linux softwares, mozilla, Open Source Software, translation, இரா. அசோகன், கணியம், பேராலயமும் சந்தையும்
நெட்ஸ்கேப் (Netscape) நிறுவனம் அதன் கம்யூனிகேட்டர் (Communicator) உலாவியைத் திறந்த மூலமாக வெளியிடும் திட்டத்தை அறிவித்தது
நீங்கள் வரலாறு படைக்க உதவுகிறீர்கள் என்பது ஒரு விசித்திரமான உணர்வு….
ஜனவரி 22, 1998 இல், நான் முதன்முதலில் பேராலயமும் சந்தையும் வெளியிட்ட சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு, நெட்ஸ்கேப் (Netscape) நிறுவனம் அதன் கம்யூனிகேட்டர் (Communicator) உலாவியின் மூடிய மூலமாக இருந்த நிரலைத் திறந்த மூலமாக வெளியிடும் திட்டத்தை அறிவித்தது. அறிவிப்பு வரும் நாளுக்கு முன்பு இது நடக்கப் போகிறது என்று எனக்கு எதுவும் தெரியாது.
நெட்ஸ்கேப்பின் நிர்வாகத் துணைத் தலைவரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான எரிக் ஹான் (Eric Hahn), அதற்குப் பிறகு எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார்: “நெட்ஸ்கேப்பில் உள்ள அனைவரின் சார்பாக, நாங்கள் இந்த முடிவுக்கு வர உதவியதற்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்களின் சிந்தனையும் எழுத்துக்களும் எங்கள் முடிவுக்கு அடிப்படை உத்வேகமாக இருந்தன.”
இதற்கு அடுத்த வாரம், நெட்ஸ்கேப்பின் அழைப்பின் பேரில் நான் சிலிக்கான் பள்ளத்தாக்குக்கு (Silicon Valley) ஒரு நாள் முழுவதும் (4 பிப்ரவரி 1998 அன்று) அவர்களின் சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்ப நபர்களுடன் உத்தி மாநாட்டிற்குச் சென்றேன். நெட்ஸ்கேப்பின் மூல-வெளியீட்டு உத்தியையும் உரிமத்தையும் ஒன்றாக வடிவமைத்தோம்.
வணிக உலகில் சந்தை மாதிரியின் பெரிய அளவிலான, நிஜ உலக சோதனையை நெட்ஸ்கேப் நமக்கு வழங்க உள்ளது
சில நாட்களுக்குப் பிறகு நான் பின்வருமாறு எழுதினேன்:
வணிக உலகில் சந்தை மாதிரியின் பெரிய அளவிலான, நிஜ உலக சோதனையை நெட்ஸ்கேப் நமக்கு வழங்க உள்ளது. திறந்த மூல கலாச்சாரம் இப்போது ஆபத்தை எதிர்கொள்கிறது. நெட்ஸ்கேப்பின் செயல்படுத்தல் வேலை செய்யவில்லை என்றால், திறந்த மூலக் கருத்து மிகவும் மதிப்பிழந்து, வணிக உலகம் இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்கு அதைத் தொடாது.
மறுபுறம், இது ஓர் அற்புதமான வாய்ப்பு. அமெரிக்க பங்கு சந்தை மற்றும் பிற இடங்களில் இந்த நடவடிக்கையை எச்சரிக்கையுடன் ஆனால் நல்லவிதமாகப் பார்க்கிறார்கள். நம்மை நிரூபிக்க நமக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் நெட்ஸ்கேப் கணிசமான சந்தைப் பங்கை மீண்டும் பெற்றால், அது மென்பொருள் துறையில் நீண்ட காலமாக எதிர்பார்த்த புரட்சியை ஏற்படுத்தலாம்.
அடுத்த ஆண்டு மிகவும் கற்கக்கூடிய மற்றும் சுவாரசியமான நேரமாக இருக்க வேண்டும்.
மைக்ரோசாப்ட் உலாவி சந்தையில் ஏகபோக நிலையை அடைவதை மோசில்லா ஃபயர்ஃபாக்ஸ் (Mozilla Firefox) உலாவி தடுத்தது
உண்மையில் அவ்வாறே அது இருந்தது. 2000 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நான் எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில், பின்னர் மோசில்லா (Mozilla) என்று பெயரிடப்பட்ட அதன் வளர்ச்சி ஒரு நிபந்தனைக்குட்பட்ட வெற்றியை மட்டுமே அடைந்தது. இது நெட்ஸ்கேப்பின் அசல் இலக்கை அடைந்தது. அதாவது இது மைக்ரோசாப்ட் உலாவி சந்தையில் ஏகபோக நிலையை அடைவதைத் தடுப்பது. இது சில வியத்தகு வெற்றிகளையும் அடைந்துள்ளது (குறிப்பாக அடுத்த தலைமுறை கெக்கோ வரைவிக்கும் பொறியின் (Gecko rendering engine) வெளியீடு).
இருப்பினும், மோசில்லா நிறுவனர்கள் முதலில் எதிர்பார்த்த அளவு நெட்ஸ்கேப்பிற்கு வெளியில் இருந்து பெரிய அளவில் நிரலாளர்களின் பங்களிப்பை இது இன்னும் பெறவில்லை. இங்குள்ள பிரச்சினை என்னவென்றால், நீண்ட காலமாக மோசில்லா விநியோகம் உண்மையில் சந்தை மாதிரியின் அடிப்படை விதிகளில் ஒன்றை உடைத்துவிட்டது. பங்களிக்க விரும்புபவர்கள் எளிதில் ஓட்டி வேலை செய்வதைப் பார்க்கக்கூடிய ஒன்றை அது அனுப்பவில்லை. (மேலும், வெளியிடப்பட்ட ஒரு வருடத்திற்கும் மேலாகும் வரை, மூல நிரலிலிருந்து மோசில்லாவை இருமமாக்க (compile), தனியுரிம மோட்டிஃப் (Motif) நிரலகத்திற்கான உரிமம் தேவைப்பட்டது.)
“திறந்த மூலம் ஒரு மந்திரப் பொடி அல்ல”
முக்கியப் பிரச்சினையாக (வெளியுலகின் பார்வையில்) மோசில்லா குழுமம் திட்டத் துவக்கத்திற்குப் பிறகு இரண்டரை ஆண்டுகளுக்கு ஓர் உற்பத்தித்தரமான உலாவியை வெளியிடவில்லை. மேலும் 1999 இல் திட்டத்தின் முதன்மையாளர்களில் ஒருவர் தனது வேலையைத் துறப்பதன் மூலம் சற்றுப் பரபரப்பை ஏற்படுத்தினார். மோசமான நிர்வாகம் மற்றும் தவறவிட்ட வாய்ப்புகள் குறித்து புகார் செய்தார். “திறந்த மூலம்,” அவர் சரியாகக் கூறினார், “ஒரு மந்திரப் பொடி அல்ல”.
உண்மையில் திறந்த மூலம் மந்திரப் பொடி அல்ல. ஜேமி ஜாவின்ஸ்கியின் (Jamie Zawinski) ராஜினாமா கடிதத்தின் போது இருந்ததை விட, மோசில்லாவின் நீண்ட கால முன்கணிப்பு இப்போது (நவம்பர் 2000 இல்) சிறப்பாகத் தெரிகிறது. கடந்த சில வாரங்களில் அன்றாட வெளியீடுகள் இறுதியாக உற்பத்திப் பயன்பாட்டிற்கான முக்கியமான வரம்பைக் கடந்துள்ளன. ஆனால் சரியாக வரையறுக்கப்படாத இலக்குகள், குழப்பமான நிரல் அல்லது மென்பொருள் பொறியியலின் பிற நாட்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படும் ஏற்கனவே இருக்கும் திட்டத்தைக் காப்பாற்ற முடியாது என்று ஜேமி சரியாகச் சுட்டிக்காட்டினார். திறந்த மூலம் எவ்வாறு வெற்றிபெறும் மற்றும் அது எவ்வாறு தோல்வியடையும் என்ற இரண்டுக்கும் ஒரே நேரத்தில் மோசில்லா எடுத்துக்காட்டாகியுள்ளது.
இருப்பினும், இதற்கிடையில், திறந்த மூல யோசனை வெற்றிகளைப் பெற்றுள்ளது மற்றும் பிற இடங்களில் ஆதரவாளர்களைக் கண்டறிந்துள்ளது. நெட்ஸ்கேப் வெளியீட்டிற்குப் பிறகு, திறந்த மூல மேம்பாட்டு மாதிரியில் ஆர்வத்தின் மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டோம். இந்தப் போக்கு லினக்ஸ் இயங்குதளத்தின் தொடர்ச்சியான வெற்றியால் இயக்கப்படுகிறது மற்றும் அதையும் உந்துகிறது. மோசில்லா எட்டிய வெற்றிப் போக்கு வேகமான விகிதத்தில் தொடர்கிறது.
மூலநூல்: The Cathedral and the Bazaar by Eric S. Raymond – version 3.0
தமிழாக்கம்: இரா. அசோகன் ashokramach@gmail.com
நன்றி
இக்கட்டுரைத் தொடர் இத்துடன் முற்றும்!