எளிய தமிழில் CAD/CAM/CAE 22. பாகங்களின் பட்டியல் (Bill of Materials)

சரி, பாகங்களை வரைந்து விட்டீர்கள். அவற்றைத் தொகுத்துப் பார்த்து விட்டீர்கள். தொகுத்த பின் இயக்கியும் பார்த்து விட்டீர்கள். பொறியியல் பகுப்பாய்வு செய்தாகிவிட்டது. அடுத்து தயாரிப்பைத் தொடங்க வேண்டும் அல்லவா? ஆகவே, வடிவமைப்பு மற்றும் வளராக்கத் துறையிலிருந்து (design and development department) உற்பத்தித் துறைக்கு (production department) இந்தத் தயாரிப்பை வெளியீடும் செய்து விட்டீர்கள்.

பாகங்களின் பட்டியலை எடுத்து உற்பத்தித் துறையினர் எந்தெந்த பாகங்களைத் தங்கள் தொழிற்சாலையிலேயே தயார் செய்வது மற்றும் எந்தெந்த பாகங்களை வெளியிலிருந்து வாங்குவது (Make-or-Buy decision) என்று முடிவு செய்வார்கள். இந்தக் கட்டத்தில் குழு முயற்சியில் வேலைகள் ஒழுங்காக நடைபெற பாகங்களின் பட்டியல் மிகவும் இன்றியமையாத அடிப்படை. மேலும் தற்காலத்தில் நாம் தயாரிப்புகளில் மின்னணுவியல் பாகங்களைப் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இவற்றை விரிதாளில் மேலாண்மை செய்ய முயன்றால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆகவே பாகங்கள் பட்டியல் மென்பொருள் அவசியம் தேவைப்படுகிறது.

இன்டபாம் (Indabom) பாகங்களின் பட்டியல்

பல தயாரிப்பு வாழ்க்கை வட்ட மேலாண்மை (PLM) மற்றும் பாகங்கள் பட்டியல் (BOM) கருவிகள் பெரும்பாலான நிறுவனங்கள் உண்மையில் பயன்படுத்துவதை விட அதிக அம்சங்களைக் கொண்டுள்ளன. இம்மாதிரி மென்பொருட்களை வாங்க விலை அதிகம் மட்டுமல்லாமல் பராமரிப்புக்கும் அதிக செலவு ஆகும். குறிப்பாக தொடக்கநிலை மற்றும் சிறு நிறுவனங்களுக்கு இது பெரும்  பிரச்சினையாகிறது. இதற்கு மாறாக திறந்த மூல இண்டபாம் நிறுவவும், பயன்படுத்தவும் மிகவும் எளிதானது.

இந்த மென்பொருளில் உங்கள் பாகங்கள் பட்டியல், பாகங்களை நீங்களே தயாரிக்கப் போகிறீர்களா அல்லது எங்கிருந்து வாங்கப் போகிறீர்கள் (component sourcing) மற்றும் மாற்றக் கட்டுப்பாடு (revision control) ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். தொகுப்புகள், துணைத்தொகுப்புகள், பாகங்கள் ஆகியவை பெற்றோர் பிள்ளை (Parent-Child) உறவுமுறையில் அடுக்கு வரிசையில் காட்டப்படும்.

தற்காலத்தில் பெரும்பாலான பொறியியல் சாதனங்களில் மின்னணுவியல் கட்டுப்பாடுகள் பரவலாகப் பொருத்தப்படுகின்றன என்பது தெரிந்ததே. இவற்றுக்கு மவுசர் (Mouser), ஆக்டோபார்ட் (Octopart), டிஜிகீ (Digikey) போன்ற மின்னணுவியல் பாகங்கள் விநியோக நிறுவனங்களின் நவீன இணையதளங்களுடன் ஒருங்கிணைத்து வாங்கும் விலையையும் மற்ற விவரங்களையும்  தானியங்கியாகப் பெற்றுத்தரும் வசதியும் உள்ளது. 

தயாரிப்பு மேலாண்மை (PLM/PDM)

பெரும் நிறுவனங்களில் இதைவிட விலாவாரியான தயாரிப்புத் தரவுகள் மேலாண்மை (Product Data Management – PDM) மற்றும் தயாரிப்பு வாழ்க்கை வட்ட மேலாண்மை (Product Lifecycle Management – PLM) ஆகிய மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்த மென்பொருட்களையும் பாகங்கள் பட்டியலையும் மதிப்பீடு செய்து தங்களுக்கு எது தோதானது என்று முடிவு செய்யலாம்.

தயாரிப்பு வாழ்க்கை வட்ட மேலாண்மை – டாக்டோகு (DocDoku PLM)

டாக்டோகு PLM - வானூர்தி

டாக்டோகு PLM – வானூர்தி

பாகங்கள் பட்டியல் மென்பொருட்கள் செய்யக் கூடிய எல்லா வேலைகளையும் திறந்த மூல டாக்டோகு செய்யும். தவிர உங்கள் தயாரிப்பை இணைய உலாவியிலேயே 3D உருவகப்படுத்திப் பார்க்க முடியும். தொகுப்புகளின் கிளைப்படத்தில் பாகங்களை உளது/இலது (On/Off) என்று மாற்றினால் 3D உருவகப்படுத்துதல் அதேபோல மாறும். 

பணிப்போக்கு (workflow) என்பது முடிக்க வேண்டிய பல்வேறு பணிகள் மற்றும் அவற்றின் வரிசை முறைகளைக் காட்டும். இந்தப் பணிகள் ஒரே பணியிடத்தைச் சேர்ந்த வெவ்வேறு பயனர்களுக்கு பங்கு அடிப்படையில் (role based) ஒதுக்கப்படும்.

தயாரிப்பு வாழ்க்கை வட்ட மேலாண்மை – ஓடூ (Odoo PLM)

ஓடூ என்பது திறந்த மூலத் தொழில்வளத் திட்டமிடல் (Enterprise Resource Planning) மென்பொருள். உங்கள் நிறுவனத்திற்கு இதைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இதன் நீட்சியாகத் தயாரிப்பு வாழ்க்கை வட்ட மேலாண்மை நிரல்கூறு (module) நிறுவிப் பயன்படுத்தலாம்.

நன்றி தெரிவிப்புகள்

  1. DocDoku Blog

இத்துடன் இக்கட்டுரைத் தொடர் முற்றும். நன்றி!

ashokramach@gmail.com

%d bloggers like this: