பைத்தான் – os module – வினா 8 விடை 8

பைத்தானின் முதன்மையான நிரல்கூறு(module)களுள் ஒன்று os என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தப் பதிவில், அதில் அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சில செயல்கூறுகளை(functions)ப் பார்க்கலாமா! os நிரல்கூற்றை முதலில் உங்கள் கணினியில் இறக்கிக் கொள்ளுங்கள். அதாவது,
import os
அவ்வளவு தான்!

வினா 1: நான் இருக்கும் அடைவைப் பைத்தானில் பார்ப்பது எப்படி?
os.getcwd()
cwd என்பது Current Working Directory என்பதன் சுருக்கம். அதாவது இப்போது நீங்கள் எந்த அடைவில்(directory) இருக்கிறீர்கள் என்பதைக் காட்டும்.

வினா 2: பைத்தானில் ஒரு புது அடைவு(folder) உருவாக்குவது எப்படி?
os.mkdir(“/home/muthu/Documents/புது_அடைவு”)
என்று கொடுத்தால், உங்கள் கணினியில் ‘புது_அடைவு’ என்னும் பெயரில் ஓர் அடைவு /home/muthu/Documents/ பக்கத்திற்கு உள்ளே உருவாக்கப்பட்டிருக்கும்.

குறிப்பு: /home/muthu/Documents/ பக்கம் ஏற்கெனவே உங்கள் கணினியில் இருக்க வேண்டும்.

வினா 3: அடைவை மாற்றுவது எப்படி?
mkdir என்பது அடைவை உருவாக்கும் (make directory) என்பதன் சுருக்கம் என்றால் அடைவை மாற்றுவதற்குரிய சுருக்கம் என்ன? chdir (change directory) என்று கணித்திருப்பீர்களே! உங்கள் கணிப்புச் சரிதான்!
os.chdir(‘/home/muthu/Documents/Test’)
என்று கொடுங்கள். இப்போது நீங்கள் /home/muthu/Documents/Test அடைவுக்கு நகர்ந்திருப்பீர்கள்.

குறிப்பு: /home/muthu/Documents/Test அடைவு ஏற்கெனவே உங்கள் கணினியில் இருக்க வேண்டும்வு

வினா 4: ஏற்கெனவே உருவாக்கிய அடைவை நீக்குவது எப்படி?
அடைவை உருவாக்கி விட்டோம், வேறோர் அடைவுக்கு மாறி விட்டோம். மீதி என்ன இருக்கிறது? ஏற்கெனவே உருவாக்கிய அடைவை நீக்குவது தானே! make directory – mkdir, change directory – chdir என்று மாறியிருக்கின்றன. அப்படியானால் remove directory எப்படி மாற வேண்டும்? சரி தான் – நீங்கள் நினைத்தது!
os.rmdir(‘/home/muthu/Documents/Test’)

என்று கொடுத்தால், ‘/home/muthu/Documents/Test’ அடைவு நீக்கப்பட்டு விடும்.

வினா 5: “அட! என்ன நீங்கள் – அவசரப்பட்டு நீங்கள் நீக்குவது வரை போய் விட்டீர்கள். எல்லா அடைவுகளையும் எப்படிப் பட்டியல் இட்டுப் பார்ப்பது என்று சொல்வீர்கள் என்றல்லவா நினைத்தேன். அதைச் செய்வது எப்படி?
வாருங்கள் – அதையும் பார்த்து விடுவோம். ஏற்கெனவே உங்களுக்கு – mkdir, chdir, rmdir தெரியும். இப்போது பட்டியலிட என்ன சொல்லியிருப்பார்கள் என்று கணித்துச் சொல்லுங்கள் பார்ப்போம்.
os.listdir(‘/home/muthu/Documents’)
என்று கொடுத்தால், /home/muthu/Documents அடைவில் உள்ள கோப்புகள், அடைவுகள் ஆகியன பட்டியலிட்டுக் காட்டப்படும்.

இதே, listdir செயல்கூற்றை,
os.listdir()
என்று கொடுங்கள். எந்த அடைவில் உள்ள கோப்புகள், அடைவுகள் பட்டியலிடப்படுகின்றன என்று பாருங்களேன்.

வினா 6: நீங்கள் அடைவை உருவாக்குவது, மாற்றுவது, நீக்குவது ஆகியன எப்படி என்று தெளிவாகச் சொன்னீர்கள். ஆனால், அடைவுக்குள் உள் அடைவு (sub folder) உருவாக்குவது பற்றி நீங்கள் சொல்லவே இல்லையே! அதை உருவாக்குவது எப்படி?
ஒரே ஓர் அடைவை உருவாக்க, mkdir இருப்பது போல, புது அடைவு, அந்த அடைவுக்குள் ஓர் அடைவு என உருவாக்க, makedirs() என்னும் செயல்கூறு இருக்கிறது.
/home/muthu/Documents முகவரி உங்கள் கணினியில் ஏற்கெனவே இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த அடைவில் ‘வெளி’ அடைவை உருவாக்கி, அதற்குள் ‘உள்’ அடைவை உருவாக்க,
os.makedirs(‘/home/muthu/Documents/வெளி/உள்’)
எனக் கொடுத்தால் போதும்.

வினா 7: சரி, இப்போது வினா 6இல் உருவாக்கிய அடைவுகள் இரண்டையும் நீக்க வேண்டும் என்றால் எப்படிச் செய்வது?
பல அடைவுகளை உள் அடைவுகளாக உருவாக்க, makedirs() என்றால், பல அடைவுகளை நீக்க, removedirs() தான்!
os.removedirs(‘/home/muthu/Documents/வெளி/உள்’)

வினா 8: கோப்பு, அடைவு ஆகியவற்றின் பெயர்களை மாற்ற முடியுமா? முடியும் என்றால் எப்படி?
முடியும்.
os.rename(‘/home/muthu/Documents/old’, ‘/home/muthu/Documents/new’)
இங்க ‘old’ என்னும் அடைவின் பெயர், ‘new’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
குறிப்பு: இதைச் செயல்படுத்த, முதலில் ‘old’ என்னும் அடைவு ஏற்கெனவே இருக்க வேண்டும்.
இதே போல,
os.rename(‘/home/muthu/Documents/blog.jpeg’, ‘/home/muthu/Documents/new.jpeg’)
என்று கொடுத்தால், blog.jpeg -> new.jpeg எனப் பெயர் மாற்றப்பட்டு விடும்.
குறிப்பு: முதலில், blog.jpeg கோப்பு நம்மிடம் இருக்க வேண்டும்.

%d bloggers like this: