எளிய தமிழில் VR/AR/MR 7. VR அசைவூட்ட வளங்கள் பதிவிறக்கம்

VR அசைவூட்டங்கள் தயாரிக்க உங்களுக்கு முப்பரிமாண மாதிரிகள் (models), இழையமைப்புகள் (textures) மற்றும் நிழலமைப்புகள் (shaders) போன்ற வளங்கள் தேவை. உங்கள் திட்டத்தையொத்த அசைவூட்டங்களே glTF கோப்பாகக் கிடைத்தாலும் பயனுள்ளதே. இவற்றைத் தங்கள் வேலைகளுக்காகத் தயாரித்த பலர் உரிமக் கட்டுப்பாடுகள் இல்லாமல் இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.

தோற்ற மெய்ம்மை (VR) அசைவூட்ட glTF கோப்புகள்

நம்முடைய திட்டத்துக்கு அருகாமை அசைவூட்டக் கோப்புகளே திறந்த உரிமங்களில் கிடைத்தால் நம் வேலை எளிதாகக்கூடும்.  glTF கோப்பு வகையை அசைவூட்டத் தொகுப்பிகளில் திறந்து மாற்றங்கள் செய்யமுடியும் என்று முன்னர் பார்த்தோம். ஆகவே நமக்குத் தோதாக மாற்றங்கள் செய்து தேவையான VR கோப்பாக ஏற்றுமதி செய்துகொள்ளலாம்.

குரோனோஸ் குழுமத்தின் இணையதளத்தில் படைப்பாக்கப் பொதும CC0 உரிமத்தில் அசைவூட்டக் கோப்புகள் பல கிடைக்கின்றன.

முப்பரிமாண மாதிரிகள்

ஸ்மித்சோனியன் (Smithsonian) அருங்காட்சியகம் இணையதளத்தில் பல முப்பரிமாண மாதிரிகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய முடியும். இம்மாதிரி மேலும் பல இணையதளங்களில்  திறந்த உரிமத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

இயற்பொருள் சார்ந்த தோற்ற அமைவு (Physically based rendering  – PBR)

இயற்பொருள் சார்ந்த தோற்ற அமைவு என்பது பொருட்களை தத்ரூபமாக சித்தரிக்கும் ஒரு கணினி வரைகலை அணுகுமுறையாகும். இது மெய்யுலகின் ஒளியோட்டத்தின்படி படங்களை வழங்க முற்படுகிறது. இதைச் செய்வதற்கு நிழலமைப்புகளும் (shaders), பொருட்களின் மேற்பரப்பு இழையமைப்புகளும் (textures) தேவைப்படும்.

நிழலமைப்புகள் (shaders)

இவை செயற்கை (synthetic) அல்லது கரிமப் (organic) பொருட்களின் தோற்றத்தைத் தேவையான பண்புகளுடன் உருவாக்க வழி செய்கின்றன. மற்றும் ஒளியூற்று இடம் (light source position), பிரதிபலிப்பு மற்றும் உமிழ்வு நிலைகள் (levels of reflection and emission) மற்றும் உலோகத்தன்மை (metallicity) போன்ற முக்கியமான பண்புகளுக்கும் ஆதரவு உண்டு. இந்த இணையதளத்திலிருந்து பிளெண்டரில் (Blender) பயன்படுத்தக்ககூடிய நிழலமைப்புளைப் பதிவிறக்கம் செய்யலாம்.

இழையமைப்புகள் (textures)

இழையமைப்புகள் தொகுப்பு

இழையமைப்புகள் தொகுப்பு

படைப்பாக்கப் பொதும CC0 உரிம இழையமைப்புகள் என்ற பெயரிலுள்ள இந்த இணையதளம் இயற்பொருள் சார்ந்த தோற்ற அமைவு (PBR) பொருட்களின் தொகுப்பாகும். நீங்கள் இவற்றை இலவசமாகப் பதிவிறக்கி, வணிகரீதியான பயன்பாடு உட்பட, எந்தவொரு திட்டத்திலும் பயன்படுத்தலாம். 

செங்கல் சுவர்கள், கற்காரை (Concrete), துணி, திரவங்கள், உலோகம், வர்ணம் பூசப்பட்ட பொருட்கள், பாறைகள், கற்கள், ஓடுகள், மரம் போன்ற பல இழையமைப்புகள் இங்கே பதிவிறக்கலாம்.

நன்றி

  1. Free Texture Pack: Stylized by JulioVII

இத்தொடரில் அடுத்த கட்டுரை: VR தலையணி (headset) வகைகள்

கணினி அல்லது விளையாட்டு முனையம் (gaming console) VR தலையணி. திறன்பேசி (smartphone) VR தலையணி. தனித்தியங்கும் (standalone) VR தலையணி. உங்கள் கைகளின் நகர்வு உணர்தல் (motion-sensing).

ashokramach@gmail.com

%d bloggers like this: