சிறுவயது முதலே கணினிகள் என்னை ஈர்த்தன. ஆனால் நான் சந்தித்த முதல் கணினி லினக்ஸ் (Linux) அல்ல. மற்ற பலர் போலவே அது மைக்ரோசாப்ட் விண்டோஸ் (Microsoft Windows) கணினி – அதில் பெயிண்ட் (Paint) செயலி. பின்னர், பல ஆண்டுகள் கழித்து, 2011-ல், என் விக்கிப்பீடியா வழிகாட்டியான ஷிஜு அலெக்ஸ்தான் என்னை லினக்ஸுக்கு அறிமுகப்படுத்தினார். அது முதல் இதுவே என் வாழ்க்கையாக ஆயிற்று!
உபுண்டு 10.04.4 LTS ( லூசிட் லினக்ஸ் ) நான் நிறுவிய முதல் வெளியீடு என்று நினைக்கிறேன். அது விண்டோஸை விட வித்தியாசமாகவும், எளிதாகவும், ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது. நான் அடிக்கடி எதற்காவது விண்டோஸுக்கு சென்று பின்னர் மீண்டும் உபுண்டு திரும்பி வருவேன். லினக்ஸ் சீராக பிசிரற்று செய்த வேலையும், நச்சுநிரல் இல்லாத சூழலும் அற்புதமாக இருந்தது. ஆகவே லினக்ஸ் என்னைத் தொடர்ந்து கவர்ந்திழுத்தது. இன்று போல உபுண்டுவில் நல்ல வரைவியல் பயனர் இடைமுகம் அப்போது இல்லை. நான் இப்பொழுது போல அவ்வளவு நிரலும் எழுதவில்லை. கிம்ப் (GIMP) மற்றும் இங்க்ஸ்கேப் (InkScape) பயன்படுத்தி படங்களைத் தொகுத்து வந்தேன்.
அதன் பின்னர் 2011-ல், நான் மும்பை சென்று இந்திய விக்கி மாநாட்டை ஒட்டிய கூட்டு நிரலாக்க நிகழ்ச்சியில் பங்கு பெற்றேன். அச்சமயம் ஜேகுவரி (jQuery) குறியீட்டில் ஒரு பிரச்சினை வந்தது. நான் ஒருவரிடம் உதவி செய்யக் கேட்டேன். அவர் குறியீட்டைப் பார்க்க என் அலுவலக விண்டோஸ் மடிக்கணினியை எடுத்தார். அவர் கல்வியாளரும் விக்கிப்பீடியாவில் முக்கிய நபருமான பாப் கம்மிங்ஸ் (Bob Cummings). ஒரு நிமிடம் கழித்து, அவர் என்னைப் பார்த்து, “தம்பி நீ தவறான இயங்குதளத்தில் உள்ளாய்” என்றார். என்னுடைய சொந்த மடிக்கணினியில் நான் லினக்ஸ் நிறுவி ஒரிய விக்கிப்பீடியாவுக்காக குறியம் உருவாக்க பயன்படுத்திக் கொண்டுதானிருந்தேன். ஆகவே நியாயப்படுத்துவதுபோல் “இந்த விண்டோஸ் கணினி என்னுடைய வேலைக் கணினி” என்றேன். அவர், “நண்பனே நீ தவறான வேலையில் இருக்கிறாய்” என்றார்.
அந்த உரையாடலை என்னால் மறக்கவே முடியவில்லை. பாப் சொன்னது என்னுள் எப்பொழுதும் ரீங்காரம் செய்துகொண்டேயிருந்தது. ஏனெனில் நான் இருந்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் தனியுரிம மென்பொருட்களாலான உலகைவிட நல்லதொரு உலகம் வெளியே உள்ளது என்ற உணர்வு என்னை உலுக்கியது. அதன் ஒரு பகுதியாக இல்லை என்றால் நான் பெரிய எதையோ இழக்கிறேன் என்றே தோன்றியது.
எனவே 2012 ல், நான் விக்கிமீடியாவின் இந்திய திட்டத்தில் சேர்ந்தேன், புது தில்லி சென்றேன். அது எனக்கு மேலும் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள் மற்றும் லினக்ஸ் ஆதரவாளர்களுடன் பழக வாய்ப்பளித்தது.
என் வேலையில் நான் இன்னும் பலரை நேரடியாகவும், இணையம் மூலமும் சந்திக்க அவசியம் நேரிட்டது. நான் அடிக்கடி கட்டற்ற மென்பொருள் அல்லது லினக்ஸ் பற்றி பேசிக்கொண்டிருப்பவர்களையோ அல்லது மேக் கணினியா விண்டோஸ் கணினியா என்று கவலைப்படாமல் இருக்கும் வேலைக்கு எது சிறந்த மென்பொருள் என்று பரிந்துரைப்பவர்களையோ சந்திப்பேன். போகப்போக கருப்பு சாளரத்தில் வெள்ளை உரை காட்டும் அந்த லினக்ஸ் முனையம் நான் எப்பொழுதும் குடியிருக்கும் வீடுபோல் ஆனது. நான் உள்ளீட்டு முறையில் இருந்த பிழைகளை நீக்கும் காரியங்களில் வேலை செய்துவந்தேன். ஏற்கனவே விக்கிமீடியாவின் சக ஊழியர் ஜூனைட் பி.வி. (Junaid PV) வழிகாட்டுதலின் கீழ் வேலை செய்து வந்தது மீடியாவிக்கியில் புதிய உள்ளீட்டு முறை உருவாக்க எனக்கு உதவியது. புதிய பங்களிப்பாளர்களுக்கு கையேடுகள் மற்றும் கைப் பிரசுரங்கள் வடிவமைக்கும் போது பயன்படுத்த எளிதாக இருந்த அடோபி கருவிகள் பிடித்திருந்த போதிலும், லினக்ஸ் அடிப்படையிலான கருவிகள் செய்யும் தெற்காசிய மொழி எழுத்துக்களின் கச்சிதமான மீள்தருகையை (rendering) இரசித்தேன்.
என் விக்கிப்பீடியா வழிகாட்டி ஷிஜு அலெக்ஸ் என் அடிப்படை மாற்றத்தின் ஒரு பகுதியாக இருந்தார். அவர் ஒரு தலை சிறந்த கட்டற்ற மென்பொருள் ஆர்வலர். மேலும் நான் ஆர்வம் இழந்த போது மீண்டும் லினக்ஸ் பயன்படுத்த என்னை ஊக்குவித்தார்! உடன் நான் என்னுடைய மேக்புக் (Macbook)-ல் மெய்நிகர் பெட்டி (Virtual Box) நிறுவி லிபர்ஓபிஸ் (LibreOffice), கிம்ப் (GIMP), இங்க்ஸ்கேப் (InkScape), மற்றும் எனக்கு பிடித்த ஆடாசிட்டி (Audacity) போன்ற கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருட்கள் பல நிறுவினேன்.
இன்று, நான் உபுண்டு லினக்ஸ் 14.04.2 பயன்படுத்துகிறேன். வேலை நேரத்தில், என் சக ஊழியர்கள் சுனில் ஆபிரகாம் (Sunil Abraham) மற்றும் ரஹிமானுதின் ஷேக் (Rahimanuddin Shaik) எனக்கு ஆர்வக்களஞ்சியமாக உள்ளனர். லினக்ஸ் பயன்படுத்துவதில் முக்கிய வேறுபாடு என்னவென்றால் உங்களுக்கு அன்னமளிக்கும் கரங்களுக்கு நீங்கள் திரும்பவும் உதவியளிக்கும் ஏதோ ஒரு உள்ளுணர்வு இருக்கிறது.
மூலக்கட்டுரை எழுத்தாளர் பற்றி: விக்கிமீடியா பங்களிப்பாளர் சுபஷிஷ் பாணிக்ராஹி (Subhashish Panigrahi) மோசில்லாவின் பங்கேற்பு அணியில் ஆசிய சமூக ஊக்கியாக பணியாற்றுகிறார். முன்னதாக விக்கிமீடியா நிறுவனத்தின் இந்தியா திட்டத்தில், அவர் ஒரு பயிற்றுநராக இருந்தார்.
மூலம்: opensource.com தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்
பின்குறிப்பு: உங்களுக்கு ஏதாவது கேள்விகள் எழுகின்றனவா அல்லது விளக்கம் தேவையா? கீழே உள்ள கருத்துப்பெட்டியில் கேட்கலாம் அல்லது உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.