ஜனவரி 2013 ல், என் வணிக யோசனையை செயல்படுத்த உதவக்கூடிய திறந்த மூலத் தீர்வுகளை நான் ஆய்வு செய்யத்தொடங்கினேன். ஃபிலிம் பாக்ஸ் ஃபெஸ்டிவெல் (FilmBoxFestival) என்ற பெயரில் ஆவணப்படங்களை (documentary films) இணையத்தில் தாரை ஒளிக்காட்சியாக (streaming video) வெளியிடும் இயக்குதளம் உருவாக்குவதே என் நோக்கம். இந்த தளத்தை உருவாக்க திறந்த மூலத் தீர்வுகளான வேர்ட்பிரஸ் (WordPress), ஜூம்லா (Joomla), மற்றும் ஓபன்ஷிஃப்ட் (OpenShift) பயன்படுத்தினேன்.
என்னுடைய ஆக்க எண்ணத்தை உருவாக்கி, செல்லத்தக்கதாக்கி, விரைவாக வாடிக்கையாளர்கள் நாட்டம் கொள்ளவும் செய்ய என்னால் இயன்றதற்கு முக்கிய காரணம் இந்த திறந்த மூலக் கருவிகளே. எனவே, நீங்கள் ஒரு தொழில்முனைவோர் என்றால் திறந்த மூல சாத்தியங்களை ஆராய உங்களை ஊக்குவிக்கிறேன். இது பற்றி நான் கற்ற சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.
செயல்பாட்டின் அம்சங்களை இனங்காண்பது முக்கியம்
திறந்த மூலத் தீர்வுகள் இயல்பாகவே கூறுகளாக உள்ளன. பல சமயங்களில், இறுதித் தயாரிப்பை உடைத்து சிறிய அம்சங்களாக ஆக்கினால் நீங்கள் விரும்பும் செயல்பாட்டின் கூறுகள் மற்றும் உட்பொருத்திகள் தேடிக் கண்டுபிடிப்பது எளிதாகிறது. எடுத்துக்காட்டாக, நான் ஃபிலிம் பாக்ஸ் ஃபெஸ்டிவெல் தளத்தில் வாசகர்களிடையே அதிக ஊடாடலை செயல்படுத்த விரும்பினேன். இதைச் செய்ய ஒரே உட்பொருத்தி தேடுவதற்கு பதிலாக, பல சிறிய அம்சங்களாகப் பிரித்தேன். பகிர்தலையும் கலந்துரையாடல் மன்றத்தையும் தனியாகப் பிரித்ததால் என்னால் வெவ்வேறு உட்பொருத்திகள் கண்டுபிடிக்க முடிந்தது. ஏனெனில் திறந்த மூலம் எனக்குக் கிடைக்கும் தேர்வுகளை விரிவுபடுத்தியது மற்றும் நான் விரும்பிய தீர்வு உருவாக்க ஆயத்த தேர்வுகளை வழங்கியது.
புதிய கருவிகள் தேடுங்கள்
எப்போதும் உங்கள் வணிகத்துக்கான புதிய உட்பொருத்திகள், கருவிகள், மற்றும் நீங்கள் விரும்பும் அம்சங்களை செயல்படுத்தும் அணுகுமுறைகளைத் தேடிக்கொண்டே இருங்கள். திறந்த மூல சமூகம் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது. ஆகவே புதிய தீர்வுகள் அடிக்கடி வெளியிடப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, ஃபிலிம் பாக்ஸ் ஃபெஸ்டிவெல்-ல் முன்னோட்ட நிகழ்படங்கள் காண்பித்து, அதன் பின்னர் வாங்குபவர்கள் அவர்கள் வாங்கிய ஆவணப்படங்களைப் பார்க்க அனுமதி தரும் ஒரு ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறையை நான் விரும்பினேன். மூன்று மாதங்கள் இம்மாதிரி அம்சங்களைக் கொண்ட கட்டணம் செலுத்தும் தீர்வு தேடிய பின் எனக்கு கம்ரோட் (Gumroad) தெரியவந்தது. இது இணையத்தில் தாரை ஒளிக்காட்சியாக வெளியீடு செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு சேவை. மேலும் வாங்குபவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அணுக இயலும் இணைப்பை மின்னஞ்சலும் செய்யும்.
ஒவ்வொரு அடியிலும் ஆவணமாக்கி, காப்புப்படி எடுத்து, சோதனை செய்தல் அவசியம்
திறந்த மூலத் தீர்வுகள் மிக நெகிழ்வாகவும் கூறுகளாகவும் இருப்பதால், அதை ஒத்த அல்லது துணை செயல்பாடுகளை நிறுவும் போது அந்த செயல்பாடு உடையக்கூடும். எனவே நீங்கள் கட்டாயமாக உங்கள் வலைத் தீர்வுகளை ஆவணப்படுத்தல், காப்புப்படி எடுத்தல் மற்றும் சோதனை செய்தலை கட்டுப்பாட்டுடன் செய்வது மிக முக்கியம். குறைந்தது இரண்டு தருணங்களில் நான் ஃபிலிம் பாக்ஸ் ஃபெஸ்டிவெல்-ஐ தொடக்கத்திலிருந்து மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. ஆவணப்படுத்தல், காப்புப்படி எடுத்தல் மற்றும் சோதனை செய்தலுக்கு என் திட்டமிட்ட அணுகுமுறையால் அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஒரே நாளுக்குள் என்னால் அந்த இணையதளத்தை மீட்டமைக்க முடிந்தது. இதேபோல் நான் நிறுவிய சில உட்பொருத்திகள் ஒரு உலாவியில் வேலை செய்தன ஆனால் மற்றொரு உலாவியில் வேலை செய்யவில்லை. முறையாக சோதனை செய்ததால் என்னால் இந்தப்பிழையை உடன் கண்டுபிடிக்க முடிந்தது. அந்த உட்பொருத்தியை உருவாக்கியவர்களுடன் தொடர்பு கொண்டு அதற்கு ஒரு தீர்வு காண வேலையையும் தொடங்க முடிந்தது.
நான் என் துளிர் நிறுவனத்தைக் (Startup company) கட்டியெழுப்பி வளர்த்துக்கொண்டிருந்த போது, திறந்த மூல சமுதாயம் சிறந்த தொழில்நுட்ப ஆதரவையும் மற்றும் ஆவணங்களையும் எனக்கு வழங்கியது. தொழில்முனைவோர்களுக்கு, திறந்த மூலத் தீர்வுகள் குறைந்த செலவில் விரைவான, மற்றும் திறமையான முறையில் உங்கள் துளிர் நிறுவனத்தை உருவாக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை முன்வைக்கின்றன.
மூலக்கட்டுரை எழுத்தாளர் பற்றி: புதிய பொருட்கள் மற்றும் உத்திகளை உருவாக்கி விற்பனைக்குக் கொண்டுவருவதற்கான வணிகம், கண்டுபிடிப்பு, மற்றும் தொழில்நுட்பத்தில் நபீல் ஹுசைன் (Nabeel Hussain) 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். அவர் வியூகம் செய்து, ஆண்டுக்கு $ 3.2 மில்லியன் க்ளேரி சோலார் (ClarySolar) இணைய வணிகம் உட்பட, $ 45 மில்லியன் சாத்தியம் உள்ள சந்தையை அடையாளம் கண்டு பல புதிய தொழில்நுட்பப் பொருட்களை உருவாக்கியிருக்கிறார். திறந்த மூலத்தின் சமூக ஆதரவு மற்றும் பல்வேறு தயாரிப்புகள் தொழில் முனைவோருக்கு ஒரு வாய்ப்புள்ள உலகை அமைக்கிறது என்று அவர் நம்புகிறார். அவர் www.innovateto.com இணைய தளத்தை நடத்துகிறார்.
மூலம்: opensource.com தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்