பைத்தான் படிக்கலாம் வாங்க! 13 – if elif else

“நீங்கள் மூன்று எண்களில் பெரிய எண்ணைக் கண்டுபிடிக்க ஒரு பாய்படம் வரைந்திருந்தீர்கள். ஆனால், நான் வேறொரு படம் வரைந்திருந்தேன். இந்தப் படம் சரியென எனக்குப் படுகிறது. இதற்குப் பைத்தான் நிரல் எழுத முடியுமா?” என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். உறுதியாக முடியும். பைத்தான் படிக்க வேண்டும் என்னும் அவருடைய முயற்சி பாராட்டுதலுக்குரியது. அவர் வரைந்த பாய்படம்(Flowchart), இது தான்!

அந்தப் படத்திற்கு உரிய படிகளை முதலில் எழுதுவோம். பிறகு, பைத்தான் நிரலாக அதை மாற்றலாம்.

1. முதலில் மூன்று எண்களை வாங்கிக்கொள்ளுங்கள்.
2. முதல் எண்ணை எடுத்து, இரண்டாவது எண்ணை விடப் பெரியதாக எனப் பாருங்கள். அப்படி இருந்தால்,
2.1. இப்போது, முதல் எண், மூன்றாவது எண்ணை விடப் பெரியதா எனப் பாருங்கள்.
2.2. அப்படியும் இருந்தால், முதல் எண்ணை அச்சிடுங்கள்.
2.3. முதல் எண், மூன்றாவது எண்ணைவிடப் பெரியது இல்லை எனில் (படி 2.1)
2.4. மூன்றாவது எண், இரண்டாவது எண்ணை விடப் பெரியதாக எனப் பாருங்கள்.
2.5. அப்படி இருந்தால், மூன்றாவது எண்ணை அச்சிடுங்கள்.
3. முதல் எண், இரண்டாவது எண்ணை விடப் பெரியதாக இல்லை என்றால், (படி இரண்டைப் பாருங்கள்),
3.1. இரண்டாவது எண், மூன்றாவது எண்ணை விடப் பெரியதாக இருக்கிறதா எனப் பாருங்கள்.
3.2 அப்படியிருந்தால், இரண்டாவது எண்ணை அச்சிடுங்கள்.

இந்தப் படிகள் தாம், மேல் உள்ள பாய்படத்திற்கான படிநிலைகள். இப்போது இதைப் பைத்தான் நிரலை மாற்றாக மாற்றுவோமா?


no1 = 100 #1. முதலில் மூன்று எண்களை வாங்கிக்கொள்ளுங்கள்.
no2 = 200
no3 = 300
if no1>no2: #2. முதல் எண்ணை எடுத்து, இரண்டாவது எண்ணை விடப் பெரியதாக எனப் பாருங்கள். அப்படி இருந்தால்,
if no1>no3:#2.1. இப்போது, முதல் எண், மூன்றாவது எண்ணை விடப் பெரியதா எனப் பாருங்கள்.
print("Biggest", no1) #2.2. அப்படியும் இருந்தால், முதல் எண்ணை அச்சிடுங்கள்.
elif no3>no2: #2.3. முதல் எண், மூன்றாவது எண்ணைவிடப் பெரியது இல்லை எனில் (படி 2.1) 2.4. மூன்றாவது எண், இரண்டாவது எண்ணை விடப் பெரியதாக எனப் பாருங்கள்.
print("Biggest", no3) #2.5. அப்படி இருந்தால், மூன்றாவது எண்ணை அச்சிடுங்கள்.
else:#3. முதல் எண், இரண்டாவது எண்ணை விடப் பெரியதாக இல்லை என்றால், (படி இரண்டைப் பாருங்கள்),
if no2>no3:#3.1. இரண்டாவது எண், மூன்றாவது எண்ணை விடப் பெரியதாக இருக்கிறதா எனப் பாருங்கள்.
print("Biggest", no2) #3.2 அப்படியிருந்தால், இரண்டாவது எண்ணை அச்சிடுங்கள்.

இந்த நிரல் மூலம், ஒரு கட்டளை(condition)க்குள் இன்னொரு கட்டளை(condition)யைக் கொடுப்பதைக் கற்றுக் கொண்டிருக்கிறோம். அதாவது, ifக்குள் ஒரு if கொடுத்திருக்கிறோம். else: என்பதற்குக் கீழ், ஒரு if கொடுத்திருக்கிறோம். தேவைப்படும் இடங்களில் இப்படியும் முயலலாம்.

இந்த நிரல் மூலம் பைத்தானில் என்னென்ன கற்றுக் கொண்டோம் என்று குறித்து வைத்துக் கொள்ளுங்கள். சரி, இப்போது no1, no2, no3 ஆகியவற்றில் புதுப்புது எண்களைக் கொடுத்துப் பாருங்கள். உங்கள் நிரல் சரியா வேலை செய்கிறதா என்று பார்த்து விடுங்கள். ஒரு வேளை சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். அதைப் பிறகு பொறுமையாக, வீட்டுப்பாடமாகச் சரி செய்து கொள்ளலாம்.

இப்போது if, elif, else ஆகியன என்ன செய்கின்றன என்று புரிந்து கொண்டீர்கள் என்றால் போதும். இந்தப் புரிதலே அடுத்த பதிவில் வரும் whileஐச் சரியாகப் புரிந்து கொள்ள உதவும்.

while படிக்கப் போவோமா ஊர்கோலம்? பைத்தான் படிக்க, பூலோகம் எங்கெங்கும்?

– கி. முத்துராமலிங்கம், பயிலகம்

%d bloggers like this: