உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – Receptionist to Machine Learning Engineer – Nithya’s Story
குறிப்பு: இந்தப்பதிவில் எதையும் நான் டெக்னிக்கலாக எழுதவில்லை. இந்தத் தலைப்பில் என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களைத் தொகுத்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று வெகு நாட்களாக எண்ணியிருந்தேன். ஆனால் அதை எழுதுவதற்கு முன்னால் ஏதாவது பெரிதாக சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். சமீப காலமாக ஒரு விஷயத்தின் மீது தீராத ஆசை கொண்டு அதற்காக கடுமையாக உழைத்தேன். அதில் வெற்றி அடைந்து விடுவேன் என்றே எண்ணினேன். அப்போது வெற்றியின் உச்சத்தில் இக்கட்டுரையை வெளியிடலாம் என்று நினைத்தேன். ஆனால் வழக்கம் போல் வாழ்க்கையிடமிருந்து போதிய அடிகளைப் பெற்றுக்கொண்டேன். சரி எழுதி வைத்தது வீணாக வேண்டாமே என்று இப்பதிவினை வெளியிடுகிறேன்.
“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” – காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நான் 12ஆம் வகுப்பு படிக்கும் போது, எனது தாவரவியல் ஆசிரியரான ஜஸ்டிஸ் அமிர்தையன் சார் அவர்கள் என் மனதில் ஆழப் பதிய வைத்த இவ்வார்த்தையே என் வாழ்வில் மாபெரும் மாற்றங்களை உண்டாக்கியது. “முடிந்தவரை ஒரு டிகிரியாவது படித்துவிட்டு பிறகு திருமணம் செய்து கொள்ளுங்கள்! உடனடியாக திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்!” என்பதே இப்பள்ளியின் மற்ற ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளாகிய எங்களுக்கு வழங்கிய அதிகபட்ச அறிவுரையாகும். ஆனால் இந்த ஒரு ஆசிரியர் மட்டும் தான் “நீங்கள் பயாலஜி பிரிவில் படிப்பதால் நீங்கள் அனைவருமே டாக்டராக வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் உழைக்க வேண்டும். உங்கள் எண்ணம் எல்லாம் உயர்வானதாக இருக்க வேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். “எப்போதும் உயர்வான வாழ்க்கைக்கான முயற்சியில் நீங்கள் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். எந்நிலையிலும் இது போதும் என்று தேங்கி விடக்கூடாது. அதிகபட்ச உயர்வை நோக்கி நகர்ந்து கொண்டே செல்ல வேண்டும்” என்றெல்லாம் உணர்ச்சிப்பூர்வமாக பேசி ஒரு சில மாணவிகளுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை எழுப்பிக் கொண்டே இருப்பார். இவரது பாடவேளை வந்தாலே நான் உற்சாகம் அடைந்து விடுவேன். இவரது சொற்களை வேதவாக்காக எடுத்துக்கொண்டு கண்டிப்பாக டாக்டராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டு அயராது படித்தேன். ஆனால் எனது கெப்பாசிட்டி அதற்கு இடம் கொடுக்கவில்லை.
பிளஸ்-2 முடித்த பின்பு அதே ஊரில் ஒரு சாதாரண கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்தேன். 3 வருடம் பட்டப்படிப்பு முடித்து பின் ஒரு சர்வீஸ் சென்டரில் ரிசப்ஷனிஸ்ட் ஆக வேலைக்கு சேர்ந்தேன். நல்ல வேலைதான். ஆனால் ஒரு நாள், office boy வரவில்லை என்று கூறி என்னை அனைவருக்கும் டீ கொடுக்கச் சொன்னார்கள். கணினிகளைத் துடைப்பது போன்ற வேலைகளையும் செய்தேன். இது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவ்வளவு கஷ்டப்பட்டு டாக்டராக வேண்டும் என்ற எண்ணத்தோடு படித்தேனே! அதெல்லாம் இதற்குத்தானா என்றெல்லாம் நினைத்து வருந்தினேன். ‘நான் வேலையை விடப் போகிறேன்’ என்று சொன்னதற்கு “ஒரு டிகிரி முடித்த பெண்ணிற்கு 7,000 ரூபாய் சம்பளம் என்பது சரிதானே! நாங்கள் ஒன்றும் உங்களுக்குக் குறைத்துக் கொடுக்க வில்லையே! இதெல்லாம் ஒரு காரணமா!” என்று கூறினார்கள். ஆனாலும் வேலையை விட்டுவிட்டேன். டிஎன்பிஎஸ்சி, கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாவதற்குத் தேவையான ஆர்.எஸ்.அகர்வால் புத்தகம் என அனைத்தையும் படிக்க தொடங்கினேன். ‘Tell me about yourself’ என்ற கேள்விக்கான பதிலை சரளமாக ஆங்கிலத்தில் கூறுவதற்கு மீண்டும் மீண்டும் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தேன். இவற்றின் விளைவாக கூடிய விரைவிலேயே இன்போசிஸ் நிறுவனத்தில் தேர்வானேன். Manual Tester ஆக வேலை கிடைத்தது.
இன்போசிஸ் நிறுவனத்தில் சேர்ந்த பின்னர் வாழ்க்கை சொர்க்கம் போன்று சென்று கொண்டிருந்தது. அடுத்த கட்டமாக காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதையே என் இலக்காக வைத்தேன். ஆகவே எனக்கு வலை விரித்த நபர்களில் ஒருவருக்கு ஓகே சொல்லி என் காதல் வாழ்வை தொடங்கினேன். ஆனால் தொடங்கிய வேகத்திலேயே அது முடிவும் பெற்றுவிட்டது. பின்னர்தான் இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று முடிவுகட்டி மீண்டும் படிப்பில் மூழ்கினேன். இன்ஃபோசிஸ் நடத்தும் compre பரீட்சையில் தேர்வாகி பதவி உயர்வு பெற்றேன். ஒரு சில certifications முடித்தேன். பின்னர் பெண் பார்க்கும் படலம் தொடங்கியது. கண்ணை மூடிக்கொண்டு வருகின்ற மாப்பிள்ளைகள் அனைவருக்கும் ஓகே சொன்னேன். அதில் ஒருவர் எனக்கு ஓகே சொல்லி என் கணவர் ஆனார். இவர் மிகவும் நல்லவராகவும் தெரிந்தார்.
அவ்வளவு தான்! “நமக்கான தெய்வம் கணவர் என்ற பெயரில் நம்மை வந்தடைந்து விட்டது. இனி நம் மூளைக்கு சற்று ஓய்வு கொடுத்து இந்த தெய்வத்தின் சொல்படி கேட்டு நடந்து நம் வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விடலாம்” என்று எண்ணி பெருமூச்சு விட்டேன். ஆனால் இந்த தெய்வம் என்னைவிட ஒரு மாபெரும் குழப்பவாதியாக இருந்தது. மீண்டும் எல்லா முடிவுகளையும் என்னையே எடுக்க வைத்தது. திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்லட்டுமா வேண்டாமா என்று கேட்கும் போதெல்லாம் “உன் இஷ்டமம்மா” என்றது. என் இஷ்டம் இருக்கட்டும் உங்கள் விருப்பம் என்ன என்ற கேள்விக்கும் ” உன் விருப்பமே என் விருப்பம்” என்றது. ஆக மீண்டும் எல்லா முடிவுகளையும் நானே எடுக்க நேர்ந்தது.
ஆகவே ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்பதன் படி முடிந்தவரை வேலைக்குச் செல்வோம் என்ற முடிவையே எடுத்தேன். நான் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் எனக்குள் ஒரு பயம் அடிக்கடி வந்து எட்டிப் பார்க்கும். திடீரென ஒரு நாள் ‘உனக்கு ஒன்னும் தெரியாது’ எனச் சொல்லி என்னை வேலையை விட்டுத் தூக்கி விடுவார்களோ எனும் பயம். நானாக வேலையை விடுவது என்பது வேறு. ஆனால் எனது திறமை குறைவால் என்னை வேலையை விட்டுத் தூக்குவது என்பது வேறு. ஆகவே எனது திறமைகளை வளர்த்துக் கொள்வதில் நான் எப்போதும் மும்முனைப்பாக இருப்பேன். கொஞ்சம் கொஞ்சமாக Linux, HTML, CSS, JavaScript எனத் தொடங்கி பைத்தான், பிக் டேட்டா, மெஷின் லேர்னிங் என்பதுவரை தினமும் கற்றுக் கொண்டே வந்தேன். கற்றுக்கொண்டது மறந்துவிடக்கூடாது என்பதற்காக அதை ஒரு பதிவாக எழுதி கணியம் தளத்தில் வெளியிட்டேன். பதிவுகளைத் தொகுத்து மின் நூலாக வெளியிட்டேன். வீடியோக்களாக பதிவு செய்து யுடியூப் சேனலிலுல் வெளியிட்டேன். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது. ஆனால் என்னைப் பொருத்தவரை நான் இவ்வளவு விஷயங்கள் செய்தால் தான் நான் கற்றுக்கொண்டது என் மனதில் பதியும். இதுபோன்ற தொடர் செயல்களே டெஸ்டிங் துறையில் ஒரு அடிப் பொடிசாக வேலைக்குச் சேர்ந்த என்னை தற்போது Bigdata, Machine Learning போன்ற டிரெண்டிங் துறைகளில் வேலை பார்க்கும் அளவிற்கு உயர்த்தியது. எந்ந ஒரு இன்டர்வியூவிற்கும், நான் எழுதிய மின்னூல்களை ஒருமுறை விரைவாகப் படித்துவிட்டே செல்வேன். பிறகென்ன? ‘ஆத்தா! நான் பாஸாயிட்டேன்’ தான். CTS, Hexaware, TCS என புது நிறுவனங்கள், புது பணி உயர்வுகள், புது நுட்பங்கள் என வளர, நான் கற்றவையும், எழுதிவையுமே உதவுகின்றன. கட்டுரைகள், மின்னூல்கள், வீடியோக்களால், பலரும் பயன் பெறுவதாகத் தரும் கமெண்டுகள் மிக்க மகிழ்ச்சி அளிப்பவை. நமது செயல்கள், நமது வளர்ச்சிக்கும், பிறர் வளர்ச்சிக்கும் பயன்படுவது பேரானந்தம்.
இருந்தாலும், ஒவ்வொரு முறையும் குடும்பச் சுமை தாங்காமல் வேலையை விட்டுவிடலாம் என்ற முடிவினை நான் எடுக்கும் போதெல்லாம் என் வாத்தியார் கூறிய ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்‘ என்பது நினைவுக்கு வரும்.
“நமக்கான காலம் முடிந்து விட்டது. இனி நம் குழந்தைகளை முன்னேற்றி அதில் தான் நாம் சந்தோஷம் அடைய வேண்டும்.”
“இரண்டு மகன்கள் சிசேரியன் மூலம், ஒரு மகள் அடாப்ஷன் (தத்து) வழியில் என மூன்று பிள்ளைகள் ஆயாச்சு. அப்புறம் அதிக நேரம் உட்காரக் கூட முடியவில்லை. இவ்வளவு கடினப்பட்டு உழைக்க வேண்டியது அவசியம் தானா? ”
“கணவர் தான் கைநிறைய சம்பாதிக்கிறாரே. இருந்தும் மூன்று வேலையையும் ருசியாக ஆக்கிச் சாப்பிடக் கூட முடியாத அளவிற்கு ஓடிக் கொண்டிருக்கும் இந்த வேலை தேவைதானா. ”
இவையெல்லாம் மற்றவர்கள் என்னைப் பார்த்து கேட்ட கேள்விகள் கிடையாது [ அவை இதைவிடக் கேவலமானவை 🙂 ]. எனக்கு நானே கேட்டுக் கொண்ட கேள்விகள். இவை அனைத்திற்கும் பதிலாக ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்பது அமைந்தது. ஆகவே ‘இன்னும் கொஞ்சம் தம் கட்டலாமே’, ‘இன்னும் கொஞ்சம் தம் கட்டலாமே’ என எண்ணி எண்ணியே 35 வயது வரை அடைந்துவிட்டேன்.
சமீப காலமாக தம் கட்டுவதை இன்னும் கொஞ்சம் effective- ஆக செய்யலாமே என எண்ணி அமெரிக்கா செல்வதற்கு முயற்சி செய்தேன். ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு US opportunity என்பது ஒரு சவாலாகவே கருதப்படும். எவ்வளவு வெளிநாடுகள் சென்றாலும் US என்பது தனிதான். அகில உலக நாடுகளையும் US , Non-US என்று இரண்டாகவே பிரிந்து வைத்திருப்பார்கள். என்னுடைய 20வது வயதில் நான் வேலைக்குச் சேர்ந்த போது இதற்கு ஆசைப்படுவதற்குக் கூட தகுதி இல்லாமல் இருந்தேன். ஆனால் தற்போதோ இது எனக்கு கைக்கெட்டும் தூரத்தில் வந்து அமைந்தது. 2021- ஆம் ஆண்டில் US-க்கான lottery மூன்று முறை நடந்தது. மூன்று முறையும் என் பெயர் வரவில்லை. சிறிது ஏமாற்றம் அடைந்தேன். இதையடுத்து என் கம்பனியில் நேரடியாக L1A- க்கு விண்ணப்பித்தார்கள். இதில் lottery இல்லை. ஆகவே கண்டிப்பாக அமெரிக்கா சென்று விடுவேன் என்றே நினைத்தேன். ஒரு விஷயத்தை தினமும் நினைத்தால் அது கண்டிப்பாக நம் வாழ்க்கையில் நடக்கும் என்று கூறுவார்கள். கிட்டத்தட்ட கடந்த ஒரு ஆண்டு காலமாக தினமும் நான் இதையே நினைத்திருந்தேன். ஆகவே கண்டிப்பாக இது எனக்கு கைகூடிவரும் என்றே நம்பினேன். என் காதலனை மணமுடித்து அமெரிக்கா சென்றிருந்தாலோ அல்லது அமெரிக்க மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்து அமெரிக்கா சென்றிருந்தாலோ அல்லது என் கணவரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து அவருடன் dependent விசாவில் அமெரிக்கா சென்றிருந்தாலோ நான் இவ்வளவு சந்தோஷம் அடைந்திருப்பேனா என்பது தெரியாது. ஆனால் நானே முயற்சி செய்து L1A விசாவில் அமெரிக்கா செல்லப்போவதை எண்ணி தினம் தினம் பூரித்தேன். ஆனால் மேனஜர் பதவிக்கான நிறைய ஆதாரங்கள் என்னிடம் இல்லாத காரணத்தால் நிறைய முறை ‘Request for Evidence’ என்பதனை USCIS அனுப்பியது. ஆகவே USCIS நிராகரிக்கும் முன்னரே என் நிறுவனம் petition- ஐ திரும்பப் பெற்றுக்கொண்டது. உயர்வானதற்கு முயற்சி செய்யும்போது வருகின்ற வலியும் உயர்வாகத்தான் இருக்கிறது.
நான் வெற்றி அடைந்த பகுதிகளை மட்டும் வைத்துக் கொண்டு என்னுடைய கட்டுரையை முடிக்க விரும்பவில்லை. தோற்ற பகுதிகளும் என்னுடைய வாழ்க்கையின் அங்கம் தானே! அதையும் சற்று எடுத்துக் காட்ட விரும்புகிறேன். அஜித் , சிவாஜி என நிறைய பேர் இதை அவர்களது திரைப்படங்களில் சொல்ல முயற்சித்து இருப்பார்கள். ஒரு சில வீழ்த்தப்பட்ட மன்னர்களின் வீரத்தைப் போற்றுகின்ற புத்தகங்களிலும் இதைப்பற்றி பேச முயற்சித்து இருப்பார்கள். ஆனால் அவை நெகடிவ் கிளைமாக்ஸ் கொண்டவை என்று வர்ணிக்கப்படும்.
கிளைமாக்ஸ் என்ற ஒன்று கனவுகளுக்கு கிடையாது.
காலங்கள் மாறும், ஆசைகள் மாறும், நம்முடைய கனவுகளும் மாறும். ஒரு சில கனவுகள் நிறைவேறும். ஒரு சில கனவுகள் கரைந்து போகும். ஆகவே வாழ்க்கையின் ஒரு பகுதியில் ஜெயிப்பவன் ஹீரோ கிடையாது. ஒவ்வொரு பகுதியிலும் ஜெயிப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ச்சியாக எடுக்கிறவனே ஹீரோ. முயற்சிகளே எப்போதும் நம்முடன் இருக்கக் கூடியவை. வெற்றிகளோ தோல்விகளோ விரைவில் நம்மை கடந்து போகக் கூடியவை. வடிவேலுவின் வார்த்தைகளில் கூற வேண்டுமென்றால் “வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்” :-). என்னுடைய யுஎஸ் கனவு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு கடந்து சென்று கொண்டிருக்கிறது. மீண்டும் வேறு ஏதேனும் ஒன்றின் மீது தீராத ஆசை கொண்டு, முயற்சி செய்து வெற்றியோ தோல்வியோ பெற்றால் அறிவிக்கிறேன்.
- து. நித்யா துரைசாமி
சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு…..
பின் குறிப்பு – உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளிய கட்டுரையாளர், தற்போது, கனடா நாட்டில் பணி மாற்றம் பெற்றுள்ளார். ஒரு கணவரையும் மூன்று பிள்ளைகளையும் சேர்த்து அழைத்துச் சென்றுள்ளார். பல்வேறு உயர் தொழில் நுட்பங்களைக் கற்று வருகிறார். விரைவில் கட்டுரைகள், மின்னூல்கள், காணொளிகளை எதிர்பார்க்கலாம்.
- த. சீனிவாசன்.
நித்யாவின் மின்னூல்கள் இங்கே – freetamilebooks.com/authors/nithyaduraisamy/
யுடியூப் பாடங்கள் – youtube.com/nithyaduraisamy