உலகம் முழுவதும் 100,000 க்கும் அதிகமான பங்களிப்பாளர்கள் கொண்ட ட்ரூபல் (Drupal) சமூகத்தில் நான் ஒரு பகுதியாக இருக்கிறேன். திறந்த மூலத்துக்கு பங்களிக்க தங்கள் நிறுவனங்களால் ஊக்குவிக்கப்படும் வளர்ந்து வரும் ஊழியர்கள் குழுவும் இதன் மத்தியில் உள்ளது.
இந்தக் காலத்தில், தன்னுடைய தற்குறிப்பில் ஓரிரண்டு (அதற்கு மேலும் கூட) திறந்த மூலம் பற்றிக் குறிப்பிடாத ஒரு அனுபவசாலியான நிரலாளரைக் காண்பது அரிதே. தலை சிறந்த நிரலாளர்களுக்கு இது முக்கியம் என்பது தெரியும். உங்களுக்கு வேலை கிடைக்கவும் மற்றும் கிடைத்த வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவும் இம்மாதிரி பங்களிப்புகள் உதவுவது சாதாரணமாகி வருகிறது. நீங்கள் தொழில்நுட்பத்தில் ஒரு அமர்த்துநர் என்றால், உங்களுக்கு இது தெரியும். எனவே உங்கள் ஊழியர்கள் திறந்த மூலத்துக்கு பங்களிக்க நீங்கள் எப்படி உதவ முடியும்?
திட்டங்களுக்கு பங்களிப்பதன் மூலம், தங்கள் கருத்துகளை முன்வைக்கும் மதிப்புமிக்க மற்றும் உண்மையான வாய்ப்பை நிறுவனங்கள் பெற முடியும். உங்கள் நிறுவனத்தின் திறன்களை முனைப்பாகக்காட்ட உதவ சமூகம் இருக்கும்போது நீங்கள் ஏன் நேரடி விற்பனை மட்டும் செய்ய வேண்டும்? உங்கள் தற்பெருமையை பறைசாற்றும் உரிமை பெருங்கள்.
மற்றும், திரும்பப் பங்களிக்க விரும்பாத நிறுவனத்தில் நீங்கள் ஒரு ஊழியர் என்றால் அவர்களை நம்ப வைக்க வழி தேடுங்கள். மூத்த மேலாண்மையை நம்ப வைப்பது எப்படியென்று ட்ரூபல் இணையதளத்தில் எழுதியிருப்பதை இங்கே காணலாம்.
நீங்கள் தொடங்குவதற்கு முன் 5 ஆலோசனைகள்
பங்களிப்புகள் தொழில்நுட்பம் சார்ந்துதான் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை
ஆவணமாக்குதல், மொழிபெயர்ப்பு, சோதனை, மாறுகூற்று, மற்றும் நன்கொடை சேர்த்தல் போன்ற குறியீட்டுத் திறன் அல்லாத மற்ற நபர்களும் திறந்த மூலத் திட்டங்களுக்குத் தேவை.
“நான் மோசில்லாவுக்கு என்ன செய்ய முடியும்?” என்ற இணையதளம் அந்த அமைப்பின் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத தேவைகளை ஆர்வலர்களுடன் இணைசேர்க்க உதவுகிறது. ஆர்வலர்கள் எப்படி உதவ முடியும் என்பது பற்றி “ஈடுபாடு கொள்ளும் வழிகள்” என்னும் ட்ரூபல் இணையதளம் ஒரு நல்ல மேலோட்டத்தைக் கொடுக்கிறது. ட்ரூபல் இணையதளத்தின் மேற்கோள், “இணைய மேம்பாடு மற்றும் பயனர் ஆதரவு மட்டுமல்லாமல் மேலும் பல பங்களிப்புகள் மற்றும் திறன்கள் மூலம் திட்டத்தை முன்னோக்கி நகர்த்த, ஈடுபாடுள்ள ஆர்வலர்கள் கொண்ட பலதரப்பட்ட சமூகத்தையே நம்பி இருக்கிறோம்.”
உங்கள் ஊழியர்கள் மற்றும் சமூகத்துடன் உறவுகளைக் கட்டியெழுப்புங்கள்
நீங்கள் திறந்த மூலத்தில் அடியெடித்து வைக்கிறீர்கள் என்றால் பிற தொழில் நெறிஞர்களை சந்திப்பதும், தொழில் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்வதும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். புதிய நபர்களுடன் தொடர்பு கொள்வது ஆரம்பத்தில் மலைப்பாகத் தோன்றலாம். ஆனால் நீங்கள் மிகவும் மதிக்கப்படும் திறமையானவர்கள் கொண்ட சமூகத்தில் கற்று வளர்ந்தவர்களுடன் வேலை செய்கிறீர்கள்.
நீங்கள் திறந்த மூலத்துக்குப் புதிது அல்ல, ஆனால் இன்னும் பலரை சந்திக்க விரும்புகிறீர்கள் என்றால், அவர்கள் ஒரு சிற்றுண்டி மீது சந்தித்துப் பேச விரும்புகிறார்களா என்று கேளுங்கள். வேலையைப் பற்றியும் மற்ற சங்கதிகளைப் பற்றியும் பேசுங்கள்.
உங்களுக்குப் பலரைத் தெரியும் என்றால், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
சமூகம் அல்லது திட்டத்தின் தேவைகளைக் கண்டறியுங்கள்
நீங்கள் ஆர்வமாக உள்ள திட்டத்தில் மிக முக்கியமான வேலைகள் மற்றும் பிரச்சினைகள் என்ன என்று கண்டறியுங்கள். வழி தெரியவில்லை என்றால், வலைப்பதிவுகளைப் படியுங்கள், வழிகாட்டிகளைக் கேளுங்கள், பிற பங்களிப்பாளர்களைத் தொடர்பு கொள்ளுங்கள், மற்றும் ஐஆர்சி (IRC) அலைத்தடத்தில் அரட்டை அடியுங்கள்! கேளுங்கள்! முதலில் கடினமாக இருந்தாலும், கைவிட்டு விட வேண்டாம். தொடர்பு வைத்துக்கொண்டு இருங்கள். எல்லோரும் உதவியாகவே இருப்பார்கள், அதற்காகத்தானே சமூகம் இருக்கிறது.
உங்கள் ஊழியர்களுக்கு ஒரு திட்டம் போடுங்கள்
காலாண்டு அடிப்படையில் உங்கள் ஊழியர்கள் ஒரு திட்டத்துக்குப் பங்களிக்க எவ்வளவு நேரம் செலவிட முடியும் என்று மதிப்பிடுங்கள். உங்கள் செயற்பாட்டுக்கான தேவைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவும். உங்கள் திட்டத்தை மறுசீரமைத்து, ஊழியர்களின் திறன்களை மதிப்பீடு செய்து, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட திடமான திட்டத்தை தயாரிக்கவும். நீங்கள் தோல்வியின் அனைத்து சாத்தியத்தையும் நீக்கிவிடவில்லை. ஆனால் அதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தி விட்டீர்கள். குறைந்தது நீங்கள் சில முயற்சிகள் செய்து விட்டீர்கள், இப்போது யாருக்கு என்ன பொறுப்பு என்பது தெரியும்.
உங்கள் தொடர்புகளில் வெளிப்படையாகவும் திறந்த மனதுடனும் இருங்கள்
வெற்றிகளையும் மற்றும் முக்கியமான பங்களிப்புகளையும் ஏற்றுக்கொண்டு அதற்கு மரியாதை தரும் ஒரு சூழலைப் பேணி வளருங்கள். எடுத்துக்காட்டாக இருங்கள். திறமைகளை வெளிக்காட்ட வழி செய்யுங்கள்.
அடிக்கடி அதைச் செய்யுங்கள், தொடர்ந்து அதைச் செய்யுங்கள்.
தொடங்குவதற்கு 4 வழிகள்
பகிர்வை ஊக்குவியுங்கள்
தாங்கள் கற்றுக்கொள்வதையும், எவ்வாறு தங்கள் திட்டங்களில் குறுக்கே வந்த தடைகளை மீறி வர இயன்றது என்பதையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள ஊழியர்களை ஊக்குவியுங்கள். அவர்களை வலைப்பதிவுகள் உருவாக்கச் சொல்லுங்கள். உங்கள் வலைத்தளத்திலும் மற்றும் சமூகத்திலும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். சமூகத்தில் உள்ள பிற பங்களிப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளவும், புதியவர்களுக்கு உதவி செய்யவும், மற்றும் பலரை ஈர்க்கவும் இது உதவும்.
நிகழ்வுகளை நடத்துங்கள்
இணையத்தில் ஆய்வரங்குகளையும் கூடிப்பேசல்களையும் ஏற்பாடு செய்யுங்கள். நிரல் குறுவோட்டங்களை ஏற்பாடு செய்யுங்கள். இது நீங்கள் மேற்கொண்ட பணிகளுக்கு மட்டுமல்லாமல் சமூகத்துக்கும் உதவுகிறது. உங்களிடம் கூடிப்பேசல்களுக்கான இடம் இருந்தால், நீங்கள் பயன்படுத்தாத போது தேவைப்படும் குழுக்களுக்கு கொடுங்கள்.
பேச்சுகள் கொடுங்கள்
நிகழ்ச்சிகளில் உங்கள் நிறுவனத்தின் பிரதிநிதியாக பேச்சுகள் கொடுங்கள் மற்றும் உரையாடல்களில் பங்கெடுங்கள். பலருடன் தொடர்பு வைத்திருப்பது மதிப்பு மிக்கது.
உங்கள் நிறுவனத்தின் பங்களிப்புகளை விளம்பரம் செய்யுங்கள்
சமூக ஊடகங்களில் எப்போதும் தொடர்புடன் இருங்கள். உங்கள் சாதனைகள், வலைப்பதிவுகள், அறிவிப்புகள் முதலியவற்றை உங்கள் சமூகத்தில் பகிர்ந்து கொண்டேயிருங்கள்.
மூலக்கட்டுரை எழுத்தாளர் பற்றி: நீரஜ் குமார் – வேல்யூபவுண்ட் (Valuebound) நிறுவனத்தில் தலைமை ஒப்பந்த அதிகாரியாக நீரஜ் வேலை செய்கிறார். அவர் 2008 முதல் ட்ரூபல் (Drupal) பயன்படுத்தி வருகிறார். சமீபத்தில் ட்ரூபல் 8 உருவாக்குதல், ஆரம்ப வழிகாட்டி புத்தகத்தை எழுதினார். வேல்யூபவுண்ட் அணி தொடர்ந்து ட்ரூபல்-க்கு திருப்பி பங்களிப்பு செய்வது எப்படி என்று பார்ப்பதும் அவரது பொறுப்பில் உள்ளது. சமூகத்தில் அது அளித்த பங்களிப்பு அடிப்படையில் இப்போது வேல்யூபவுண்ட் Drupal.org சந்தையில் உலகில் ட்ரூபல் சேவை வழங்குநர்களில் முதல் மூன்று இடங்களுக்குள் தரப்படுத்தப்படுள்ளது.
மூலம்: opensource.com தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்