புதுவை எழுத்தாளர் ஞானசம்பந்தம் படைப்புகள் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியீடு

— பிரசன்னா
@KaniyamFoundation சார்ப்பாக நேற்று @ragulkanth ம் நானும் புதுவையில் ஞானசம்பந்தம் என்ற ஒரு எழுத்தாளரை (லத்தீன், பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழிகள் அறிந்த தமிழ் ஆசிரியர்) சந்தித்து அவரது புத்தகங்களை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் வெளியிடக் கோரிணோம். அவரும் விருப்பம் தெரிவித்து தன்னிடம் இருந்த புத்தகங்களை எங்களிடம் அளித்தார்.

அவருடனான ஒரு சில நிமிடங்களே நீடித்த உரையாடல் எனக்கு ஓர் புதிய உணர்வை ஏற்படுத்தியது. அவருக்கு வயது கிட்டத்தட்ட 75 இருக்கக்கூடும். பெரும்பாலும் வயதானவர்களை பார்த்தால் எனக்கு என்னுடைய பாட்டியாகத்தான் அவர்கள் தெரிவார்கள், ஏனெனில் அவர்களின் தலைமுறைக்கும் நம் தலைமுறைக்குமான இடைவெளி மிக அதிகம். வானொளியை மற்றும் தந்தியை மட்டுமே பெரிதும் அறிந்திருந்த தலைமுறை அவர்களுடையது. தொலைக்காட்சி, தொலைப்பேசி, கைப்பேசி, கணினி, இணையம், சமூக வலைத்தளம் போன்ற மிகவும் சிக்கலானவற்றிலிருந்து நீண்ட தூரம் நிற்கும் தலைமுறை அவர்கள். எனவே நாம் செய்யும் வேலை, ஈடுபடும் செயல்கள் அவற்றின் நோக்கங்களை புரிந்துக் கொள்வது அவர்களுக்கு எளிதானதும் அல்ல அவர்களுக்கு புரிய வைப்பதும் எளிதான காரியமும் அல்ல.

நான் என் பங்கிற்கு முடிந்த வரையில் ஆங்கில சொற்களை தமிழில் அவரிடம் பேசவே முயற்சித்தேன். அவர் அதனை கண்டுக்கொண்டார். நான் பேசும் போது அவர் முகத்தை கவனித்தேன், நெற்றியைச் சுருக்கி, பேசும் போது குறுக்கிடாமல், மிகவும் கூர்மையாக நான் கூறவரும் கருத்துக்களை நிதானமாக கேட்டுக்கொண்டிருந்தார். இந்தத் திறன் நம் தலைமுறையினரிடம் இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு வந்தது. அவர் உரையாடிய விதம், இந்த வயதான காலத்தில் வீட்டில் முடங்கிவிடும் தனிமை படரும் நேரத்தில் தன்னைச் சந்திக்க புதிதாக 2 இளைஞர்கள் வந்திருந்தனர் என்பதே அவருக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்திருக்கும்.

தமிழை சாமானியருக்கு எளிதாக கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் அவர் எழுதிய புத்தகங்களிலிருந்து சில எடுத்துக்காட்டுகளை முன்வைத்து அவர் பேசியது எனக்கு அவருடைய ஈடுபாட்டின் மீது மிகுந்த மரியாதை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு ஒரு சில நிமிடங்களே நீடித்தாலும் ஒரு புதிய பாடத்தை எனக்குக் கற்றுத் தந்தது போலுள்ளது.

என்னை அழைத்துச் சென்ற ராகுலுக்கு நன்றி, செல்லக் காரணமாக இருந்த கணியம் அறக்கட்டளைக்கும் நன்றி. தொடர்ந்து ஈடுபடுவோம். #FreeTamilEbooks

குறிப்பு –
முறையான அறிவிப்பு ஆவணங்களை விரைவில் வெளியிடுவோம்.
%d bloggers like this: