பேராலயமும் சந்தையும் 12. திறந்த மூல மென்பொருளின் சமூக சூழல்

ஒரு முக்கியமான பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் உங்களுக்கு சுவாரசியமான ஒரு பிரச்சினையில் தொடங்கவும்

இது என்றுமே பொய்யாகாது: சிறந்த நிரல்கள் படைப்பாளரின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தனிப்பட்ட தீர்வுகளாகத் தொடங்குகின்றன. பின்னர் இந்தப் பிரச்சினை ஒரு பெரிய வகுப்பினருக்குப் பொதுவானதாக இருப்பதால் பரவுகிறது. இது விதி 1 இன் கருத்துக்கு நம்மை மீண்டும் அழைத்துச் செல்கிறது, மிகவும் பயனுள்ள வகையில் இவ்வாறு மாற்றியும் கூறலாம்:

மணிமொழி 18. ஒரு முக்கியமான பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமானால், உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் ஒரு சிக்கலைக் கண்டுபிடிப்பதன் மூலம் தொடங்கவும்.

அது கார்ல் ஹாரிஸ் மற்றும் முந்தைய பாப்கிளையண்டுக்கும் அப்படித்தான் இருந்தது. அதேபோல எனக்கும் ஃபெட்ச்மெயிலுக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால் இது நீண்ட காலமாகப் புரிந்து கொள்ளப்பட்டதுதான். சுவாரசியமான விஷயம் என்னவென்றால், லினக்ஸ் மற்றும் ஃபெட்ச்மெயிலின் வரலாறுகளைப் பார்த்தால் நாம் இதன் அடுத்த கட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது பயனர்கள் மற்றும் இணை உருவாக்குநர்களின் பெரிய மற்றும் செயலில் உள்ள சமூகத்தின் முன்னிலையில் மென்பொருளின் பரிணாமம்.

“ஒரு நபரின் ஒரு மாத வேலை என்ற கட்டுக்கதை” நூலில் ஃபிரெட் புரூக்ஸ் நிரலாளர் நேரம் பரிமாற்றக் கூடியது அல்ல (not fungible) என்பதைக் கவனித்தார். ஆகவே தாமதமான மென்பொருள் திட்டத்தில் நிரலாளர்களைச் சேர்த்தால் அது மேலும் தாமதமாகும் என்றார். நாம் முன்பு பார்த்தது போல, ஒரு திட்டத்தின் சிக்கலான தன்மை மற்றும் தகவல் தொடர்பு செலவுகள் நிரலாளர்களின் எண்ணிக்கையின் வர்க்கத்துடன் உயர்கின்றன.(rise with the square of the number). அதே நேரத்தில் செய்யப்படும் வேலை நேரியல் ரீதியாக மட்டுமே உயரும் (rises linearly) என்று அவர் வாதிட்டார். புரூக்ஸின் சட்டம் உண்மைதான் என்று பரவலாகக் கருதப்படுகிறது. ஆனால் இக்கட்டுரையில் திறந்த மூல மேம்பாடு அதன் பின்னணியில் உள்ள அனுமானங்களைப் பொய்யாக்கும் பல வழிகளை நாம் ஆய்வு செய்துள்ளோம். மேலும், அனுபவ ரீதியாக, ப்ரூக்ஸின் சட்டம்தான் இந்தத் தலைப்பின் ஒட்டுமொத்தப் பார்வை என்றால் லினக்ஸே சாத்தியமில்லை.

நிரலாளர்கள் தங்கள் நிரலில் அதீத கட்டுப்பாடு (over protective) வைக்காத குழுக்களில் முன்னேற்றம் வியத்தகு முறையில் வேகமாக நடக்கிறது

கணினி நிரலாக்கத்தின் உளவியல் – ஜெரால்ட் வெயின்பெர்க்

ஜெரால்ட் வெயின்பெர்க்கின் (Gerald Weinberg) உன்னதமான கணினி நிரலாக்கத்தின் உளவியல் (The Psychology of Computer Programming), பின்னறிவில் பார்த்தால், ப்ரூக்ஸுக்கு ஒரு முக்கிய திருத்தமாக நாம் பார்க்க முடியும். “தற்பெருமையற்ற நிரலாக்கம் (egoless programming)” பற்றிய அவரது விவாதத்தில், நிரலாளர்கள் தங்கள் நிரலைப் பற்றி மீயுடைமை உணர்வு (possessive) இல்லாத குழுக்களில், வழுக்கள் மற்றும் சாத்தியமான மேம்பாடுகளைத் தேடுவதற்கு மற்றவர்களை ஊக்குவித்தால், முன்னேற்றம் மற்ற இடங்களை விட வியத்தகு முறையில் வேகமாக நடக்கிறது என்று வெய்ன்பெர்க் கவனித்தார். (சமீபத்தில், கென்ட் பெக்கின் (Kent Beck) ‘அதீத நிரலாக்கம் (extreme programming)’ நுட்பம், நிரலாளர்கள் ஒருவருக்குப் பின்னால் நின்று ஒருவர் பார்த்துக் கொண்டு இணைகளாக வேலை செய்வது, இந்த விளைவைக் கட்டாயப்படுத்துவதற்கான முயற்சியாகக் கருதலாம்.)

வெய்ன்பெர்க் தேர்ந்தெடுத்த கலைச்சொற்கள் அவரது பகுப்பாய்விற்குத் தகுதியான அங்கீகாரம் பெறுவதற்குத் தடையாக இருந்திருக்கலாம். இணையக் கொந்தர்களை ”தற்பெருமையற்றவர்கள் (`egoless)” என்று வர்ணிப்பதை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஆனால் அவருடைய வாதம் முன்னெப்போதையும் விட இன்று மிகவும் அழுத்தமாகத் தெரிகிறது என்று நான் நினைக்கிறேன்.

சந்தை முறையானது, “தற்பெருமையற்ற நிரலாக்கம்” விளைவின் முழு ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம், ப்ரூக்ஸ் சட்டத்தின் விளைவை வலுவாகத் தணிக்கிறது. ப்ரூக்ஸ் சட்டத்தின் பின்னணியில் உள்ள கொள்கையை ரத்து செய்யவில்லை, ஆனால் ஒரு பெரிய நிரலாளர் எண்ணிக்கை மற்றும் மலிவான தகவல்தொடர்புகள் ஆகியவற்றைக் கொடுத்தால், அதன் விளைவுகள் மற்றபடி பார்க்க முடியாத போட்டியிடும் நேரியலற்ற தன்மைகளால் (nonlinearities) மூழ்கடிக்கப்படலாம். இது நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீன் இயற்பியலுக்கு இடையிலான உறவை ஒத்திருக்கிறது. பழைய அமைப்பு குறைந்த ஆற்றல்களில் இன்னும் செல்லுபடியாகும், ஆனால் நீங்கள் எடையையும் வேகத்தையும் போதுமான அளவு உயர்த்தினால், அணு வெடிப்புகள் அல்லது லினக்ஸ் போன்ற ஆச்சரியங்கள் கிடைக்கும்.

ஒரு மூடிய திட்டத்தில் தன் சொந்த மூளையை மட்டுமே பயன்படுத்தும் நிரலாளர் திறந்தமூலக் குழுக்களை விடப் பின்தங்கப் போகிறார்

லினக்ஸிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம் என்பதற்கு யூனிக்ஸின் வரலாறு நம்மைத் தயார்படுத்தியிருக்க வேண்டும் (மேலும் லினஸின் முறைகளை வேண்டுமென்றே காப்பியடிப்பதன் மூலம் நான் சோதனை ரீதியாக சிறிய அளவில் சரிபார்த்துள்ளேன்). அதாவது, நிரல் எழுதும் முறையானது ஒரு தனித்துச் செய்யும் செயலாக இருக்கும் அதே வேளையில், முழுச் சமூகத்தின் கவனத்தையும் மூளைத்திறனையும் பயன்படுத்துவதிலிருந்தே பெரும் மென்பொருட்கள் உருவாகின்றன. ஒரு மூடிய திட்டத்தில் தன் சொந்த மூளையை மட்டுமே பயன்படுத்தும் நிரலாளர், வடிவமைப்பு, நிரல் பங்களிப்புகள், வழு கண்டறிதல் மற்றும் பிற மேம்பாடுகளை ஆராயும் பின்னூட்டம் நூற்றுக் கணக்கான நிரலாளர்களிடமிருந்து (ஒருவேளை ஆயிரக் கணக்கானவர்கள்) வரும் திறந்த, பரிணாம சூழலை உருவாக்கத் தெரிந்த நிரலாளரை விடப் பின்தங்கப் போகிறார்.

ஆனால் பாரம்பரிய யூனிக்ஸ் உலகம் இந்த அணுகுமுறையை உச்ச நிலைக்கு உயர்த்துவதிலிருந்து பல காரணங்களால் தடுக்கப்பட்டது. ஒன்று பல்வேறு உரிமங்கள், வர்த்தக ரகசியங்கள் மற்றும் வணிக நலன்களின் சட்டரீதியான தடைகள். இன்னொன்று (பின்னோக்கிப் பார்த்தால்) இணையம் அப்பொழுது இன்னும் முதிர்ச்சியடையவில்லை.

மலிவான இணையத்திற்கு முன், ஒரே இடத்திலிருந்த சில சமூகங்கள் இருந்தன. அங்கு கலாச்சாரம் வெயின்பெர்க்கின் “தற்பெருமையற்ற நிரலாக்கத்தை“ ஊக்குவித்தது. மேலும் ஒரு நிரலாளர் பல திறமையான தலையீடு செய்பவர்கள் (kibitzers) மற்றும் இணை உருவாக்குநர்களை எளிதில் ஈர்க்க முடியும். பெல் லேப்ஸ் (Bell Labs), எம்ஐடி கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் (MIT LCS and AI labs), கலிஃபோர்னியா பல்கலை, பெர்க்லி (UC Berkeley). இவை பழம்பெரும் புதுப்புனைவுகளின் (innovations) இல்லமாக மாறியதுடன் இப்பொழுதும் சக்திவாய்ந்ததாக உள்ளன.

பரவலான இணைய அணுகலின் புதிய விதிகளின்படி எப்படி விளையாடுவது என்பதைக் கற்றுக்கொண்ட முதல் நபர் லினஸ் ஆவார்

முழு உலகையும் அதன் திறமைக் குழுவாகப் பயன்படுத்த நனவான மற்றும் வெற்றிகரமான முயற்சி எடுத்த முதல் திட்டம் லினக்ஸ் ஆகும். லினக்ஸின் கருவளர் காலம் உலகளாவிய வலையின் பிறப்புடன் ஒத்துப்போனது தற்செயல் நிகழ்வு என்று நான் நினைக்கவில்லை. மேலும் 1993-1994 ஆம் ஆண்டில் லினக்ஸ் அதன் தொடக்கநிலையை விட்டு வெளியேறிய அதே காலகட்டத்தில் ஐஎஸ்பி (ISP) தொழில்துறை நிறுவப்பட்டது மற்றும் இணையத்தில் பரவலான ஆர்வம் ஏற்பட்டது. பரவலான இணைய அணுகலை சாத்தியமாக்கிய புதிய விதிகளின்படி எப்படி விளையாடுவது என்பதைக் கற்றுக்கொண்ட முதல் நபர் லினஸ் ஆவார்.

லினக்ஸ் மாதிரியின் வளர்ச்சிக்கு மலிவான இணையம் அவசியமான நிபந்தனையாக இருந்தபோதிலும், அது போதுமான நிபந்தனையாக இல்லை என்று நான் நினைக்கிறேன். மற்றொரு முக்கியமான காரணி, தலைமைத்துவ பாணி மற்றும் கூட்டுறவு பழக்கவழக்கங்களாகும். இது இணை-நிரலாளர்களை ஈர்க்கவும், ஊடகத்திலிருந்து அதிகபட்ச பயனைப் பெறவும் அனுமதிக்கும்.

ஆனால் இந்தத் தலைமைத்துவ பாணி என்ன, இந்தப் பழக்கவழக்கங்கள் என்ன? இவை அதிகார உறவுகளின் அடிப்படையில் இருக்க முடியாது. மேலும் இவை இருக்க முடிந்தாலும், வலுக்கட்டாயத் தலைமைத்துவம் நாம் பார்க்கும் முடிவுகளை உருவாக்காது. வெய்ன்பெர்க் 19 ஆம் நூற்றாண்டின் ரஷ்ய அரசின்மைவாதியான பியோட்டர் அலெக்சிவிச் க்ரோபோட்கினின் (Pyotr Alexeyvich Kropotkin) சுயசரிதையான “புரட்சியாளரின் நினைவலைகள் (Memoirs of a Revolutionist)” நூலை மேற்கோள் காட்டுகிறார்: 

ஒரு நில அடிமைகளின் முதலாளி (serf-owner) குடும்பத்தில் வளர்ந்த நான், என் காலத்து இளைஞர்களைப் போலவே, பணியவைத்தல், கட்டளையிடுதல், திட்டுதல், தண்டித்தல் போன்றவற்றின் அவசியத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் வயதுவந்த வாழ்க்கையில் நுழைந்தேன். ஆனால் ஆரம்ப கட்டத்தில், நான் தீவிரமான நிறுவனங்களை நிர்வகிக்கவும், [கட்டற்ற] ஆண்களை சமாளிக்கவும் வேண்டியிருந்தது. மேலும் ஒவ்வொரு தவறும் ஒரே நேரத்தில் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் போது, ​​கட்டளை மற்றும் கட்டுப்படுத்தல் கொள்கையில் செயல்படுவது மற்றும் பொதுவான புரிதல் கொள்கையில் செயல்படுவதற்கான வித்தியாசத்தை நான் பாராட்ட ஆரம்பித்தேன். முந்தையது ஒரு இராணுவ அணிவகுப்பில் வியக்கத்தக்க வகையில் செயல்படுகிறது. ஆனால் நிஜ வாழ்க்கையில் இதற்கு மதிப்பு கிடையாது. மேலும் பல ஒன்றிணைந்த மனத் திண்மைகளின் கடுமையான முயற்சியின் மூலம் மட்டுமே இலக்கை அடைய முடியும்.

லினக்ஸ் போன்ற ஒரு திட்டத்திற்குத் துல்லியமாகத் தேவைப்படுவது “பல ஒன்றிணைக்கும் மனத் திண்மைகளின் தீவிர முயற்சி (severe effort of many converging wills)”. இணையம் என்று நாம் அழைக்கும் அராஜகவாதிகளின் சொர்க்கத்தில் தன்னார்வலர்களிடையே “கட்டளைக் கொள்கையை” நடைமுறைப்படுத்த இயலாது. திறம்பட செயல்படவும், போட்டியிடவும், கூட்டுத் திட்டங்களை வழிநடத்தவும் விரும்பும் கொந்தர்கள், க்ரோபோட்கினின் “புரிந்துகொள்ளும் கொள்கை (principle of understanding)” மூலம் பரிந்துரைக்கப்பட்ட பயன்முறையில் ஆர்வமுள்ள பயனுள்ள சமூகங்களை எவ்வாறு கூட்டுவது மற்றும் உற்சாகப்படுத்துவது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் லினஸின் விதியைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.

லினஸின் விதிக்கான சாத்தியமான விளக்கமாக நான் முன்பு “டெல்பி விளைவு (Delphi effect)” என்று குறிப்பிட்டேன். ஆனால் உயிரியல் மற்றும் பொருளாதாரத்தில் தகவமைப்பு அமைப்புகளும் (adaptive systems) மிகவும் சக்திவாய்ந்த ஒப்புமைகளாகும். லினக்ஸ் உலகம் ஒரு தடையற்ற சந்தை (free market) அல்லது இயற்கை வாழும் நிலை (ecology) போன்று பல அம்சங்களில் செயல்படுகிறது. பயன்பாட்டை அதிகரிக்க முயற்சிக்கும் சுயநல முகவர்களின் ஒரு தொகுப்பு செயல்பாட்டில் தன்னைத்தானே திருத்திக் கொள்ளும் (self-correcting) தன்னிச்சையான ஒழுங்கை (spontaneous order) உருவாக்குகிறது. இந்த ஒழுங்கு எவ்வளவுதான் மத்திய திட்டமிட்டாலும் அதைவிட அதிக விரிவானது மற்றும் திறமையானது. அப்படியிருக்க இங்கேதான் “புரிந்துகொள்ளும் கொள்கையைத்” தேட வேண்டும்.

கொந்தர்கள் அதிகப்படுத்துவது தற்பெருமை (ego) திருப்தி மற்றும் மற்ற கொந்தர்கள் மத்தியில் நற்பெயர்

லினக்ஸ் கொந்தர்கள் அதிகப்படுத்தும் “பயன்பாட்டு செயல்பாடு (utility function)” பாரம்பரியப் பொருளாதாரம் அல்ல. ஆனால் புலனாகாத அவர்களின் சொந்த தற்பெருமை (ego) திருப்தி மற்றும் மற்ற கொந்தர்கள் மத்தியில் நற்பெயருமாகும். (அவர்களது உந்துதலை “பொதுநல நோக்கு” என்று அழைக்கலாம், ஆனால் பொதுநல நோக்கு என்பது பரோபகாரருக்கு தற்பெருமை திருப்தியின் ஒரு வடிவம் என்ற உண்மையை இது புறக்கணிக்கிறது). இந்த வழியில் செயல்படும் தன்னார்வ கலாச்சாரங்கள் உண்மையில் வழக்கமில்லாதது அல்ல. நான் நீண்ட காலமாகப் பங்குபெரும் மற்றொன்று அறிவியல் புனைகதை ரசிகர் குழுவாகும் (science fiction fandom). இது கொந்தர்களைப் போலல்லாமல், தன்னார்வச் செயல்பாட்டின் அடிப்படை உந்துதலாக “தற்பெருமை-உயர்த்தலை” (ego-boosting – ஒருவரின் நற்பெயரை மற்ற ரசிகர்களுக்கிடையில் உயர்த்துதல்) நீண்டகாலமாக வெளிப்படையாக அங்கீகரித்துள்ளது.

லினஸ், தன்னை ஒரு திட்டத்தின் நுழைவாயில் காப்பாளராக வெற்றிகரமாக நிலைநிறுத்திக் கொண்டார். அதில் மேம்பாடு பெரும்பாலும் மற்றவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அது தன்னிறைவு பெறும் வரை திட்டத்தில் ஆர்வத்தை வளர்த்தது அவர் க்ரோபோட்கினின் “பகிர்ந்து புரிந்துகொள்ளும் கொள்கையை (principle of shared understanding)” ஆழமாகப் புரிந்து கொண்டதைக் காட்டுகிறது. லினக்ஸ் உலகத்தைப் பற்றிய இந்தப் பொருளாதாரம் போன்ற (quasi-economic) பார்வை, அந்தப் புரிதல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பார்க்க நமக்கு உதவுகிறது.

லினஸின் முறை – தனிப்பட்ட கொந்தர்களின் சுயநலத்தை, நீடித்த ஒத்துழைப்பு தேவையான கடினமான நோக்கங்களுடன் இணைத்தல்

லினஸின் முறையானது “தற்பெருமை-உயர்த்தலில்” திறமையான சந்தையை உருவாக்குவதற்கான ஒரு வழியாக நாம் கருதலாம். அதாவது தனிப்பட்ட கொந்தர்களின் சுயநலத்தை, நீடித்த ஒத்துழைப்பால் மட்டுமே அடையக்கூடிய கடினமான நோக்கங்களுடன் முடிந்தவரை உறுதியாக இணைத்தல். அவரது முறைகளைக் காப்பியடித்து நல்ல முடிவுகளை அடையலாம் என்று ஃபெட்ச்மெயில் திட்டத்தில் நான் காட்டியுள்ளேன் (சிறிய அளவில் இருந்தாலும்). ஒரு வேளை நான் அவரை விட சற்று அதிக விழிப்புணர்வுடனும், முறையாகவும் கூடச்  செய்திருக்கலாம்.

பலர் (குறிப்பாக கட்டற்ற சந்தைகளில் அரசியல் ரீதியாக அவநம்பிக்கை கொண்டவர்கள்) தன்னிச்சையாக இயங்கும் தற்பெருமையாளர்களின் கலாச்சாரம் துண்டு துண்டாக, பிராந்திய ரீதியாக, வீணாக்குவதாக, இரகசியமானதாக மற்றும் பகையுணர்வுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த எதிர்பார்ப்பு லினக்ஸ் ஆவணப்படுத்தலின் ஆச்சரியமூட்டும் வகை, தரம் மற்றும் ஆழம் ஆகியவற்றால் (ஒரே ஓர் எடுத்துக்காட்டு மட்டும்) தெளிவாகப் பொய்யாக்கப்பட்டுள்ளது. நிரலாளர்கள் ஆவணப்படுத்தலை வெறுக்கிறார்கள் என்பதை யாவரும் அறிவர். அப்படியானால், லினக்ஸ் கொந்தர்கள் எப்படி இவ்வளவு ஆவணங்களை உருவாக்குகிறார்கள்? வெளிப்படையாக லினக்ஸின் தற்பெருமை-உயர்த்தலில் உள்ள கட்டற்ற சந்தையானது, பெருமளவில் நிதிவசதியுடைய வணிக மென்பொருள் தயாரிப்பாளர்களின் ஆவணக் குழுக்களைக் காட்டிலும் நல்லொழுக்கமுள்ள, பரோபகார நடத்தைகளை உருவாக்க சிறப்பாகச் செயல்படுகிறது.

ஃபெட்ச்மெயில் மற்றும் லினக்ஸ் கருநிரல் திட்டங்கள் இரண்டும், பல கொந்தர்களின் தற்பெருமைகளுக்குச் சரியான வெகுமதி அளிப்பதன் மூலம், ஒரு பலமான நிரலாளர்/ஒருங்கிணைப்பாளர் ஒரு திட்டம் பெருங்குழப்பத்தில் சிக்காமல் பல இணை-நிரலாளர்களைக் கொண்டிருப்பதன் பலன்களைப் பெற இணையத்தைப் பயன்படுத்தலாம் என்று காட்டுகின்றன. எனவே ப்ரூக்ஸின் சட்டத்திற்கு மாற்றுக் கருத்துகளாக நான் பின்வருவனவற்றை முன்மொழிகிறேன்:

மணிமொழி 19: திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் குறைந்தபட்சம் இணையம் போன்ற நல்ல தகவல்தொடர்பு ஊடகத்தைக் கொண்டிருந்து, மேலும் வற்புறுத்தலின்றி எப்படி வழிநடத்துவது என்பது தெரிந்திருந்தால், பல தலைவர்கள் இருப்பது ஒரே தலைவரை விடச் சிறந்தது.

மென்பொருளின் எதிர்காலம் பேராலயத்தை விட்டு வெளியேறிச் சந்தை பாணியைத் தழுவுபவர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும்

திறந்த மூல மென்பொருளின் எதிர்காலம் பெரும்பாலும் லினஸின் ஆட்டத்தை விளையாடத் தெரிந்தவர்களுக்கும், பேராலயத்தை விட்டு வெளியேறிச் சந்தை பாணியைத் தழுவுபவர்களுக்கும் சொந்தமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். தனிமனித தொலைநோக்கும் புத்திசாலித்தனமும் இனி முக்கியமில்லை என்று சொல்ல முடியாது. மாறாக, திறந்த மூல மென்பொருளின் அதிநவீன அம்சம் தனிப்பட்ட தொலைநோக்கு மற்றும் புத்திசாலித்தனத்திலிருந்து தொடங்கி, பின்னர் ஆர்வமுள்ள தன்னார்வ சமூகங்களை திறம்பட உருவாக்குவதன் மூலம் அதைப் பெருக்கும் நபர்களுக்குச் சொந்தமானது என்று நான் நினைக்கிறேன்.

ஒருவேளை இது திறந்த மூல மென்பொருளின் எதிர்காலம் மட்டுமல்ல. எந்தவொரு மூடிய மூல நிரல் குழுவும் லினக்ஸ் சமூகம் ஒரு பிரச்சினைக்குத் தீர்வுகாணக் கொண்டுவரும் திறமைசாலிகளின் தொகுப்பை ஒப்பிட முடியாது. ஃபெட்ச்மெயிலுக்குப் பங்களித்த 200 க்கும் மேற்பட்ட (1999: 600, 2000: 800) நபர்களை வேலைக்கு அமர்த்தக் கூட மிகச் சிலரால் மட்டுமே முடியும்!

ஒருவேளை இறுதியில் திறந்த மூல கலாச்சாரம் வெற்றிபெறும் காரணம் ஒத்துழைப்பு தார்மீக ரீதியாகச் சரியானது என்பதாலோ அல்லது மென்பொருள் “பதுக்கல்” தார்மீக ரீதியாகத் தவறானது என்பதாலோ அல்ல (பிந்தையதை நீங்கள் நம்பினாலும் லினஸும் நானும் நம்பவில்லை). திறந்த மூல சமூகம் ஒரு பிரச்சினையில் திறமையான நிரலாளர்களின் நேரத்தைப் பல மடங்கு உள்ளிட முடியும். ஆகவே மூடிய மூல உலகம் திறந்த மூல சமூகங்களுடன் பரிணாம ஆயுதப் பந்தயத்தில் வெற்றிபெற முடியாது.

மூலநூல்: The Cathedral and the Bazaar by Eric S. Raymond – version 3.0

தமிழாக்கம்: இரா. அசோகன் ashokramach@gmail.com

நன்றி

  1. The Psychology of Computer Programming Paperback

இத்தொடரில் அடுத்த கட்டுரை: மேலாண்மையும் மேகினாட் கோடும்

குனு ஈமாக்ஸ் தொகுப்பி – நூற்றுக்கணக்கான பங்களிப்பாளர்கள் – 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைந்த கட்டுமானத் தொலைநோக்கு. காலக்கெடு, செலவுத் திட்டம், அம்சப் பட்டியல் ஆகிய மூன்று இலக்குகளில் ஒன்றைக் கூட பூர்த்தி செய்வது `நிர்வகிக்கப்பட்ட’ திட்டத்தில் அரிது. யார் மீதாவது வழக்குத் தொடர்வதன் மூலம் ஆறுதல் அடைவது உங்கள் குறிக்கோள் அல்ல – உங்களுக்கு வேலை செய்யும் மென்பொருள் வேண்டும். திறந்த மூலம் வெற்றிகரமாக இருக்க ஒரு காரணம் அதன் கலாச்சாரம் மிகவும் திறமையான 5% நிரலாளர்களை மட்டுமே ஏற்றுக்கொள்வது. வழக்கமான மென்பொருள் திட்டங்களில் 60% முதல் 75% வரை முடிக்கப்படுவதில்லை அல்லது அவற்றின் பயனர்களால் நிராகரிக்கப்படுகின்றன. திறந்த மூல வெற்றியின் மிக முக்கியமான விளைவு – ஆக்கப்பூர்வமான வேலைக்கு மிகவும் திறமையான முறை விளையாடுதல்.

%d bloggers like this: