எளிய தமிழில் Car Electronics 13. தகவல் பொழுதுபோக்கு அமைப்பு

இந்த எண்ணிம யுகத்தில், ஊர்திகள் அடிப்படை போக்குவரத்து சாதனங்கள் என்பதைத் தாண்டி நடமாடும் பொழுதுபோக்கு மையங்களாக மாறியுள்ளன. காரில் இருக்கும் தகவல் பொழுதுபோக்கு அமைப்பு (Infotainment system), பயணத்தின் போது தொடர்பில் இருக்கவும், மகிழ்விக்கவும், தகவல் தெரிவிக்கவும் வழி செய்கிறது.

இது எண்ணிம வானொலிகளில் தொடங்கி வண்டியைப் பின்னோக்கிச் செலுத்த உதவும் நிழல்படக் கருவிகள் வரை பல்வேறு செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் காரில் உள்ள கணினி அமைப்புகளைக் குறிக்கிறது. இது பொதுவாகக் காரின் மையத்தில் உள்ள மானிப்பலகையில் (dashboard) அமைந்திருக்கும். இந்த அமைப்புகளின் திறன்கள் காரின் விலையையும் அம்சங்களையும் பொறுத்தது.

Car-infotainment-system

கார் தகவல் பொழுதுபோக்கு அமைப்பு

திறன்பேசிகள் இணைத்தல்

ஓட்டுநர்கள் தங்கள் திறன்பேசிகளை புளூடூத் (Bluetooth) வழியாக இந்த அமைப்புடன் இணைக்கலாம். ஒலி காரின் ஒலிபெருக்கி மூலம் கேட்கும். முக்கியமாகக் திருப்பு வளையத்திலிருந்து கையை எடுக்காமலே உள்வரும் அழைப்புகளைக் கையாள முடியும். உள்வரும் தகவல்களும் காரின் தொடுதிரையில் தெரியும். இது ஊர்தியைப் பாதுகாப்பாக ஓட்ட உதவுகிறது.

ஆன்ட்ராய்டு ஆட்டோ (Android Auto), ஆப்பிள் கார் ப்ளே (Apple CarPlay) செயலிகள் 

உங்களிடம் ஆன்ட்ராய்டு அல்லது ஆப்பிள் திறன்பேசி இருந்தால் அதை இணைக்கும் அம்சம் பல கார்களில் வருகிறது. அதற்கான கம்பியைப் பயன்படுத்தி நேரடியாகச் செருகலாம். உங்கள் திறன்பேசியில் உள்ள வழிசெலுத்தல் (navigation), தொடர்பாளர் பட்டியல் (contact list) போன்ற சில செயலிகளைக் கார் மூலம் அணுக முடியும். 

இந்த முறையில் இணைத்தால் காரில் திறன்பேசியின் திரையைப் பிரதிபலிக்கும். மேலும் சிரி (Siri), கூகிள் உதவியாளர் (Google Assistant) குரல் கட்டளைகளைப் பயன்படுத்தி முக்கிய செயல்பாட்டைக் கட்டுப்படுத்த ஓட்டுநர்களுக்கு உதவுகிறது.

பல்லூடக ஆதரவு (Multimedia Support)

பின் இருக்கையில் சிறுவர்கள் இருந்தால் அவர்கள் பார்க்க வசதியாக இருக்கையின் பின்புறக் காணொளித்திரை (seatback displays) பொருத்திய கார்கள் வருகின்றன. HDMI அல்லது USB கம்பியை இணைத்து காரில் உள்ள திரை, ஒலிபெருக்கி ஆகியவற்றின் மூலம் இசை, படம் மற்றும் காணொளிக் காட்சிகளைப் பார்க்கவும், கேட்கவும் முடியும்.

பாதுகாப்பு மற்றும் ஆதரவு அம்சங்கள்

தகவல் பொழுதுபோக்கு அமைப்புகளில் தரிப்பு உணரிகளும் (parking sensors), பகல்நேர விளக்குகளின் (Daytime Running Lights – DRL) நிலைகாட்டிகள் போன்ற பாதுகாப்பு மற்றும் ஆதரவு அம்சங்களும் அடங்கும்.

நன்றி

  1. All about car touchscreen systems – Autocar India

இத்தொடரில் அடுத்த கட்டுரை: அதிநவீன ஓட்டுநர் உதவி அமைப்புகள்

தடம் மாறல் எச்சரிக்கையும் (Lane Departure Warning)  தடத்திலேயே செல்ல உதவியும் (Lane Keep Assist). தானியங்கி முகப்பு விளக்கு தாழ்த்துதல் (High Beam Assist). முன்புற மோதல் எச்சரிக்கையும் (Forward Collision Warning – FCW) தானியங்கி அவசரநிலை நிறுத்தமும் (Automatic Emergency Braking – AEB). பார்வை விழாப் பகுதியில் ஊர்தி எச்சரிக்கையும் (Blind View Monitor) மோதல் தவிர்ப்பும் (Blind Spot Collision Avoidance). கதவு திறப்பு எச்சரிக்கை (Door Open Warning or Safe Exit Warning). பின்புறம் குறுக்கே வரும் ஊர்தி எச்சரிக்கை (Rear Cross Traffic Alert). ஓட்டுநர் கவனக்குறைவு எச்சரிக்கை (Driver Attention Warning – DAW).

ashokramach@gmail.com

%d bloggers like this: