உபுண்டு 12.04 (Precise Pangolin)- என்ன புதுசு? வாங்க.. பார்க்கலாம்!

 
உபுண்டு 12.04 இதோ வெளிவந்து விட்டது. வழக்கமாக வெளிவரும் வழு நீக்கல்கள் (Bug Fixes) மற்றும் மேம்படுத்தப்பட்ட மென்பொருட்கள் தவிர, உபுண்டுவில் வேறு என்ன மாற்றங்கள் ? இங்கு பார்ப்போம்.

உபுண்டுவின் யூனிட்டி பணிமேடை சூழல் (Unity Desktop Environment) நன்கு மெருகூட்டப்பட்டிருக்கிறது. அதில் பல புதிய அம்சங்களும், அமைப்பு வடிவமைப்புகளும் (Configurations) இடம் பெற்றுள்ளன.

உபுண்டுவின் புதிய பதிப்பான Precise Pangolin மாபெரும் அதிரடி மாற்றங்கள் எதனையும் கொண்டு வரவில்லை. ஆனால், யூனிட்டியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதுடன் நல்ல மெருகேறிய மற்றும் திருத்தமான ஒரு இடைமுகத்தை நமக்கு வழங்குகிறது.

நீண்ட கால சேவையாக (Long Term Service-LTS) வெளிவந்துள்ள இந்த பதிப்பிற்கு பொது கணிணிகளில் (Desktop) மூன்று ஆண்டுகளுக்கும், வழங்கி வகை கணிணிகளில் (Server) ஐந்து ஆண்டுகளுக்கும் ஆதரவு வழங்கப்படும்.

 

வான்கல கருவிப்பலகை காட்சியமைவு [HUD]

 

உபுண்டுவின் புதிய வான்கல கருவிப்பலகை காட்சியமைவு (Heads-Up Display) தான் Precise Pangolin பதிப்பில் நமது கவனத்தை ஈர்க்கும் புதிய அம்சம் ஆகும். யூனிட்டி என்னும் திகைப்பு புதிரை (Jigsaw Puzzle) முடிக்க  மிகத்தேவையான துண்டு இதுவே! உபுண்டுவின் உலகளாவிய பட்டிப் பலகையினையும் (Global menu bar), தானே மறையும் பட்டிகளையும் பயன்படுத்த இப்போது தான் ஒரு அர்த்தம் கிடைத்துள்ளது.

HUD எனப்படுவது உபுண்டுவின் பல நாள் நோக்கமான  “சொல் தள  இடைமுகம்” (text-based interface) ஆகும். இது வழக்கமான வரைபட மெனுப் பட்டிக்கு மாற்றான ஒரு முயற்சி.

அப்படியென்றால், வழக்கமான மெனுப்பட்டி என்ன ஆகும்? யாரும் பயப்பட வேண்டாம் !! – மெனுப்பட்டி எப்போதும் அங்கேயே இருக்கும்.

உபுண்டுவின் உலகளாவிய பட்டிப் பலகையினை ஆதரிக்கும் எல்லா பயன்பாடுகளும் HUD ஐ ஆதரிக்கும்.

HUD ஐச் செயல்படுத்த எந்த பயன்பாட்டிலும், Alt விசையினை அழுத்தவும். அழுத்திய பின், நீங்கள் தட்டச்சு செய்ய செய்ய அதனுடன் ஒத்துப் போகும் பட்டி பொருட்களைக் (menu items) காணலாம். இந்த வசதியினைப் பணிமேடையிலும் பெறலாம்.

 

மெனு பொருளைச் சுட்டி மூலமாகவும், நிலைக்காட்டி விசைகள் மற்றும் Enter விசை மூலமாகவும் தேர்ந்தெடுப்பதிற்கும், HUD மூலம் தேர்ந்தெடுப்பதிற்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால், குறிப்பிட்ட வசதி எந்த பட்டியில் உள்ளது என்று தெரியாமல் தேடும் தொல்லையை HUD போக்குகிறது.

தனியுரிமை

உபுண்டு 11.04 பதிப்பில் இருந்து Zeitgeist பொறி (Zeitgeist engine) உபுண்டுவின் அங்கமாக ஒருங்கிணைக்கப்பட்டது. Zeitgeist பொறியினை ஒரு செயல் பதிவேடு (Activity Log) என்றும் சொல்லலாம். நான் கணிணியில் செய்யும் எல்லா செயல்களையும் – திறக்கும் கோப்புகள், பார்க்கும் வலைத்தளங்கள், இணையத்தில் பேசும் மக்கள், மேலும் பல- ஒரு பதிவில் சேமித்து வைக்கிறது. பதிவுகள் கணிணியிலேயே சேமிக்கப்பட்டு, நமது விருப்பத்திற்கேற்ற சூழலை அளிப்பதற்காக, பிற பணிமேடை பயன்பாடுகளுக்கு வழங்கப்படுகிறது.

இதனால் நமது தனியுரிமை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது அல்லவா!! பலரது தனியுரிமை கவலைகளைக் கவனத்தில் கொண்ட உபுண்டு, தற்போது இதைக் கையாள புதிதாய் “தனியுரிமை பலகம்” (Privacy Panel) ஒன்றை உருவாக்கியுள்ளது. உபுண்டு கணிணி அமைப்புகள் பக்கத்தில் (System Settings–> Privacy) இதனை நீங்கள் காணலாம்.

 

தனியுரிமை பலகத்தில் இதற்காக சில தெரிவுகள் (Options) உள்ளன. நமது செயல்கள் பதிவதை முழுதும் தடை செய்வதற்கு மட்டுமன்றி குறிப்பிட்ட வகை கோப்பு, அடைவுகள் அல்லது பயன்பாடுகளுக்கும் பதிவு தடை வசதி உள்ளது. மேலும், செயல் வரலாற்றினை முழுதாகவோ, குறிப்பிட்ட கால அளவிற்கோ அழித்து விடவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

 

யூனிட்டி தோற்ற அமைப்புகள்

உபுண்டுவில் ஒரு வழியாக யூனிட்டி சூழலுக்கான சில அமைப்பு வடிவமைப்புகள் கிடைக்கிறன. இந்த தெரிவுகளைக் கணிணி அமைப்புகள் பக்கத்தில் உள்ள ‘தோற்றம்‘ பலகத்தில் (System Settings –> Appearance) காணலாம். [பணிமேடையில் Right-Click செய்தும் பெறலாம்]

‘Look’ தத்தலின் மூலம் யூனிட்டி ஏவுதளத்தில் (Unity Launcher) இடம்பெற்றுள்ள பயன்பாட்டு குறிப்படங்களின் (icon) அளவினை மாற்றலாம்- அவற்றை உங்கள் விருப்பபடி பெரிதாக்கவோ, சிறிதாகவோ ஆக்கலாம்.

“Behaviour’ தத்தலின் மூலம் ஏவுதளத்தின் மறைவியல்புத் தன்மையை மாற்றலாம். தற்போதய பதிப்பில் உள்ள ஏவுதளம் இயல்பாக தானாக மறையும் வகையில் அமைக்கப்படவில்லை. அதன் மறைவியல்புத் தன்மையை ‘auto-hide’ அம்சத்தைச் செயல்படுத்துவதன் மூலம் உயிரூட்டலாம். மேலும், அதன் உணர்திறனையும் விருப்பப்படி மாற்றலாம். தற்போது சில தெரிவுகளே யூனிட்டியில் காணக் கிடைக்கிறன. பின்னாட்களில் மேலும் சில வசதிகள் கிடைக்கும் என்று நம்புவோம்!

விரைவுப் பட்டியல்கள் (Quicklists)

யூனிட்டியின் விரைவுப் பட்டியல் அம்சத்தைத் தற்போது பல பயன்பாடுகள் ஆதரிக்கிறன. அவற்றுள் நாட்டிலஸ் கோப்பு மேலாளரும் ( Nautilus file manager), ரிதம்பாக்ஸ் இசைப்பானும் (Rhythmbox music player) அடக்கம். யூனிட்டி ஏவுதளத்தில் உள்ள பயன்பாட்டினை Right-click செய்தால், அதில் அதிகம் பயன்படும் தெரிவுகளுக்கான குறுக்கு இணைப்புகள் இருக்கும்.

உதாரணமாக, Nautilus புக்மார்க் செய்யப்பட்ட இடங்களையும், Rythmbox  மீட்பொலிக்கும் தெரிவுகளையும் (playback options) காட்டும்.

காணொளி வில்லை (Video Lens)

Lens (வில்லைகள்) மூலம் பலவகைப்பட்ட தேடல்களையும் Unity Dash திரையிலேயே செய்யலாம். Precise Pangolin காணொளி தேடலிற்காக புதிய வில்லை ஒன்றை உருவாக்கியுள்ளது.

Unity Dash திரையில்கீழே உள்ள காணொளி குறிப்படத்தைத் சொடுக்கிய பின் தேடினால், கணிணியில் சேமிக்கப்பட்ட காணொளிகள் மட்டும் அல்லாது, இணையத்தில் ( YouTube, Vimeo, TED Talks) உள்ள காணொளிகளையும் காணலாம். வடிப்பான்களின் துணை கொண்டு குறிப்பிட்ட இடத்தில் உள்ள காணொளிகளை மட்டும் பெறலாம்.

மென்பொருள் பரிந்துரைகள் (Software Recommendations)

உபுண்டு தற்போது தனித்துவமான மென்பொருள் பரிந்துரைகளை அளிக்கிறது. இந்த வசதியினைப் பெற நீங்கள் உங்கள் உபுண்டு மென்பொருள் மையத்தின் கணக்கின் Ubuntu Software Center account மூலம் பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கென தனியே ஒரு கணக்குத் துவங்கத் தேவையில்லை. உங்கள் Ubuntu One கணக்கு அல்லது Launchpad கணக்கு போதும். உபுண்டு மென்பொருள் மையத்தின் கீழே உள்ள ” Turn On Recommendations” பொத்தான் மூலம் இந்த வசதியினைப் பெறலாம்.

பரிந்துரைகளைச் செயல்படுத்தினால், நீங்கள் நிறுவியுள்ள மென்பொருட்களின் பட்டியல் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை கனோனிக்கல் வழங்கிகளுக்கு ( Canonical’s servers) அனுப்பப்படும். பரிந்துரைகள் உபுண்டு மென்பொருள் மையத்தில் தோன்றும்.

இயல்பு நிறுவல்களில் இனியும் Mono பயன்பாடு கிடையாது (No Mono By Default)

உபுண்டு 12.04 பான்ஷீ (Banshee ) இசைப்பானைத் தனது இயல்பு நிறுவல்களில் இருந்து நீக்கிவிட்டது. மீண்டும் ரிதம் பாக்ஸ் ( Rhythmbox) உபுண்டுவின் இசைப்பான் ஆனது. உபுண்டுவின் இயல்பிருப்பில் இருந்த மற்றொரு Mono பயன்பாடான டாம்பாயும் (Tomboy) இயல்பு நிறுவல்களில் இருந்து நீக்கப்பட்டது. இதன் மூலம், உபுண்டுவின் இயல்பு நிறுவல்களில் இனியும் Mono பயன்பாடுகளுக்கு இடம் இல்லை.

எனினும், மேற்கூறிய இரண்டு பயன்பாடுகளும் உபுண்டு மென்பொருள் மையத்தில் இடம்பெற்றுள்ளன. தேவையெனில், நிறுவிக்கொள்ளலாம். உபுண்டு மென்பொருள் மையத்தில் பெடோரா (Fedora) இயங்குதளத்தின் இயல்பு நிறுவலும், டாம்பாயின் C++ வழியுமான Gnote பயன்பாடும் இடம்பெற்றுள்ளது.

உபுண்டு ஒன் மறுவடிவமைப்பு (Ubuntu One Redesign)

உபுண்டுவின் மேகச் சேமிப்பு [Cloud Storage] சேவையான Ubuntu One, தனது Precise Pangolin பதிப்பிற்கான இடைமுகத்தை மறுவடிவமைப்பு செய்துள்ளது. பலரையும் ஈர்க்கும் விதமாக, புதிய இடைமுகம் அமைந்துள்ளதுபுதிய இடைமுகம் GTK+ கருவித்தொகுதியினைக் ( GTK+ toolkit) கொண்ட பழைய இடைமுகத்திற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது.

புதிய இடைமுகம் KDE சூழல்களில் பயன்படுத்தப்படும் QT கருவித்தொகுதி ( QT toolkit) மூலம் இயங்குகிறது. உபுண்டுவின் எல்லா பணிமேடை சூழல்களிலும் ( GNOME, Unity உட்பட) புதிய இடைமுகம் இடம்பெற்றுள்ளது.

நன்றி: How to Geek, தமிழ் விக்சனரி (கலைச்சொற்கள்)

தமிழ் கற்க ஆசைப்பட்டு வழியின்றி பொறியியல் கற்றவன்.. அதனால், அறிவியலையும் தமிழையும் இணைக்கும் பாலமாக விளங்க ஆசைப்படுபவன்.

கணிணியையும் தமிழ் பேச வைப்பவன்!! செந்தமிழ் மொழியினன் – பாரத நாட்டினன்.

ஆளுங்க என்கிற அருண்

வலை : www.aalunga.in

மின்னஞ்சல் : arunpalaniappan.mek@gmail.com

%d bloggers like this: