திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 13. ஒரு திறந்த மூல சமூகத்தை உருவாக்குவது எப்படி

திறந்த மூல திட்டத்துக்கு சமூகம் மிக முக்கியமானது. சுறுசுறுப்பான மற்றும் ஆதரவான சமூகம்தான் அந்தத் திட்டத்துக்கு இதயம் போன்றது. எனினும், உங்கள் திட்டத்துக்குப் பயனர்களையும் மற்றும் நிரலாளர்களையும் ஈர்த்து ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப ஒரு திறந்த மூல உரிமம் மட்டும் வழி செய்யாது. ஆகவே, ஒரு வெற்றிகரமான திறந்த மூல சமூகம் அமைப்பது எப்படியென்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

திறந்த மூல திட்டங்கள் ஏன் தொடங்குகின்றன?

திறந்த மூல மென்பொருள் திட்டங்களுக்கும் மற்ற வகையான மென்பொருள் திட்டங்களுக்கும் அவை ஆரம்பிக்கும்போது உண்மையில் வேறுபாடு எதுவும் கிடையாது. ஒருவர் ஏதாவது விருப்பிற்கேற்ப கட்ட விரும்புவதாலோ அல்லது மற்றவர்களின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தயாரிப்பை உருவாக்குவதாலோதான் இவை தொடங்குகின்றன. இவற்றில் முதலாவதில் இறுதி விளைவைப் பகிர்ந்து கொள்ளும் சாத்தியத்தைக் கூட கருதுவது அரிது. இரண்டாவதில் மென்பொருளைப் பகிர்ந்து கொள்வதுதான் குறிப்பிட்ட உள்நோக்கமாகும்.

சமூகம் என்றால் என்ன? திறந்த மூல திட்டங்கள் ஏன் அவற்றை உருவாக்க விரும்புகின்றன?

சமுதாயங்கள் என்பவை பொதுவான நோக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் தனிநபர்களின் குழுக்கள்தான். மூடிய மற்றும் திறந்த மூல திட்டங்கள் இரண்டிலுமே பயனர் சமூகங்கள் உண்டு. இவற்றில் பெரும்பாலானவர்கள் மற்ற சமூக உறுப்பினர்களுடன் ஊடாடலில் ஈடுபாடு இல்லாமலே இருப்பார்கள். இதற்கு மாறாக, இந்த இரண்டு சமூகங்களிலுமே ஒரு சிலர் மட்டும் பிழை அறிக்கை அனுப்புவது, மற்ற பயனர்களுக்கு உதவுவது, ஆவணங்கள் எழுதுவது போன்றும் மற்றும் ஆர்வப் பரப்புநராகவும் செயலாற்றுவார்கள். மிகவும் தீவிர உறுப்பினர்கள் அவர்களது முயற்சிகளுக்கு பரிசு பெறவும் கூடும். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் தங்கள் தொழில்நுட்பத்தை நல்ல முறையில் பயன்படுத்த உதவும் பயனர் சமூக உறுப்பினர்களுக்கு மிக மதிப்புள்ள வல்லுநர் அல்லது எம்விபி (MVP) திட்டத்தின் மூலம் வெகுமதி அளிக்கிறது. திட்டத்துக்குக் கூடுதல் அணுகலும், கட்டுப்படுத்தும் உரிமையும் வழங்குவதன் மூலம் தீவிர உறுப்பினர்களுக்கு வெகுமதி அளிக்க திறந்த மூல  சமூகங்கள் முனைகின்றன.

மூடிய மூல திட்டங்களில் சில வெகுமதிகள் உள்ளன என்றாலும், அவற்றை சம்பாதிக்கக் கூடிய பங்களிப்புகளை சமூக உறுப்பினர்கள் அளிக்க ஒரு தெளிவான எல்லை இருக்கிறது. குறியீடு பரிசோதனைக்குத் திறந்து இல்லை என்பதால் பயனர்கள் உண்மையிலேயே அடுத்த படிக்குச் சென்று பிரச்சினைகளை சரிசெய்யவோ, புதிய அம்சங்களை மேம்படுத்தவோ அல்லது குறியீட்டை திரும்பி பங்களிக்கவோ அங்கு இறுதியில் வழி கிடையாது. இதற்கு மாறாக சமூகத்தின் எந்த ஒரு உறுப்பினரிடமிருந்தும் தகவல் (குறியீடு மற்றும் ஆவணங்கள்), மட்டுறுத்தப்பட்ட வடிவத்தில்தான் என்றாலும், திட்ட மையத்துக்கு வந்து சேர திறந்த மூல சமூகங்களில் சாத்தியம் உள்ளது. மேலும் முக்கியமாக, எந்தவொரு சிக்கலையும் அனேகம் பேர் பார்ப்பதால், ஒட்டுமொத்த சமுதாயத்தின் அறிவாற்றலையும் ஆற்றுப்படுத்தி பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. ஒரு மூடிய மூல திட்டத்தில் கொடுக்கப்பட்ட எந்தப் பிரச்சினையையும் அதிகபட்சமாக அந்நிறுவனத்தில் வேலை செய்யும் நிரலாளர்கள் மட்டுமே பார்க்க இயலும்.

திறந்த மூல சமூகங்களின் வழக்கமான பாதைகள்

திறந்த மூல சமூகங்கள் ஆரம்பத்தில் மிகவும் சிறியதாக, ஒன்று அல்லது இரண்டு நிரலாளர்களுடன் எந்த பயனர்களும் இல்லாமல், இருக்கலாம். திட்ட வகையைப் பொறுத்து, இந்த நிலைமை நீண்ட காலம், சில ஆண்டுகள் கூட, காப்புக் காலமாகத் தொடரக்கூடும். இந்த நேரத்தில் குறைந்தபட்சமாவது வேலை செய்யும் தயாரிப்பை உருவாக்க ஆரம்ப அணியினர் கடினமாக முயற்சி செய்வார்கள். ஓட்டிப்பார்த்து சோதனை செய்யக்கூடிய குறைந்தபட்ச தயாரிப்பு வெற்றி பெற ஒரு முன்தேவை என்று “பேராலயமும் சந்தையும் (The Cathedral and the Bazaar)” என்னும் புத்தகத்தில் எரிக் ரேமண்ட் (Eric Raymond) சொல்கிறார். ‘ஓட்டிப்பார்த்து’ என்று சொல்வதால் அது உத்தமமாகவோ அல்லது முழு அம்சங்களுடனோ இருக்க வேண்டும் என்பதில்லை. திறந்த மூலத்தில் நன்கு அறியப்பட்ட ஒரு மந்திரம் “முன்னதாக வெளியிடு அடிக்கடி வெளியிடு (Release early, release often)” என்பது. இவ்வாறு செய்வது தொடக்க நிலையில் விலைமதிக்க இயலாத பின்னூட்டத்தை ஈர்க்கும் மற்றும் திட்டத்தில் நம்பிக்கையை உருவாக்கும். இக்காரணத்தினால், தயாரிப்பை முன்னதாக வெளியிடுவது பற்றி சமூகங்களில் பயமோ அல்லது தயக்கமோ இருக்கக் கூடாது. எதிர்பார்ப்புகளைத் தெளிவாகவும் உண்மையாகவும் நிர்வகித்தால் முன்னதாக வெளியிடுவதன் மூலம் கணிசமான நன்மைகளை அடைய முடியும்.

இறுதியில் பயனர்களை ஈர்க்க வேண்டும் என்றால், போட்டி மென்பொருட்களைவிட இந்த மென்பொருள் மிகச் சிறப்பானது என்று இடைமுகமும் வணிகச் சின்னமும் வருங்காலப் பயனர்களை நம்பவைக்க வேண்டும். ஆர்வத்தைத் தூண்டியபின், நுழைவதற்கான தடை குறைவாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, நிறுவல் செயல்முறை போன்ற சாதாரண சங்கதிகள், மிகவும் நயமிக்கதாக இருக்க வேண்டும். பயனர்களைப் பதிவுசெய்வதால் மட்டும் கதை முடிந்துவிடாது. குறைந்தபட்சம் ஒரு தனி நிரலாளர் சிறிய பங்களிப்புகளைக் கையாளுவதில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க காலப்போக்கில் நிரலாளர்களும் தேவை. உருவாக்குநர்கள் ஆர்வமுள்ள பயனர் குழுவிலிருந்து மேலெழக்கூடும். இது தவிர தொழில்நுட்ப சவால், பெருமை, அல்லது தங்கள் நிரலாக்க திறன்களை விளம்பரப்படுத்தும் அல்லது மேம்படுத்தும் வாய்ப்பு மூலம் ஈர்க்கப்பட்டு ஏனைய இடங்களிலிருந்தும் வரக்கூடும்.

இம்மாதிரி ஒரு திட்டத்தைத் திறந்து விடுவது பல புதிய சிக்கல்களை உருவாக்குகிறது. “திறந்த மூல மென்பொருள் உருவாக்குவது (Producing Open Source Software)“ என்ற புத்தகத்தில் கார்ல் போகல் (Karl Fogel) சொல்கிறார், ‘திறந்து விடவேண்டும் என்றால் முற்றிலும் அந்நியர்களுக்குப் புரியுமாறு குறியீட்டை ஏற்பாடு செய்யவேண்டும், ஒரு வளர்ச்சி இணைய தளம் மற்றும் மின்னஞ்சல் பட்டியல்கள் அமைக்க வேண்டும், மற்றும் பெரும்பாலும் முதல் முறையாக ஆவணங்கள் எழுத வேண்டும். இவை அனைத்தும் நிறைய வேலை வைக்கும். ஏதாவது ஆர்வமுள்ள நிரலாளர்கள் வந்து சேர்ந்தால், அவர்களால் எந்த நன்மையும் செய்ய முடியும் முன், அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய சுமையும் நிச்சயமாக உள்ளது.’ எனினும் கிட்ஹப், கூகிள் குறியீடு, மற்றும் ஸ்டேக் எக்சேன்ஜ் (StackExchange) போன்ற இணைவு ஆக்கக் கருவிகள் தயாராகக் கிடைப்பது கூடுதல் முயற்சியை ஓரளவு எளிதாக்குகிறது. ஆனால், திட்டங்களைத் திறந்து விடுவது என்றால் கட்டுப்பாட்டை அவசியம் இழக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. பல திட்டங்கள், அவற்றின் ஆரம்ப நாட்களில், ஒரே நபரால் கருணையான சர்வாதிகாரங்களாகவே இயக்கப்படுகின்றன. அந்த நபரே முக்கிய புதிய செயல்பாட்டை உருவாக்கவும் மற்றும் பங்களிக்கப்பட்ட நிரல்களை மீளாய்வு செய்யவும் பொறுப்பு கொண்டிருப்பார்.

கருணையான சர்வாதிகாரிகள் தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய திறனாளிகளாக இருக்கத் தேவையில்லை. ஆனால் அவர்கள், போகல் (Fogel) சொல்வது போல, ‘நல்ல வடிவமைப்பை அடையாளம் கண்டுகொள்ளும் திறமை உள்ளவர்களாக’ இருக்க வேண்டும். போகல் மேலும் சொல்கிறார், அவர்களுடைய முக்கியமான பொறுப்பு பங்கேற்பாளர்கள் தாங்கள் ‘தனித்தனியாக சாதிப்பதை விடக் கூட்டாக இன்னும் சாதிக்க முடியும்’ என்ற நம்பிக்கையைத் தளரவிடாமல் பார்த்துக்கொள்வதுதான். அவர்கள் மீண்டும் மீண்டும் வர விரும்பும் இடமாக திட்டத்தைத் தலைவர் வைத்திருந்தால்தான் நிரலாளர்கள் தங்குவார்கள். கடின உழைப்புக்கு வெகுமதி அளித்தல்,  குறிப்பிடத்தக்க பணிகளை முடித்தவர்கள் விரும்பினால் மேலும் பொறுப்பை அளித்தல் இதற்கு முக்கியம். திறந்த மூல திட்டங்களில் மேலாண்மை செய்வது சுறுசுறுப்பானது, இயல்பானது, மற்றும் அடக்கி வாசிப்பது என்றும் விவரிக்கப்பட்டுள்ளன.

படுகுழிகளில் விழாமல் ஓட்டுதல்

திறந்த மூலத்தின் முழு செயல்வல்லமையை அடைய உகந்த நிலைமைகள் நிலைத்து இருக்கச் செய்வது சமுதாயத் தலைவர்களின் பொறுப்பாகும். இது தானாக நடக்காது, கவனமாகப் பேணி வளர்க்க வேண்டும்.

தவிர்க்க முடியாத ஆதரவு சுமையைக் கையாள்வதுதான் ஆரம்ப கட்டங்களில் திட்டங்களுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க கவலை. இதை மோசமாகக் கையாண்டால், குறைந்தபட்சம் பயனர்கள் புறக்கணிக்கக்கூடும், அதிகபட்சம் நிறுவனர்களே கைவிட்டு விடவும் வாய்ப்புள்ளது. வெற்றி அடைய வேண்டும் என்றால், இறுதியில் திட்டத்தலைவர் இந்த வேலையை செய்யக்கூடியவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக சிலரை வேலைக்கு வைப்பது ஒரு வழி. மற்றொன்று ஆவணங்கள் எழுதுதல் மற்றும் வழுக்களை நீக்குதல் போன்ற வேலைகளுக்கு பயனர்களை ஒருவருக்கொருவர் உதவ ஊக்கம் அளிப்பது. எனினும், இது நடக்க வேண்டும் என்றால், அவர்கள் இம்மாதிரி வேலைகளைச் செய்ய ஒரு உள்கட்டமைப்பு இருக்க வேண்டும். பங்களிப்பு முனைப்புடன் ஊக்குவிக்கப்பட வேண்டும் மற்றும் தலைவர்கள் பங்களிப்புகளை பயனுள்ளது என்றும் போதுமான தரம் என்றும் உறுதி செய்ய வேண்டும்.

உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ந்து நடத்துவதுதான் ஒரு நிலையான திட்டத்துக்கு முக்கியம். இது நடக்கவில்லையென்றால், தங்கள் நலன்களை கவனிப்பதில்லை என்று நினைப்பவர்கள் அந்த திட்டத்தின் மூலக் குறியீட்டின் ஒரு படியை எடுத்து அவர்களின் சொந்த ஆட்சியின் கீழ் தொடர்ந்து வளர்ச்சி செய்ய முடிவு செய்யலாம். இந்த செயல்முறைக்கு கவைத்தல் (forking) என்றுபெயர். கவைத்தல் ஒரு கெட்ட சங்கதி அல்ல என்று உணர்வது முக்கியம். பரந்த சமூகத்தில் தங்களுடைய குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என்று சமூகத்தின் ஒரு பிரிவு நினைக்கலாம். திட்டத்தின் சிறந்த நலன்களுக்கு நிறுவப்பட்ட ஆட்சி சேவை செய்யவில்லை என்ற ஒரு சூழ்நிலை இருக்கலாம். ஆகவே சமூகத்தார் ஒரு புதிய ஆட்சி அமைப்பின் கீழ் திட்டத்தின் வளர்ச்சியைத் தொடர முடிவு செய்யலாம். எனினும், பிரமுகர்கள் மோதல்கள் அல்லது சிறிய கருத்து வேறுபாடுகளால் ஏற்படும் கவைத்தலைத் தவிர்க்க வேண்டும்,  ஏனெனில் இது சமூகத்தைப் பிரித்து பயனர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும். திட்டத் தலைவர்கள் முடிவெடுக்கும் செயல்முறை நியாயமானது என்று, முடிவுகள் தங்கள் வழியில் போகாவிட்டாலும், பங்களிப்பவர்கள் நம்பினால் இம்மாதிரி அனாவசியமான கவைத்தலைத் தவிர்க்கலாம்.

எப்போது ஒரு கவைத்தல் கவைத்தலல்ல?

பகிர்வு பதிப்பு கட்டுப்பாட்டு அமைப்புகள், குறிப்பாக கிட்ஹப் போன்ற இணைய சேவைகள், பிரபலமடைந்து வருவதால் கவைத்தலின் அர்த்தமே மாறிவிட்டது. ஒரு தனிப்பட்ட நிரலாளர் வெளியிடப்பட்ட குறியீட்டின் சொந்த படியை எடுத்து தங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்களை செய்து, பெரும்பாலும் அந்த மாற்றங்களை திட்டத்துக்கு சமர்ப்பிப்பார்கள். இது இழு கோரிக்கை அல்லது ஒன்றிணைப்பு கோரிக்கை எனப்படும். இம்மாதிரி குறியீட்டை படியெடுப்பது மேலே விவரிக்கப்பட்ட, திட்டத்தை சுற்றி உள்ள சமூகமே உடையக்கூடிய, கவைத்தலிலிருந்து கணிசமாக வேறுபடுகிறது.

திட்டப் பொறுப்பு கைமாறுதல்

ஆரோக்கியமானவை என்று கருதுவதற்கு, திறந்த மூல சமூகங்கள் தங்கள் நிறுவனரின் தொடக்க ஆர்வத்தைத் தாண்டியும் வாழும் திறனைக் கொண்டிருக்க வேண்டும். கருணையான சர்வாதிகாரிகளையே நம்பியிருந்தால் அத்தலைவர்கள் விட்டுச் சென்றாலோ அல்லது ஓய்வு பெற்றாலோ திட்டம் உடைந்து வீழ்ச்சியடையும் ஆபத்து உள்ளது.

பெரும்பாலான சமூகங்களில், சர்வாதிகார ஆட்சியில் கூட, போகப்போக வேறு நபர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் வரக்கூடும். இம்மாதிரி ஒருமித்த கருத்தின் அடிப்படையிலான மக்களாட்சியை நோக்கி செல்வது ஒரு இயற்கையான விளைவே. இருப்பினும் இந்த புதிய ஏற்பாட்டில் அனைத்து சிறிய முடிவுகளும் கூட குழுவால் எடுக்கப்படும் என்று பொருள் அல்ல. பெரும்பாலும் முன்மொழிவுகள் ‘மௌனம் சம்மதம்’ என்ற  ‘ஓய்வான கருத்தொற்றுமை’ அடிப்படையில் முடிவு செய்யப்படும். கருத்தொற்றுமை இல்லையென்றால் பெரும்பாலான சமூகங்களில் ஏதாவது ஒரு வாக்களிப்பு முறை உண்டு.

இந்த பழக்கமும் நடைமுறைகளும் மிகவும் சிக்கலாக ஆகிவிட்டால், புதுமுகங்களுக்கு அவற்றை விளக்கி அவர்கள் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பங்கேற்க உதவுவது மிகவும் முக்கியமாக ஆகிறது. இளம் சமூகங்கள் அஞ்சல் பட்டியலில் திரட்டப்பட்ட அறிவை நம்பி இருக்கலாம். ஆனால் இது எப்போதும் புதுமுகங்களுக்கு உதவுவதில்லை மற்றும் அவர்களைக் குழப்பி விடவும் கூடும். குறைந்தபட்சம் ஒரு சுருக்கமான ‘ஆட்சி முறை மாதிரி’ எழுத்தில் இருந்தால் நல்லது. ஏற்பாடுகளை இவ்வாறு முறைப்படி செய்துவிட்டால், ஒரு தனிநபரை நம்பி இல்லாமல், திட்டத்தின் வெளியீடுகளுக்கு ஒரு உண்மையான நீடித்த தேவை இருக்கும்வரை சமூகம் தழைத்தோங்க முடியும்.

முடிவுரை

ஒரு திறந்த மூல மென்பொருளைச் சுற்றி ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவது மெதுவாகத்தான் நடக்கும், கடின உழைப்பு தேவை மற்றும் வெற்றி பல சங்கதிகளைப் பொருத்தது. இருந்தபோதிலும், ஒரு சமூகம் இல்லாமல், எந்தத் திட்டமும் இருக்க முடியாது. சமூகம் கட்டுவது தானாகவே நடக்காது, கவனமாக மேலாண்மை செய்ய வேண்டும். மென்பொருள் தொகுப்பு, வணிகச் சின்னம், அல்லது வாய்வழிப் பரிந்துரைகள் மூலம் ஈர்க்கப்பட்ட பயனர்களை வைத்துத்தான் அனைத்து சமூகங்களும் தொடங்குகின்றன. அவர்கள் வந்த பின் இந்த உயர் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருப்பதுதான் முக்கிய சவால். பங்கேற்பாளர்கள் அவரவர் வழியே செல்லாமல் அதன் தலைவர்கள் அவர்களை ஒற்றுமையாக வைத்தால் மட்டுமே ஒரு வெற்றிகரமான சமூகம் அமைத்து இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியும். காலப்போக்கில் முக்கிய பங்களிப்பாளர்கள், நிறுவனர்கள் உட்பட, விட்டுச் செல்லும் போது தங்கள் வேலைகளை மற்றவர்கள் ஏற்று நடத்த சமூகத்தில் திறந்த வளர்ச்சி வழிமுறைகள் இருக்க வேண்டும். 

OSS Watch

மூலக்கட்டுரை எழுத்தாளர் பற்றி: ஓஎஸ்எஸ் கண்காணிப்பகம் (OSS Watch) ஒரு பிறர் சார்பற்ற, நடுநிலை சேவைக் குழுமம் ஆகும். நாங்கள் கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் வல்லுனர்கள், ஆனால் ஒவ்வொரு பிரச்சினைக்கும் அதுதான் தீர்வு என்று வற்புறுத்த மாட்டோம். நாங்கள் எந்தக் குறிப்பிட்ட தீர்வுகள் அல்லது நிறுவனங்களுடனும் சார்ந்தவர்களல்ல. கட்டற்ற அல்லது திறந்த மூல மென்பொருள் பயன்படுத்தும் அல்லது பயன்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு மென்பொருள் தேர்வு மற்றும் மதிப்பீடு செய்யவும், திறந்த மூல சமூகங்களுடன் ஒத்துழைக்கவும்,  உரிமம் மற்றும் அறிவுசார் சொத்து பிரச்சினைகள் பற்றியும் நாங்கள் ஆலோசனை, பயிற்சி மற்றும் ஆதரவு தருகிறோம்.

மூலம்: opensource.com  தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்

%d bloggers like this: