துருவங்கள் – அத்தியாயம் 15 – இனிதே துவங்கிய பயணம்

இனிதே துவங்கிய பயணம்

மதன் மற்றும் கார்த்திகாவின் திருமணத்திற்கு முன்தைய நாள். காஞ்சிபுரத்தில் மதனின் குடும்பத்தின் சொந்த மண்டபத்தில் மதன் மற்றும் கார்த்திகாவின் ரிஷப்ஷன் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேடையில் பட்டு வேட்டியுடன் மதனும் தங்கநிற பட்டுப்புடவையில் கார்த்திகாவும் நின்றிருந்தனர். கயலும் குருவும் கார்த்திகா வீட்டினரையும் தன்வீட்டினரையும் கவனித்துக் கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம் சுரேஷும் தீப்தியும் விருந்தினர்களுக்கு என்ன வேண்டும் என்று கவனித்துக் கொண்டிருந்தனர். மதனின் தங்கை மதன் வீட்டாரை கவனிக்க பம்பரம் போல் சுற்றி கொண்டிருந்தாள். வழக்கம் போல மதன் தங்கையின் கணவர் ஓடி விளையாடிக் கொண்டிருந்த தன் குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தார். மதனின் அப்பா சமையல் பரிமாறும் இடத்தை கவனித்துக் கொண்டிருந்தார். மதன் அம்மா நாளை என்னவெல்லாம் தேவைப்படும் என்று கணக்கெடுத்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். சரண் தன் மிக்‌ஸிங் கன்சோலில் அமர்ந்து வரும் வீடியோ ஸ்ட்ரீம்களை மண்டபம் முழுவதும் ஆங்காங்கே வைத்திருந்த சாதாரன ஒஎல்இடி டிவிக்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தான். மதன் திருமண மண்டபத்திற்கு உள்ளே நடப்பதால் சுரேஷ் திருமணத்தில் வைத்ததுபோல் பல ஒஎல்இடி டிவிக்களை ஒன்றாக வைத்து மிகப்பெரிய ஸ்க்ரீன்களை அமைக்க முடியவில்லை. வழக்கம்போல் சரணின் ஸ்பேர் லேப்டாப்பில் மதனின் பிளேபேக் சர்வர் இயங்கிக்கொண்டிருந்தது. மதன் மொபைல் மட்டுமல்லாமல் இப்போது கார்த்திகாவின் மொபைலிலும் பிளேபேக் சர்வரின் க்ளைண்ட் அப்ளிகேஷன் இயங்கிக்கொண்டிருந்தது.

விருந்தினர்கள் எல்லோரும் பரிசுப் பொருட்களை கொடுத்து முடித்த நிலையில் சுரேஷ், தீப்தி, கயல், குரு நால்வரும் கயலின் கைக்குழந்தையுடன் மேடைக்கு வந்தனர். சுரேஷ் வந்தவுடன் மதனின் மொபைலை வாங்கி க்ளைண்ட் அப்ளிக்கேஷனை இயக்கினான். மதன் அதை பார்த்து சரணுக்கு தன் சர்வரில் இருந்து வரும் ஆடியோ ஸ்ட்ரீமை ப்ராட்காஸ்ட் செய்ய சைகையால் கூறினான். அதன்படி சரணும் ஆடியோ ஸ்ட்ரீமை ப்ராட்காஸ்ட் செய்தான். ‘மண்டபத்தில் இருக்கும் எல்லாருக்கும் வணக்கம், உங்களுக்கு தெரியுமா தெரியாதான்னு எனக்கு தெரியாது, ஆனா மதன் கார்த்திகா ரெண்டு பேரும் சூப்பரா பாடுவாங்க. சோ இங்க வந்திருப்பவங்களுக்காக இப்ப இவங்க பாட போறாங்க’ என்று சொல்லிவிட்டு சுரேஷ் மதன் மொபைலை அவனிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கி நின்றான். மதன் சிரித்துக்கொண்டே தன் அப்ளிகேஷனில் இருந்த சர்ச் பட்டனை அழுத்த மதனின் குரலுக்காக அது காத்திருந்தது. மண்டபத்தில் அமர்ந்திருந்தவர்கள் மதன் என்ன பாட போகிறான் என்று ஆவலுடன் காத்திருந்தனர். சில நொடிகள் மண்டபத்தில் அமைதி பரவியது. ‘கை பொருள் யாவும் கரைந்தாலும் கணக்கு கேளேன், ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்’ மதன் சில வரிகள் கூறியவுடன் கோச்சடையான் படத்தில் வரும் கண்ணே கனியே உனை கை விடமாட்டேன் பாடல் முதல் வரிசையில் வந்து நின்றது. மதன் கரோக்கே பட்டனை அழுத்தியவுடன் ஏஆர் ரகுமானின் பியானோ திருமண மண்டபத்தை முழுவதுமாக நிரப்பியது, அதுவரை சாப்பாடு பரிமாறப்படும் இடத்தில் வீடியோ ஸ்ட்ரீமை மட்டும் அனுப்பிய சரண் வந்த இசையை கேட்டவுடன் சாப்பிட்டுக் கொண்டு இருப்பவர்களும் இந்த இசையை கேட்க வேண்டும் என்று உடனே அந்த இடத்திற்கும் ஆடியோவை ஆக்டிவேட் செய்தான். இசையை கேட்டவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் ஒஎல்இடி டிவிக்களை பார்க்க ஆரம்பித்தனர். மணமேடை ப்ளோரில் இருந்த கேமராமேன்கள் மேடையில் ஒவ்வொரு ஆங்கிளில் நடப்பதை சரணின் கன்சோலுக்கு அனுப்பி வைத்தனர். முக்கியமாக இரண்டு கேமராக்கள் மதன் மற்றும் கார்த்திகாவின் முகங்களை மட்டும் போக்கஸ் செய்தவாறு வைக்கப்பட்டிருந்தது, அதை கன்சோலில் கவனித்த சரண் உடனே அதை ஜாய்ன்ட் செய்து ஒரே ஸ்ட்ரீமாக மாற்றி ப்ராட்காஸ்ட் செய்தான். அது இருவரும் என்ன நினைக்கின்றனர் என்று அழகாக டிவிக்களில் காட்டியது. ‘கண்ணே கனியே உன்னை கைவிடமாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே’ என்று மதன் பாடியதும் பக்கத்தில் இருந்த கார்த்திகா மதன் முகத்தை பார்க்க மதன் கார்த்திகாவை பார்த்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை டிவிகள் அழகாக அங்கிருந்தவர்களுக்கு காட்டியது அதை பார்த்துக்கொண்டிருந்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி காணப்பட்டது. ‘நோய் மடியோடு நீ விழுந்தால் தாய் மடியாவேன், சுவாசம் போல அருகில் இருந்து சுகப்பட வைப்பேன்’ என்று மாதன் கார்த்திகாவை பார்த்து பாடுவதை பார்த்த கயலும் குருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிரித்தனர். பாடல் முடிவடையும் நிலையில் கார்த்திகா அவசரமாக தன் மொபைலை எடுத்து மதனின் அப்ளிகேஷனில் ஒரு பாடலின் சில வார்த்தைகளை டைப் செய்தாள். மதன் பாடி முடிக்கும்போது உடனே மதன் பாடிய பாடலின் ஆதே ஏஆர் ரகுமான் இசையே மறுபடியும் வந்தது. எல்லோரும் என்ன இது என்று யோசித்த நிலையில் இருக்கும்போது ‘காதல் கணவா உனை கைவிடமாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே’ என்று கார்த்திகா மதனை பார்த்து பாட அங்கிருந்த அனைவரும் கார்த்திகாவுக்கும் மதனுக்கும் இருந்த காதலை கண்டு மகிழ்ந்தனர். ‘உனது உயிரை எனது வயிற்றில் ஊற்றிக் கொள்வேன், உனது வீரம் எனது சாரம் பிள்ளைக்கு தருவேன்’ என்று கார்த்திகா மதனை பார்த்து பாடும் போது அவர்கள் இடையே இருந்த காதல் மிக அழகாய் அவர்கள் முகத்தில் வெளிப்பட்டது. ‘அழகு பெண்கள் பழகினாலும் ஐயம் கொள்ளேன், உன் ஆண்மை நிறையும் போது உந்தன் தாய் போல் இருப்பேன்’ என்ற வரிகளை கார்த்திகா பாட அருகில் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த தீப்தியும் சுரேஷும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தார். கார்த்திகா பாடி முடித்தவுடன் மண்டபத்தில் இருந்த எல்லோரும் கார்த்திகாவையும் மதனையும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர். கார்த்திகாவின் பெற்றோர் தன் மகளை அவளை மிகவும் நேசிக்கும் ஒருவனுக்குத்தான் மனமுடித்து வைத்திருக்கிறோம் என்று எண்ணி நிம்மதி அடைந்தனர். மதனின் அப்பா சமையல் பரிமாறும் இடத்தில் இருந்து அவர்கள் பாடியதை பார்த்தார். இருவரும் பாடியதை விருந்தினர்கள் சாப்பிடுவதை விட்டுவிட்டு ரசித்ததை கண்டு மகிழ்ந்தார். தன் மகன் அவன் மீது மிகவும் பாசம் வைத்திருக்கும் ஒரு பெண்ணைத்தான் மனம் முடிக்கின்றான் என்பதை உணர்ந்து நிம்மதி அடைந்தார். மதனின் தாயார் இருவரும் பாடியதையும் இருவருக்கும் இருக்கும் பாசத்தையும் பார்த்து கண்கலங்கினார். கார்த்திகா பாடி முடித்தவுடன் தீப்தி கார்த்திகாவை கட்டித்தழுவினாள். சுரேஷ் மதனை கட்டித்தழுவினாள். கயலும் குருவும் மதனுக்கும் கார்த்திகாவுக்கும் கைகுலுக்கி பாராட்டினர். சுரேஷுக்கு அத்தருணத்தை பதிவாக்க தோன்றியது, அங்கிருந்த போட்டோகிராபரை நோக்கி ‘பிரதர், ஒரு குரூப் போட்டோ’ என்று கூறினான். மதனின் தங்கையும் அவள் கணவரும் கீழே இருந்ததை பார்த்து அவர்களையும் மேடைக்கு வரவழைத்தான். மேடையின் வலதுபுறம் மதன் தங்கையின் கணவர் அவர் குழந்தையுடன் நிற்க அடுத்ததாக மதன் தங்கை நிற்க அடுத்து சுரேஷ் நிற்க அடுத்து தீப்தி நிற்க அடுத்ததாக கார்த்திகா நிற்க கார்த்திகாவின் கைகளை பிடித்தவாறு மதன் நிற்க அடுத்ததாக குரு நிற்க குருவிற்கு அடுத்ததாக தன் கைக்குழந்தையுடன் கயல் நின்றாள். நின்றிருந்த அனைவரையும் சிரிக்க சொல்லி போட்டோகிராப்பர் அவர்களை அழகாக படம் எடுத்தார்.

இரவுப்பொழுது, கார்த்திகாவின் வீடு, கார்த்திகாவின் ரூமில் மதன், ஜன்னலில் இருந்து தெரியும் மலையையும் காட்டையும் இரவுப்பொழுதின் இசையையும் வீசும் தென்றல் காற்றையும் அனுபவித்துக் கொண்டிருந்தான். ஜன்னலுக்கு அருகில் ஒரு அலமாரி இருந்தது. மதன் அதை திறக்க அதில் கார்த்திகா சிறு வயதில் இருந்து படித்த புத்தகங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. படிப்பு சம்பந்தப்பட்ட புத்தகங்களுடன் பல நாவல்கள் கவிதை புத்தகங்கள் சேமிக்கப்பட்டிருந்தது. எல்லாம் அடுக்கியிருந்த நிலையில் ஒரு புத்தகம் மட்டும் அடுக்காமல் தனியாக வைக்கப்பட்டிருந்தது. மதன் அதை எடுத்துப் பார்க்க அதன் அட்டைப்படத்தில் ‘துருவங்கள்’ என்று தலைப்பு இருந்தது. அதன் கீழே ‘11=10|01’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மதன் அதை பார்த்து சிரித்தபடி ஜன்னல் முன் வந்து நின்று முன்னுரையை படிக்க தொடங்கினான். அப்பொழுது கதவுகள் திறக்கப்பட்டன. கையில் பால் சொம்புடன் கார்த்திகா உள்ளே வந்தாள். மதன் ஜன்னல் அருகில் இருந்து கார்த்திகாவை பார்த்துக்கொண்டிருந்தான். வந்தவள் நேராக கட்டிலில் போய் அமர்ந்து ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டாள். ‘எப்படா கொஞ்ச நேரம் உட்கார விடுவாங்கன்னு இருந்தது. நீங்க எப்ப இங்க வந்தீங்க?’ கார்த்திகா மதனை பார்த்து கேட்க ‘உன்ன ரெடியாக கூப்டாங்கல்ல, அப்பவே என்ன ரூம் உள்ள போக சொல்லிட்டாங்க’ மதன் கூறிக்கொண்டே ஜன்னல் அருகில் வா என்று கண்களால் கார்த்திகாவை கூப்பிட்டான். ‘நீங்க இங்க வாங்க, நிக்க கூட முடியல’ கார்த்திகா பதில் கூறினாள். மதன் கையில் அந்த புத்தகத்துடன் கார்த்திகாவின் அருகில் வந்து அமர்ந்தான். மதன் கையில் இருந்த புத்தகத்தை பார்த்ததும் கார்த்திகா ‘இந்த புக்கா, உங்க ஆள் யாரோ ஒருத்தர் எழுதினதுதான். சப்டைட்டில் பார்த்தீங்களா? என்னன்னு சொல்லுங்க பாப்போம்?’ கார்த்திகா கூற ‘நீயே சொல்லு’ மதன் புன்னகையுடன் கேட்க ‘10 அப்படின்னா, ஒரு துருவம் 01 அப்படின்னா அதுக்கு ஆப்போசிட் துருவம், அதான் அந்த புக்கோட டைட்டில், துருவங்கள்?’ கார்த்திகா கூற ‘அப்ப, 11 அப்படின்னா என்ன அர்த்தம்’ மதன் கேட்க ‘அது ஜஸ்ட் ஈக்வேஷன்’ கார்த்திகா சமாளித்தாள். ‘நீ அப்படி யோசிச்சி வெச்சிருக்கியா, எனக்கு வேற மாதிரி தோனுச்சு’ மதன் கூற ‘எப்படி?’ என்று கார்த்திகா கேட்க ‘10 இந்த பைனரிய டெசிமலா கன்வெர்ட் பண்ணா டூ, விமன், ஏன்னா ஒரு பெண்ணோட உடம்புல மட்டும் தான் இரண்டு உயிர்கள் வாழ முடியும், 01 டெசிமலா கன்வெர்ட் பண்ணா ஒன், மென், சோ, ரெண்டு பேரும் சேர்ந்தா மூணாவதா ஒரு உயிர் உருவாங்கும்றத சிம்பாலிக்கா 11 அப்படின்னு சொல்லி இருக்காருன்னு தோனுது, 11 பைனரி டெசிமலா கன்வெர்ட் பண்ணா மூனு வரும்’ மதன் கூற கார்த்திகா சிரித்தாள். ‘ஒரு முடிவோடத்தான் ரூமுக்குள்ள வந்திருக்கீங்க?’ கார்த்திகா வெட்கத்துடன் சிரித்து கொண்டே கேட்க ‘அப்ப இன்னைக்கு கேம் ஸ்டார்ட் பண்றது இல்லையா?’ மதன் வருத்தத்துடன் கேட்க ‘பொறுமையா இருந்தா கேம் ஸ்டார்ட் பண்ணலாம், அவசரப்பட்டா நான் கேமுக்கு வர மாட்டேன், கொஞ்சம் கூட ப்ராக்டிஸ் இல்லாம பீல்டுல இறங்கிட்டேன், நீங்கதான் கத்து கொடுக்கனும்’ கார்த்திகா புன்னகையுடன் கூற ‘அலோ, நானும் ப்ராக்டீஸ் இல்லாமத்தான் ப்பீட்டுல இரங்கியிருக்கேன், என்ன, அப்பப்ப மத்தவங்க விளையாடுவதை பார்த்ததால ஒரளவுக்கு எப்படி விளையாடனும்னு தெரியும், ஏன் நீ மத்தவங்க விளையாடி பாத்ததே இல்லையா?’ மதன் கேட்க ‘பாத்திருக்கேன் ஆனாலும் உங்க அளவுக்கு பாத்திருக்க மாட்டேன்’ கார்த்திகா பதில் கூற ‘நாம விளையாடும் போது தெரிஞ்சிடும் யாரு அதிகமா பாத்திருக்காங்கன்னு, பாப்போம்’ மதன் கார்த்திகாவை பார்த்து கூற கார்த்திகா வெட்கத்துடன் மதனின் தோளில் குத்தினாள். மதன் தன் கையில் இருந்த புத்தகத்தை மீண்டும் படிக்கத் தொடங்கினான். ‘யாராவது லவ் ஸ்டோரில லினக்ஸ் பற்றி பாடம் நடத்துவாங்களா, பாதி புக் லினக்ஸ் கமாண்ட்ஸ் பத்தி தான் இருக்கு’ கார்த்திகா கூற ‘மே பி புக்க எழுதினவர் படிக்கிறவங்களுக்கு லினக்ஸ் கத்துக் கொடுக்கத்தான் இந்த புக்க எழுதினாரோ என்னவோ’ என்று கூறினான். கார்த்திகா மதன் கூறியதை கேட்டவுடன் ‘விட்டுக் கொடுக்க மாட்டீங்களே?’ என்று கூற ‘எனக்கு தெரிஞ்சு கண்டிப்பா நான் சொன்னதுதான் அவரோட இன்டென்ஷனா இருக்கும்’ மதன் உறுதியாக கூற கார்த்திகா புன்னகைத்தாள். சில வினாடிகள் கார்த்திகாவும் மதனும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை, பிறகு கார்த்திகா புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் மதனின் தோள்களின் மீது தனது கைகளை வைத்தாள். மதனும் புத்தகத்தை படிப்பதை விட்டு அவள் தோள்களில் தன் கைகலை வைத்தான். இருவரும் பார்த்துக் கொண்டே இருந்தனர். அப்போது கார்த்திகா ‘இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது இந்த பார்வைக்கு தானா பெண்ணானது நான் கேட்டதை தருவாய் இன்றாவது’ என்று 1966 ஆம் ஆண்டு வெளிவந்த வல்லவன் ஒருவன் படத்தில் வந்த பாடலின் சில வரிகளை பாட மதனும் அதற்கு ‘இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது இந்த கேள்விக்குத்தானா பெண்ணானது நெஞ்சை கோட்டையை திறப்பாய் இன்றாவது’ என்று பாடினான். கார்த்திகா மதன் தான் பாடிய பாடலை கண்டுபிடித்துவிட்டான் என்பதை ஆச்சரியத்துடன் ‘இந்த பாட்டு உங்களுக்கும் தெரியுமா?’ என்று கேட்க ‘இந்த பாட்ட ஜெர்மன்லயா போய் கேட்டுட்டு வந்த? தமிழ் சினிமாவேட 1960 ஸ் கிளாசிக்ஸ்’ மதன் கூறினான். இருவரும் புன்னகைத்துவிட்டு சிரிது நேரம் தோள்களில் கைகளை வைத்தவாறு பார்த்துக்கொண்டு இருந்தனர் ‘என்ன?’ மதன் கேட்க ‘விண்டேவ மூடிட்டு வா, அந்த மூணாவத ப்ரொட்யூஸ் பண்ண கேம் ஸ்டார்ட் பண்ணலாம்’ என்று கார்த்திகா வெட்கத்துடன் கூற ‘இப்பவாச்சும் தோனுச்சே? இதோ வரேண்டி செல்லக்குட்டி’ மதன் உடனே போய் ஜன்னலை மூடி விளக்கை அனைத்தான்.

முற்றும்.

முடிவுரை

இக்கதையை நான் எழுத துவங்கியபோது எனக்கு கணினியில் தமிழில் தட்டச்சு செய்ய தெரியாது, அதை கற்றுக்கொள்ளவே இக்கதையை நான் என்னுடைய கணினியில் தமிழ்99 விசைப்பலகை முறையை நிறுவி Emacs ல் எழுத ஆரம்பித்தேன். இக்கதையை முடிக்கும்போது என்னால் சரளமாக தமிழில் தட்டச்சு செய்ய முடிந்தது. எனக்கு தமிழ்99 விசைப்பலகை முறையை அறிமுகப்படுத்திய அன்வர் அண்ணாவிற்கு (கணியம் அறக்கட்டளை) என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இன்னும் என்னால் பிழை இல்லாமல் தமிழில் எழுத இயலாது. இக்கதையில் பல இடங்களில் தமிழில் இருக்கும் அனைத்து வகையான பிழைகளையும் உங்களால் கண்டுபிடிக்க முடியும். ஆனாலும் இக்கதையில் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பேச்சுவழக்கை பயன்படுத்தியுள்ளேன். ஆதலால் பிழைகளை பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இக்கதை தங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இக்கதை பகிர்தலை மட்டுமே நோக்கமாக கொண்டு எழுதப்பட்டது. தங்களுக்கு தெரிந்த யாவருக்கும் இக்கதையை பகிருமாறு கேட்டுக்கொள்கின்றேன். இக்கதை பற்றிய தங்கள் கருத்துக்களை n.keeran.kpm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். உங்களிடம் இருந்து வரும் கருத்துக்களை பார்த்தால் என் கிறுக்கல்களையும் ஒருவர் தன் நேரத்தை ஒதுக்கி படித்திருக்கிறார் என்று எண்ணி பெருமகிழ்ச்சி அடைவேன். இக்கதையை வெளியிட துணைபுரிந்த சீனிவாசன் அண்ணாவிற்கு (கணியம் அறக்கட்டளை) என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

இக்கதை மூலம் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தை பற்றிய அறிமுகம் கிடைத்து இருக்கும் என்று நம்புகிறேன். தற்போதைய கணினி மயமாக்கப்பட்ட உலகில் கட்டற்ற மென்பொருட்களின் பங்கு இன்றியமையாதது. ஆனால் இதை பற்றிய புரிதல் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கப்படவில்லை என்று எண்ணும்போது மனம் வருந்துகின்றது. கட்டற்ற மென்பொருள் இயக்கத்தில் எண்ணற்ற திட்டங்கள் உள்ளன, அவற்றில் தங்களை இணைத்துக்கொண்டு பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

நக்கீரன்.ந [n.keeran.kpm at gmail dot com]

%d bloggers like this: