மின் ஊர்தியில் பொருத்தும் ஒரு மோட்டாருக்கு அவசியம் தேவையான அம்சங்கள் என்ன என்று பார்ப்போம். குறைந்த வேகத்திலேயே நல்ல முறுக்குவிசை கிடைத்தால் ஊர்தியை நிற்கும் நிலையிலிருந்து நகர்த்தி ஓடத்துவக்குவதற்கு வசதியாக இருக்கும்.
முறுக்குவிசை (Torque) என்றால் என்ன?
அதிக முறுக்குவிசை என்றால் ஆரம்ப கட்டத்தில் வேகமான முடுக்கம். அதிக குதிரைத்திறன் என்றால் அதிக வேகம். இதனால்தான் சரக்கு வண்டிகள் போன்ற கனரக வாகனங்கள் அதிக முறுக்குவிசை கொண்டவை. ஆனால் பந்தய ஒட்டக் கார்கள் அதிகக் குதிரைத்திறன் கொண்டவை. பெட்ரோல் எஞ்சின்களுடன் ஒப்பிடும்போது டீசல் எஞ்சின்கள் அதிக முறுக்குவிசையை உருவாக்குகின்றன. மேல் கியரில் அதிக வேகத்தை அடைய முடியும் ஆனால் அதிக முறுக்குவிசை வேண்டுமானால் கீழ் கியருக்குத்தான் மாற்ற வேண்டும்.
பெட்ரோல் டீசல் கார்களில் ஏன் பல்லிணைப் பெட்டி (gear box) தேவைப்படுகிறது?
மின் மோட்டார்கள் போலல்லாமல், பெட்ரோல் டீசல் எஞ்சின்கள் ஊர்தியை நகர்த்துவதற்குப் போதுமான முறுக்குவிசையை எஞ்சின் ஓடும் வேகத்தில் தருவதில்லை. எனவே சக்கர முறுக்கு விசையை அதிகரிக்கப் பல்லிணைப் பெட்டி பயன்படுத்தி வேகத்தைக் குறைக்க வேண்டியிருக்கிறது. இதற்கு நேர்மாறாக, மின் மோட்டார்கள் இடையில் ஒரு பல்லிணைப் பெட்டி தேவையில்லாமல் ஊர்தியின் முழு வேக வரம்பிலும் முறுக்குவிசையை வழங்க முடியும். இதன் விளைவாக கியர்களை மாற்ற வேண்டிய அவசியத்தை நீக்குகிறது.
குறைந்த வேகத்திலும் நல்ல முறுக்குவிசை தேவை
நிற்கும் நிலையில் இருந்து வண்டியைக் கிளப்பி ஓரளவு வேகம் எடுப்பதற்கு மோட்டார் குறைந்த வேகத்திலும் அதிக முறுக்குவிசையைக் கொண்டிருக்க வேண்டும்
அதிக வேகத்தில் அதிக சக்தி (high power at high speed)
வேகம் எடுக்க எடுக்க முறுக்குவிசை அதிகம் தேவைப்படாது. ஆனால் வேகம் எடுப்பதற்குத் தொடர்ந்து சக்தி அதிகம் தேவைப்படும்.
நெடுநேரம் ஓடினாலும் அதிகம் சூடாகக் கூடாது
வண்டி ஓட ஓட மோட்டார் சூடாவது இயல்புதான். ஆனால் அதிகம் சூடானால் அதைக் குளிர்விக்க அதிகம் மெனக்கெட வேண்டும்.
மீளாக்க நிறுத்தம் (Regenerative braking)
வேகத்தைக் குறைப்பதற்கு ஊர்தியின் இயங்குவிசையைப் (momentum) பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்கலத்தில் ஏற்றும் தொழில்நுட்பத்தை மீளாக்க நிறுத்தம் என்கிறோம். இந்த வேலையைச் செய்ய ஊர்தியை உந்தும் மோட்டார் தற்காலிகமாக மின்னியற்றியாகச் (generator) செயல்படவேண்டும்.
புவியிலேயே அரிதான மூலகங்களைக் (rare earth elements) குறைவாகப் பயன்படுத்தல்
நியோடைமியம் (neodymium) போன்ற புவியிலேயே அரிதான மூலகங்கள் தேவைப்படாமல் இருந்தால் நல்லது. ஏனென்றால் இவை நம் நாட்டில் கிடைப்பதில்லை. சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. அப்படியே தேவைப்பட்டாலும் குறைந்த அளவே தேவை என்றால் நல்லது.
இந்த அம்சங்கள் யாவற்றையும் கொண்டுள்ள மூன்று வகை மின்மோட்டார்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை மூன்றையும் பற்றி அடுத்துவரும் கட்டுரைகளில் பார்ப்போம்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: மின்மோட்டாரின் அடிப்படைகள்
மின்காந்தவியல் (electromagnetism). மின்மோட்டாரின் முக்கிய பாகங்கள். நேர்மின் மோட்டார்களும் மாறுமின் மோட்டார்களும். மின் மோட்டார்களின் பயன்பாடுகள். மின்னியற்றிகள் (generators) இயந்திர ஆற்றலை மின்சாரமாக மாற்றுகின்றன.