நாம் எடுக்கும் முடிவுகள் நமது வருங்காலத்தையே மாற்ற வல்லவை. சில நேரங்களில் நமது நற்செயல்கள் நமது வாழ்வை மட்டுமல்ல, பிறருக்கும் நல்வாழ்வை அளிக்க வல்லவை.
சில செயல்கள் உலகோர் அனைவருக்கும் நல்வாழ்வு தர வல்லவை.
உலக வரலாற்றில் அச்செயல்களே அச்சாணியாக நின்று, வரலாற்றை நகர்த்திச் செல்கின்றன.
40 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், செப்டம்பர் 27 1983 ல் ரிச்சர்ட் ஸ்டால்மன் (Richard Stallman) வெளியிட்ட குனு திட்டம் ( GNU ) , கணினி வரலாற்றை புரட்டிப்போடும் என்று அவருக்கு தெரிந்தே இருந்தது.
அவரது பேருழைப்பால் தனிமரம் தோப்பானது.
உலகெங்கும் உள்ள மென்பொருள் ஆர்வலர்கள், ஊர் கூடித் தேர் இழுக்கும், திருவிழா அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
GNU திட்டத்தில் உருவாகும் மென்பொருட்கள் பின்வரும் உரிமையில் கிடைக்கின்றன.
0 – எங்கும் பயன்படுத்தும் உரிமை
1 – மென்பொருளை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் உரிமை
2 – இலவசமாகவோ, எந்த விலைக்கோ பகிர்ந்து கொள்ளும் உரிமை
3 – செய்த மாற்றங்களையும் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளும் உரிமை
என்ன ஒன்று, அனைவருக்கும் இதே உரிமையில் தான் பகிர வேண்டும்.
இந்த 4 எளிய வரிகள் மென்பொருள் உலகிற்கு புதிய வாசல்களைத் திறந்து விட்டன.
உலகெங்கும் உள்ள கணினி ஆர்வலங்களை, கணினித்துறைக்குள் கைப்பிடித்து இழுத்து வந்து, தேவையான எல்லா மென்பொருட்களையும் தந்து, சாதாரண எளிய மக்களை மென்பொருள் வல்லுனர்களாக்கி, பல தலைமுறைகளை முன்னேற்றியவை இந்த 4 உரிமைகள்.
சிலருக்கு அறிவே பெருங்கோயில். சிலருக்கு அறிவே ஆயுதம். பலருக்கு வறுமையை நீக்கி, வளமை தரும் திறவுகோல்.
மென்பொருள் அறிவை உலகோர் அனைவருக்கும் பகிரும் GNU திட்டம் கணினி உள்ள காலம் வரை செழித்து வளர உங்கள் பங்களிப்பும் தேவை.
உங்கள் அறிவை மென்பொருளாகவோ, ஆவணங்களாகவோ, படங்களாகவோ, பாடங்களாகவோ அனைவருக்கும் அனைத்து உரிமைகளுடனும் பகிர்ந்து வாருங்கள். உங்கள் செயல்கள் இனிய உலகை இன்னும் இனிதாக்கட்டும்.
குனு திட்டம் பற்றி மேலும் அறிய பின்வரும் இலவச மின்னூலைப் படியுங்கள், பகிருங்கள்