திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 1: திறந்த மூலம் என்றால் என்ன?

எந்த ஒரு ஆய்வுப் பயணத்திலும் முதல் அடி எடுத்து வைக்கும் பொழுது மனதில் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்யும். புதிய இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரலாம், முன்னால் கண்டறியாத நிலவெளிகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கலாம் மற்றும் சேருமிடம் எப்படியிருக்கும் என்பது மர்மமாகவே இருக்கும். எனினும் இதே காரணங்கள்தான் நாம் துணிந்து முற்பட உற்சாகமளிக்கும், நம் முயற்சியைப் பயனுடையதாக்கும்.

இத்தொடரில் உள்ள கட்டுரைகள் யாவையும் திறந்த மூல மென்பொருள் வழியில் செல்வது பற்றியவை. நீங்கள் மூடிய மூலம் அல்லது தனியுரிம மென்பொருளை (Proprietary Software) விட்டு விலகிச் செல்ல வழி தேடும் தனி நபராக இருந்தாலும் சரி அல்லது தொழிலில் வெற்றி பெற உதவும் செயலிகளுக்கு மாற்றாக கட்டற்ற திறந்த மூல மென்பொருட்கள் (Free Open Source Software FOSS) தேடும் நிறுவனமாக இருந்தாலும் சரி, இந்தக் கட்டுரைகள் உங்களுக்கு திறந்த மூல உலகத்தில் கால் ஊன்றுவது எப்படி என்று காட்டும். இவற்றில் பல கட்டுரைகள் எப்படி வல்லுநர்கள் திறந்த மூல மென்பொருட்கள் பற்றி துவக்கத்தில் கண்டறிந்தார்கள் மற்றும் அதன் பின்னர் தம் வேலைவாழ்க்கையில் செழிப்பாக உள்ளனர் என்பது பற்றி. மற்றவை ஒரு குறிப்பிட்ட வேலைக்குத் தகுந்த திறந்த மூல மென்பொருள் தேர்வு செய்வது பற்றியும், ஒரு திறந்த மூலச்செயலியை பயன்படுத்துவது எப்படி என்பது பற்றியும் மற்றும் உங்களுடைய வட்டாரத்துக்கோ அல்லது ஊருக்கோ திறந்த மூல மென்பொருளின் திறனை அறிமுகப்படுத்தவும் தேவையான கையேடுகள்.

எதையும் புதிதாகத் தொடங்குவது எளிதல்ல என்பது ஞாபகம் இருக்கட்டும். ஆனால் ஒரு புத்த மதப் பழமொழியில் கூறியது போல, “போய்ச் சேர்வதை விட நன்றாகப் பயணம் செய்வதே முக்கியம்”. நீங்கள் நன்றாகத் திறந்த மூல வழியில் பயணிக்கவும், மற்றும் வரும் பல ஆண்டுகளில் தொடர்ந்து பயணம் செய்யவும் இந்தக் கட்டுரைகள் உதவும் என்று நாம் நம்புகிறோம்.

திறந்த மூலம் என்றால் என்ன?

“திறந்த மூலம்” என்றால் அதன் வடிவமைப்பு வெளிப்படையாக உள்ளது. அதை யாவரும் மாற்றவும் மற்றும் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

இந்த சொற்றொடர் கணினி நிரல்களை உருவாக்கும் ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையிலிருந்து தோன்றியது. ஆனால் இன்று, “திறந்த மூலம்” என்று நாம் சொல்வது ஒரு பரந்த வழிமுறையை விவரிக்கிறது. இதை “திறந்த மூல வழிமுறை” என்று கூறுகிறோம். ஆக திறந்த மூல திட்டங்கள் திறந்த பரிமாற்றம், கூட்டு முயற்சியாக பங்களிப்பது, விரைவாக முன்மாதிரி செய்தல், வெளிப்படைத்தன்மை, தகுதிக்கு மதிப்பு, மற்றும் சமூகம் சார்ந்த மென்பொருள் உருவாக்கத்தைத் தழுவுகின்றன.

திறந்த மூல மென்பொருள் என்றால் என்ன?

திறந்த மூல மென்பொருள் என்றால் அதன் மூலக் குறியீட்டை யாவரும் ஆய்வு செய்யலாம், மாற்றலாம் மற்றும் மேம்படுத்தலாம்.

“மூலக் குறியீடு” என்பது பெரும்பாலான கணினி பயனர்கள் ஒருபோதும் பார்க்காத மென்பொருள் பகுதி. இக்குறியீட்டை அணுக வழியிருந்தால் கணினி நிரலாளர்கள் இதை மாற்றுவதன் மூலம் செயலி வேலை செய்யும் முறையை மேம்படுத்த முடியும் அல்லது சரியாக வேலை செய்யாத இடங்களைத் திருத்தியமைக்க முடியும்.

திறந்த மூல மென்பொருட்களுக்கும் மற்ற வகையான மென்பொருட்களுக்கும் வேறுபாடு என்ன?

சில மென்பொருட்களை அதை உருவாக்கி மற்றும் தனிப்பட்ட முறையில் கட்டுப்படுத்தும் நபர், குழு, அல்லது நிறுவனம் மட்டுமே மாற்ற முடியும். இவற்றை  “தனியுரிம” அல்லது “மூடிய மூல” மென்பொருள் என்று கூறுகிறோம்.

தனியுரிம மென்பொருளை அதை எழுதி வெளியிட்ட நிறுவனத்தார் மட்டுமே சட்டபூர்வமாக நகலெடுக்கலாம், ஆய்வு செய்யலாம், மற்றும் மாற்றலாம். கணினி பயனர்கள் தனியுரிம மென்பொருளை பயன்படுத்துமுன் அதை எழுதி வெளியிட்ட நிறுவனத்தார் வெளிப்படையாக அனுமதிக்காத எதையும் செய்வதில்லை என்று ஒப்புக்கொள்ள வேண்டும். பொதுவாக இந்த மென்பொருளை நிறுவி முதல் முறையாக இயக்க முயலும்போது இந்த உரிமம் காட்டப்படும். மைக்ரோசாப்ட் ஓபிஸ் (Microsoft Office) மற்றும் அடோபி ஃபோட்டோஷாப் (Adobe PhotoShop) தனியுரிம மென்பொருள் எடுத்துக்காட்டாகும்.

திறந்த மூல மென்பொருள் வித்தியாசமாக இருக்கிறது. அதன் நிரலாளர்கள் அதன் மூலக் குறியீட்டை முழுமையாக வெளியிடுகிறார்கள். அந்தக் குறியீட்டை யாவரும் பார்வையிட, நகல் செய்ய, அதைக் கற்க, அதில் மாற்றம் செய்ய, பகிர்ந்து கொள்ள அனுமதி உண்டு. லிப்ரெஓபிஸ் (LibreOffice) மற்றும் ஜிம்ப் (GIMP) திறந்த மூல மென்பொருள் எடுத்துக்காட்டாகும்.Open Source Logos

கணினி பயனர்கள் தனியுரிம மென்பொருள் போலவே திறந்த மூல மென்பொருளைப் பயன்படுத்துமுன் உரிமம் ஏற்க வேண்டும். ஆனால் திறந்த மூல மென்பொருட்களுக்கான சட்ட விதிமுறைகள் மிகப் பெருமளவில் வேறுபடுகின்றன.

பொதுவாக திறந்த மூல மென்பொருள் உரிமங்கள் கணினி பயனர்களுக்கு அவர்கள் விரும்பிய எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்த அனுமதியளிக்கின்றன. சில திறந்த மூல மென்பொருள் உரிமங்கள் (copyleft) மூலக் குறியீட்டை மாற்றம் செய்து வெளியிடும் எவரும் அத்துடன் மூலக் குறியீட்டையும் வெளியிட வேண்டும் என்று நிர்ணயிக்கின்றன. மற்ற சில திறந்த மூல மென்பொருள் உரிமங்கள் மூலக் குறியீட்டை மாற்றம் செய்து வெளியிடும் எவரும் அத்துடன் உரிம கட்டணம் வசூலிக்காமல் மூலக் குறியீட்டையும் வெளியிட வேண்டும் என்று நிர்ணயிக்கின்றன.

ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதையும் மற்றும் பகிர்ந்து கொள்வதையும் ஊக்குவிப்பதே திறந்த மூல மென்பொருள் உரிமங்களின் நோக்கம். ஏனென்றால் அவை மற்றவர்கள் மாற்றம் செய்யவும் அந்த மாற்றங்களை தங்கள் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளவும் அனுமதிக்கின்றன. அவை திறந்த மூல மென்பொருட்களை விரும்பியபோது அணுகவும், பார்க்கவும், மாற்றம் செய்யவும் நிரலாளர்களை ஊக்குவிக்கின்றன. அதே நேரத்தில் அவர்களும் தாங்கள் அதில் மாற்றிய நிரல்களை அம்மாதிரியே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நிரலாளர்களுக்கு மட்டும்தான் திறந்த மூல மென்பொருள் முக்கியமா?

இல்லை. திறந்த மூல தொழில்நுட்பம் மற்றும் திறந்த மூல சிந்தனை நிரலாளர்களுக்கு மட்டுமல்லாது ஏனைய பயனர்களுக்கும் நன்மை பயக்கின்றது.

ஆரம்ப கண்டுபிடிப்பாளர்கள் லினக்ஸ் இயக்க அமைப்பு (Linux Operating System) மற்றும் அபாச்சி இணைய வழங்கி (Apache Web Server) போன்ற திறந்த மூல தொழில்நுட்பங்களை வைத்தே இணையத்தைக் கட்டினர். இன்றும் இணையத்தைப் பயன்படுத்தும் யாவருக்கும் இது நன்மையாகவே உள்ளது.

கணினி பயனர்கள் ஒவ்வொரு முறையும் வலை பக்கங்களை காணும்போதும், மின்னஞ்சல் படிக்கும்போதும், பாடல்கள் கேட்கும்போதும், அல்லது நிகழ்பட ஆட்டம் விளையாடும்போதும், தங்கள் கணினிகள், அலைப்பேசிகள், அல்லது விளையாட்டு முனையங்கள் உலகளாவிய பிணையத்துக்கு தரவுகளை அனுப்பவும் வாங்கவும் திறந்த மூல மென்பொருள் பயன்படுத்தும் கணினிகள் வழி செய்கின்றன. பெரும்பாலும் இக்கணினிகள் பயனர்கள் பார்க்கவும் அணுகவும் இயலாத தொலை தூரங்களில் இருப்பவை. ஆகவே இவற்றை சிலர் “தொலைக் கணினிகள் (Remote Computers)” என்று கூறுகிறார்கள்.

வரவர பயனர்கள் தங்களிடமுள்ள சாதனங்களில் செய்ய வேண்டிய பணிகளை செய்துமுடிக்க தொலைக் கணினிகளை சார்ந்துள்ளனர். எடுத்துக்காட்டாக தங்கள் கணினியில் மென்பொருள்  நிறுவி சொல் செயலாக்கம், மின்னஞ்சல் மேலாண்மை மற்றும் வரைபடத்தொகுப்பு செய்துகொள்ள வேண்டியிருந்தது. இப்பொழுது அதற்குப் பதிலாக அவர்கள் ஒரு இணைய உலாவி அல்லது அலைப்பேசி செயலியைப் பயன்படுத்தி தொலைக் கணினிகளில் இந்த திட்டங்களை அணுகி இவ்வேலைகளை முடித்துக்கொள்ள இயல்கிறது. இதைத்தான் “தொலைக் கணிமை (Remote Computing)” என்று கூறுகிறோம்.

இந்த தொலைக் கணிமையை சிலர் “மேகக் கணிமை (Cloud Computing)” என்று கூறுகிறார்கள். ஏனென்றால் கோப்புகளை சேமிப்பது, படங்களைப் பகிர்வது, அல்லது நிகழ்படம் பார்ப்பது போன்ற வேலைகளைச் செய்ய தங்களிடமுள்ள சாதனங்களுடன் உலகளாவிய பிணையத்திலுள்ள தொலைக் கணினிகளையும் சேர்த்து அவர்களை சுற்றி ஒரு “சூழல் (atmosphere)” அமைக்க வேண்டும்.

மேகக் கணிமை இணையத்தில் இணைக்கப்பட்ட சாதனங்களுக்கு அன்றாட வாழ்க்கையில் வளர்ந்துவரும் ஒரு முக்கிய அம்சம் ஆகும். கூகிள் செயலிகள் (Google Apps) போன்ற சில மேகக் கணிமை பயன்பாடுகள் தனியுரிமமானவை. ஓன்க்ளௌட் (ownCloud) மற்றும் நெக்ஸ்ட்க்ளௌட் (Nextcloud) போன்ற மற்ற சில திறந்த மூலமாக உள்ளன.

அடிமட்டத்தில் செயற்பாட்டுமேடையாக (platform) விளங்கும் சில மென்பொருட்களுக்கு மேல்தான் மேகக் கணிமை செயலிகள் வேலை செய்கின்றன. இந்த மேகக் கணிமை செயற்பாட்டுமேடைகள் திறந்த மூலமாகவும் இருக்கலாம் தனியுரிமமாகவும் இருக்கலாம். ஓபன்ஸ்டேக் (OpenStack) திறந்த மூல மேகக் கணிமை செயற்பாட்டுமேடைக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

ஏன் பயனர்கள் திறந்த மூல மென்பொருள் பயன்படுத்த விரும்புகின்றனர்?

பயனர்கள் தனியுரிம மென்பொருட்களை விட திறந்த மூல மென்பொருட்களை விரும்ப பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை:

கட்டுப்பாடு. பலர் திறந்த மூல மென்பொருளை விரும்பக்காரணம் அதன் மீது கூடுதல் கட்டுப்பாடு செய்ய இயலும். அவர்கள் செய்ய விரும்பாத எதையும் அது செய்யாமல் இருக்கிறதா என்று அதன் மூலக் குறியீட்டை ஆய்வு செய்யலாம். வேண்டுமானால் மாற்றவும் முடியும். நிரலாளர் அல்லாத சாதாரண பயனர்கள் கூட திறந்த மூல மென்பொருளை விரும்புகிறார்கள், ஏனென்றால் அவர்கள் விருப்பப்படி அதை பயன்படுத்த முடியும்.

பயிற்சி. மற்றும் சிலர் திறந்த மூல மென்பொருளை விரும்பக்காரணம் அவர்கள் சிறந்த நிரலாளர் ஆக அது உதவுகிறது. திறந்த மூலக் குறியீடு நேரடியாக அணுக இயல்வதால் மாணவர்கள் அதைப்படித்து நிரல் எழுதக் கற்றுக்கொள்ள முடியும். தங்கள் வேலையை மற்றவர்களுடன் பகிரலாம், அவர்களின் கருத்து மற்றும் விமர்சனத்தை வரவேற்பதன் மூலம் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். மூலக் குறியீடுகளில்  தவறுகள் கண்டறியும்போது, மற்றவர்களுடன் அந்த தவறுகளை பகிர்ந்து கொள்ள முடியும் மற்றும் தாங்களே அதே தவறுகளை தவிர்க்கவும் உதவும்.

பாதுகாப்பு. மேலும் சிலர் திறந்த மூல மென்பொருளை விரும்பக்காரணம் அவர்கள் அதை தனியுரிம மென்பொருளை விட பாதுகாப்பானது மற்றும் நிலையானது என்று கருதுகின்றனர். திறந்த மூல மென்பொருளை அனைவரும் பார்க்கவும் மற்றும் மாற்றவும் முடியும். ஆகவே மூல நிரலை எழுதியவர்கள் தவறி விட்டாலும் மற்றவர்கள் பார்த்து சரி செய்ய இயலும். மூல நிரலை எழுதியவர்களிடம் அனுமதி கேட்க தேவை இல்லாமல் பல நிரலாளர்கள் வேலை செய்ய இயலும். எனவே அவர்கள் தனியுரிம மென்பொருளை விட மிக விரைவாக சரிசெய்து மேம்பாடு செய்ய முடியும்.

உறுதிப்பாடு. பல பயனர்கள் முக்கியமான, நீண்ட கால திட்டங்களுக்கு தனியுரிம மென்பொருட்களை விட திறந்த மூல மென்பொருட்களையே விரும்புகின்றனர். ஏனெனில் மூல நிரலை எழுதியவர்கள் அதில் வேலை செய்வதை நிறுத்திவிட்டாலும் மூலக் குறியீட்டை அணுக இயல்வதால் தங்கள் கருவிகள் மறைந்து போகும் அல்லது சீர்கேடு அடையும் என்று கவலைப்பட வேண்டியதில்லை. மேலும், திறந்த மூல மென்பொருட்கள் திறந்த தரத்திற்கு ஏற்ப எழுதப்பட்டுள்ளன மற்றும் செயல்பட முனைகின்றன.

“திறந்த மூலம்” என்றால் இலவசம் என்றுமட்டும்தானே பொருள்?

இல்லை, இது பரவலாக நம்பப்படும் ஒரு தவறான எண்ணம். “திறந்த மூலம்” என்பது வெறும் பொருளாதாரக் கருத்து மட்டும் அல்ல.

ஓபன் சோர்ஸ் மென்பொருள் நிரலாளர்கள் அவர்கள் உருவாக்கும் அல்லது பங்களிக்கும் திறந்த மூல மென்பொருளுக்கு பணம் வசூலிக்க முடியும். ஒரு திறந்த மூல உரிமத்தின் கீழ் அவர்கள் மென்பொருளை வெளியிடும்போது மூலக் குறியீட்டை வெளியிடுவது அவசியம். ஆனால் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் மென்பொருளை  விட சேவைகளுக்கும் மற்றும் ஆதரவுக்கும் பணம் வசூலிப்பதே மிகவும் இலாபகரமான வழி என்று கண்டறிகிறார்கள். இம்மாதிரி மென்பொருளை இலவசமாகக் கொடுத்து அதை நிறுவவும், பயன்படுத்தவும் மற்றும் பிரச்சினைகளை சரி செய்யவும் பணம் வசூலிக்கிறார்கள்.

சில திறந்த மூல மென்பொருட்கள் இலவசமாக இருந்தாலும், அதன் நிரலாக்கம் மற்றும் பழுதுபார்க்கும் திறன் மிகவும் மதிப்புமிக்கது. பல நிறுவனங்கள் குறிப்பாக திறந்த மூல மென்பொருட்களில் அனுபவம் உள்ள நிரலாளர்களையே வேலைக்கு அமர்த்த விரும்புகிறார்கள்.

“மென்பொருளுக்கு அப்பால்” திறந்த மூலம் என்றால் பொருள் என்ன?

Opensource.com-ல் நாங்கள் திறந்த மூல கருத்துகளும் கோட்பாடுகளும் மென்பொருளுக்கு அப்பால் உள்ள உலகுக்கும் பொருந்தும் என நம்புகிறோம். திறந்த மூலம் என்பது மென்பொருள் தயாரித்து உரிமம் வழங்குவது மட்டுமல்ல அது ஒரு பொதுவான அணுகுமுறை என்று நம்புகிறோம்.

வாழ்வின் அனைத்து அம்சங்களையும் ” திறந்த மூல வழிமுறை”-யில் அணுகுவது என்றால் என்ன? பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை, வெளிப்படையான வழிகளில் மற்றவர்களுடன் ஒத்துழைத்தல் (மற்றவர்கள் பார்க்கவும் சேரவும் இயலும்), வெற்றியின் ஒரு படியாக தோல்வியை எடுத்துக்கொள்ளுதல், மற்றவர்களையும் இதேமாதிரி செய்ய எதிர்பார்த்தலும் ஊக்குவித்தலும்.

நம்மை சுற்றியுள்ள உலகை மேம்படுத்த ஈடுபாட்டுடன் பங்கெடுப்பதும் இதன் பொருளாகும். ஆனால் இந்த உலகம் வடிவமைக்கப்பட்டுள்ள வழியை எல்லோராலும் அணுக இயன்றால் மட்டுமே இது சாத்தியம்.

இந்த உலகம் முழுவதும் செயல்திட்டங்களும், செய்முறைகளும், விதிகளும் ஆக  “மூலக் குறியீடுகள்” பரவி உள்ளன. இவை நாம் சிந்திப்பது மற்றும் செயல் வடிவமைப்பது முதலான எல்லாவற்றுக்கும் வழிகாட்டியாக உள்ளன. நாம் இந்த அடிப்படைக் குறியீடுகள் எல்லாம், அவை எந்த வடிவத்தில் இருந்தாலும், திறந்ததாகவும் அணுக இயலுவதாகவும் இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். அப்பொழுதுதான் பலர் அதை மேம்படுத்துவதில் பங்கெடுக்க முடியும்.

இங்கே நாங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் – அறிவியல், கல்வி, அரசு, உற்பத்தி, சுகாதாரம், சட்டம், மற்றும் நிறுவன இயக்கவியல் – திறந்த மூலக் கருத்துகளின் தாக்கம் பற்றிய உண்மைக்கதைகள் சொல்கிறோம். நாம் திறந்த மூல வழி சிறந்த வழி எப்படி என்று மற்றவர்களுக்கு சொல்ல விழையும் சமூகம் – ஏனெனில் இது பகிர்வதால் மேம்படுகிறது!

மூலம்: opensource.com  தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்

பின்குறிப்பு: உங்களுக்கு ஏதாவது கேள்விகள் எழுகின்றனவா அல்லது விளக்கம் தேவையா? கீழே உள்ள கருத்துப்பெட்டியில் கேட்கலாம் அல்லது  உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

%d bloggers like this: