தரவு உரிமையாளர்களின் கைகளை வலுப்படுத்துக – ஆதார், ஜிஎஸ்டி தொழில்நுட்ப ஆலோசகர்

ஆதார் திட்டத்தின் பிரதான வடிவமைப்பாளராகவும் தொழில்நுட்ப ஆலோசகராகவும் இருப்பவர் பிரமோத் வர்மா. புதிய ஜிஎஸ்டி வரி செலுத்த வழிவகை செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய நிறுவனமாகிய ஜிஎஸ்டி பிணையத்தின் (GSTN) ஆலோசகரும் ஆவார். ஒரு சிறந்த தொழில்நுட்ப நிபுணரான வர்மா பல பொறுப்புகளை ஏற்றுள்ளார். இவர் கல்வியறிவை மேம்படுத்துவதற்கு ஒரு தொழில்நுட்ப தளத்தை உருவாக்கியுள்ள ஏக்ஸ்டெப் (EkStep) என்ற ஆதாய நோக்கமற்ற அமைப்பின் தலைமை தொழில்நுட்ப அலுவலர்; இந்திய தேசிய கட்டணக் கூட்டுத்தாபனத்தின் (National Payments Corporation of India) ஆலோசகர்; ஆதார் திட்டத்தின் செயலி நிரலாக்க இடைமுகமான (API) இந்திய எண்ணிம அடுக்கு (IndiaStack) திட்டத்தின் மென்பொருள் வடிவமைப்பாளர். இத்துடன் பல தொழில்நுட்பத் துளிர் நிறுவனங்களின் இயக்குனர்கள் குழுவிலும் இவர் உள்ளார்.

தனிநபர்கள் மற்றும் சிறிய, நடுத்தரத் தொழில்கள் எண்ணிம சொத்துக்களை உருவாக்க முடிய வேண்டும்

தரவுகள் ஒட்டு மொத்தமாக ஒன்று அல்லது இரண்டு நிறுவனங்களிடமோ அல்லது அரசாங்கத்திடமோ திரண்டு இருப்பதுதான் அமெரிக்காவிலும் மற்ற மேலை நாடுகளிலும் நிகழ்ந்த வருந்தத்தக்க சங்கதிகளில் ஒன்று. வேறு எவருமே அதனால் பயன்பெற இயலாது. இந்தியா உருவாக்கும் தரவு சட்டங்கள் தரவைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், தரவு உரிமையாளர்களின் கைகளை வலுப்படுத்தவும் உதவும் என்று நான் நம்புகிறேன். தனிநபர்களும், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களும் தங்களுடைய தரவை அணுகுவதற்கு உரிமை உண்டு என்பதை சட்டம் உறுதி செய்ய வேண்டும். இந்த சட்டம் பாதுகாப்பைப் பற்றி மட்டுமே இருந்தால் அது பயனற்றது. அதற்குப் பதிலாக, தனிநபர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்கள் எண்ணிம பங்கேற்பு காரணமாக தங்கள் தரவுகளை அணுகுவதன் மூலம் எண்ணிம சொத்துக்களை உருவாக்க முடிய வேண்டும்.

இந்த பெரிய தரவு (big data) மற்றும் இயந்திர கற்றல் (machine learning) காலத்தில் திரட்டிய தரவு மிகவும் மதிப்புமிக்கது. தரவு வைத்திருக்கும் நிறுவனத்தில் அந்தத் தரவுப் பயன்பாடு  பூட்டி வைக்கப்பட்டுவிடும். அவர்கள் அதை திருடு போகாமல் பாதுகாப்பார்கள் என்றாலும், அவர்கள்  அந்தத் தரவையும் மற்றும் அதிலிருந்து பெறப்பட்ட நுண்ணறிவையும் பயன்படுத்துவார்கள். இதைத்தான் பேஸ்புக் மற்றும் கூகிள் போன்ற நிறுவனங்கள் செய்கின்றன. கோடிக் கணக்கான டாலர்கள் அவர்களுக்கு அங்கே பணயமாக உள்ளது.

தரவு பாதுகாப்பு பற்றி அதிகமான பொது  உரையாடல்கள் உள்ளதால், ஒரு பாதுகாப்பு சட்டம்தான் வரும் ஆனால் உரிமையாளர்களின் கைகளை வலுப்படுத்தும் சட்டம் வராதோ என்று நான் சில நேரங்களில் அஞ்சுகிறேன். உங்களுடைய அல்லது என்னுடைய அடையாளத்தை வைத்து எந்தவொரு நிறுவனமும் ஏதாவது தரவு வைத்திருந்தால், அதில் நமக்கும் உரிமை உண்டு என்று தெளிவாகக் கூறப்பட வேண்டும். அதாவது சொந்தத் தரவை அணுகுவதற்கான உரிமையின் மூலம், இந்த நிறுவனங்கள் பல்வேறு சேவைகளை அணுகுவதற்கு பயனர்களுக்கு மீண்டும் இயந்திரத்தால் படிக்கக்கூடிய தரவைக் கொடுக்க வேண்டும். எனவே, நீங்கள் விட்டுச் செல்லும் கால் தடங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

எண்ணிம அமைப்பில் பங்கேற்க மக்களுக்கு உரிமை அளிக்க வேண்டும்

எண்ணிம மயமாக்கலை எதிர்த்துப் பேசவில்லை. ஏனென்றால் இருண்ட காலங்களுக்கு நாம் திரும்பிச் செல்ல முடியாது. அப்படியென்றால் உங்களுக்கு இணைய இணைப்பு இருக்கக்கூடாது, கைபேசிகள் இருக்கக்கூடாது. பாதுகாப்பு, உரிமையாளர்களின் கைகளை வலுப்படுத்துவது இரண்டுக்கும் சமமான எடையை வழங்குவதன் மூலம் இந்தத் தரவுக் காலத்தில் இந்தியா தாவி முன்னே செல்ல முடியுமா என்பதுதான் கேள்வி. இந்த எண்ணிம அமைப்பில் பங்கேற்க மக்களுக்கு உரிமை அளித்து ஒழுங்காக நடந்துகொள்ளவும் மற்றும் எண்ணிம சொத்துகளை சம்பாதிக்கவும் இது சக்திவாய்ந்த வழியாகும்!

சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களும் மற்றும் நிறுவனங்களும் தங்கள் பணப்புழக்கத்தை சமாளிக்க தங்கள் சொந்த, இயந்திரம் வாசிக்கக்கூடிய மற்றும் எண்ணிம முறையில் கையொப்பமிட்ட, அதிக நம்பிக்கையுள்ள ஜிஎஸ்டி தரவுகளை பயன்படுத்தி குறைந்த வட்டியில் கடன் வாங்கவும், விலைச்சிட்டை வைத்து முன்பணம் வாங்கவும் இயல வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நாம் வெறும் வரி தாக்கல் அமைப்பை மட்டுமே உருவாக்கியிருப்போம். இது தேவைதான் ஆனால் போதுமானது அல்ல.

தரவுகள் சில நிறுவனங்களிடம் மட்டும் திரண்டு விடக் கூடாது

நாம் அமைப்புகள் மற்றும் சட்டங்களை சரியாக வடிவமைக்கவில்லை என்றால், இந்தத் தரவுகள் சில நிறுவனங்களிடம் மட்டும் திரண்டு விடும். அவ்வாறு நடக்கக் கூடாது. இந்தப் பிரச்சினையை முளையிலேயே கிள்ள இது இந்தியாவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு என்று எண்ணுகிறேன்.

PK ஜெயதேவன் எழுதிய முழு நேர்காணல் இங்கே

%d bloggers like this: