எளிய தமிழில் Computer Vision 26. மேற்பரப்பு குறைபாடு சோதனை (surface defect inspection)

உலோக பாகங்களின் மேற்பரப்பு குறைபாடு சோதனை

மேம்பட்ட 2D மற்றும் 3D மேற்பரப்பு குறைபாடு ஆய்வு அமைப்புகள் இந்த வேலைக்குப் பயன்படுகின்றன. குறிப்பாக உலோக பாகங்களின் பொருளிலோ அல்லது உற்பத்தியிலோ இருக்கும் ஒடுக்கங்கள் (dents), நுண்துளைகள் (pores), சில்லுகள் (chips), பொளிந்த வடுக்கள் (pits), நிறமாற்றம், துரு, கீறல்கள், காடிகள் (grooves) போன்ற பழுதுகளை நம்பத்தகுந்த முறையில் கண்டறிய முடியும். 2D மற்றும் 3D சோதனைகளை சேர்ந்து செய்வதால் தவறான நிராகரிப்பு வீதத்தைக் (false reject rate) குறைக்க முடியும்.

நெகிழி பாகங்களின் மேற்பரப்பு குறைபாடு சோதனை

நெகிழி பாகங்களில் மேற்பரப்பு குறைபாடுகள்

நெகிழி பாகங்களில் மேற்பரப்பு குறைபாடுகள்

நெகிழி பாகங்களை அச்சு வார்ப்பு செய்யும் போது தீய்தல் (burn), கருப்பு புள்ளிகள் (black spots), போதா நிரப்புதல் (insufficient filling), மேற்பரப்பு கீறல்கள் மற்றும் விரிசல்கள் (surface scratches and cracks), குமிழிகள் (bubbles) போன்ற பல்வேறு மேற்பரப்பு குறைபாடுகள் வரக்கூடும். கச்சாப்பொருள், வார்ப்பு அச்சு, தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் வார்ப்பு எந்திரங்கள் காரணமாக இம்மாதிரி பாதிப்புகள் பெரும்பாலும் ஏற்படுகின்றன. வழக்கமாக அனுபவமிக்க பணியாளர்கள் மேற்பரப்பைப் பார்வையில் சோதனை செய்வர் அல்லது ஸ்ட்ரோபோஸ்கோப் (stroboscope) பயன்படுத்தியும் ஓரளவு கண்டறியலாம். இம்முறைகள் திறமையற்றவை மற்றும் பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனாலும் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் இத்தகைய முறைகளைப் பயன்படுத்துகின்றன.

சமீப காலங்களில், நெகிழி பாகங்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய இயந்திரப் பார்வை தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தானியங்கி ஆய்வு முறைகள் புழக்கத்துக்கு வந்துவிட்டன. இவை நம்பத்தகுந்த முறையில் வேலை செய்கின்றன.

பூச்சு தடிமன் (coating thickness) அளவிடுதல் 

எஃகு தயாரிப்பு நிறுவனங்களுக்கு பூச்சு தடிமனைத் துல்லியமாகக் கட்டுப்படுத்துவது மிக முக்கியமானது. ஏனெனில் அதிகப்படியான பூச்சு பயன்படுத்துவது லாபத்தை பாதிக்கிறது. அதே நேரத்தில் போதுமான பூச்சு இல்லாதது உத்தரவாத உரிமைகோரல்களுக்கு (warranty claims) வழிவகுக்கும். கணினிப் பார்வை அமைப்பு அரை மைக்ரான் முதல் 25 மைக்ரான் வரை உள்ள மிக மெல்லிய பூச்சு படலங்களைத் (thin film coatings) துல்லியமாக அளவிடுகிறது.

நன்றி

  1. Troubleshooting Product Defects in Injection Molding

இத்தொடரில் அடுத்த கட்டுரை: பணியாளர் பாதுகாப்பும் உடல்நலனும்

கட்டுமான தளத்தில் ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்த்தல். பழுதடைவதை முன்னறிந்து பராமரித்தல் (Predictive maintenance).

ashokramach@gmail.com

%d bloggers like this: