துருவங்கள் – நுட்ப நாவல் – நக்கீரன்.ந

ஒரு காதல் கதையில் கணினியைச் சொல்லித் தர முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் நக்கீரன். மதன், கார்த்திகா ஆகிய இருவர் தாம் இந்தக் கதையின் தலைவனும் தலைவியும். இவர்கள் இருவரையும் லினக்ஸ் இணைக்கிறது. இது தான் கதையின் சுருக்கம். கதைச் சுருக்கத்தைக் கேட்டவுடன் ‘ஓ! அவ்வளவு தானா!’ என்று நினைத்து விடாதீர்கள். நீங்கள் இந்தக் கதையில் புரட்டப் போகும் ஒவ்வொரு பக்கத்திலும் எதிர்பாராத திருப்பங்களும் எதிர்பார்க்கும் விருப்பங்களும் நிரம்ப இருக்கின்றன. காதலிக்க விரும்பும் ஒவ்வோர் இளைஞருக்கும் இந்தப் புத்தகம் மிகவும் பிடிக்கும். காதலிக்கும் நேரம் கடந்து விட்டோமோ என்று நினைக்கும் ஒவ்வொரு மனிதரையும் காதலுக்குள் இந்தப் புத்தகம் நுழைக்கும். கவித்துவமான காதலை விரும்புகின்ற ஒருவருக்கும் இந்தப் புத்தகம் பிடிக்கும்; ‘நான் தோற்றுப் போவேன் என்று அஞ்சியே ஏன் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்’ என்று காதலை வெளிப்படுத்த அஞ்சிக் கொண்டிருக்கும் சராசரி மனிதருக்கும் இந்தப் புத்தகம் பிடிக்கும்.

‘லினக்ஸ் பற்றிய புத்தகம் என்றல்லவா நினைத்தேன்! நீங்கள் காதலுக்குக் கால் பிடித்து விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நான் தான், பாதை மாறி வந்து விட்டேனோ?’ என்று நீங்கள் கேட்கலாம். அப்படிக் கேட்டால், லினக்ஸ் மட்டும் இல்லாமல், கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன, எப்படி யூனிக்ஸ் பிறந்தது, (Unics எப்படி Unix ஆனது என்பது வரை), ரிச்சர்டு ஸ்டால்மேன் ஏன் கட்டற்ற மென்பொருள் வேண்டும் என்று நினைத்தார், நம் கையில் இருக்கும் ஆன்றாய்டு அலைபேசியில் இருந்து நாசா, செவ்வாய்க்கு அனுப்பிய மார்ஸ் விண்கலம் வரை லினக்சின் செயல்பாடு, லினக்ஸ் அடிப்படை தெரியக் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டளைகள் என்னென்ன? ஐலக்சி, லினக்ஸ் பிராசஸ்கள் என்ற லினக்சின் ஆதியில் இருந்து அந்தம் வரை எல்லாவற்றையும் இந்தப் புத்தகம் பேசுகிறது. “லினக்ஸ் வெறும் OS இல்லீங்க, அதுக்குப் பின்னாடி ஒரு சரித்திரமே இருக்கு” என்று இக்கதையில் மதன் சொல்வதாக ஓரிடத்தில் வரும். இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்கள் கட்டாயம் அதை உணர்வார்கள். நூலைப் படித்த பிறகு வாசகர் ஒவ்வொருவருக்கும் லினக்ஸ் மீதான பார்வையும் புரிதலும் உறுதியாக மாறும். அதுவே இந்த நூலின் வெற்றி!

காதல், பொதுவுடைமை, பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, திரையிசை என்று நக்கீரன், தாம் கை வைத்த இடங்களில் எல்லாம் நாம் காணாமல் போகின்ற அளவு அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார். இவ்வளவையும் கொடுத்து, இதைப் படைப்பாக்கப் பொது உரிமத்தில் தான் வெளியிடுவேன் என்பதில் அவர் காட்டியிருக்கும் அக்கறை, வாக்கும் வாழ்வும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவர் வாழ்க்கையையும் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறது.

தமிழில் தொழில்நுட்ப நூல்களை எழுதிய பெரிய எழுத்தாளர்களின் நூல்களில் கூடக் காதல் என்னும் பெயரில் கழிவுகள் இருக்கும் என்று சொல்வார்கள். அப்படி எந்தக் கழிவையும் இந்த நூலில் நீங்கள் பார்க்க முடியாது. லினக்ஸ் எப்படிக் கட்டற்ற விடுதலையை, உரிமையைப் பேசுகிறதோ, அப்படியே நூலின் கதை மாந்தர்களும் பேசுகிறார்கள். இனிமேல் தமிழில் தொழில்நுட்ப நூல்களை எழுதுவோர், தொழில்நுட்பம் சார்ந்த ஒரு நூலை எப்படி எழுத வேண்டும் என்பதற்குக் கட்டாயம் நக்கீரன் எழுதியிருக்கும் ‘துருவங்கள் 11=10|01’ ஒரு மேல்வரிச் சட்டமாக இருக்கும். நிலாவைக் காட்டியே சோறூட்டுகின்ற தாய் போல, மதன்-கார்த்திகா காதலைக் காட்டியே லினக்சை ஊட்டியிருக்கின்ற நக்கீரன், தொடர்ந்து இது போன்ற நூல்களைத் தர வேண்டும். அப்படித் தருவது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மிகப்பெரிய வரமாக அமையும்.

கி. முத்துராமலிங்கம் 

பயிலகம் , சென்னை.

muthu1809@gmail.com

நூல் : துருவங்கள்

ஆசிரியர் : நக்கீரன்.ந
மின்னஞ்சல் : n.keeran.kpm@gmail.com

அட்டைப்படம் : பரமேஷ்வர் அருணாச்சலம், லெனின் குருசாமி
stark20236@gmail.com, guruleninn@gmail.com

பிழைத்திருத்தம் – கி. முத்துராமலிங்கம் – muthu1809@gmail.com

மின்னூலாக்கம் : நக்கீரன்.ந
மின்னஞ்சல் : n.keeran.kpm@gmail.com

வெளியிடு : FreeTamilEbooks.com

உரிமை : CC-BY-SA

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

துருவங்கள் மின்னூலை இங்கே இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்

%d bloggers like this: