நிகழ்பட ஆட்டம் மற்றும் வரைகலைப் பொறிகள் (Game and graphics engines) ஏன் தேவை?
நீங்கள் ஒரு பின்னணியையும் ஒரு உருவத்தையும் தயார் செய்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த உருவம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது போல் அசைவூட்டம் செய்ய வேண்டும். இந்தப் பொறிகள் நீங்கள் கொடுத்த தரவுகளிலிருந்து கால்கள் மற்றும் கைகளின் அசைவு மற்றும் தலை திரும்புதல் போன்ற படங்களைக் கணக்கிட்டு அவற்றை வரைய உதவுகின்றன.
நாம் முன்னர் பார்த்த ஓபன்ஸ்பேஸ் 3D (OpenSpace3D), பிளெண்டர் (Blender) போன்ற கருவிகளால் இந்த வேலையை ஓரளவு செய்ய முடியும். எனினும் இந்தப் பொறிகள் திறன்மிகு அசைவூட்டங்களைப் பல புதிய அம்சங்களுடன் செய்ய இயலும். இவை கட்டற்ற திறந்தமூல மென்பொருட்கள். ஆகவே இலவசமாகப் பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவி ஓட்டிப் பார்க்கலாம். இவை லினக்ஸ், விண்டோஸ் மற்றும் மேக் ஆக எல்லாவிதமான கணினிகளிலும் ஓடும்.
ஓபன்ஸ்பேஸ் 3D (OpenSpace3D), பிளெண்டர் (Blender) போன்ற கருவிகளில் முப்பரிமாண உருவங்களைத் தயார் செய்துகொண்டு பின்னர் இவற்றில் அசைவூட்டம் செய்து கொள்ளலாம்.
பிளே கேன்வாஸ் (PlayCanvas)
இது WebGL மற்றும் glTF கோப்பு வகை அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஆகவே VR மற்றும் AR அசைவூட்டங்கள் தயாரிக்கத் தோதானது. ஜாவாஸ்கிரிப்ட் நிரல் எழுதலாம். சிறிய அளவில் எளிதாக நிறுவி ஓட்டக்கூடியது. ஆனால் பெரும்பாலான அசைவூட்ட வேலைகளும் செய்ய இயலும்.
கோடோ விசை (Godot Engine)
கணினி, இணையம் மற்றும் திறன்பேசிகளில் ஓடும் விளாயாட்டுகள் உருவாக்க முடியும். OpenVR மற்றும் OpenXR போன்ற தரநிலைகளுக்கு நீட்சிகள் (extensions) உள்ளன. ஆகவே VR மற்றும் AR அசைவூட்டங்கள் உருவாக்கலாம்.
பாண்டா 3D (Panda3D)
இது C++ நிரல் மொழியில் எழுதப்பட்டது. எனினும் தானியங்கியாக பைதான் மேலுறை (wrapper) உருவாக்க இயலும். எனவே பைதான் நிரல் எழுதி இயக்கலாம். இம்மாதிரி விசைகள் யாவற்றிலும் முதலில் X, Y மற்றும் Z அச்சு கொண்ட வெற்றுத் திரைதான் இருக்கும். நீங்கள் முன்னரே தயாரித்த முப்பரிமாண உருவத்தையும் அதற்குத் தோதான பின்னணியையும் சேர்த்து அசைவூட்டங்கள் உருவாக்கலாம்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: கல்வி மற்றும் பயிற்சிக்கு VR
கற்றதைத் தக்கவைக்க (learning retention) மூழ்கவைக்கும் அனுபவங்கள் உதவுகின்றன. உள் விவரங்களையும் வெட்டுத் தோற்றத்தையும் (section view) காட்ட இயலும். இடர் மிகுந்த வேலைகளில் பெரும்பாலான பயிற்சிகளை VR மூலம் அளிக்கலாம். VR பயிற்சிக்கு செலவும் மிகக் குறைவு.