சுமார் ஒரு வருடம் முன்பு, இங்கிலாந்தின் தென்கிழக்கில் ஒரு பள்ளி, வெஸ்ட்க்லிஃப் (Westcliff) பெண்கள் உயர்நிலைப் பள்ளி, கேடிஇ (KDE) பயனர் இடைமுகம் கொண்ட லினக்ஸ்-க்கு அதன் மாணவர்கள் பயன்படுத்தும் கணினிகளை மாற்றத் தொடங்கியது. பள்ளி பிணைய மேலாளர், மால்கம் மூர் (Malcolm Moore), அந்த நேரத்தில் எங்களுடன் தொடர்பு கொண்டார். இப்போது, ஒரு ஆண்டு ஆனபின் விண்டோஸ் இல்லாத ஒரு உலகத்தில் அவருக்கும் மாணவர்களுக்கும் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்த, அவர் மீண்டும் எங்களுடன் தொடர்பு கொண்டார்.
ஸ்டு (Stu): வணக்கம் மால்கம், பேட்டி அளிக்க ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. நீங்கள் உங்கள் பள்ளி பற்றியும் அங்கு உங்கள் வேலை பற்றியும் எங்களுக்குக் கொஞ்சம் சொல்ல முடியுமா?
மால்கம் (Malcolm): வெஸ்ட்க்லிஃப் பெண்கள் உயர்நிலைப் பள்ளி சுமார் 340 மாணவர்கள் ஆறாவது படிவத்தில் படிக்கும் ஒரு தேர்ந்தெடுக்கும் இலக்கணப் பள்ளி ஆகும். ஸௌத்எண்ட் (Southend) விக்டோரியா அவென்யூ-வில், ஒரு இணை கல்விப் பள்ளியாக 1920 இல் நிறுவப்பட்டது. 1931 ஆம் ஆண்டு அதன் தற்போதைய இடத்துக்கு மாற்றப்பட்டது. இப்பொழுது 1095 பெண்கள் படிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப ஆதரவுத் துறை மூன்று ஊழியர்கள் கொண்டுள்ளது: நான், பால் ஆன்டோனெல்லி (Paul Antonelli), மற்றும் ஜென்னி லிட்பரி (Jenny Lidbury). என் வேலை பிணைய மேலாளர். பள்ளியில் உள்ள அனைத்து தகவல் தொழில்நுட்பத் தொடர்பான கருவிகள் வழங்குவதையும், ஆதரவு தருவதையும் இந்தத் துறை உள்ளடக்கியது. இதில் 200 ஆசிரியர் கணினிகள், 400 + மாணவர் கணினிகள், 33 ஐமேக் (iMac)-குகள், 100 + மடிக்கணினிகள், மற்றும் ஒரு சில ஆண்ட்ராய்டு கைக்கணினிகள் அடங்கும். இது தவிர நாங்கள் ஒளிப்படக்காட்டிகள், ஊடாடும் வெண்பலகைகள், மற்றும் தொலைக்காட்சிகள் போன்ற அனைத்து பல்லூடக சாதனங்களுக்கும் ஆதரவு தருகிறோம்.
ஸ்டு: லினக்ஸ் கணினிகளுக்கு மாற்றுவது யாருடைய யோசனை? அதற்கான காரணங்கள் என்ன?
மால்கம்: நாங்கள் கொஞ்ச காலமாகவே எங்கள் மின்னஞ்சல் வழங்கி, மெய்நிகர் கல்வி சூழல் (Virtual Learning Environment) மற்றும் இணையதளத்துக்கு லினக்ஸ் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நிதித் துறையில் என் முந்தைய வேலையில் நான் லினக்ஸ் பயன்படுத்தியுள்ளேன்.
மாணவர்களின் கணினிகளை லினக்ஸ்-க்கு மாற்றுவது என் யோசனை. தகவல் தொழில்நுட்பத்தின் அளவு, செலவு, மற்றும் சிக்கல்கள் செங்குத்தான படியேற்றம் போல வளர்வதால், இறுதியில் ஏதாவது ஒன்றை விட்டுக் கொடுக்க வேண்டி வரும். நாங்கள் ஆதரவு தரும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் தரத்தை விட்டுக்கொடுக்க தொழில்முறை பெருமையால் எங்களுக்கு மனம் வரவில்லை. நாங்கள் 60 கணினிகளை வைத்து ஒரு சிறிய அளவில் சோதனை செய்து மாணவர்களிடமிருந்து பின்னூட்டங்களைக் கேட்டறிந்தோம். அதை வைத்து சரி செய்த பின்னர் மீண்டும் முயற்சி செய்தோம். ரெட் ஹேட் (Red Hat) / ஃபெடோரா (Fedora) மற்றும் சூசே (SUSE) / திறந்த சூசே (openSUSE) அமைப்புகளை நாங்கள் திருப்தி அடையும் வரை பல தடவைகள் இம்மாதிரி திருப்பித் திருப்பிச் செய்தோம். அதன் பின்னர் நான் என் திட்ட செயற்குறிப்பை மூத்த தலைமைக் குழுவின் முன் வைத்தேன்.
செலவைக் குறைப்பதுடன் ஆரம்பத்தில் உள்நோக்கம் தத்துவ ரீதியாகவும் இருந்தது. ஒரு தலைசிறந்த பள்ளியில் கூட பண ஒதுக்கீடு எப்போதும் வரம்புக்குட்பட்டதாகவே இருக்கப் போகிறது. அரசியல்வாதிகளுக்கு இது புரிவதில்லை, ‘கல்விக்கு செலவு அதிகம் ஆகிறது என்று தோன்றினால், நீங்கள் அறியாமையை முயற்சி செய்து பாருங்கள்’. விண்டோஸ் பயன்படுத்த செலவு அதிகம்தான், ஆனால் அது எப்போதும் வெளிப்படையாக இருப்பதில்லை. விண்டோஸ்-ல் பிரச்சினைகள் அதிகம், எனவே லினக்ஸ் சூழலை விட செலவும் கணிசமாக அதிகம். தத்துவ கோணம் நடைமுறைக்கு எது ஒத்து வரும் என்பதுதான்.
கிடைக்கும் நிதியில் கூடியவரை சாத்தியமான மிகச்சிறந்த அமைப்புகளும் கல்வியும் வழங்க நாங்கள் விரும்பினோம். அடிப்படையில் மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் ஆபிஸை ஊக்குவிக்க ஆகும் செலவுக்கு பதிலாக சிறந்த ஆசிரியர்கள் மற்றும் உண்மையான கல்வி போன்ற பழங்காலத்து சங்கதிகளுக்கு செலவு செய்வது நல்லது அல்லவா?
அச்சமயத்தில்தான், சந்தர்ப்பவசமாக இங்கிலாந்து அரசு மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் ஆபிஸ் பயன்படுத்தக் கற்றுத்தரும் பழைய தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பாடத்திட்டங்களை மாற்றியது. கணினி ஆய்வுகள் அடிப்படையிலான பாடத்திட்டத்துக்கு மாறிச் செல்ல பள்ளிகளுக்குக் கூறியது. இதனால் எங்கள் திட்டத்தை உடனடியாக செயலாக்கம் செய்ய வழி பிறந்தது.
ஸ்டு: உங்கள் யோசனைக்கு எதிர்ப்பு ஏதும் இருந்ததா? அதை எவ்வாறு சமாளித்தீர்கள்?
மால்கம்: அதிகம் இல்லை என்பது ஆச்சரியம்தான். இரண்டு நீண்ட கூடிப்பேசல்களில் மூத்த தலைமைக் குழு என்னை சரமாரியாகக் கேள்விகள் கேட்டுத் துளைத்தார்கள். வேடிக்கையாக இருந்தது!
கணினிகள் என்றாலே விண்டோஸ்தான் என்ற தவறான கருத்திலிருந்து உண்மையில் ஒரு அடி பின்னால் எடுத்து யோசித்தால் லினக்ஸ்-ன் நன்மைகள் பாதகங்களை விட மிக அதிகம் என்பது தெளிவாகத் தெரிய வரும். உலகம் மிக விரைவில் மாறி வருகிறது. ஒரு கணக்கெடுப்புப்படி 2000 இல் 97% கணினி சாதனங்களில் விண்டோஸ் நிறுவப்பட்டிருந்தது. ஆனால் இப்போது (2013) கைக்கணினிகள் மற்றும் அலைப்பேசிகள் வந்தபின் விண்டோஸ் 20% கணினி சாதனங்களில் மட்டுமேயுள்ளது. மற்றும் திறன்மிகு வழங்கிகள் உலகில் லினக்ஸ் உச்ச நிலையில் ஆட்சிபுரிகின்றது. நாம் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் நிபுணத்துவம் பெறுகின்றோம். மற்றும் நம் மாணவர்கள் அடுத்த கூகிளைத் தொடங்குவது அல்லது செர்ன் (CERN) இல் பிரபஞ்சத்தைக் குறுக்குவது போன்ற பெரிய விஷயங்களைச் செய்யவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இந்த சூழல்களில் அவர்களுக்கு நிச்சயமாக லினக்ஸ் தெரிந்திருக்க வேண்டும்.
ஸ்டு: நீங்கள் என்ன மென்பொருட்கள் தேர்வு செய்தீர்கள்? ஏன்? ஏதாவது புதிய வன்பொருள் தேவைப்பட்டதா?
மால்கம்: மாணவர்களுக்கு இடைமுகம் பிடித்திருப்பது முக்கியம் என்ற அடிப்படை கோட்பாட்டில் தொடங்கினோம். எனவே மேசைக்கணினிக்கு ‘அழகும் ஒரு அம்சம் ஆகும்’. தகவல் தொடர்பு ஊழியர்களைப் பொருத்தவரை, வழங்கிகளுக்கு நிலைத்தன்மைதான் நடைமுறையில் எல்லாமே. பலருக்கு மிகவும் பிடித்த லினக்ஸ் வெளியீடுகள் உள்ளன என்று எனக்குத் தெரியும். அதே நேரத்தில் எனக்கு உண்மையில் ஆர்பிஎம் (RPM) அடிப்படையிலான வெளியீடுகள் மட்டுமே தெரியும். இன்னும் கூடுதலான வசதிகள் இருந்திருந்தால் நாங்கள் இன்னும் பல வெளியீடுகளை ஆய்வு செய்திருக்க முடியும். ஆனால் வழங்கியிலும் மேசைக்கணினியிலும் ரெட் ஹேட் (Red Hat) / ஃபெடோரா (Fedora) மற்றும் சூசே (SUSE) / திறந்த சூசே (openSUSE) அமைப்புகளை மட்டுமே முயற்சி செய்து பார்த்தோம். இறுதியில், கேடிஇ பயனர் இடைமுக மென்பொருள் ஆதரவினால், சூசே (SUSE) / திறந்த சூசே (openSUSE) அமைப்புகளே வெற்றி பெற்றன. முதலாவதாக மாணவர்களுக்கு பயனர் இடைமுகத்தில் மாற்றம் அதிகமாக இருக்க நாங்கள் விரும்பவில்லை. கேடிஇ பிளாஸ்மா (Plasma) -வை விண்டோஸ் போன்று மிகவும் பழக்கமானதாகச் செய்ய முடியும். இரண்டாவதாக, எங்கள் சோதனையின் போது, நாங்கள் மாணவர்களை கேடிஇ பிளாஸ்மா மற்றும் குனோம் (GNOME) இரண்டையுமே முயற்சி செய்துபார்க்க ஊக்குவித்தோம். பயனர் ஏற்பு அடிப்படையில் பிளாஸ்மா முன்னிலையில் வெற்றி பெற்றது. [இறுதி மென்பொருள் தேர்வு சூசே 12.2 மற்றும் பயனர் இடைமுகம் பிளாஸ்மா 4.10].
மேசைக்கணினிகளுக்கு எந்த புதிய வன்பொருளும் தேவைப்படவில்லை. லினக்ஸ்-க்கு செல்ல எங்கள் முக்கிய காரணங்களில் ஒன்று அது பழைய வன்பொருளில் நன்றாக இயங்கும். விண்டோஸ் பரிந்துரை செய்வது போல் ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை 400 மாணவர்களின் கணினிகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு புதிதாக வாங்குவது பயங்கரமான ஒரு செலவு ஆகும்.
இந்த சிக்கன நாட்களில் பல பள்ளிகள் ஒருக்காலும் இம்மாதிரி வாங்க இயலாது. இப்போது கிடைக்கும் செயல்வேகத்தில், நான் இந்தக் கணினிகளை அவை உடைந்து விழும் வரை இயக்க உத்தேசித்துள்ளேன்! எனினும் எவரும் இதில் இறங்குவதற்கு முன் ஒரு நல்ல பிணையம் இருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறு பரிந்துரைக்கிறேன்.
ஸ்டு: மாற்ற வேலை எப்படி நடந்தது? தொழில்நுட்ப பிரச்சினைகள் இருந்தனவா? அவற்றை எவ்வாறு சமாளித்தீர்கள்?
மால்கம்: 2012 கோடை விடுமுறை காலத்தில் மாற்றம் செய்தோம். அந்த நேரத்தில் எந்தக் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப பிரச்சினைகளையும் நாங்கள் சந்திக்கவில்லை. எனினும் பின்னர் எந்த பிரச்சினையும் வரவில்லை என்று சொல்ல முடியாது!
ஸ்டு: பழைய அமைப்புகளுடன் ஒப்பிடுகையில் ஏதாவது மென்பொருள் குறைவாக இருந்ததா?
மால்கம்: தற்போது மாணவர்கள் லினக்ஸ்-இலும் ஆசிரியர்களும் மற்ற ஊழியர்களும் விண்டோஸ் 7 -இலும் உள்ளார்கள். பள்ளி தகவல் மேலாண்மை அமைப்பு சிம்ஸ் (SIMS)-க்கு லினக்ஸ் பயனர் இடைமுகம் இருந்திருந்தால் பள்ளி முழுவதையும் லினக்ஸ்-க்கு மாற்றுவதை எளிதாகப் பரிசீலித்திருக்கலாம். இருக்கும் நிலையில் அது அகலக்கால் வைத்ததாக ஆகிவிடும். கல்வி மென்பொருள் எதற்கும் லினக்ஸ்-ல் குறைவில்லை. ஓரிரு விண்டோஸ் செயலிகளை நாங்கள் வைன் (WINE) -ல் ஓட்டுகிறோம். பாதி வேலையில் இருக்கும் மாணவர்கள் மெதுவாக வேறு செயலிகளுக்கு மாற்றம் செய்ய நேரம் கிடைக்கும்.
ராஸ்பெர்ரி பை (Raspberry Pi) போன்ற புதிய வன்பொருட்களை பள்ளிகளில் பயன்படுத்துவது கவனிக்கத்தக்கது. இதில் முக்கிய நன்மை என்னவென்றால், மாணவர்கள் தங்கள் பள்ளி அல்லது வீட்டுக் கணினியைப் பாழாக்காமல் சோதனைகள் செய்ய முடியும் என்று பை அணியினர் கூறுகின்றனர். இப்போது லினக்ஸ்-இலேயே மாணவர்கள் இம்மாதிரி சோதனைகளை செய்துபார்க்க முடியும்.
எங்கள் தகவல் தொடர்பாடல் துறையில் ஏற்கனவே ஆண்டு ஏழிலிருந்து [வயது சுமார் 11] மாணவர்களுக்கு நிரலாக்கம் கற்பித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் சூழலில் அவர்கள் செய்யக்கூடிய மிக மோசமான பிரச்சினை என்னவென்றால், அது தங்கள் சொந்தக் கணக்கை செயலிழக்கச் செய்வதுதான். அவர்கள் முற்றிலும் தங்கள் பகுதியை அழித்து விட்டால் கூட, கணினியைப் பயன்படுத்தும் அடுத்த நபரைப் பாதிக்காமல், அதை நிமிடங்களில் மீட்டெடுக்க முடியும்.
ஸ்டு: நீங்கள் உதவி கேட்டு கேடிஇ அல்லது திறந்த சூசே அமைப்புகளைத் தொடர்பு கொண்டீர்களா? அப்படியானால், பதில் எப்படி இருந்தது?
மால்கம்: நான் அடிக்கடி மன்றங்கள் மற்றும் பக்ஸில்லா (Bugzilla) வழுத்தடம் கண்காணிக்கும் வலைதளங்களில் கேடிஇ மற்றும் சூசே சமூகங்களுடனும் தொடர்பு கொண்டேன். இரண்டுமே மிகவும் உதவியாக இருந்தன. கேள்விகள் நன்கு யோசனை செய்யாமலோ அல்லது சரியாக எழுதப்படாமலோ இருப்பதாக எண்ணினால் சூசே மன்றங்கள் சில நேரங்களில் கொஞ்சம் கடுமையாக இருக்கக் கூடும். மாறாக கேடிஇ மன்றங்களில் இவ்வாறில்லை என்று என்னால் மகிழ்ச்சியுடன் சொல்ல முடியும். அனைவருமே மிகவும் பணிவாகவும் உதவியாகவும் இருந்தனர். நான் சில கேள்விகளைச் சரியாகப் பதிவு செய்யவில்லை என்பதையும் சூசே மன்றங்களின் சார்பில் சொல்ல வேண்டும். நான் முன்பு கூறியது போல், நாங்கள் மூன்று பேர்கள் மட்டுமே உள்ளோம், சில நேரங்களில் பயனர் கையேட்டைப் படிக்க நேரம் கிடைப்பதில்லை.
ஒரு நாளில் போதுமான மணி நேரங்கள் இல்லை. நான் ஒரு கேள்வி பதிவு செய்து, சிலர் இது கூடத் தெரியவில்லையே என்று நினைத்தாலும் சரி, ஒரு பதில் பெற முடியும் என்றால் அதுவே ஒரு பெரும் உதவியாகும். நாங்கள் லினக்ஸ் பற்றிய எல்லா சங்கதிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் இந்தத் திட்டம் நடந்திருக்கவே முடியாது. இன்னும் கையேட்டையே படித்துக்கொண்டிருப்போம்! எப்போதாவது ஒருவர் எங்களை முட்டாள் என்று சொன்னாலும், எங்கள் அனைத்து கேள்விகளுக்கும் நல்ல வேலைக்கு ஆகிற பதில் கிடைத்தது. ஆகவே, சில நேரங்களில் சண்டியாக இருக்க வேண்டியிருந்தாலும் கூட, நான் முற்றிலும் மன்றங்களைப் பரிந்துரை செய்வேன்.
ஸ்டு: மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் பள்ளி ஊழியர்கள் இந்த மாற்றத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?
மால்கம்: இளநிலை மாணவர்கள் அதை இயல்பானதாக ஏற்றுக் கொள்கிறார்கள். முதுநிலை மாணவர்கள் கொஞ்சம் நெகிழ்வில்லாமல் இருக்கக் கூடும். ஒரு சிலர் அவர்களை மைக்ரோசாப்ட் வேர்ட் லிருந்து நான் வலிந்துதான் விடுபட வைக்க வேண்டும் என்பதுபோல் உள்ளனர். ஊழியர்களும் அவ்வாறே (வியக்கத்தக்க அளவு அது வயது தொடர்பானதில்லை என்றாலும்). சிலர் சரி என்றார்கள் மற்றும் சிலர் அதை வெறுத்தார்கள். விண்டோஸ் 7 ஐயும் சம எண்ணிக்கையிலானவர்கள் வெறுத்தார்கள் என்பதையும் கூடவே சொல்ல வேண்டும். விண்டோஸ் 8 யாருக்குமே பிடிக்கவில்லை. அடிப்படைப் பிரச்சினை என்னவென்றால் விண்டோஸ் எக்ஸ்பி அதன் வெற்றியாலேயே பாதிக்கப்பட்டது என்று நான் நினைக்கிறேன். பயனர் பார்வையில் அது நன்றாக வேலை செய்கிறது மற்றும் வெகு காலமாக இருக்கிறது. எவருக்கும் மாற்றம் பிடிப்பதில்லை, விந்தைதான் ஆனால் சில மாணவர்களுக்கும் கூட.
நாங்கள் செயற்படுத்த முடிவு செய்தவுடன், சிறப்பு செய்திமடல் ஒன்று அனைத்து பெற்றோர்களுக்கும் அனுப்பப்பட்டது. ஆபீஸ் கற்றல் ஒரு பயனுள்ள திறன் என்று சொல்லி இதை ஏற்க மறுத்தவர்கள் அநேகமாக ஐந்தாறு பேருக்குள்தான் இருக்கும். நான் அவர்களுடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரத்தில், செப்டம்பர் 2014 ல் எங்களுடன் தொடங்கும் ஒரு 11 வயது மாணவர் அநேகமாக 2024 வாக்கில்தான் வேலை சந்தையை வந்தடைய முடியும். ஆபீஸ் 2024 எப்படி இருக்கும்? இதை என்னாலும் யூகிக்க முடியாது உங்களாலும் யூகிக்க முடியாது என்று நான் வாதிடுவேன். ஆனால் கணினிகளைக் கையாள்வதில் நல்ல அடிப்படைத் திறன்களும் தர்க்க ரீதியான மற்றும் பகுப்பாய்வு செய்யும் வழிமுறைகளும் வாழ்நாள் முழுவதும் பயனுள்ளதாக இருக்கும்.
ஸ்டு: ஓராண்டு கழிந்த பின் எது வேலை செய்தது எது வேலை செய்யவில்லை? திரும்பவும் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் எதை மாற்றிச் செய்வீர்கள், எதை மாற்றிச் செய்ய மற்றவர்களுக்கு பரிந்துரை செய்வீர்கள்?
மால்கம்: எல்லாமே கச்சிதமாக வேலை செய்தது என்று சொல்ல முடிந்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும், ஆனால் அவ்வாறு வேலை செய்யவில்லை. முதல் பாதி காலாண்டு கொடுமையாக இருந்தது. முதன்மை பிரச்சினை அமைப்பின் வேகம் மற்றும் குறிப்பாக கேடிஇ பிளாஸ்மாவில் புகுபதிகை செய்வது. எங்கள் சோதனைகளில் சுமார் 60 கணினிகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தன. மதிய உணவு இடைவேளையின் போதும் மற்றும் பள்ளி முடிந்த பிறகும் போதுமான மாணவர்களைச் சேர்த்து முழு பளுவில் சோதனை செய்வது கடினமாக இருந்தது. மேலும் இந்த சோதனை செய்யும்போது மேற்கொண்டு நாங்கள் 400 மாணவர் விண்டோஸ் எக்ஸ்பி கணினிகளையும் பராமரிக்க வேண்டியிருந்தது.
லினக்ஸ் என்னவோ ஒரு பழைய தகர டப்பாவில் கூட நன்றாக இயங்கும். ஆனால் நீங்கள் எல்டாப் (LDAP) உறுதிப்பாடு மற்றும் என்எஃப்எஸ் (NFS) இல்ல அடைவுகள் (home directories) வைத்திருந்தால் உங்களுக்கு நிச்சயமாக ஒரு கிகாபிட் (gigabit) நெட்வொர்க் வேண்டும். ஒரு பள்ளி அல்லது வணிக சூழலில் இவை அவசியம் தேவை. அது 100Mb கொண்டு இயங்கும், ஆனால் நாங்கள் மெனக்கெட்டு கண்டுபிடித்தது போல அது ஒரு விரும்பத்தகாத அனுபவமாக இருக்கும். இதனால் எங்கள் முழு பிணையத்தையும் எல்லா இடங்களிலும் கிகாபிட் ஆக உயர்த்த சுமார் எட்டு இயக்கிகளை மாற்ற வேண்டியிருந்தது. இது எப்படியும் நடக்க திட்டமிடப்பட்டது என்பது உண்மைதான், ஆனால் என் ஓய்வு நேரத்தில் நான் இதைச் செய்திருக்க வேண்டும்!
கூடுதலாக கேடிஇ மென்பொருளில் சில பகுதிகள் என்எஃப்எஸ் இல்ல அடைவுகளுடன் நன்கு வேலை செய்வதில்லை. பின் பதிப்புகளில் இது ஓரளவிற்கு சரி செய்யப்பட்டிருப்பது எனக்குத் தெரியும். நாங்கள் இப்போது பிணைய சுமையைக் குறைப்பதற்காக சில கேடிஇ விருப்பத் தேர்வுகளை கட்டாயப்படுத்த வேண்டி பல உரைநிரல்களை வழங்கிகளில் ஓட்டுகிறோம். அடுத்த அரையாண்டு கால விடுமுறையில் இவற்றையெல்லாம் நாங்கள் திட்டமிட்டு சரி செய்தபின் பிரச்சினைகள் நல்ல வேளையாகக் குறைந்து விட்டன.
ஸ்டு: இந்த மாற்றத்தை எளிதாக்க கேடிஇ எப்படி உதவ முடியும்?
மால்கம்: ஆவணம்! வரைகலை பயனர் இடைமுகம் மூலம் கேடிஇ-யை நீங்கள் கற்பனை செய்யும் வழியிலெல்லாம் கட்டமைக்க முடியும். ஆனால் மேலாளர்கள் அனைத்து பயனர்களுக்கும் இயல்புநிலையை அமைக்க வேண்டும். வீட்டிலும் தனிப் பயனர்களுக்கும் திறந்த சூசே இயல்புநிலைகள் உகந்தவைதான். ஆனால் பள்ளிகளில் கொஞ்சம் சரி செய்ய வேண்டியிருக்கிறது. இறுதியில் நாங்கள் ஒரு அடிப்படைக் கணினியை எடுத்து மாற்றம் செய்த பின்னர் புள்ளிக் கோப்புகளில் சென்று என்னென்ன மாறியிருக்கிறது என்று பார்த்தோம். இது தவிர கேடிஇ மன்றங்களில் பென் குக்ஸ்லியை (Ben Cooksley) தொந்தரவு செய்தோம். இது கடின உழைப்பாக இருந்தது! லினக்ஸ் பிரச்சினை இதுதான், தொழில்நுட்பம் மிக வேகமாக நகர்வதால் அச்சிடப்படும் முன்னரே, சில சந்தர்ப்பங்களில் எழுதப்படும் முன்னரே, ஆவணங்கள் காலாவதியாகி விடுகின்றன. இப்போது இது விண்டோஸ்-க்கும் ஓரளவு பொருந்தும். இதற்கு ஏதும் எளிதான தீர்வு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
ஸ்டு: எந்த செயலிகள், கேடிஇ அல்லது மற்றவை, குறிப்பாக மனதில் பதிவதாக இருந்தன. எந்தப் பகுதிகளில் நல்ல செயலிகள் கிடைப்பதில்லை?
மால்கம்: குனோம் பயன்படுத்தும் ஐந்தாறு மாணவர்கள் தவிர, மற்ற எல்லோரும் இப்போது தங்கள் கணினிகள் மற்றும் செயலிகளை விருப்பம் போல் கட்டமைக்க முடியும் என்பதை உண்மையில் விரும்புகிறார்கள். பெரும்பாலான மேலாளர்கள் விண்டோஸ்-ஐ மாற்றவே வழியில்லாமல் பூட்டி வைத்து விடுவார்கள். ஏனெனில் விண்டோஸ்-ஐ எவரும், குறிப்பாக மாணவர்கள், நாசம் செய்வது மிக எளிது. நாங்கள் தனிக் கணினியை தனக்குரிய கணினியாக திரும்பவும் மாற்றும் நோக்கில் மாணவர்களை தங்கள் விருப்பம் போல் கட்டமைக்க விடுகிறோம். இது தங்கள் மேசைத்தளம் என்ற ஒரு உரிமை உணர்வைக் கொடுக்கிறது. முறைகேடாகவோ அல்லது வேலைக்கு ஊறு விளைவிப்பதாகவோ கட்டமைப்பு இருக்கக் கூடாது என சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். மாணவர்கள் பிரச்சினை செய்து கொண்டால் ஒரு முறை மேசைத்தள மீட்டெடுப்பு செய்து கொடுப்போம். அதன் பின்னரும் பிரச்சினை வந்தால்தான் கூப்பிட்டு எச்சரிப்போம். இம்மாதிரி பள்ளிகளில் அனுமதிப்பது ஒரு புதுமையான யோசனை. ஆரம்பத்தில் சில மாணவர்கள் விருப்பக் கட்டமைவு செய்து கணினியை நாசம் செய்தனர்! இப்போது புது மோகம் தணிந்து விட்டதால் மேசைத்தளங்களை மனம்போன போக்கில் அமைப்பதில்லை. மீண்டும் ஒரு மேசைத்தளத்தை நயமான நீல நிறத்தில் நாங்கள் மீட்டமைத்து மாதக்கணக்காக ஆகிறது. “இங்கே ஒரு பொதுவான விண்டோஸ் மற்றும் ஆபீஸ் உள்ளது இதைப் பயன்படுத்துங்கள்” என்று நாங்கள் சொல்வதற்குப் பதிலாக, மாணவர்கள் தாங்களே தங்கள் மேசைத்தள சூழலுக்குப் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார்கள். பணிகளையும் செய்து முடிக்கிறார்கள். இந்த விதத்தில் இது ஒரு பெரிய வெற்றிதான்.
ஸ்டு: இந்த அனுபவம் பற்றி வேறு ஏதாவது கருத்துகள் அல்லது கவனிப்புகள்?
மால்கம்: இது எனக்குத் தூக்கமில்லாத இரவுகளைக் கொடுத்ததா? ஆமாம். இது கிட்டத்தட்ட என்னைப் பைத்தியமாக ஆக்கியதா? நிச்சயமாக. நான் மீண்டும் இதைச் செய்வேனா… ஒரு நொடியில்!
ஸ்டு: மிக்க நன்றி. நல்ல எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள்!
பெண்கள் அகாடமி வெஸ்ட்க்லிஃப் உயர்நிலைப் பள்ளியின் இந்த லினக்ஸ் அனுபவம் நமக்கு நிறைய யோசனைகள் கொடுக்கிறது. கேடிஇ-யை இடைமுகப்பாக வைத்து லினக்ஸ் இம்மாதிரி சூழலில் வேலை செய்ய முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இன்னும் நிறுவுவதிலும் புதிய அமைப்பில் பழகுவதிலும் சவால்கள் உள்ளன. புதிய பயனர்களை இலவச மென்பொருளுக்கு வரவேற்கவும் மற்றும் ஆதரவு தரவும் கேடிஇ மன்றங்களின் முக்கியத்துவத்தை மால்கம்-ன் அனுபவங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
மூலக்கட்டுரை எழுத்தாளர் பற்றி: ஸ்டூ ஜார்விஸ் (Stu Jarvis) 2003 ல் கேடிஇ (KDE) லினக்ஸ் பயனர் இடைமுகம் பயன்படுத்தத் தொடங்கினார். 2008 ஆம் ஆண்டு கேடிஇ செய்தி இணையதளமான KDE.News க்கு கட்டுரைகள் எழுதி அவர் கேடிஇ ஊக்குவிப்பு அணியுடன் வேலை செய்யத் தொடங்கினார். அவர் படிப்படியாக வெளியீட்டு அறிவிப்புகள் எழுதுவது போன்ற இந்த அணியின் நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டு 2009 ல் KDE.News க்கு ஒரு ஆசிரியர் ஆனார். 2010 இல் கேடிஇ இ.வி. (KDE e.V.) என்ற ஒரு பதிவு செய்யப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பிலும் கேடிஇ மாறுகூற்று செயற்பாட்டுக் குழுவிலும் உறுப்பினர் ஆனார். அவர் 2011 லிருந்து 2013 வரை ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் நடைபெற்ற ALERT ஆராய்ச்சி திட்டத்தில் கேடிஇ பிரதிநிதியாக இருந்தார்.
மூலம்: opensource.com தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்