பைத்தான் படிக்கலாம் வாங்க – 16 – மோகனா? மன்னனா? வென்றது யார்?

பயணம் தொடரட்டும், பாதை மலரட்டும் என்றெல்லாம் போன பதிவில் முடித்திருந்தீர்கள். நாங்களும் நீண்ட நாட்களாகக் காத்திருக்கிறோம், நீங்கள் வேறு பயணத்திற்குள் நுழைந்து விட்டீர்களா? ஆளையே காணோமே என்று நண்பர்கள் சிலர் செல்லமாகக் கடிந்து கொண்டார்கள்.

ஆமாம், உண்மை தான்! கல்வெட்டுப் பயிற்சி ஒன்றைத் தமிழ்நாட்டு அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்தி வருகிறது. அந்தப் பயிற்சிக்குள் நுழைந்து தமிழியைப் படித்துக் கொண்டிருந்தேன். தமிழியை எடுத்த போது, தமிழ்க் கணினியைக் கொஞ்சம் விட்டு விட்டேன். முன்னைப் பழமைக்கும் தமிழே துணை, பின்னைப் புதுமைக்கும் தமிழே துணை என்பதாக இருக்கிறது என்னுடைய தற்போதைய நிலை. கல்வெட்டிலும் தமிழ், கணினியிலும் தமிழ் என்று எங்கும் தமிழைப் பார்க்கும் போது மகிழ்ச்சி தானே!

வாருங்கள், இனித் தொடர்ந்து பயணிப்போம். முந்தைய பதிவுகளில் while பற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம் அல்லவா? அதையே தொடரலாம். அதற்கு முன்பாக,
ஒரு கதை சொல்லட்டுமா?

மன்னருக்கு வந்த கேள்வி

ஓர் ஊரில் ஒரு மன்னர் இருந்தார். மன்னருக்குத் திடீரென மூடி வைக்கப்பட்ட விண்டோஸ் நல்ல மென்பொருளா? கட்டற்ற மென்பொருளாக இருக்கும் லினக்ஸ் நல்ல மென்பொருளா என்று சந்தேகம் வந்து விட்டது. எல்லா மென்பொறியாளர்களையும் கூப்பிட்டுக் கேட்டார். யார் சொன்ன விடையும் அவருக்கு நிறைவைத் தரவில்லை. அப்போது ஒருவர் “மன்னா! ‘தமிழ் லினக்ஸ் கம்யூனிட்டி'(Tamil Linux Community) என்றொரு டெலிகிராம் குழு இருக்கிறது. அங்கே இதைப் பற்றிப் பேசுவார்கள். அந்தக் குழுவை வழிநடத்தும் மோகனைக் கூப்பிட்டால் இதற்கு விடை கிடைத்து விடும்” என்று சொல்ல, மன்னரும் மோகனைக் கூப்பிட்டு விடுகிறார்.

மோகனுக்கோ, ‘இந்தக் கேள்விக்குக் கூட விடை தெரியாமல் இவர் எப்படி மன்னர் ஆனார்?’ என்று மனத்திற்குள் நினைப்பு. இருந்தாலும் சரி, மன்னருக்கு விடை சொல்வோம் என்று நினைத்துக் கொண்டார். ‘மன்னா! கட்டற்ற மென்பொருள் தான் சிறந்தது! உங்கள் கையில் கணினியின் கட்டுப்பாடு இருக்கும்! இல்லையென்றால் உலகத்தையே ஆளும் மன்னராக நீங்கள் இருந்தாலும் உங்கள் கணினி ஓட்டைக் கணினி தான்’ என்று மன்னருக்குப் புரியும் வகையில் மோகன் விடை சொல்லி விடுகிறார்.

மன்னருக்கோ ஒரே மகிழ்ச்சி! ‘உமக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்! என் அரசு அதைக் கொடுக்கும்’ என்கிறார். ‘உங்கள் ஆட்சி மன்னர் ஆட்சியாக இல்லாமல் மக்கள் ஆட்சியாக இருக்க வேண்டும்’ என்பது கேட்கத் தான் மோகனுக்கு ஆசை. ஆனால் அதைக் கேட்டுப் புரியும் திறன், மன்னருக்கு இருக்க வேண்டுமே! ‘இல்லை எனக்கு எதுவும் வேண்டாம். நீங்களும் கேரள அரசு செய்திருப்பதைப் போல, லினக்ஸை அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் செயல்படுத்தி விடுங்கள்’ என்கிறார் மோகன். ‘அதைப் பின்னர் செய்வோம், உனக்கு என்ன வேண்டும் சொல்! ஒரு கிலோ தங்கமா? பத்துக் கிலோ தங்கமா?’ என்று கேட்கிறார் மன்னர். ‘நாட்டுக்கு நல்லது செய்யுங்கள் என்று கேட்டால், மன்னராக இருந்து கொண்டு, தங்கக் கடை நடத்துபவர் போல் நடந்து கொள்கிறாரே!’ என்று மோகனுக்குக் கொஞ்சம் வருத்தம்.

தங்கம் வேண்டாம்! நெல்மணி போதும்!

‘சரி, இந்த மன்னருக்கு நாம் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்’ என்று முடிவு செய்து கொள்கிறார் மோகன். மோகனின் வலப்பக்கத்தில் ஒரு சதுரங்க அட்டை தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த மோகனுக்குப் பிறந்தது சட்டென ஒரு திட்டம். “மன்னா! எனக்குத் தங்கம் எல்லாம் வேண்டாம்! இந்தச் சதுரங்கப் பலகையில் உள்ள முதல் சதுரத்திற்கு ஒரு நெல்மணியை எனக்குப் பரிசாகத் தாருங்கள் போதும்” என்கிறார்.

“ஒரு நெல்மணியா? அவ்வளவு தானா? போதுமா?” என மன்னருக்கோ அதிர்ச்சி.
“ஆம்! மன்னா! இரண்டாவது சதுரத்திற்கு இரண்டு நெல்மணியும் மூன்றாவது சதுரத்திற்கு நான்கும், நான்காவது சதுரத்திற்கு எட்டும், ஐந்தாவது சதுரத்திற்குப் பதினாறும்..”

“போதும் ஐயா! நிறுத்தும்! இப்படியே சதுரங்கப் பலகையில் இருக்கும் அறுபத்து நான்கு கட்டங்களுக்கும் நெல்மணிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்! இது அரசரின் கட்டளை” என்றார்.

கிலோ கணக்கில் தங்கம் கிடைத்த போதும் வேண்டாமென மறுத்த மோகன் எடுத்த முடிவு சரியா? வென்றது மோகனா? மன்னரா? சிந்தித்து வையுங்கள். உங்கள் சிந்தனையைப் பைத்தான் நிரலாகச் செயல்படுத்திப் பார்ப்போம், அடுத்த பதிவில்!
– கி. முத்துராமலிங்கம், பயிலகம், சென்னை.

தமிழ் லினக்ஸ் குழுவில் இணைய: t.me/+hP0aGHEIn_EwMDc1

%d bloggers like this: