பேராலயமும் சந்தையும் 11. சந்தை பாணிக்கு அவசியமான முன்தேவைகள்

நிரலாளர்கள் ஓட்டிப்பார்த்து சோதிக்கக்கூடிய நிரல் தொடக்கத்திலேயே இருக்க வேண்டும்

இந்தக் கட்டுரைக்கான ஆரம்பகால மதிப்பாய்வாளர்கள் மற்றும் சோதனை பார்வையாளர்கள் வெற்றிகரமான சந்தை-பாணி வளர்ச்சிக்கான முன்தேவைகள் குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர். இதில் திட்டத் தலைவரின் தகுதிகள் மற்றும் திட்டத்தை வெளியீடு செய்து இணை-நிரலாளர்கள் சமூகத்தை உருவாக்கத் தொடங்கும் போது உள்ள நிரலின் நிலை ஆகியவை அடங்கும்.

திறந்த மூலத்திற்கான எனது முதல் பங்களிப்பு மிகவும் சிறியது!

சந்தை பாணியில் அடிப்படையிலிருந்து ஒருவரால் நிரல் எழுத முடியாது என்பது மிகவும் தெளிவாக உள்ளது. சந்தை பாணியில் ஒருவர் சோதனை செய்யலாம், வழுத்திருத்தம் செய்யலாம் மற்றும் மேம்படுத்தலாம். ஆனால் சந்தை பயன்முறையில் ஒரு திட்டத்தை உருவாக்குவது மிகவும் கடினமாக இருக்கும். லினஸ் அதை முயற்சிக்கவில்லை. நானும் செய்யவில்லை. உங்கள் கூடிவரும் நிரலாளர் சமூகம் ஓட்டிப்பார்க்கக்கூடிய மற்றும் சோதிக்கக்கூடிய நிரல் தொடக்கத்தில் அவசியம் வேண்டும்.

நீங்கள் சமூகத்தை கட்டியெழுப்பத் தொடங்கும் போது, நீங்கள் முன்வைக்க வேண்டியது நம்பத்தகுந்த வாக்குறுதியாகும். உங்கள் திட்டம் சிறப்பாக செயல்பட வேண்டியதில்லை. இது கச்சாவாக, தரமற்ற, முழுமையற்ற மற்றும் சரியாக ஆவணப்படுத்தப்படாததாக இருக்கலாம். எதைச் செய்யத் தவறக்கூடாது என்றால் (அ) ஓடுவது, மற்றும் (ஆ) எதிர்காலத்தில் உண்மையிலேயே நேர்த்தியான ஒன்றாக உருவாகலாம் என்று சாத்தியமான இணை-நிரலாளர்களை நம்ப வைப்பது.

லினக்ஸ் மற்றும் ஃபெட்ச்மெயில் இரண்டும் வலுவான, கவர்ச்சிகரமான அடிப்படை வடிவமைப்புகளுடன் பொதுவில் வெளியிடப்பட்டன. நான் முன்வைத்த சந்தை மாதிரியைப் பற்றிச் சிந்திக்கும் பலர் இதை முக்கியமானதாகக் கருதினர். பின்னர் அதிலிருந்து உயர் மட்ட வடிவமைப்பு உள்ளுணர்வு மற்றும் திட்டத் தலைவரின் புத்திசாலித்தனம் இன்றியமையாதது என்ற முடிவுக்குத் தாவினர்.

ஆனால் லினஸ் தனது வடிவமைப்பை யூனிக்ஸ் இடம் இருந்து பெற்றார். நான் என்னுடையதை அதன் முன்னோடியான பாப்கிளையன்ட் இடமிருந்து பெற்றேன் (பின்னர் அது லினக்ஸை விடப் பெரிய அளவில் மாறியிருந்தாலும்). எனவே ஒரு சந்தை பாணி முயற்சிக்கான தலைவர்/ஒருங்கிணைப்பாளர் உண்மையில் விதிவிலக்கான வடிவமைப்புத் திறமையைக் கொண்டிருக்க வேண்டுமா அல்லது மற்றவர்களின் வடிவமைப்புத் திறமையைப் பயன்படுத்தியே அவரால் சமாளிக்க முடியுமா?

நல்ல வடிவமைப்புகளை உருவாக்குவதைவிட மற்றவர்களின் நல்ல யோசனைகளை அடையாளம் காண்பதுதான் முக்கியம்

ஒருங்கிணைப்பாளர் விதிவிலக்கான புத்திசாலித்தனத்துடன் வடிவமைப்புகளை உருவாக்க முடியும் என்பது முக்கியமானதல்ல என்று நான் நினைக்கிறேன், ஆனால் ஒருங்கிணைப்பாளர் மற்றவர்களிடமிருந்து நல்ல வடிவமைப்பு யோசனைகளை அடையாளம் காண முடியும் என்பது முற்றிலும் முக்கியமானது.

லினக்ஸ் மற்றும் ஃபெட்ச்மெயில் திட்டங்கள் இரண்டும் இதற்கான ஆதாரங்களைக் காட்டுகின்றன. லினஸ், ஓர் அற்புதமான அசல் வடிவமைப்பாளராக இல்லாவிட்டாலும், நல்ல வடிவமைப்பை அடையாளம் கண்டு அதை லினக்ஸ் கருநிரலில் ஒருங்கிணைக்க ஒரு சக்திவாய்ந்த திறமையைக் காட்டியுள்ளார். ஃபெட்ச்மெயிலில் (SMTP மேலனுப்புதல்) மிகவும் சக்திவாய்ந்த வடிவமைப்பு யோசனை வேறொருவரிடமிருந்து எப்படி வந்தது என்பதை நான் ஏற்கனவே விவரித்துள்ளேன்.

இந்தக் கட்டுரையின் ஆரம்பகாலப் பார்வையாளர்கள், சந்தை திட்டங்களில் வடிவமைப்பு அசல் தன்மையைக் குறைத்து மதிப்பிடுவதற்கான வாய்ப்புகள் என்னிடம் உள்ளன என்று கூறினர். ஏனெனில் என்னிடம் அத்திறமை நிறைய இருக்கிறது, எனவே நான் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று என்னைப் பாராட்டினர். இதில் ஓரளவு உண்மை இருக்கலாம். வடிவமைப்பு (நிரல் அல்லது வழுத்திருத்தத்திற்கு மாறாக) நிச்சயமாக எனது வலிமையான திறமையாகும்.

ஆனால் மென்பொருள் வடிவமைப்பில் புத்திசாலித்தனமாகவும் அசலாகவும் இருப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அது ஒரு பழக்கமாக ஆகிவிடுகிறது. நீங்கள் அவற்றை வலுவாகவும் எளிமையாகவும் வைத்திருக்க வேண்டியிருக்கும் போது, நீங்கள் வடிவமைப்பை அழகாகவும் சிக்கலாகவும் மாற்றத் தொடங்குவீர்கள். நான் முன்னர் இத்தவறைச் செய்ததால் திட்டப்பணிகள் செயலிழந்துள்ளன. ஆனால் ஃபெட்ச்மெயில் திட்டத்தில் என்னால் இதைத் தவிர்க்க முடிந்தது.

எனவே நான் புத்திசாலித்தனமாக இருக்கும் என் போக்கை கட்டுப்படுத்தியதால், ஃபெட்ச்மெயில் திட்டம் ஓரளவு வெற்றியடைந்தது என்று நம்புகிறேன். வெற்றிகரமான சந்தைத் திட்டங்களுக்கு வடிவமைப்பு அசல் தன்மை அவசியம் என்பதற்கு எதிராக (குறைந்தபட்சம்) இது வாதிடுகிறது. மற்றும் லினக்ஸைக் கவனியுங்கள். லினஸ் டோர்வால்ட்ஸ் வளர்ச்சியின் போது இயங்குதள வடிவமைப்பில் அடிப்படைக் கண்டுபிடிப்புகளை இழுக்க முயன்றார் என்று வைத்துக்கொள்வோம். இதன் விளைவாக வரும் கருநிரல் நம்மிடம் இருப்பதைப் போலவே நிலையானதாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும் என்று தோன்றுகிறதா?

நிச்சயமாக, ஒரு குறிப்பிட்ட அடிப்படை அளவிலான வடிவமைப்பு மற்றும் நிரல் திறன் தேவை. ஆனால் சந்தை முயற்சியைத் தொடங்க வேண்டும் என்று தீவிரமாக நினைக்கும் எவரும் ஏற்கனவே அந்தக் குறைந்தபட்சத்துக்கு மேல் இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். திறந்த மூல சமூகத்தின் நற்பெயரின் உள் சந்தையானது, பின்பற்றத் தகுதியற்ற வளர்ச்சி முயற்சிகளைத் தொடங்க வேண்டாம் என்று அவர்கள் மீது நுட்பமான அழுத்தம் கொடுக்கிறது. இதுவரை இது நன்றாக வேலை செய்துவருவதாகத் தெரிகிறது.

சந்தை திட்டத் தலைவருக்கு நல்ல மானிட உறவு மற்றும் தகவல் தொடர்பு திறன்கள் தேவை

சந்தைத் திட்டங்களுக்கு வடிவமைப்பு புத்திசாலித்தனம் போலவே மென்பொருள் மேம்பாட்டுடன் பொதுவாக தொடர்புபடுத்தப்படாத மற்றொரு வகையான திறன் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். இது அதைவிட மிகவும் முக்கியமானதாக இருக்கலாம். ஒரு சந்தை திட்ட ஒருங்கிணைப்பாளர் அல்லது தலைவர் நல்ல மானிட உறவுத் திறன்கள் மற்றும் தகவல் தொடர்பு திறன்களைக் கொண்டிருக்க வேண்டும்.

இது வெளிப்படையாக இருக்க வேண்டும். ஒரு மேம்பாட்டு சமூகத்தை உருவாக்க, நீங்கள் மக்களை ஈர்க்க வேண்டும். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட வேண்டும். மேலும் அவர்கள் செய்யும் வேலையைப் பற்றி அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். தொழில்நுட்பத்தின் ஈர்ப்பு இதை நிறைவேற்றுவதற்கு நீண்ட தூரம் செல்லும். ஆனால் இது மட்டுமே ஒருக்காலும் போதாது. நீங்கள் வெளிப்படுத்தும் ஆளுமையும் முக்கியமானது.

லினஸ் ஒரு நயமான ஆளுமை. அவருடன் தொடர்பு கொள்ளவும், அவருக்கு உதவவும் விரும்புவது தற்செயல் நிகழ்வு அல்ல. நான் ஓர் உற்சாகமான புறநோக்கர் (extrovert). ஒரு கூட்டத்தில் பேசி அசத்துவதை ரசிக்கிறேன் மற்றும் ஒரு நகைச்சுவைப் பேச்சாளர் போன்ற உள்ளுணர்வுகளைக் கொண்டிருப்பது தற்செயல் நிகழ்வு அல்ல. சந்தை பாணி வேலை செய்ய, மக்களைக் கவர்வதில் குறைந்தபட்சம் கொஞ்சம் திறமை இருந்தால் அது பெரிதும் உதவுகிறது.

மூலநூல்: The Cathedral and the Bazaar by Eric S. Raymond – version 3.0

தமிழாக்கம்: இரா. அசோகன் ashokramach@gmail.com

நன்றி

  1. How getting into Open Source has been awesome for me – Kent C. Dodds

இத்தொடரில் அடுத்த கட்டுரை: திறந்த மூல மென்பொருளின் சமூக சூழல்

ஒரு முக்கியமான பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் உங்களுக்கு சுவாரசியமான ஒரு பிரச்சினையில் தொடங்கவும். நிரலாளர்கள் தங்கள் நிரலில் அதீத கட்டுப்பாடு (over protective) வைக்காத குழுக்களில் முன்னேற்றம் வியத்தகு முறையில் வேகமாக நடக்கிறது. ஒரு மூடிய திட்டத்தில் தன் சொந்த மூளையை மட்டுமே பயன்படுத்தும் நிரலாளர் திறந்தமூலக் குழுக்களை விடப் பின்தங்கப் போகிறார். பரவலான இணைய அணுகலின் புதிய விதிகளின்படி எப்படி விளையாடுவது என்பதைக் கற்றுக்கொண்ட முதல் நபர் லினஸ் ஆவார். கொந்தர்கள் அதிகப்படுத்துவது தற்பெருமை (ego) திருப்தி மற்றும் மற்ற கொந்தர்கள் மத்தியில் நற்பெயர். லினஸின் முறை – தனிப்பட்ட கொந்தர்களின் சுயநலத்தை, நீடித்த ஒத்துழைப்பு தேவையான கடினமான நோக்கங்களுடன் இணைத்தல். மென்பொருளின் எதிர்காலம் பேராலயத்தை விட்டு வெளியேறிச் சந்தை பாணியைத் தழுவுபவர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும்.

%d bloggers like this: