எளிய தமிழில் Car Electronics 25. மின்னணு அமைப்புகளின் பாதுகாப்பான செயல்பாடு

ISO 26262 சாலை ஊர்திகள் – செயல்பாட்டுப் பாதுகாப்பு

ISO 26262 என்பது மொபெட் போன்ற சிறிய ஊர்திகளைத் தவிர்த்து மற்ற தொடர் உற்பத்தி சாலை ஊர்திகளில் நிறுவப்பட்ட மின் மற்றும் மின்னணு அமைப்புகளின் செயல்பாட்டுப் பாதுகாப்புக்கான பன்னாட்டுத் தரநிலை ஆகும். விபத்துகளின் அபாயத்தைக் குறைப்பதற்கும், ஊர்தி பாகங்கள் அவற்றின் நோக்கம் கொண்ட செயல்பாடுகளைச் சரியாகவும் சரியான நேரத்திலும் செய்வதை உறுதி செய்யவும் இது வழிகாட்டுதல்களை வரையறுக்கிறது. ISO 26262 போன்ற தரங்களைப் பின்பற்றுவதன் மூலம் பாதுகாப்பான மென்பொருள் கூறுகளை உருவாக்க இயலும்.

Automotive Safety Levels

ஊர்திப் பாதுகாப்பு நிலைகள்

இடர் நிலைகளைத் தீர்மானிக்கும் வழிமுறை

ISO 26262 இன் ஊர்திப் பாதுகாப்பு ஒருமைப்பாடு நிலைகள் (ASIL – Automotive Safety Integrity Levels) மூன்று காரணிகளை அடிப்படையாகக் கொண்டவை. இவை விபத்தின் தீவிரம், இடர் காப்பின்மையின் நிகழ்தகவு மற்றும் ஓட்டுநரின் கட்டுப்படுத்திறன் ஆகியவை. விபத்து ஏற்பட்டால் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதைத் தீவிரம் என்கிறோம். ஒரு விபத்து நிகழக்கூடிய வாய்ப்பை இடர் காப்பின்மையின் நிகழ்தகவு என்கிறோம். விபத்தைத் தடுக்க ஓட்டுநரால் எந்த அளவு சாத்தியம் என்பதை ஓட்டுநரின் கட்டுப்படுத்திறன் என்கிறோம். இந்த மூன்று காரணிகளின் கலவையானது ASIL நிலைகளை வரையறுக்கிறது.

ஒரு பாகம் “கட்டுப்படுத்த முடியாததாக” இருந்தாலும், அது செயலிழந்தால் “உயிருக்கு ஆபத்து அல்லது ஆபத்தான காயங்களை” ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும், அது நடக்கக் குறைந்த வாய்ப்பே இருந்தால் ASIL A (குறைந்த ஆபத்து) என வகைப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, பின்புற விளக்குகள் இருபுறமும் ஒரே நேரத்தில் செயலிழத்தல் வாய்ப்பு குறைவு. ஆகவே இது ASIL A வகையில் வரும்.

மானித் தொகுதி முக்கியமான தரவை இழப்பது ASIL B வகையில் வரும்.

எஞ்சின் நிர்வாகத்தில் தேவையற்ற முடுக்கம் போன்றவை ASIL C வகையில் வரும்.

காற்றுப்பை விடுவித்தல் (Airbag deployment), மின் விசைத்திருப்பல் (electric power steering) மற்றும் சறுக்காமல் நிறுத்தும் அமைப்பு (antilock braking systems) ஆகியவை ASIL D வகையில் வருவன.

ஊர்திகளில் பயன்படுத்தப்படும் இயங்கும் மின்னணு பாகங்களுக்கான அழுத்த சோதனைகள்

ஊர்திகளில் பயன்படுத்தப்படும் இயங்கும் மின்னணு பாகங்களை எவ்வாறு அழுத்த சோதனைகள் செய்யவேண்டும் என்ற தரநிலையைத் தானியங்கி மின்னணுவியல் மன்றம் (AEC – Automotive Electronics Council) வெளியிட்டுள்ளது. இந்த Q101 தரநிலையின் நோக்கம், ஒரு சாதனம் குறிப்பிட்ட அழுத்த சோதனைகளில் தேர்ச்சி பெறும் திறன் கொண்டதா என்பதைத் தீர்மானிப்பதாகும். இந்த சோதனைகளில் தேர்ச்சி பெற்ற சாதனங்களை ஊர்திகளில் பயன்படுத்தும் போது ஒரு குறிப்பிட்ட அளவிலான நம்பகத்தன்மையை எதிர்பார்க்கலாம். 

எடுத்துக்காட்டாக, LED விளக்குகள் குறைந்தபட்சம் -40ºC முதல் அதிகபட்சம் +85ºC வெப்பநிலைவரை செயல்பட வேண்டும். மற்றக் குறைக்கடத்திகள் (semiconductors) குறைந்தபட்ச வெப்பநிலை -40ºC முதல் அதிகபட்சம் +125ºC வெப்பநிலைவரை செயல்பட வேண்டும்.

நன்றி

  1. Functional Safety Decomposition – Lei Mao

இத்தொடரில் அடுத்த கட்டுரை: கம்பியில்லாப் பிணையம் மூலம் உட்பதித்த மென்பொருளை மேம்படுத்தல்

முன்னர் நேரடியாகக் கம்பி இணைப்புகள் மூலம் மட்டுமே மென்பொருளை மேம்படுத்த முடியும். பணிமனைக்குத் திரும்பக் கொண்டுவந்து மென்பொருளை சரி செய்தலைக் குறைப்பதே நோக்கம். மென்பொருள் மேம்படுத்தல் பற்றிய தகவல் எவ்வாறு வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. மேம்பட்ட வாகன செயல்பாடு என்றாலும் பாதுகாப்பு சவால்களும் உண்டு.

ashokramach@gmail.com

%d bloggers like this: