எளிய தமிழில் VR/AR/MR 13. மிகை மெய்ம்மை (Augmented Reality – AR)

VR இல் நாம் முழுவதும் மெய்நிகர் உலகத்திலேயே சஞ்சரித்தோம். அது கல்விக்கும், பயிற்சிக்கும், உட்புற வடிவமைப்புக்கும் மற்றும் பல வேலைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறதென்று பார்த்தோம். இருப்பினும் நம்மைச் சுற்றியுள்ள மெய்யான உலகை எடுத்து அதன்மேல் தேவையைப் பொருத்து சில மெய்நிகர் உருவங்களையும், வரைபடங்களையும், உரைகளையும் காட்ட இயன்றால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இதுதான் மிகைப்படுத்திய அல்லது மிகை மெய்ம்மை. இது மேலும் பல வேலைகளுக்குப் பயன்படுமல்லவா?

பழுது இடமறிதல் AR

பழுது இடமறிதல் AR

போக்கிமான் கோ (Pokemon Go) என்ற திறன்பேசி விளையாட்டு இதைப் பிரபலமாக்கியது

இந்த விளையாட்டு முதன்முறையாக 2016 இல் வெளியிடப்பட்டது. மெய்நிகர் உருவங்களைக் கண்டுபிடிக்கவும், கைப்பற்றவும், பயிற்சியளிக்கவும், சண்டைபோடவும் இது புவிநிலை காட்டி (GPS) உள்ள திறன்பேசிகளைப் பயன்படுத்துகிறது. அந்த உருவங்கள் உங்கள் மெய்யுலகத்தில் இருப்பது போலவே தோன்றும்.

விளையாடுபவர்கள் ஓரித்திலிருந்து மற்றோரிடம் செல்லும்போது, தங்களின் மெய்நிகர் உருவங்கள் (avatars) விளையாட்டின் நிலப்படத்திற்குள் (map) நகர்வதைப் பார்க்கமுடியும். வெவ்வேறு போக்கிமான் இனங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்றன. விளையாடுபவர் போக்கிமானை எதிர்கொள்ளும்போது, அது AR பயன்முறையில் திறன்பேசி நிலப்படத்தில் தெரியும்.

மெய்யுலகத்தின் மேல் மெய்நிகர் மேலடுக்கு (virtual overlay)

மிகை மெய்ம்மை மெய்யுலகத்தின் மேல் மெய்நிகர் மேலடுக்கு (virtual overlay) அமைக்கிறது. இந்த மேலடுக்கு மெய்ம்மையில் இல்லாத வடிவங்களைக் காட்டுவதால் அது மிகைப்படுத்திக் காட்டுகிறது என்று சொல்கிறோம். உங்களுக்குப் பரிச்சயமில்லாத ஒரு எந்திரத்தில் நீங்கள் வேலை செய்யவேண்டுமென்று வைத்துக் கொள்வோம். அதன் கையேடைப் படித்தால் ஓரளவு உங்களுக்குப் புரியும். ஒரு குறிப்பிட்ட பாகத்தைப் பார்க்கும் போது, படத்தில் காண்பதுபோல்,  அவற்றின் பெயர்கள் அந்தப் படத்தின் மேலேயே தெரிந்தால் இன்னும் எளிதாக இருக்குமல்லவா? இதை சூழ்நிலையைப் பொருத்த உதவி (context-sensitive help) என்று சொல்கிறோம். இம்மாதிரி வேலைகளுக்கு மிகை மெய்ம்மையின் மெய்நிகர் மேலடுக்கு மிகவும் பயனுள்ளது.

திறன்பேசி, கைக்கணினி அல்லது மூக்குக்கண்ணாடி தேவை

இம்மாதிரி மெய்யுலகத்தின் மேல் நீங்கள் தேர்ந்தெடுத்த மாதிரிகளை மெய்நிகர் மேலடுக்கில் காட்டுவதற்கு திறன்பேசி, கைக்கணினி அல்லது மூக்குக்கண்ணாடி போன்ற ஒரு சாதனம் தேவை. AR உருவாக்கும் கருவிகள் மாதிரியின் நிலையை சரிசெய்ய பின்வரும் அம்சங்களைக் கொண்டிருக்கும். மாதிரியைத் தேவைப்பட்ட இடத்துக்கு நகர்த்துதல், தேவைப்பட்ட அளவுக்கு பெரிதாக்குதல் அல்லது சிறிதாக்குதல், வேண்டியபடி திருப்புதல் மற்றும் குறிப்பிட்ட இடத்தில் நிலைநிறுத்துதல் (anchoring).

நன்றி

  1. How to Propel Productivity with Augmented Reality

இத்தொடரில் அடுத்த கட்டுரை: மிகை மெய்ம்மை (AR) வகைகள்

குறிப்பி (marker) அடிப்படையிலான AR. குறிப்பியற்ற (markerless) மிகை மெய்ம்மை (AR). புவிநிலை (GPS) அடிப்படையிலான AR. ஒளிவீச்சு (Projection) அடிப்படையிலான AR. மேற்சுமத்தல் (Superimposition) அடிப்படையிலான AR.

ashokramach@gmail.com

%d bloggers like this: