கொள்ளுங்கள்.]

அப்படியானால் நிறைமதி உணவுக்காகப் பாத்திரத்தை எடுக்கும் போது மொத்தம் பன்னிரண்டு தோசைகள் இருந்திருக்கின்றன. இந்தப் பன்னிரண்டு தான் குழலி மீதி வைத்துப் போன தோசைகளின் எண்ணிக்கை.

குழலி தின்றது மூன்றில் ஒரு பங்கு. அப்படியானால் இப்போது இருக்கும் பன்னிரண்டுத் தோசை என்பது மூன்றில் இரண்டு பங்கு. மூன்றில் இரண்டு பங்கு என்பது பன்னிரண்டு என்றால், மூன்றில் ஒரு பங்கு ஆறு தோசை. அப்படியானால் குழலியின் கணக்கில் ஆறு தோசையைச் சேர்த்துக் கொள்ளலாம். இப்படிப் பார்க்கும் போது குழலி, உண்ண நுழையும் போது [பன்னிரண்டு + ஆறு] பதினெட்டுத் தோசை இருந்திருக்கும்.

இந்தப் பதினெட்டுத் தோசை தான் யாழினி மீதி வைத்த தோசைகளின் எண்ணிக்கை. யாழினியும் மூன்றில் ஒரு பங்கு தின்றதால், [18/2] ஒன்பது தோசையை யாழினி தின்றிருக்க வேண்டும். அப்படியானால் யாழினி முதலில் தோசையை உண்ணத் தொடங்கும் போது இருபத்தேழு தோசைகள் இருந்திருக்க வேண்டும். இதைத்தான் கெட்டிக்காரச் சமையலாளர் கண்டுபிடித்திருந்தார். சரி, இதைப் பைத்தான் நிரலாக எழுதுவோமா?


மீதி = 8 #சமையலாளர் பார்த்த எண்ணிக்கை
#நிறைமதியின் கணக்கில் இருந்து தொடங்குகிறோம்.
தின்ற_தோசை = மீதி//2 # நிறைமதியின் கணக்கு [மூன்றில் ஒரு பங்கு]
print("நிறைமதி தின்ற தோசைகள்", தின்ற_தோசை)
மீதி = மீதி + தின்ற_தோசை #நிறைமதி உணவுக்கு முன் மொத்த மீதி
#இப்போது குழலியின் கணக்கைப் பார்ப்போம்.
தின்ற_தோசை = மீதி//2 #குழலி தின்ற தோசைகள் [மூன்றில் ஒரு பங்கு]
print("குழலி தின்ற தோசைகள்", தின்ற_தோசை)
மீதி = மீதி + தின்ற_தோசை #குழலி உணவுக்கு முன் மொத்த மீதி
#யாழினியின் கணக்கு
தின்ற_தோசை = மீதி//2 #யாழினி தின்ற தோசைகள் [மூன்றில் ஒரு பங்கு]
print("யாழினி தின்ற தோசைகள்", தின்ற_தோசை)
மீதி = மீதி + தின்ற_தோசை
print(மீதி) #சமையலாளர் சுட்டு வைத்திருந்த மொத்தத் தோசைகள்

இந்த நிரலை நன்றாக உற்றுப் பாருங்கள். மெல்ல கங்கா, சந்திரமுகியாக மாறுவதைப் பார் என்பதைப் போல[சந்திரமுகி படம் பார்த்தீர்கள் அல்லவா!?], மெல்ல இந்த நிரலை while தேவையுடைய ஒரு நிரலாக இருப்பதைப் பாருங்கள். while எப்போது போக வேண்டும் என்று படித்தோம்? எப்போது ஒரு வேலையைத் திரும்பத் திரும்பச் செய்கிறோமா அப்போது தானே! இங்கே தின்ற_தோசை, மீதி ஆகிய இரண்டின் கணக்கையும் திரும்பத் திரும்பச் செய்கிறோம் பாருங்கள். எத்தனை பேர் இங்கே இருந்தார்கள்? யாழினி, குழலி, நிறைமதி மூவர். எனவே, மூன்று முறை கணக்கெடுத்துப் பார்த்தோம் அல்லவா?


மீதி = 8 #சமையலாளர் பார்த்த எண்ணிக்கை
நண்பரின்_எண் = 3 #மொத்த_நண்பர்கள்_எண்ணிக்கை
while நண்பரின்_எண்>=1:
தின்ற_தோசை = மீதி//2 # நிறைமதியின் கணக்கு [மூன்றில் ஒரு பங்கு]
print(நண்பரின்_எண்,'ஆவது ஆள் தின்றது', தின்ற_தோசை)
மீதி = மீதி + தின்ற_தோசை
நண்பரின்_எண்-=1
else:
print("மொத்த மீதி", மீதி)

நிரல் எவ்வளவு சின்னதாகச் சுருங்கி விட்டது பாருங்கள். இது தான் whileஇன் பலம்.

வியன், பாரி வயதைக் கண்டுபிடித்த அன்வர்

வியனும் பாரியும் உடன் பிறந்த அண்ணன் தம்பிகள். சுட்டித்தனம் செய்வதில் வல்லவர்கள். வியன் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருக்கிறான்; பாரிக்கு இன்னும் பள்ளிக்குப் போகும் வயது வரவில்லை. வியன், பாரி இருவரின் அப்பா அம்மாவின் நெருங்கிய நண்பர் அன்வர். ஒரு முறை அவர் வியன் வீட்டுக்குப் போய் இருந்தார். இவர்கள் சுழிச் சேட்டைகளை நேரில் பார்த்து, இருவரையும் கூப்பிட்டார்.

‘வியன் உன்னுடைய வயது என்ன? உன்னுடைய தம்பியின் வயது என்ன?’ என்று கேட்டார். அவர் கேட்பது என்னவென்றே சரிவரப் புரியாத மழலையாகிய பாரி, ”நூறு ஆயிரம்” என்று சொன்னான். இதைக் கேட்ட வியனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. ‘தம்பி தப்பாச் சொல்றான். நான் சரியாச் சொல்லட்டுமா மாமா?’ என்றான். ‘சரி’ என்றார் அன்வர்.

‘நான் பிறந்து ஆறு ஆண்டுகள் கழித்து என் தம்பி பாரி பிறந்தான். என் வயதுக்கும் என் தம்பியின் வயதுக்குமான பொது வகுத்தி[Common Divisor] என் தம்பியின் வயது.  நீங்களே என் வயதையும் தம்பி வயதையும் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி விட்டு மீண்டும் விளையாட ஓடி விட்டான் வியன். வியனின் கேள்வியைக் கேட்டு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்த அன்வர், ஒரு சில நொடிகளில் அவர்கள் இருவர் வயதையும் கண்டு பிடித்து விட்டார். உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? கண்டுபிடித்து வையுங்களேன். அடுத்த பதிவில் அதைப் பார்ப்போம்!

குறிப்பு: பொது வகுத்தி என்பது சின்ன வயதில் படித்திருப்போம். ஒரு வேளை மறந்திருந்தால் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து, பொது வகுத்தியை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

%d bloggers like this: