துருவங்கள் – அத்தியாயம் 12 – அதையும் தாண்டி புனிதமானது

அதையும் தாண்டி புனிதமானது

காரின் முன்னால் பார்த்துக் கொண்டு வந்த மதனுக்கு திடீரென்று ரியர் வியூவ் மிரரை பார்க்க தோன்றியது, யாரும் பார்க்காதவாறு மிரரை பார்க்க கார்த்திகா மதனை பார்த்தவாரே இருந்ததை கண்டான். மதனை பார்த்ததும் கார்த்திகா வேறு இடத்தை பார்க்க தொடங்கினாள். மதன் சிறிய புன்முருவலுடன் மிரரை பார்த்தவாரே இருந்தான். சில நொடிகள் கழித்து கார்த்திகா யாரும் பார்க்காதவாறு மீண்டும் மிரரை பார்க்க, அங்கே மதன் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தனர். கார்த்திகா ஏன் என்னை பார்க்கிறாய் என்று தன் புருவத்தை உயர்த்தி கண்களாலேயே கேட்டாள். அதற்கு மதன் நீதான் என்னை முதலில் பார்த்துக் கொண்டிருந்தாய் என்று கண்களாலேயே பதில் கூறினான். நான் உன் மீது கோபமாக இருக்கிறேன் என்னை பார்க்காதே என்றவாரு கண்னசைத்துவிட்டு திரும்பிக்கொண்டாள். மதன் தன் நிலையை நினைத்து சிரித்தவாறு காரின் முன்னால் பார்க்க தொடர்ந்தான்.

கார்த்திகாவின் வீடு வந்தது. ஒரு அடர்ந்த மலைகளின் நடுவே அடர்ந்த காட்டில் செல்லும் ஒரு சாலையின் வழியில் அவள் வீடு இருந்தது. வீட்டின் பின்புறம் அடர்ந்த காடுகள், பார்ப்பதற்கு மிக ரம்மியமாக இருந்தது. வீட்டின் முன்புறம் இருந்த வாழைத்தோட்டம், இரு புறங்களிலும் இருந்த வெற்றிலை தோட்டங்கள், தோட்டங்களை சுற்றி இருந்த பாக்கு மரங்களும் பார்க்க மிக அழகாக இருந்தது. ‘சார், இது மாதிரி இடத்துல வாழ கொடுத்து வச்சிருக்கனும்’ காரை விட்டு இறங்கிய சுரேஷ் கார்த்திகாவின் அப்பாவை பார்த்து கூறினான். ‘எங்க வீட்டுக்கு வரவங்க எல்லாரும் சொல்றது தான், ஆனா இங்கயும் கஷ்டம் இருக்கு தம்பி, நாலு கிலோமீட்டர் போனாத்தான் ஊரு வரும், மெட்ராஸ்ல இருக்கிற மாதிரி நாம நெனச்சப்ப எது வேண்டுமானாலும் போய் வாங்கிட்டு வர முடியாது, யான, சிருத்த புலி, பாம்பு, எப்ப எங்க நுழையும்னு தெரியாது’ கார்த்திகாவின் அப்பா கூற ‘ஊருக்குள்ள வீடு வாங்கி இருந்தா இந்த பிரச்சனை இருந்திருக்காதே சார்’ மதன் தன் வினாவை எழுப்பினான் ‘இது என் அப்பாவோட இடம்’ கார்த்திகாவின் அப்பா ஏதோ சொல்ல வந்து சொல்லாமல் நிறுத்திவிட்டார். ‘இங்கிருந்து உங்க ஸ்கூல் எவ்வளவு தூரம் சார்’ சுரேஷ் கேட்க ‘எப்படியும் ஆறு கிலோமீட்டர் இருக்கும்’ என்று கார்த்திகா அப்பா கூறினார். ‘சரி வெளியவே நின்னு பேசிட்டு இருந்தா எப்படி, உள்ளே வாங்க’ கார்த்திகாவின் அம்மா அனைவரையும் வீட்டின் உள்ளே அழைத்தார்.

கார்த்திகாவின் அம்மாவும் அப்பாவும் முன்னே உள்ளே சென்றனர். சுரேஷ் தீப்தி மற்றும் கார்த்திகா மூவரும் வீட்டின் அருகே சென்றனர். அப்போது காரின் அருகே நின்று கொண்டிருந்த மதனை பார்த்து ‘வாடா உள்ள போலாம், ஏன் அங்கயே நிக்கிற’ சுரேஷ் கேட்க ‘நீங்க போங்கடா, லேப்டாப் பேக் எடுத்துட்டு வறேன்’ மதன் கூறியதை கேட்டதும் கார்த்திகா வேகமாக உள்ளே சென்றாள். சுரேஷும் தீப்தியும் வீட்டின் உள்ளே நுழைகையில் கார்த்திகா வீட்டின் உள்ளிருந்து வந்துகொண்டே ‘உள்ள உட்காருங்க, கார்ல இருந்து பேக்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துர்றேன்’ சொல்லிவிட்டு காரின் அருகில் சென்றாள். சுரேஷும் தீப்தியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து விட்டு உள்ளே சென்று உட்கார்ந்தனர். கார்த்திகா காரின் பின்னால் சென்று தன் பெற்றோர் எடுத்து வந்த பைகளை எடுக்க மதனின் பின்னால் வந்து நின்றாள். மதன் தன் லேப்டாப் பேகை கையில் எடுத்துக் கொண்டு திரும்ப கார்த்திகா தன் கைகளை கட்டியவாறு நின்றிருந்தாள். கார்த்திகா எதுவும் பேசவில்லை, மதன் ஒதுங்கி நிற்க கார்த்திகா தன் பைகளை எடுத்தாள். ‘என் மேல கோவமா இருக்கீங்க போல’ மதன் ஆறம்பிக்க ‘ஆமாம்’ கார்த்திகா பதில் அளித்தாள். ‘ரீசனே சொல்லாம பொண்ணுங்க கோபப்படுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன், இப்பத்தான் பார்க்கிறேன்’ மதன் சொல்ல ‘ரீசனே தெரியாதமாதிரி பசங்க நடிப்பாங்கன்னு நானும் கேள்விப்பட்டிருக்கேன், இப்பத்தான் பார்க்கிறேன்’ கார்த்திகாவும் பதிலடி கொடுத்தாள். ‘சரி ஏதாச்சும் ஒரு க்ளு கொடுங்க, என்ன நடிக்கிறேன்னு நானும் தெரிஞ்சிக்கிறேன்’ மதன் கேட்க ‘எங்க வீட்டுக்கு வர உங்களுக்கு அப்படி என்ன கஷ்டம்?’ கார்த்திகா கேட்க ‘அது, அது வந்து, அது உங்களுக்கு சொன்னா புரியாது’ மதன் கூற ‘எக்ஸ்க்யூஸ் மீ? நான் ஒன்னும் சின்ன கொழந்த இல்ல’ கார்த்திகா மதனை முறைத்தவாரே கேட்டாள். ‘ஒக்கே பைன், இட் வாஸ் மை மிஸ்டேக், நான் அப்படி பேசியிருக்க கூடாது, இப்ப நான் என்ன பண்ணா நீங்க பத்ரகாளி மோடில் இருந்து நார்மல் மோடுக்கு வருவீங்க’ மதன் கேட்க கார்த்திகாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை, மதன் தான் சிரிப்பதை கவனித்து விடக்கூடாது என்று சட்டென்று திரும்பி கொண்டு தான் எடுக்க வந்த பைகளை எடுத்தாள். ஒருவழியாக சிரிப்பை அடக்கிக்கொண்டு மீண்டும் கோபத்துடன் இருப்பதைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு மதனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தாள். மதனும் காரின் பின்புற கதவை மூடிவிட்டு கார்த்திகாவின் பின்னால் நடந்து வந்தான். வீட்டின் வாசப்படி அருகில் வரும்போது கார்த்திகா திரும்பி மதனை பார்த்து ‘உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன், ஒருத்தர் வீட்டுக்கு புதுசா வரும்போது வலது கால் எடுத்து வச்சு வரணும், என்னதான் ஏத்திஸ்டா இருந்தாலும் மத்தவங்க நம்புறத மதிப்பீங்கன்னு நினைக்கிறேன்’ என்று கூற அதற்கு மதன் ‘அத கொஞ்சம் சிரிச்சுகிட்டே சொல்லலாம்ல’ கூறியதும் கார்த்திகா மீண்டும் சட்டென திரும்பிக்கொண்டு சிறு புன்னகையுடன் வீட்டின் உள்ளே சென்றாள். கார்த்திகா சிரித்துக்கொண்டே சென்றதை சுரேஷும் தீப்தியும் கவனித்தார்கள். மதன் கார்த்திகா கட்டளையிட்டபடி தன் வலது காலை எடுத்து வைத்து வீட்டிற்குள் வர அங்கே சுரேஷும் தீப்தியும் அமர்ந்திருந்தார்கள். மதன் அமைதியாக சுரேஷின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

‘என்னடா, கால்ல விழுந்தியா’ சுரேஷ் மதனை கேட்க ‘தெய்வம்டா நீ, எப்புட்றா’ மதன் சுரேஷை பார்த்து வியந்தான். ‘எல்லாம் இவ கொடுத்த ட்ரெய்னிங் தான்’ சுரேஷ் தீப்தியை பார்த்து சொல்லிக்கொண்டிருக்க தீப்தியிடம் இருந்து ஒரு அடி கிடைத்தது. ‘கார்த்திகா சமாதானமாயிட்டாங்க போல’ சுரேஷ் கூற ‘எங்கடா, இன்னும் கோவமா தான் இருக்கா’ மதன் கூற ‘பாத்தா அப்படி தெரியலையே, சிரிச்சிக்கிட்டே உள்ள போனாங்க?’ சுரேஷ் கூற ‘அப்படியா?’ மதன் கூற ‘கோபத்துக்கு ரீசன் தெரிஞ்சதா?’ சுரேஷ் கேட்க ‘அவங்க அப்பா வீட்டுக்கு கூப்ட உடனே நான் வரலையாம்’ மதன் கூற ‘ஆமா, அங்க அப்படி கட்டையை போட்ட, கோபப்படாமல் என்ன செய்வாங்களாம்’ சுரேஷ் கூற ‘என்னடா நீயும் அவள மாதிரியே பேசுர, எனக்கு அவ மேல ஒரு ஃபீலிங் இருக்குடா, அது ப்ரண்ஷிப் இல்ல, என்னால கேவலமா ப்ரண்ட் மாதிரியெல்லாம் நடிக்க முடியாது, அவங்க வீட்டுக்கு வந்து நான் அவகிட்ட பழகுற விதத்தை பார்த்து அவங்க அப்பா அம்மா வெற மாதிரி புரிஞ்சிக்கிட்டா தேவையில்லாத பிரச்சனை, அதனாலத்தான் நான் வரலைன்னு சொன்னேன்’ மதன் கூற ‘சில்லியான ரீசன், அவங்க ஒன்னும் உன்ன கார்த்திகாவேட பர்ஸ்ட் டைம் பாக்கல, ஆல்ரெடி ஆபீஸ் வைரல் வீடியோல பாத்திருக்காங்க, கல்யாணத்துல பாத்திருக்காங்க, அப்ப வராத சந்தேகம் இப்ப வரப்போகுதா, அப்படி வந்தாலும் தப்பில்ல, ரொம்ப நாள் இழுத்தடிக்காம அடுத்த லெவலுக்கு போவீங்க’ சுரேஷ் கூற ‘எனத்தான் இருந்தாலும் கல்யாணத்துக்கு இருக்குற ஒரு பொண்ணு தங்கியிருக்குற வீட்ல நைட் ஸ்டே பண்றது தப்புடா’ மதன் கூற ‘ஆதிவாசி, நீயெல்லாம் மில்லினியத்துக்கு வரவேயில்லையாடா, பயங்கற கன்சர்வேட்டிவ்டா நீ’ சுரேஷ் கூற ‘நாலைக்கு உனக்கு ஒரு பொண்னு பொறந்து கல்யாணத்துக்கு இருக்குறப்ப ஒரு பையன கூட்டிட்டு வந்து நைட் தங்கவெச்சா அப்ப தெரியும்டா யார் கன்சர்வேட்டிவ்னு’ மதன் கூற ‘அண்ணா, நீங்க சொல்றபடி பார்த்தாலும் கார்த்திகா அக்கா ஒன்னும் உங்கல கூட்டிட்டு வரலையே, அவங்க பேரன்ஸ்தான உங்கல கூப்பிட்டாங்க, அப்ப அவங்க பொண்ணு மேல அவ்வலவு நம்பிக்க வெச்சிருக்காங்க, கமான் மதன் அண்ணா, பெத்த பொண்ணு மேல நம்பிக்க இல்லாதவங்கதான் உங்களமாதிரி யோசிப்பாங்க’ தீப்தி மதனை மடக்கினாள். ‘மாப்ள, கிவப், அவளோடது வேலிட் பாண்ட்’ சுரேஷ் மதனை சமாதானப்படுத்தினான். மதன் சற்று குழப்பத்துடன் அமைதியானான்.

மதன் அவனிடத்தில் எந்த தவறும் இல்லை என்றாலும் தவறு செய்கிறோம் என்கிற குற்ற உணர்வில் இருந்தான். சுரேஷும் தீப்தியும் கூறிய வார்த்தைகள் மதனின் பதற்றத்தை சற்று குறைத்தது. மதன் கார்த்திகாவின் வீட்டின் உட்புறத்தை சற்றே சுற்றிப் பார்த்தான். கயல் வீட்டை போல் பிரம்மாண்டமானதாக இல்லாவிட்டாலும் மதனின் வீட்டைப்போல் நல்ல வசதியுடன் இருந்தது. நுழைவாயிலில் இருந்து இடதுபுறத்தில் சமையல் அறையும் அதன் பக்கத்தில் ஒரு ரூமும் இருந்தது. அந்த ரூமுக்கு அட்டாச்டு பாத்ரூம் வைத்திருந்தார்கள். அதற்கு பக்கத்தில் மாடிக்கு செல்ல வீட்டின் உள்ளேயே வழி இருந்தது. ஹாலின் நடுவில் அரைவட்ட வடிவில் பெரிய ஷோபா ஒன்று சமையல் அறையின் எதிர்புரம் பார்த்தவாரு போடப்பட்டு இருந்தது. சமையல் அறையின் எதிர்புர சுவற்றின் நடுவில் மிகப்பெரிய ஸ்மார்ட் டிவி பொருத்தப்பட்டு இருந்தது, அதனுடன் சோனி டிவிடி ஹோம் தியேட்டர் சிஸ்டம் இனைக்கப்பட்டு இருந்தது. பெரிய அளவிலான ஸ்டாலின் புகைப்படம் ஒன்று நுழைவாயிலின் எதிர் சுவற்றின் மேலே மாட்டப்பட்டிருந்தது. மதன் அதை பார்த்ததும் கண்டிப்பாக கார்த்திகாவின் அப்பா கம்யூனிஸ்ட் சங்கத்தில் ஏதாவது ஒன்றில் முக்கிய உறுப்பினராக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தான். மதன், சுரேஷ் சோபாவில் நடுவில் அமர்ந்திருந்தனர். தீப்தி ஷோபாவின் இடது புறம் அமர்ந்திருந்தாள்.

உள்ளே சென்றிருந்த கார்த்திகா தன் உடைகளை மாற்றிக் கொண்டு சாதாரண பச்சை நிற சுடிதாரில் வெளியே வந்து தீப்தியின் அருகில் அமர்ந்தாள். ‘உள்ள என்னோட டிரஸ்ஸஸ் இருக்கு வேணும்னா போய் மாத்திக்கோ’ கார்த்திகா தீப்தியிடம் கூறினாள். ‘பரவாயில்லை அக்கா, இதுவே கம்பர்ட்டாத்தான் இருக்கு’, தீப்தி கூறினாள். ‘டேய் இசிப்பு, இங்க எங்கடா?’, கார்த்திகா அவள் வீட்டிற்கு வந்த சிறுவனை பார்த்து கேட்டாள், ‘தேன் கேட்டிருந்தாங்க, அய்யன் கொடுத்துவிட்டாரு, எடுத்து வந்தேன்’ சிறுவன் கூறினான். ‘உண்மையான பேரே அதானா?’ மதன் அந்த சிறுவனை பார்த்து கேட்டான். ‘அவன் பேரு சுதாகர். நான் செல்லமா இசிப்புன்னு கூப்டுவேன். நம்ம வீட்டுல இருந்து கொஞ்சம் கீழ போனா அவங்க வீடு இருக்கு. அவங்களுக்கு ஏதாவதுன்னா எங்கப்பாத்தான் போய் நிப்பாரு, அதே மாதிரிதான் எங்க வீட்ல ஏதாச்சும் ஒன்னுன்னா அவங்க வந்து நிப்பாங்க’ கார்த்திகா அந்த மலைவாழ் சிறுவனை அன்பாக அணைத்தவாறு அவனையும் அவன் சார்ந்தவர்களை பற்றியும் கூறினாள். ‘தீப்தி அவங்க கிராமத்துக்கு போலாம் வரியா?’ சுரேஷ் தீப்தியை பார்த்து கேட்பதற்குள், ‘ம்ம், நான் ரெடி’ என்று தீப்தி ஆர்வத்துடன் கூறினாள். ‘நீடா’, சுரேஷ் மதனை பார்த்து கேட்டான். ‘இல்லடா நீங்க போயிட்டு வாங்க, நாளைக்கு நான் பில்ட்டு கொடுக்கணும் டா, இங்க வந்து லாக்’ மதன் முழுதாக சொல்லி முடிப்பதற்குள் கார்த்திகாவை பார்க்க, கார்த்திகா முகத்தில் இருந்த கோபத்தை மதனால் உணர முடிந்தது. ‘இல்லடா நீங்க போயிட்டு வாங்க’ மதன் பொறுமையாக கூறிவிட்டு தன் பேகில் இருந்த லேப்டாப்பை எடுத்து எதிரில் இருந்த கண்ணாடி மேஜையின் மேல் வைத்தான். ‘அக்காவும் அண்ணாவும் நம்ம வீட்டுக்கு புதுசா வந்திருக்காங்க, நம்ம காட்ட சுத்தி காட்டுறியா?’ காத்ரிகா அந்த சிறுவனிடம் கேட்க அந்த சிறுவன் சரி என்பது போல் தலையாட்டி இருவரையும் அழைத்துச் சென்றான். ‘ஆண்டி நாங்க சுதாகரோட கிராமத்துக்கு போயிட்டு வரோம்’, தீப்தி சமையல் அறையில் இருந்த கார்த்திகாவின் அம்மாவிடம் கூறினாள். ‘சரிம்மா பாத்து பத்தரமா போய்டு வாங்க, டேய் சுதா, ஓழுங்கா கூட்டிட்டு போடா, ஓட பக்கம் போகாதீங்க, மழை அதிகமா பேஞ்சிருக்கு’ கார்த்திகாவின் அம்மா அந்த சிறுவனுக்கு வழிமுறை கூறினாள்.

மேலே சென்ற கார்த்திகாவின் அப்பா குளித்து முடித்துவிட்டு கீழே வந்து மதனின் பக்கத்தில் உட்கார்ந்தார். ‘தம்பி நீங்க ப்ரஷ் ஆகனும்னா கீழ இருக்குற ரூம்ல ஒரு பாத்ரூம் இருக்கு, மேலயும் பாத்ரூம் இருக்கு, எத வேணும்னாலும் யூஸ் பண்ணிக்கோங்க’ கார்த்திகா அப்பா மதனை பார்த்து கூறினார். ‘எங்க அவங்க ரெண்டு பேரும்?’ கார்த்திகா அப்பா சுரேஷையும் தீப்தியையும் கேட்க, ‘அவங்க சுதா கூட காட்டுக்கு போய் இருக்காங்கப்பா’, கார்த்திகா கூறினாள். ‘மழ பேச்சிருக்கு, ஓடப்பக்கம் போகப்போறாங்க’ கார்த்திகா அப்பா கேட்க, ‘நான் சுதா கிட்ட சொல்லி தான் அனுப்பியிருக்கேன்’ கார்த்திகா அம்மா தட்டில் எல்லோருக்கும் காப்பியுடன் வந்து சோபாவில் அமர்ந்தாள். ‘எடுத்துக்கோ தம்பி’, கார்த்திகாவின் அம்மா மதனிடம் கூறினார். ‘நீங்க அவங்க கூட போகலையா தம்பி’, கார்த்திகாவின் அப்பா மதனை கேட்க, ‘வேலை கொஞ்சம் இருக்கு சார், நாலைக்குள்ள முடிக்கனும், தள்ளிப் போட முடியாது’, மதன் கூறினான். ‘ஐடி-ல இருக்குறவங்க எங்க இருந்தாலும் ஆபீஸ் வேர்க் பன்னமுடியும்னு கேள்விப்பட்டிருக்கேன், அப்புறம் ஏன் எல்லாரும் மொட்ராஸ் போறாங்கன்னு புரியமாட்டேங்குது’, கார்த்திகாவின் அப்பா மதனை பார்த்து கேட்க, ‘இன்ப்ராஸ்ட்ரக்சர் தான் சார் காரணம். இன்டர்நெட் ஸ்பீடு மெட்ராஸ்ல இருக்கிற மாதிரி இங்க இருக்காது சார். ஆனா அவசரத்துக்கு ஆப்பீஸ் நெட்வொர்க் கனெக்ட் பண்ண இங்க இருக்குற மோபைல் நெட்வர்க் ஓகே தான் சார்’ மதன் கூறினான். ‘அப்ப கார்த்திகா இங்கேயே இருந்து கூட வொர்க் பன்னமுடியுமா?’ கார்த்திகா அப்பா மதனிடம் கேட்க மதன் கார்த்திகாவை பார்த்தான், கார்த்திகா காபி கோப்பையை தன் இரு கைகளில் பிடித்தவாரு குடித்துக்கொண்டே வேண்டாம் என்று மதனை பார்த்து தலையை லேசாக அசைத்தாள். ‘அது உங்க பொண்ணோட ப்ராஜக்ட் மேனேஜர் பொறுத்தது சார். பெரும்பாலும் ப்ராஜக்ட் மேனேஜர்ஸ் அவங்க கீழ வேலை செய்றவங்கல நேர்ல கன்கானிக்கனும்னு நெனைப்பாங்க, அதுதான் அவர்களுக்கு வசதியும் கூட’ மதன் சமாளித்தான். ‘என்னமோப்பா, என் பொண்ணு என் கூடவே இருக்கணும்னு ஆசையா இருக்கு, அதான் கேட்டேன்’, கார்த்திகாவின் அப்பா கூற, ‘எல்லா போரன்ஸ்களுக்கும் இருக்கும் ஆசை தான் சார், யாருக்கு தான் தன் பசங்கல விட்டு பிரிந்து இருக்கணும்னு ஆசை படுவாங்க’ மதன் விலக்கினான். ‘சரிப்பா, நான் ஊருக்குள்ள போயிட்டு வரேன். ஏம்மா என்ன வாங்கனும்னு லிஸ்ட் போட்டுட்டியா? ரெண்டு பை எடு’ கார்த்திகாவின் அப்பா கார்த்திகாவின் அம்மாவை பார்த்து கேட்க கார்த்திகாவின் அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டே வீட்டிற்கு வெளியில் சென்றனர்.

‘தேங்ஸ்’, கார்த்திகா மதனை பார்த்து கூறினாள். ‘எதுக்கு’ மதன் கேட்க, ‘விட்டிருந்தா எங்கப்பா என்ன இங்கிருந்தே வேல செய்ய சொல்லியிருப்பாரு’ கார்த்திகா கூற, ‘வீட்டிலிருந்து வேலை பாக்லாம்ல, அவருக்கும் உனக்கு மாப்ள பார்க்குறதுக்கு ஈஸியா இருக்கும், உனக்கும் டக்குன்னு கல்யாணம் ஆகும், கொழந்த குட்டிங்க பொறக்கும், அவரும் பேரன் பேத்திங்கள எடுத்து கொஞ்சிக்கிட்டிருப்பார்ல’ மதன் கார்த்திகாவை சீண்டினான். ‘நகைச்சுவையா, சிரிச்சிட்டேன்’ கார்த்திகா தன் முகத்தை கோபத்துடன் வைத்துக்கொண்டு கூறினாள். ‘இப்படித்தான் உங்க ஊர்ல சிரிப்பாங்களா. கோபத்துல கூட அழகா தெரிஞ்சு தொலையுற’ மதன் கூறிவிட்டு தன் லேப்டாப்பை பார்த்து கொண்டிருந்தான், கார்த்திகா மெதுவாக எழுந்து மதனின் அருகில் வந்து அவன் இடதுபுற தோள்பட்டையை நன்றாக கிள்ளி விட்டு புன்னகையுடன் திரும்பி நடந்தாள். ‘யாராவது பாக்க போராங்க’ மதன் பதற்றத்துடன் சுற்றிப் பார்த்தான். நல்லவேளையாக கார்த்திகாவின் அம்மா அவள் அப்பாவை ஊருக்குள் அனுப்பி வைத்துவிட்டு அப்போதுனான் வீட்டினுள் வர தொடங்கினார்.

கீழே இருந்த ரூமுக்குள் சென்ற கார்த்திகா தன் லேப்டாப்பை எடுத்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தாள். ‘கார்த்தி, கீழ செல்வி அக்கா பொண்ணுக்கு சடங்காம், நான் போயிட்டு வரேன். அப்பா அதுக்குள்ள வந்துட்டார்னா, வாங்கிட்டு வருவதை கழுவி வேக வை. சரியா’ கார்த்திகாவின் அம்மா கார்த்திகாவுக்கு கட்டளையிட்டாள். கார்த்திகா அம்மாவும் அங்கிருந்து கிளம்பினார். வீட்டில் இப்போது கார்த்திகாவும் மதனும் மட்டும் இருந்தது மதனுக்கு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. கார்த்திகா எழுந்து மதனின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து லேப்டாப் ஓபன் செய்தாள். கார்த்திகா லேப்டாப்பை ஆன் சொய்வதை பார்த்துக்கொண்டிருந்த மதனுக்கு ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது. ‘வாட், அமேசிங், எப்ப இதெல்லாம் பண்ணீங்க?’, மதன் கார்த்திகாவை ஆச்சரியத்துடன் கேட்டான். ‘எல்லாம் உங்களால தான். அந்த /r/unixporn எதுக்கு இன்ட்ரடியூஸ் பன்னீங்க, அத பாத்து அதுல இருக்குற ஏதாவது ஒரு தீம் மாதிரி என் லேப்டாப்பும் இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அதான் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு மாத்தினேன்’ கார்த்திகா கூறினாள். ‘நியோ பெட்ச் ரன் பன்னுங்க’ மதன் கேட்க கார்த்திகாவும் நியோ பொட்ச் என்ற கமாண்டை டெர்மினலில் ரன் செய்தாள். ‘டேம். ஐ நியூ. நீங்களும் ஆர்ச் லினக்சுக்கு மாறிட்டிங்களா?’ மதன் கேட்க ‘அந்த வெப்சைட்ல தீம்ஸ் வடிவமைக்கும் முக்காவாசி பேரு ஆர்ச் லினக்ஸ் தான் யூஸ் பண்றாங்க. அதனால நானும் என்னதான் அதுல இருக்குன்னு ஒரு நாள் உட்கார்ந்து ட்ரை பண்ணேன். ரெண்டு ட்ரைல என்னால இன்ஸ்டால் பண்ண முடிஞ்சது. அப்புறம் எனக்கு புடிச்ச ஒரு தீம் டவுன்லோட் செஞ்சு மாத்தி பார்த்தேன். அழகா வந்துச்சு’ கார்த்திகா விளக்கமாக கூறினாள். ‘ம்ம்ம், அதுவும் பிஎஸ்பி டபிள்யூஎம் (bspwm), க்ரேட்’ மதன் கூற ‘மொதல்ல நீங்க யூஸ் பண்ற ஐத்ரீதான்(i3) யூஸ் பண்ணேன், என்னவோ தெரியல அது ரொம்ப சிம்பிளா ப்ளெய்னா இருக்குற மாதிரி இருந்துச்சு. அதன் பிஎஸ்பிக்கு மாறிட்டேன்’ கார்த்திகா கூற ‘ஐ த்ரீ அப்படித்தான், அதோட அழகு என்ன மாதிரி இருக்குறவனுக்கு தான் புரியும்’, மதன் கார்த்திகாவை சீன்ட ‘ஆமாம், உங்கலமாதிரி கிருக்கனுங்களுக்குத்தான் அதோட அழகு புரியும்’ கார்த்திகாவும் தன் பங்கிற்கு வாரினாள். ‘உங்க கூட சண்ட போடும் சிச்சுவேஷன்ல இல்ல, வைபை பாஸ்வேர்ட் கொடுங்க, நாளைக்குள்ள பில்ட்டு ஒன்னு எடுக்கனும்’ மதன் கார்த்திகாவின் வீட்டில் வைபை பாஸ்வேர்டை கேட்டான். ‘எங்க வீட்ல வைப்பை இல்ல, என்னோட டேட்டா கார்டு பாஸ்வேர்டு சொல்றேன்’ கார்த்திகா சொல்லிக்கொண்டிருக்க, ‘கண்ணுக்கு முன்னாடி வைஃபையை வெச்சிக்கிட்டு இல்லைன்னு சொல்றீங்க’ மதன் குறுக்கிட்டான். ‘என் மொபைல்ல இருக்கும் வைஃபை ஹாட்ஸ்பாட் சொல்ரீங்களா? என் மொபைல்ல டேட்டா இல்ல, டேட்டா கார்டு தனியா இருக்குறதால நான் மொபைல் டேட்டா போட்றதில்ல’ கார்த்திகா கூற ‘நான் உங்க மொபைல சொல்லல, உங்க லேப்டாப் தான் சொன்னேன்’ மதன் கூறினான். ‘லேப்டாப்ல இருந்து வைஃபை டீத்தரிங் பண்ணலாமா?’ கார்த்திகா ஆர்வத்துடன் கேட்க, ‘hostapd இருக்கும் போது நாம எதுக்கு கவலைப்படணும்’ மதன் கூறியவுடன் கார்த்திகா அந்த வார்த்தையை குகிள் செய்தாள். ‘இன்ட்ரஸ்டிங், என் லேப்டாப்ல ட்ரை பண்ணலாமா’ கார்த்திகா கேட்க, உடனே மதன் அவள் லேப்டாப்பில் hostapd மென்பொருளை நிறுவினான். ‘இப்ப உங்க வைஃபை டாங்கிள உங்க லேப்டாப்போட கணைக்ட் பண்ணுங்க’ மதன் கூற அதன்படி கார்த்திகா செய்தாள். ‘இப்ப பாருங்க, என் லேப்டாப்ல நான் வைப்பை ஸ்கேன் பண்றேன். உங்க லேப்டாப்ல நாம இன்ஸ்டால் பண்ண hostapd யோட ஆக்சஸ் பாயின்ட் இப்ப தெரியும்’ மதன் சொல்லிக்கொண்டே ஸ்கேன் செய்தான். அவன் சொன்னபடி கார்த்திகாவின் லேப்டாபில் இருக்கும் ஆக்சஸ் பாயின்ட் மதனின் லேப்டாப்பில் தெரிந்தது. ‘வாவ். எங்க கனெக்ட் பண்ணுங்க’ கார்த்திகா கேட்க, மதன் அந்த வைப்பையில் இனைந்தான். ‘சுப்பர், என் லேப்டாப்ப வைஃப்பை ஆக்சஸ் பாயிண்டா மாத்திட்டீங்க’ கார்த்திகா ஆச்சரியப்பட்டாள். ‘ஆண்ட்ராய்டு மொபைல் ஹாட்ஸ்பாட் பன்றதுல கூட லிமிட் இருக்கு, மிஞ்சி போனா பத்து பேருக்கு மேல கனெக்ட் பண்ண முடியாது, ஆனா இப்ப உங்க லேப்டாப்ல இருக்கும் ஆக்சஸ் பாயின்ட்ல எத்தனை பேரு வேணும்னாலும் கனெக்ட் பண்ணிக்கலாம்’ மதன் கூறினான். ‘சப்போஸ் இப்ப என் மொபைலுக்கு பதிலா வேர ஒரு வைப்பைய்ல நான் கனெக்ட் பண்ணா தான் எனக்கு இன்டர்நெட் வரும்ன்ற டைம்ல நான் இந்த hostapd யூஸ் பண்ண முடியாது. கரைக்டா? ஏன்னா வைப்பை ஒரு டைம்ல ஒரு ப்ரீக்குவன்ஸிலத்தான் வொர்க் பண்ணும். எங்கேயோ நான் படிச்சிருக்கேன். கரைக்டா?’ கார்த்திகா கேட்க, ‘ஒரு சாதாரண வைப்பை சிப் ஒரு டைம்ல ஒரு ப்ரீக்வன்ஸிலதான் வெர்க் பண்ணும், கரைக்ட்தான். ஆனா, ஒரே ஃப்ரீக்வன்சில ரெண்டு ஆக்ஸர்பாயின் இருக்க கூடாதுன்னு யாரும் சொல்லல, iw அண்ட் hostapd வெச்சு ஒரே டைம்ல நம்ம லேப்டாப்பை வைஃபை க்லைன்டாவும் ஆட்ஸ்பாட்டாவும் யூஸ் பண்ணலாம். என்ன, உங்க லேப்டாப்ல இருக்கும் வைஃபை சிப் அதுக்கு ஒத்துழைக்கனும், உங்க லேப்டாப்ல அந்த வசதி இல்ல, இருந்திருந்தா நான் உங்க வைஃபை டாங்கிள்ல கணைக்ட் பண்ண சொல்லியிருக்க மாட்டேன், டைரக்டா உங்க மொபைல் ஆட்ஸ்பாட்லையே கனைக்ட் பண்ண சொல்லியிருப்பேன்’ மதன் விலக்கினான். ‘உங்க லேப்டாப்ல அந்த வசதி இருக்கா? பண்ணி பார்க்கலாமா?’ கார்த்திகா கேட்க ‘இருக்கு, ஆனா இப்ப வேணாம். அது கொஞ்சம் டைம் எடுத்துக்கும், உங்க கூட பேசிக்கிட்டே என் பில்ட் மறந்துட்டேன்’ மதன் கூறியவாரே அவன் ஆபிஸ் வேர்க்ஸ்டேஷனில் கனெக்ட் செய்து பில்ட் ஸ்கிரிப்டை இயக்கினான்.

‘இந்த பில்ட் முடிய எப்படியும் அரை மணி நேரம் ஆகும். டிவி போடுங்க ஏதாவது பாப்போம், உங்க டிவி 4k வா? 48 இன்ச் தானே?’ மதன் கேட்க ‘ஆமாம், 48 இன்ச் 4k தான். என்ன, இங்க டிடிஎச் சிக்னல் தான் சரியா வராது, எதுக்கும் போட்றேன்’ என்று சொல்லிக்கொண்டே டிவியை ஆன் செய்தாள். கார்த்திகா சொன்னபடியே டிடிஎச் சரியாக வரவில்லை, ‘நான் சொல்லல’ கார்த்திகா புன்னகைத்தவாறே மதனை பார்த்து கூறினாள். மதன் வேறு வழியில்லை என்று அமைதியாக இருந்தான். சிறிது வினாடிகள் கழித்து ‘உங்க லேப்டாப்ல மூவி இருக்கா, படம் பாக்கலாமா? என்று கார்த்திகா மதனிடம் கேட்டுக்கொண்டே மதனின் லேப்டாப்பை தன் பக்கமாக இழுத்தாள். ‘ஒரு பேச்சுலர் லேப்டாப்ப இப்படி திடீர்னு வாங்கி பாக்குறீங்க, தேவையில்லாத ஏதாவது பாத்துட்டீங்கன்னா என்ன திட்டக்கூடாது’, மதன் கூற ‘என்ன, மிஞ்சிப்போனா பிட்டு படம் டவுன்லோட் பண்ணி வச்சிருக்க போறீங்க, அவ்வளவுதானே?’ கார்த்திகா எதிர் கேள்வி கேட்க. ‘என்ன இன்னைக்கு எல்லார்டையும் மொக்க வாங்கிகிட்டு இருக்கேன், நேரம் சரியில்ல’ மதன் முனுமுனுத்தான். ‘என்ன உங்களுக்குள்ள பேசிக்கிட்டு இருக்கீங்க? படம் எல்லாம் எந்த போல்டரில் வெச்சிருக்கீங்க?’ கார்த்திகா கேட்க, ‘ஹோம் போல்டரில் வீடியோஸ்னு ஒரு போல்டர் இருக்கும், உங்க வீட்டு டிவி ஸ்மார்ட் டிவி தானே?’ மதன் கேட்க ‘ஆமாம். ஆனா என்கிட்ட எச்டிஎம்ஐ கேபிள் இல்ல’ கார்த்திகா கூறினாள். ‘எச்டிஎம்ஐ கேபிள் இல்லனா என்ன’, மதன் சொல்லி முடிப்பதற்குள் ‘இருங்க, குரோம்காஸ்ட்டா (chromecast) சொல்லவரீங்க?’ கார்த்திகா கேட்க, ‘ஆக்சுவலா குரோம்காஸ்டே மிராகாஸ்ட் (miracast) ஸ்டான்டர்ட் ஓடைக்க குகிள் பண்ண ஒரு புரோபிரைட்டரி ப்ரோட்டோக்காலுங்க’, மதன் மீண்டும் சொல்லி முடிப்பதற்குள் ‘அப்ப மிராகாஸ்ட் பண்ண போறோம் கரெக்டா?’ கார்த்திகா கேட்க, ‘இல்லைங்க, அவ்வளவு காம்ளக்ஸ்சான விஷயமெல்லாம் வேணாம். சிம்பிளா டிஎல்என்ஏ (DLNA) பண்ணலாம், உங்க லேப்டாப் கொடுங்க’ மதன் கார்த்திகா லேப்டாப்பை கேட்க ‘உங்க லேப்டாப்லயே பண்ணுங்க’ கார்த்திகா கூற ‘என்ன, அங்கேயும் பிட்டுப்படமா?’ மதன் சிரித்துக் கொண்டே கேட்க ‘ஓவரா பண்ணாதீங்க, என்கிட்ட இருக்கிற எல்லா படத்தையும் திரும்ப திரும்ப எத்தன முற பாக்குறது, அதான் உங்க கிட்ட இருக்குற படங்களை பாக்கலாமேன்னு சொன்னேன். வேணும்னா என் லேப்டாப்லயே இன்ஸ்டால் பண்ணுங்க, பாதி படத்தில் தூங்கிட்டேன்னா என்ன திட்டக்கூடாது’ கார்த்திகா கூற ‘என் லேப்டாப்ல ஆல்ரெடி மினி டிஎல்என்ஏ (miniDLNA) இன்ஸ்டால் பண்ணி ஆச்சுங்க, அதனாலதான் உங்க கிட்ட கேட்டேன், இன்ஸ்டால் பன்றது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல, ஆர்ச் விக்கி பாலோ பண்ணாலே போதும்’ மதன் கூறினான். ‘ஓக்கே, அப்ப டிவிய உங்க லேப்டாப்பில் எப்படி கனெக்ட் பண்றது’ கார்த்திகா கேட்க, ‘எல்லா ஸ்மார்ட் டிவியிலயும் வைபை செட்டிங்ஸ் இருக்கும், அங்க போய் உங்க லேப்டாப்போட ஹாட்ஸ்பாட் பாஸ்வேர்ட் கொடுத்து மொதல்ல கனெக்ட் பண்ணுங்க. ஒன்ஸ் உங்க டிவி நம்ம லேப்டாப்ல இயக்குற வைஃபை நெட்வர்க்கு வந்துட்டாலே ஆட்டோமேட்டிக்கா டிஎல்என்ஏ டிடக்ட் பண்ணிடும் எந்த மூவி வேணுமோ அத நாம டிவியில் செலக்ட் பண்ணி பார்க்கலாம்’ மதன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கார்த்திகா வைஃபையை கனெக்ட் செய்து மதனின் லேப்டாப்பில் உள்ள மூவி போல்டர்களை தன் டிவியில் மீடியா சென்டர் மூலமாக பார்க்க தொடங்கினாள்.

‘ஏகப்பட்ட கேட்டகிரில படங்கல அடுக்கி வெச்சிருக்கீங்க, காமெடின்னு ஒரு போல்டர், ஜாக்கிச்சான் மூவீஸ்னு ஒரு போல்டர், வடிவேலுக்கு ஒரு தனி போல்டரா, டை ஆட்டு சீரீஸ்? புரூஸ் வில்லிஸ் தானே, ட்ரான்ஸ்பார்மர்ஸ், மேட்ரிக்ஸ்? சுத்தமா புரியாதே, டைட்டானிக், ஜுராசிக் பார்குக்கு தனி போல்டர், ஹாரி பாட்டர், உங்களுக்கும் பிடிக்குமா? எங்கிட்டயும் இருக்கு, அவதார், நாட்டாமை, சூரிய வம்சம், பூவே உனக்காக, வானத்தைப்போல, நீங்க விக்ரமன் ப்பேனா? டைரக்டர் சேரன்னு ஒரு போல்டர், சேரனோட எல்லா படமும் வெச்சிருக்கீங்க? அவ்வளவு புடிக்குமா? அடுத்து தங்கர் பச்சான்னு தனி போல்டர், அதுல, அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம்’ கார்த்திகா சொல்லிக்கொண்டே ஒரு போல்டரை பார்த்ததும் ப்ரவுஸ் பண்ணுவதை நிறுத்தினாள். ‘மாட்னீங்களா? டோன்ட் வாட்ச் அப்படின்னு ஒரு போல்டரா? இந்த போல்டரில தானே அந்த படங்க இருக்கு?’ கார்த்திகா சிரித்துக்கொண்டே கேட்க ‘வேணாம் அதுக்குள்ள போகாதீங்க, உங்க நல்லதுக்கு சொல்றேன்’ மதன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கார்த்திகா உள்ளே என்ன இருக்கு என்பதை பார்த்தாள் ‘முள்ளும் மலரும்?’ கார்த்திகா மதனை பார்க்க ‘நானும் என் தங்கச்சியும் ஒன்னா சேர்ந்து பாப்போம். எப்ப இந்த படத்த பாத்தாலும் அடுத்து ரெண்டு நாள் அவ நியாபகமாவே இருக்கும். முக்கியமா ரஜினி சொல்ற அந்த கெட்ட பையன் சார் டயலாக் வரும்போதெல்லாம் என்ன பாத்து சிரிப்பா’ மதன் தன் தங்கையை நினைத்தவாரே சிரித்தான். ‘கவிக்குயில்? நீங்க பாடுன அந்த பாட்டு இதுலதானே?’ கார்த்திகா கேட்க ‘ஆமாம். படத்தோட கதை லாஜிக்கலா கொஞ்சம் கேவலமா இருக்கும், ஆனா படத்த பார்த்தா உள்ள ஏதோ ஒன்னு பண்ணும்’ மதன் கூறினான். ‘ஆரிலிருந்து அருபது வரை? எங்க அப்பாவும் இந்த படத்த பத்தி சொல்லியிருக்கார்’ கார்த்திகா கேட்க ‘எனக்கும் எங்கப்பா தான் இந்த படத்த பத்தி சொன்னாரு, அவர பொருத்தவரைக்கும் ரஜினி படங்கள்ளையே இதுதான் பெஸ்டாம். அதனாலேயே இத பார்த்தேன். ஆப்டர் எபெக்ட் மூனு நாள் இருந்தது, அதுவும் ரஜினி மனைவி போட்டு வச்ச இன்சூரன்ஸ் வரும்போது ரஜினி அழுவுற சீன், கிளைமாக்ஸ், எங்கப்பாவுக்கு நிறைய விஷயம் சொல்லிக்கொடுத்த படம்னு நினைக்கிறேன்’ மதன் கூற ‘எங்கப்பாவும் அப்படிதான் சொல்லுவாரு. ரஜினி நடிச்சதுலயே இந்த படம்தான் பெஸ்டுன்னு’ கார்த்திகாவும் ஒத்துக்கொண்டாள்.

‘குணா? இந்தபடமா?’ கார்த்திகா கேட்க ‘ஏற்கனவே பாத்திருக்கீங்களா?’ மதன் கேட்க ‘பாத்திருக்கேன்’ கார்த்திகா கூற ‘எப்ப? முழுசா பாத்தீங்களா? படம் புரிஞ்சதா’ மதன் கேட்க ‘ரொம்ப நாள் முன்னாடி, டிவியில் போடும்போது பார்த்தேன். ஸ்டார்டிங் மொக்கையா இருக்கும், முழுசா பார்த்ததா நியாபகம் இல்ல’ கார்த்திகா பதில் கூற ‘ரொம்ப நல்லது, தயவு செஞ்சு பாக்காதீங்க’ மதன் சொல்ல ‘அப்ப கண்டிப்பா இதத்தான் இப்ப பார்க்க போறோம்’ கார்த்திகா சொல்லிவிட்டு படத்தை ப்ளே செய்தாள். ‘சொன்னா கேட்கமாட்டேன்ரீங்க, கல்யாணம் ஆக போறவங்க இந்த படத்த பாக்க கூடாதுங்க, நாளு நாளானாலும் சரியா தூக்கம் வராது, நான் பட்ட மாதிரி நீங்களும் படாதிங்க’ மதன் சொல்வதை கேட்காமல் கார்த்திகா படத்தை பார்க்க ஆரம்பித்தாள். ‘ஸ்டார்டிங் கமல் ஒத்தக்கால்ல நிக்கிற சீன்லாம் பார்த்த நியாபகம் இல்லையே’ கார்த்திகா படத்தில் முதலில் வரும் சீனை பார்த்து கூற. ‘அதே மாதிரி கடைசியில ஒரு முற பன்னுவாரு, அப்ப நீங்க அழுதுட்டு இருப்பீங்க’ மதன் புன்னகையுடன் கூறினான். ‘பாக்கலாம்’ கார்த்திகாவும் புன்னகைத்தாள். படம் சிறிது நிமிடங்கள் ஓடியது. ‘இந்த டாக்டர் கிட்ட பேசுற டயலாக் ஒரே டேக்ல எடுத்ததாம், நிறைய பேர் அந்த சீன பத்தி பேசி பாத்திருக்கேன்’ கார்த்திகா கூற ‘ஆமாம், மறக்காம கோவில்ல ஜனகராஜ் பிப்பிரி பிப்பிரி பீ உதுர சீன் வந்தவுடன் சொல்லுங்க’ மதனும் தன் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டே கூறினான். ‘என்னது பீப்பி ஊதுவாரா, ஏன் அந்த சீன்?’ கார்த்திகா கேட்க ‘அங்க தான் கதையே ஸ்டார்ட் ஆகுது’ மதன் கூறினான். மீண்டும் கார்த்திகா படத்தில் மூழ்கினாள். மதன் தன் வேலையில் மூழ்கினான். சில வினாடிகள் ஓடின. கார்த்திகா சிரித்துக்கொண்டே ‘ஜனகராஜ் பீப்பி ஊதிட்டாரு’ என்று கூற மதனும் சிரித்துக்கொண்டே தன் லேப்டாப்பை மூடினான். படத்தில் கமலிடம் திசை காட்டும் கை பலகை ஹீரோயின் இருக்கும் திசையை காட்டும் சீன் வந்தவுடன் மதன் ‘இப்ப பாருங்க கமலோட பர்பாமன்ஸ்ஸ’ என்று கூற ‘என்ன இருந்தாலும் இளையராஜா பிஜிஎம் வேர லெவல் தான்’ கார்த்திகாவும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள். கார்த்திகா பார்த்த விழி பாடல் முடிந்தவுடன் பாஸ் செய்தாள். ‘இப்படியெல்லாம் கூடவா ஒரு பெண்ணை பார்க்கும்போது பசங்களுக்கு தோணும். உண்மையாவே அவள அபிராமியாக பார்க்க ஆரம்பிச்சுட்டான்’ கார்த்திகா கூற ‘அவன் ஒரு ஆப் சைக்கோன்றத மறந்துட்டீங்க’ மதன் கூற ‘இன்னொரு பாதி மனுஷன். இதுல எந்த பாதி அவள கடவுளா பாக்குதுன்னு உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?’ கார்த்திகா கூற ‘போற போக்க பாத்தா பாதி படத்துலயே அழுதுடுவீங்க போல’ மதன் மீண்டும் கார்த்திகாவை சீண்ட, ‘பாப்போம்’ கார்த்திகாவும் திடமாக படத்தை பார்க்க தொடங்கினாள். மீண்டும் இருவரும் மௌனமாக படத்தில் மூழ்கினர். அவர்களுக்கே தெரியாமல் இருவரும் மிக அருகில் அமர்ந்திருந்தனர். படத்தில் எழுபத்து ஓராவது நிமிடத்தில் கமல் தன் ரத்தத்தால் ஹீரோயினுக்கு பொட்டு வைக்கும் சீன் முடிந்தவுடன் கார்த்திகா பாஸ் செய்தாள். கார்த்திகா மதனை பார்க்க, மதனும் கார்த்திகா என்ன சொல்ல போகிறாள் என்று பார்த்தான். ‘என்ன இப்படி இருக்கு, அந்த பீஜிஎம் வேர போட்டு கொல்லுது. இந்த படத்தை எப்படி நான் மிஸ் பண்ணேன்’ கார்த்திகா கூற. ‘லாஜிக்கலா பார்த்தா இதுக்கு பேரு ஹராஸ்மென்ட், அந்த பொண்ணோட கன்சன்ட் இல்லாம ஆவல புடிச்சு வெச்சிக்கிட்டு வர்புறுத்துறான். ஒரு பெமினிஸ்டா இருந்துக்கிட்டு எப்படி இத ரசிக்கரீங்க’ மதன் கிண்டலாக கேட்க, ‘ஒரு பொண்ண ஒருத்தன் மனசார விரும்புனா உங்களுக்கு பொறுக்காதே, உடனே அவன அவமானப்படுத்துவது, எப்பத்தான் இந்த மிசோஜனிஸ்டுங்க திருந்துவாங்களோ’ கார்த்திகாவும் மதனை கிண்டலடித்த படி படத்தை மீண்டும் தொடர்ந்தாள். படத்தின் நூற்று பதினாறாவது நிமிடத்தில் வரும் சீன் முடிந்து கண்மணி பாடல் தொடங்கியவுடன் கார்த்திகா பாஸ் செய்தாள். ‘அந்த பொண்ணே என்ன உனக்கு வேணுமான்னு கேட்டும் அவள தெய்வமாகத்தான் பார்க்குறான்’ கார்த்திகா மதனை பார்த்து கூற ‘தெய்வமா பார்குற அவள கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படலாமா?’ மதன் கேட்க ‘அவன் அவளோட உடம்புக்கு ஆசைபடலையே. அவன பொருத்தவரைக்கும் தெய்வத்த அடைஞ்சு தன் பிறப்ப தூய்மை படுத்திக்குறதுக்கு பேர்தான் கல்யாணம். நாம அத முக்தின்னு சொல்றோம் அவன் அத கல்யாணம்னு சொல்றான், அவ்வளவுதான். இதுல என்ன தப்பிருக்கு?’ கார்த்திகா கேட்க மதன் ‘பாய்ன்ட்’ என்று சிரித்தபடி கூற கார்த்திகா மீண்டும் படத்தை தொடர்ந்தாள்.

படத்தின் இறுதியில் இளையராஜா இசைக்க அந்த பாழடைந்த தேவாலயத்தை காட்டும் இடத்தில் கார்த்திகா படத்தை நிறுத்தினாள். கார்த்திகா சில வினாடிகள் எதையும் பேசவில்லை, மதனும் கார்த்திகா என்ன சொல்ல போகிறாள் என்று எதிர்பார்த்து மௌனமாக இருந்தான். ‘கடைசியில் அவனும் செத்துட்டான்ல?’ கார்த்திகா கண்கள் ஈரமாயிருந்தது. ‘நான் சொல்லல, கமல் கடைசியா ஓத்த கால்ல நிக்கும்போது நீங்க அழுதுட்டு இருப்பீங்கன்னு?’ மதன் கூற கார்த்திகா சிரித்துக்கொண்டே ‘நான் ஒன்னும் அழல, லைட்டா தூசி’ கார்த்திகா சமாளிக்க மதன் புன்னகைத்தான். இருவரும் சில வினாடிகள் பேசவில்லை, கார்த்திகா மீண்டும் ‘என்ன காதல் இது?’ என்று கேட்க ‘அதன் அவனே சொல்லிட்டானே, மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல அப்படின்னு, எய்டீஸ்ல, நயின்டீஸ்ல லவ் பண்ணவங்க உன்மையிலேயே லவ்வுக்காக உயிர விட்டாங்க தெரியுமா? நான் சின்ன வயசுல இருத்தப்ப எங்க தெருவுல என் கூட ரொம்ப பாசமா இருந்த ஒரு அக்கா தூக்கு போட்டுக்கிட்டாங்க, அவங்க லவ்வுக்காக, அவங்கல மறக்க ரொம்ப நாள் ஆச்சு’ மதன் கூறினான். ‘உண்மைதான், நான் சின்ன வயசுல இருந்தப்ப எங்க கிராமத்துக்கு பக்கத்துல கூட நிறைய பேர் மலையில இருந்து குதிச்சி தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. சுதாவோட ஊர்ல இருந்து தான் ஆளுங்க போய் தேடுவாங்க, ஆனா இப்ப இருக்குறவங்க யாரும் அந்தளவுக்கு லவ் பண்றதில்ல’ கார்த்திகா கூற ‘இப்ப இருக்குறவங்க லவ் உயிர கொடுக்கிற அளவுக்கு ஒர்த் இல்லைங்கிறத தெரிஞ்சிக்கிட்டாங்க’ மதன் கூற ‘நீங்க லவ் பண்ணி இருக்கீங்களா?’ கார்த்திகா கேட்க மதன் சில வினாடிகள் கழித்து ‘ஆட்டோகிராப் படம் பாத்தீங்களா?’ மதன் முடிப்பதற்குள் ‘அப்ப நான் கல்யாணத்துக்கு முன்னாடி வரவளா? இல்ல கல்யாணம் பண்ணிக்கிறவளா?’ கார்த்திகா கேட்க ‘அத நீங்க தான் முடிவு பண்ணனும்’ மதன் புன்னகையுடன் பதில் கூறினான். கார்த்திகா எதுவும் பேசவில்லை, மதனின் கையில் தன் கை கோர்த்து அவன் தோள் மீது தன் தலையை வைத்து சாய்ந்துகொண்டாள். இதுவரை அவன் உணராத ஒரு புது உணர்வு மதனுக்குள் உண்டானது, ‘யாராவது வரப்போராங்க’ மதன் சற்று பதற்றத்துடன் கூற ‘வந்தா பார்க்கலாம்’ கார்த்திகா கூற ‘தேவை இல்லாம என்னால உங்க வீட்ல பிரச்சனை வரக்கூடாதுன்றதாலத்தான் இங்க வர பயந்தேன்’ மதன் கூற ‘எனக்கும் தெரியும், ஆனாலும் உங்க கூட இருக்கணும்னு தோனுச்சு’ கார்த்திகா மதனின் தோள்மீது சாய்ந்தவாறு கூறினாள். இதை கேட்டவுடன் மதன் கார்த்திகாவை பார்க்க அவளும் தன் தலையை அவன் தோள் மீது சாய்த்தவாரே அவனை பார்த்தாள். இருவரும் புன்னகையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சுதா அமைதியாக வந்து கார்த்திகாவின் அருகில் அமர்ந்தான். சுதாரித்த மதனும் கார்த்திகாவும் சற்று விலகி அமர்ந்தனர். சுதாவை தொடர்ந்து சுரேஷும் தீப்தியும் வீட்டிற்கு வந்தனர். கார்த்திகாவும் மதனும் அருகருகே அமர்ந்திருந்ததையும் டிவியில் குணா படத்தின் காட்சி இருப்பதையும் பார்த்த சுரேஷ் ‘என்னடா நடக்குதிங்க, என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’ மதனை பார்த்து கேட்க ‘படம் பாக்குறது கூட தப்பாடா?’ என்று மதன் பதில் கேள்வி கேட்டான். அருகில் இருந்த சுதாவை பார்த்து சுரேஷ் ‘டேய் ஈசிப்பு, நீ வரும்போது ரெண்டு பேரும் என்னடா பண்ணிட்டு இருந்தாங்க?’ என்று கேட்க ‘அக்கா அண்ணா மேல சாஞ்சிட்டு’ சுதா கூறூவதற்குள் கார்த்திகா அவன் வாயை அமுக்கி சமையல் அறைக்குள் தூக்கி கொண்டு சென்றாள். ‘இதுக்கு பேர் தான் உங்க ஊர்ல ப்ரண்ஷிப்பா?’ சொல்லிக்கொண்டே சுரேஷ் மதன் அருகில் அமர வந்தான். ‘இர்ரா, ஈரத்தோட உட்காராத, எங்க போய் நெனஞ்ச?’ மதன் கேட்க ‘சுதா ஒரு சூப்பரான அருவி காம்சான்டா. செம்மையா இருந்தது, இவ அத பாத்த உடனே அப்படியே போய் நின்னுட்டாடா, அவளை இழுக்க போய் நானும் இப்படி ஆயிட்டேன், எல்லாம் அவதான்’ சுரேஷ் தீப்தியை பார்த்து கூறினான். ‘போய் ரெண்டு பேரும் துணி மாத்திட்டு தலைய துடைங்கடா, கார்த்திகா அப்பா அம்மா பாத்தாங்கன்னா திட்ட போறாங்க’ மதன் சுரேஷையும் தீப்தியையும் பார்த்து கூறினான். அதன்படி இருவரும் உடையை மாற்றி தலையை துவட்டியவாறு வந்து அமர்ந்தனர். சுதாவும் சமையல் அறையில் இருந்து வந்து சோபாவில் உட்கார்ந்தான். ‘டேய் சுதா, உங்க ஊர் சூப்பரா இருக்கு. நான் உங்க வீட்லையே இருக்கட்டுமா, எனக்கு உங்க காட்டுல இருக்கிற எல்லா இடத்தையும் காட்ரியா’ தீப்தி சுதாவை பார்த்து கேட்க அவன் வெட்கத்துடன் சிரித்தவாரே அமர்ந்திருந்தான். ‘சுதாவோட ஊர்காரங்க சூப்பர்டா. அதுவும் கார்த்திகா வீட்டு விருந்தாளிங்கன்னு தெரிஞ்சவுடனே என்னமா பாத்துக்கிட்டாங்க தெரியுமா’ சுரேஷ் சொல்லும்போதே கார்த்திகா எல்லோருக்கும் காபியை பரிமாரினாள். ‘அவங்க எங்க வீட்டு விருந்தாளின்னு தெரியலைனாலும் அப்படித்தான் பாத்துப்பாங்க’ கார்த்திகா கூறினாள். ‘அக்கா ஒரு குகைக்கு உள்ள ஒரு ஒட இருக்குதுக்கா. தண்ணீர் எவ்வளவு க்ளியரா இருக்குக்கா, அவ்வளவு டேஸ்ட்’ தீப்தி கார்த்திகாவை பார்த்து கூறினாள். ‘நீ மிஸ் பண்ணிட்டடா, நீயும் வந்திருக்கலாம்ல?’ சுரேஷ் மதனை பார்த்து கேட்க ‘நீங்க பார்த்து ரசிச்சீங்கல்ல, சந்தோஷம்’ மதன் சமாளித்தான். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கார்த்திகாவின் அப்பாவும் அம்மாவும் வந்தனர், கார்த்திகா அவள் அப்பா கொண்டு வந்த பையை சமையல் அறைக்கு எடுத்துச் சென்றாள். ‘என்னப்பா ஊர் சுத்தி பார்த்தீங்களா, புடிச்சிருக்கா?’ என்று சுரேஷை பார்த்து கேட்டார். ‘சார், இனி எங்களுக்கு எப்ப வெக்கேஷன் போகனும்னு தோனுதோ அப்ப வண்டி எடுத்துட்டு உங்க வீட்டுக்கு வந்துடுவோம் நீங்க எங்கள தங்க வைக்கனும்’ சுரேஷ் கூற ‘உங்களுக்காக எங்க வீடு எப்பவும் காத்துக்கிட்டு இருக்கும்’ என்று கூறினார். ‘கார்த்தி சீக்கிரம் டின்னர் ரெடி பண்ணுங்கம்மா, டேய் சுதா, பொழுது சாயுது, இங்கயே படுத்துக்கடா, நாளைக்கு வீட்டுக்கு போவ, இன்னைக்கு அக்கா உனக்காக ஸ்பெஷலா சமைக்கபோரா’ கார்த்திகா அப்பா கூறியவுடன் சுதா மீண்டும் அதே வெட்கத்துடன் கூடிய அமைதியை வெளிப்படுத்தினான். ‘கார்த்தி சுதா வீட்ல போன் போட்டு சொல்லிடு, நான் மாடிக்கு போறேன் கொஞ்சம் ஸ்கூல் வேல இருக்கு’ என்று சொல்லிவிட்டு கார்த்திகாவின் அப்பா மாடிக்கு சென்றார். கார்த்திகாவும் அவள் அம்மாவும் சமையல் அறைக்கு சென்றனர். தீப்தியும் கார்த்திகாவை பின்தொடர்ந்து சமையல் அறைக்கு சென்றாள். சுரேஷ் தன் பையில் இருந்த லேப்டாப்பை எடுத்து ஷோபாவின் எதிரில் இருந்த கண்ணாடி மேஜையில் வைத்து வேலை பார்க்க ஆரம்பித்தான். மதனும் தன் வேலையில் மூழ்கினான்.

அன்று இரவு எல்லோரும் சமையல் அறையில் இருந்த டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டனர். சாப்பிட்ட பின்னர் கார்த்திகாவின் அப்பா ‘சுரேஷ், நீங்களும் மதனும் மேல ஒரு ரூம் இருக்கு அதுல படுக்கரீங்களா, இல்ல கீழ இருக்குற ரூம்ல படுக்கரீங்களா?’ என்று கேட்க ‘கீழேயே படுத்துக்கறோம் சார்’ என்று மதன் கூறினான். ‘அப்ப தீப்தி, நீயும் கார்த்திகாவும் மேல இருக்குற ரூம்ல படுத்துக்கோங்க, சுதா, நீ எங்க படுத்துக்கரடா? அக்காங்க கூடவா? அண்ணாங்க கூடவா? இல்ல என் கூடவா?’ என்று கார்த்திகாவின் அப்பா கேட்க ‘அக்காகூட’ என்று மெதுவான குரலில் சுதா கார்த்திகாவை பார்த்து பதிலளித்தான். ‘சீக்கிரம் தூங்குங்க, நாளைக்கு சீக்கிரம் எழனும்’ என்று சொல்லிவிட்டு கார்த்திகா அப்பா மீண்டும் மாடிக்கு சென்றார். சிறிது வினாடிகளில் கார்த்திகாவின் அம்மாவும் சமையல் அறையில் இருந்த பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு ‘கார்த்தி, தீப்தி, கண்ணு முழிக்காதீங்க, சீக்கிரம் போய் படுங்க’ என்று சொல்லிவிட்டு மாடிக்கு சென்றார். ‘பயங்கரமா தூக்கம் வருது, நான் போய் படுக்கறேன், டேய் சுதா, வரியாடா படுத்துக்கலாம்?’ என்று தீப்தி கேட்க, சுதா ‘அக்கா’ என்று கார்த்திகாவை கை காட்டினான். ‘அக்கா வருவாங்க வாடா நாம போய் படுத்துக்கலாம்’ என்று குண்டுக்கட்டாக அவனை தூக்கிக்கொண்டு மாடிக்கு சென்றாள். ‘எனக்கும் பயங்கரமா தூக்கம் வருது, நாளைக்கு வேற நாலு மணிக்கே எழனும், உங்க ரெண்டு பேருக்கும் குட்நைட்’ என்று சொல்லிவிட்டு சுரேஷ் தன் ரூமிற்கு தன் லேப்டாப்புடன் சென்றான். கார்த்திகாவும் மதனும் சோபாவில் அமர்ந்து அவர்களின் லேப்டாப்புகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். ‘நீங்க தூங்க போகல?’ மதன் தன் லேப்டாப்பை பார்த்தபடி கார்த்திகாவை கேட்க ‘தூக்கம் வரல, நீங்க?’ என்று கார்த்திகாவும் தன் லேப்டாப்பை பார்த்தபடி பதில் கேள்வி கேட்க ‘எனக்கும்தான்’ என்று மதன் பதிலளித்தான். ‘பிரியாணி உங்க அம்மா சமைச்சதா?’ மதன் கேட்க ‘நல்லா இல்லையா?’ கார்த்திகா கேட்க ‘அப்படி இல்ல, சும்மா தெரிஞ்சிக்கலாம் தான் கேட்டேன்’ மதன் கூற ‘அம்மாதான்’ என்று கார்த்திகா கூற ‘உங்க அப்பா கொடுத்து வெச்சவரு, செம்ம டேஸ்ட், நானா இருந்தா டெய்லி சிக்கன் வாங்கிட்டு வந்து சமைச்சு கொடுக்க செல்லுவேன்’ மதன் கூற கார்த்திகா மதனை திரும்பி பார்த்து ‘அம்மான்னு சும்மா சொன்னேன், எங்க வீட்ல நான் இருந்தா நான்தான் சமைப்பேன்’ கார்த்திகா கூற, ‘இதுக்குத்தான் மொதல்லயே உங்க அம்மாவான்னு கேட்டேன்’ மதன் கூற ‘நான்தான்னு மொதல்லையே சொல்லியிருந்தா பாராட்டி இருக்க மாட்டிங்கல்ல?’ கார்த்திகா கேட்க ‘வாயை மூடிக்கிட்டு இருந்திருப்பேன்’ மதன் கூற ‘பாராட்ட கூட மனசு வராது, மிசோஜனிஸ்ட்’ கார்த்திகா புன்னகைத்தவாறே மதனை செல்லமாக அடிக்க தொடங்கினாள்.

தொடரும்..

நக்கீரன்.ந [n.keeran.kpm at gmail dot com]

%d bloggers like this: