எளிய தமிழில் Computer Vision 9. பட அம்சங்களைப் பிரித்தெடுத்தல் (Feature extraction)

படங்களிலிருந்து நமக்குப் பயனுள்ள அம்சங்களைப் பிரித்தெடுக்க பட அலசல் செயலாக்கம் (image processing) செய்கிறோம். அடுத்து வரும் ஒவ்வொரு வேலைக்கும் ஒன்றுக்கு மேல்பட்ட செயல்முறைகள் நாம் பார்த்த மென்பொருட்களில் உள்ளன. நம் வேலைக்கு ஏற்றவாறு நாம் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விளிம்பு கண்டறிதல் (Edge detection)

ஒரு படத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அல்லது இடைநிறுத்தங்கள் (discontinuities) வரும் இடங்களை விளிம்புகள் என்று நாம் கூறலாம். வண்ண மாறல் விகிதம் (color gradient) என்ற நுட்பம் வெவ்வேறு பொருட்களின் விளிம்புகளைக் கண்டுபிடிக்கப் பயன்படுகிறது. 

கருப்பு வெள்ளை இருமப் படத்தில் விளிம்பு கண்டறிதல்

கருப்பு வெள்ளை இருமப் படத்தில் விளிம்பு கண்டறிதல்

விளிம்புகளில் ஒளிர்வு அதீதமாக அல்லது தொடர்ச்சியற்று மாறுகிறது. இம்மாதிரி மாறும் இடங்களையொட்டிய புள்ளிகளை இணைத்து நாம் ஒரு கோடாக வரைந்தால் அவற்றை விளிம்புகள் எனலாம். 

விளிம்பு கண்டறிதல் மற்றும் சில ஓபன்சிவி பைதான் பயிற்சிகள் இங்கே உள்ளன.

வண்ணப் படங்களை சாம்பல் அளவீட்டுப் படமாக்குதல் 

படங்களில் விளிம்பு கண்டறிய சோபல் வினைச்சரம் (Sobel algorithm) பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு படத்தில் மாறுபடும் படவலகின் செறிவை (intensity) அளவிடுவதன் மூலம் இது செயல்படுகிறது.  இயற்கையாகவே படம் ஒரு சாம்பல் அளவீட்டுப் படமாக இருந்தால் இதைச் செயல்படுத்துவது எளிதானது. ஆனால் நம்மிடம் வண்ணப்படம் இருந்தால் அதை முதலில் சாம்பல் படமாக மாற்ற வேண்டும்.

வண்ணப் படத்தை சாம்பல் படமாக மாற்ற ஒரு எளிய வழி சிவப்பு, பச்சை, நீலம் வண்ணங்களின் செறிவுகளின் சராசரியை எடுத்து அந்தப் படவலகில் போடுவது:

சாம்பல் படவலகின் செறிவு = (சி + ப + நீ) /3

ஆனால் கீழ்க்கண்ட சூத்திரம் நம்முடைய கண்களின் இயற்கையான புலனுணர்வை ஒத்தது:

சாம்பல் படவலகின் செறிவு = 0.299 சி + 0.587 ப + 0.114 நீ

இம்மாதிரி மாற்றியபின் நாம் சோபல் வினைச்சரம் பயன்படுத்தி விளிம்புகளைக் கண்டறியலாம்.

சாம்பல் அளவீட்டுப் படத்தில் விளிம்பு கண்டறிதல்

சாம்பல் அளவீட்டுப் படத்தில் விளிம்பு கண்டறிதல்

மூலைகளைக் கண்டறிதல் (Finding corners)

ஒரு மூலையை இரண்டு விளிம்புகளின் குறுக்குவெட்டு என்று கூறலாம். ஆகவே மூலைகளைக் கண்டறியும் வழிமுறைகள் படத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே வண்ணச்சாயலில் ஒரு கோணத்தில் சந்திக்கும் கோடுகளைத் தேடுகின்றன.

இரைச்சலை வடிகட்டுதல் (Noise filtering)

படங்கள் தெளிவாக இல்லாமல் புள்ளி புள்ளியாக அல்லது கோடு கோடாக இருக்கக் கூடும். இதை இரைச்சல் (noise) என்று சொல்கிறோம். நாம் விளிம்பு, மூலை போன்ற அம்சங்களைக் கண்டறிய முயலும்போது படத்தில் இந்த இரைச்சல் இருந்தால் முடிவுகள் சரியாக வராது. ஆகவே முதலில் இரைச்சலை வடிகட்டி நீக்கிவிட வேண்டும்.

நன்றி

  1. Wikimedia Commons – Binary image for edge detection by Highlandsgaucho
  2. How Image Edge Detection Works by Aryaman Sharda

இத்தொடரில் அடுத்த கட்டுரை: வடிவியல் வடிவங்களை அடையாளம் காணுதல்

ஹ்யூ உருமாற்றம் (Hough transform). உருவ வரம்பு கண்டறிதல் (Contour detection). படத்தின் முன்னணியில் உள்ள பொருளைப் பின்னணியில் இருந்து வேறுபடுத்தல்.

ashokramach@gmail.com

%d bloggers like this: