திறந்த மூலம் அசத்தலாக இருக்கிறது. அதை பயன்படுத்தவும், வெளியிடவும், இணைந்து வேலை செய்யவும், ஆதரவு தரவும் பல காரணங்கள் உள்ளன.
இங்கே ஒரு சில:
1. நிறுவன அளவிலான பொருளாதார நோக்கங்கள்
நீங்கள் ஒரு தனிப்பட்ட நிறுவனமோ, சிறு வணிகமோ, இலாப நோக்கமற்ற அமைப்போ, அல்லது ஒரு அரசு நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் திறந்த மூலம் உங்களுடைய நலனுக்கு மிக முக்கியம் என்று ஆகிவிட்டது.
- நிரலாளர்களை குறைமதிப்பு வேலையிலிருந்து உயர்மதிப்பு வேலைக்கு மாற்றுங்கள்: “எளிதான பிரச்சினைகள் எல்லாம் ஏற்கனவே தீர்க்கப்பட்டு விட்டன” என்று திறந்த மூல சமூகத்தில் சொல்வது இயல்பு. ஏனெனில் வலைப்பதிவு, உள்ளடக்க மேலாண்மை, இயக்க முறைமைகள் போன்ற பிரச்சினைகளுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் நன்கு வேரூன்றிய திறந்த மூல தீர்வுகள் உள்ளன. இருக்கும் சக்கரங்களையே திரும்பவும் கண்டுபிடிப்பதில் உங்கள் நிரலாளர்களின் நேரத்தை வீணாக்குவானேன்? உலகின் சிறந்த சக்கரத்தை திறந்த மூல சமுதாயம் ஏற்கனவே நன்றாகச் செய்து அதுவும் இலவசமாகக் கிடைக்கும்போது? இன்னும் தீர்வு காணப்படாத சவால்களை, உங்கள் நிறுவனத்திற்கு மதிப்பு சேர்க்கும் தனிப்பட்ட சவால்களை, சமாளிக்க நிரலாளர்களை இது விடுவிக்கிறது. தொழில்நுட்ப ஜாம்பவான்களின் உருவாக்கத்தை அடிப்படையாக வைத்து அதன் மேல் நீங்கள் ஏன் கட்டக் கூடாது?
- உடைமையின் மொத்த செலவைக் (TCO) குறையுங்கள்: தனியுரிம மென்பொருளுடன் ஒப்பிடுகையில் திறந்த மூலம் பயன்படுத்துவது உடைமையின் மொத்த செலவைக் குறைக்கிறது. தனியுரிம மென்பொருளுக்கு உரிமம் பெறுவதுதான் பெரிய செலவு. இந்த செலவையும் ஆரம்ப கட்டத்திலேயே செய்ய வேண்டும். திறந்த மூல மென்பொருளை ஏற்றுக்கொண்டால் உரிமமோ இலவசம். விருப்பமைக்கவும் செயல்படுத்தவும் கொஞ்சம் செலவு ஆகும். பயிற்சி, பராமரிப்பு, மற்றும் ஆதரவு பெற இரண்டுக்கும் ஒரே மாதிரி செலவுதான்.
- அனேகம் பேர் முயன்றால் அனைத்து வழுக்களும் எளியவையே (லினஸ் விதி): தனியுரிமத்தை விட திறந்த மூலம் நல்ல தரமான மென்பொருளை உற்பத்தி செய்கிறது என்பதை அனுபவபூர்வமாக சொல்ல முடியும். மூடிய மூல மென்பொருள் எழுதும் போது வழுக்களை கண்டுபிடிப்பதும், வகைப்படுத்துவதும், அதன் மூலகாரணம் அறிவதும், தீர்வு காண்பதும் அந்நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு சில நிரலாளர்கள் மட்டுமே. அந்த வேலையையும் நேரடி ஈடுபாடு இல்லாத ஒப்பந்தக்காரர்களே பெரும்பாலும் செய்கிறார்கள். திறந்த மூலம் மூன்று வசதிகளை வழங்குகிறது: முதலாவது, ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டும்தான் என்றில்லாமல் உலகின் தலைசிறந்த நிரலாளர்களின் திறனை அணுக இயலும். இரண்டாவது, பங்களிக்கக்கூடிய நிரலாளர்களின் எண்ணிக்கையோ பல மடங்கு. இறுதியாக, வெளியீட்டாளர் முதலில் கருதிய ஒரு பயன்முறை மட்டுமல்லாமல் பல்வேறு பயன்முறைகளுக்கும் தக மாற்றம் செய்யப்படுகிறது. எனவே வழுக்களும் வழக்கத்திற்கு மாறான பயன்முறைகளும் விரைவில் தெரியவருகின்றன.
- நவீன மென்பொருள் உருவாக்க நடைமுறைகள்: திறந்த மூலம் என்றால் வெறும் மூல நிரலை வெளியிடுவது மட்டுமல்ல. பல பெரிய அதிகாரத்துவ அமைப்புக்களில் காலாவதியான அறுவி செயல்முறை மற்றும் நெகிழ்வற்ற கட்டளை மற்றும் கட்டுப்பாடு வளர்ச்சி தத்துவங்கள் இன்னும் பரவலாக பின்பற்றப்படுகின்றன. ஆனால் இவற்றை ஒரு திறந்த மூல திட்டத்தில் காண்பது கடினம். மேலும் திறந்த மூல திட்டங்களில் கொள்கைத்தளைகளோ அறைகுறை வேலைகளோ கிடையாது. இத்துடன் பல இடங்களிலுள்ள நிரலாளர்கள் பகிர்ந்து வேலை செய்ய வேண்டியிருப்பதால் நவீன மென்பொருள் வளர்ச்சி வேலையோட்டங்களைப் பின்பற்றுவது அவசியமாகிறது. இந்த வேலையோட்டங்கள் இணையத்தில் நடப்பவை (செயல்பாடு இயல்பாகவே கைப்பற்றப்படுகிறது மற்றும் வெளிப்படுத்தப்படுகிறது), ஒத்தியங்காதவை (முடிவுகளை எந்நேரமும் எவ்விடத்திலும் எடுக்க முடியும்), மற்றும் பூட்டுகளற்றவை (பங்களிப்பாளர்கள் விரைவாக, முன் ஒப்புதல் இல்லாமல், முயற்சிக்க முடியும்). இந்த மூன்று வேலையோட்ட பண்புகள் இன்னும் விரைவான வளர்ச்சிக்கும் மற்றும் தரத்தை குறைக்காமல் அடிக்கடி வெளியீடு செய்யவும் உதவுகின்றன.
- திறந்த மூலம்தான் எதிர்காலம்: இன்றைய சூழ்நிலையில் ஓரளவாவது திறந்த மூலத்தை வைத்து நடக்காத துணிகர மூலதனம் சார்ந்த தொடக்கநிலை நிறுவனம் கிடையாது. “இன்று உள்ளது நாளை மறையலாம்” என்கிற மோகம் அல்ல இது. பாரம்பரிய நிறுவனங்களும் வரவர இவ்வழியே செல்லத் துவங்கிவிட்டன. இன்னும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில், தொழில்நுட்ப சூழலில் ஒத்துழைப்பு குறைவாகவும், மூடிய மூலம் அதிகமாகவும் இருக்கும் என்று வாதிடுவது மேலும் கடினமாகி வருகிறது. அவ்வளவு ஏன், திறந்த மூலத்தை தீவிரமாக எதிர்த்து வந்த மைக்ரோசாப்ட் கூட தன் முதன்மை வளர்ச்சி கட்டமைப்பை திறந்த மூலம் ஆக்கியுள்ளது. ஆப்பிள் தன்னுடைய ஸ்விஃப்ட் (Swift) நிரல் மொழியை சமீபத்தில் திறந்த மூலம் ஆக்கியது. இன்று ஐபிஎம் (IBM), எஸ்ஏபி (SAP) மற்றும் அடோபி (Adobe) முதலான, தொழில்நுட்பத்தில் பெரிய பெயர்கள் அனைத்தும் தீவிரமாக திறந்த மூல சமுதாயத்தில் பங்கேற்கின்றன. “திறந்த மூலம்தான் எதிர்காலம்” என்று சொல்வது சற்றே தவறானதுதான். ஏனெனில் திறந்த மூலம் ஏற்கனவே வென்றுவிட்டது.
- நீங்கள் நினைத்த நேரத்தில் நிரல் ஒட்டை நிறுவலாம்: மென்பொருள் மனிதர்களால் எழுதப்படும்வரை வழுக்களும் பாதுகாப்பு குறைபாடுகளும் தவிர்க்க இயலாதவை. ஒரு தனியுரிம மென்பொருள் திட்டத்தில் ஒரு பலவீனத்தைக் கண்டுபிடித்தால், நீங்கள் அந்த நிறுவனத்தின் நேரமண்டலத்தில் வேலை தொடங்கும்வரை காத்திருக்க வேண்டும். அதன் பின்னரும் அவர்கள் கூடிப்பேசி, வேலையை பிரித்துக்கொடுத்து, நிரல் எழுத வேண்டும். அது மட்டுமல்லாமல் அந்நிறுவனத்தின் சட்ட, விற்பனை, மற்றும் மாறுகூற்று போன்ற மேலாண்மை குழுக்களும் ஒத்துழைத்து அந்த திருத்தத்தை எவ்வாறு அடுத்த முன்திட்டமிடப்பட்ட வெளியீட்டில் சேர்ப்பது என்று முடிவு செய்ய வேண்டும். தனியுரிம மென்பொருளில் வரும் வழுக்களும், பலவீனங்களும் அந்நிறுவனத்தின் ஆதாயத்தையும் இழப்பையும் நேரடியாக பாதிக்கின்றன. ஆகவே அவற்றின் விபரங்களை பரவலாக வெளியிடுவதில் அவர்களுக்கு ஊக்கம் இல்லை. திறந்த மூல திட்டங்களில் இலாப நோக்கம் இல்லாததால் சிறிய, தகவெளிமையான குழுக்கள் விரைவாக வேலை செய்ய முடியும். மேலும் அவர்களுக்காக காத்திராமல், பெரியதோ, சிறியதோ நிரல் ஒட்டை நீங்களே தயார் செய்து உங்கள் சௌகரியம்போல் உடன் நிறுவிக்கொள்ளவும் இயலும்.
- நீரோட்டத்தின் மேல்புற மேம்பாடுகள்: நீங்கள் திறந்த மூல மென்பொருளை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு திருப்பி பங்களிப்பது உங்கள் நன்மைக்காகத்தான். பங்களிப்பை வழு அறிக்கைகளாகவோ, அல்லது திருத்தங்களாகவோ சமர்ப்பிக்கலாம். மென்பொருள் மனிதர்களால் எழுதப்படுவதால் அதில் வழு இல்லாமல் இருப்பது சாத்தியமே இல்லை. அப்படியே இருந்தாலும் ஒவ்வொரு பயன்முறையையும் திருப்தி செய்யவும் இயலாது. திட்டத்தை கவைத்து (forking) உங்கள் சொந்த பதிப்பில் மாற்றங்களை செயல்படுத்தினால் அது மூடிய மூலம் ஆகிவிடுகிறது. மாறாக வழு அறிக்கைகளையும் மேம்பாடுகளையும் நீங்கள் அத்திட்ட நீரோட்டத்தின் மேல்புறத்தில் சமர்ப்பித்தால் அது திறந்த மூலம். மற்றவர்கள் சமர்ப்பிக்கும் வழு திருத்தங்களும் மேம்பாடுகளும் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்க வழி வகுக்கிறது.
கிட்ஹப் நிறுவனரில் ஒருவரான டாம் பிரஸ்டன்-வெர்னர் (Tom Preston-Werner) “(கிட்டத்தட்ட) எல்லாவற்றையும் திறந்த மூலமாக்குங்கள்“ என்ற தனது வலைப்பதிவில் சில கூடுதல் வாதங்களை முன்வைக்கிறார்:
- சக்தியை பல மடங்காகப் பெருக்க வல்லது: திறந்த மூலம் உங்கள் நிரலாளர்களின் சக்தியை பல மடங்காகப் பெருக்க வல்லது. இது மூன்று வழிகளில் நடக்கிறது: முதலாவது, கருத்துகள் சந்தையில் உங்கள் அமைப்பு மட்டுமே இருப்பதைவிட, பகிர்ந்த சவால்களைச் சுற்றி சமூகங்கள் அமையும்போது இயற்கையாகவே எழும் பன்முகத்தன்மையான யோசனைகள் சிறந்த தீர்வுகளுக்கு வழி வகுக்கின்றன. இதனால் நிரலாளர்கள் திறம்பட வேலை செய்ய இயலும். இரண்டாவது, பிரச்சினை வெளியை ஆர்வமுள்ள பிற நிறுவனங்களுடனும் பகிர்வதால் உங்கள் பிரச்சினையை சமாளிக்க கூடுதல் மனித மூலதனம் கிடைக்க வாய்ப்புள்ளது. இறுதியாக, “கூடுதல் பயனர்கள் சேர்ந்தால் கூடுதல் பயன்முறைகள் ஆராயப்படுகின்றன. ஆகவே இன்னும் திடமான நிரல் அமையும்.”
- தொகுதியாக (modular) கட்டமைப்பு: திறந்த மூல திட்டங்கள் தொகுதியாக கட்டமைக்க முனைகின்றன. இதனால் நிரலில் நெகிழ்வு, உறுதித்தன்மை இரண்டுமே மேம்படுகிறது. ஒற்றை பயன்முறைக்கு மென்பொருள் உருவாக்கும்போது, நீங்கள் சில தொழில்நுட்ப குறுக்கு வழியை எடுக்கக்கூடும். ஆனால் நீங்கள் வேறு ஒரு பயன்முறைக்கு அந்த மென்பொருளை பயன்படுத்த விரும்பினாலோ, அல்லது உங்கள் தேவைகள் மாறினாலோ பிரச்சினை வருகிறது. திறந்த மூலம் இயல்பாகவே பல்வேறு பயனர்கள், சூழல்கள், மற்றும் பல்வேறு பயன்முறைகளுக்கு கட்டப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பயன்முறைக்கு மட்டுமே குறுக்கு வழியில் நிரல் எழுதாமல் மறுபயனுறும் தொகுதிகளாக எழுத முனைகின்றனர். இதில் நெகிழ்வு அதிகம், விருப்பத்தேர்வுகளும் அதிகம். காலம் செல்லச்செல்ல விருப்பமைவு செய்யும் செலவும் குறைவு. வேறு விதமாக சொல்லப்போனால் திறந்த மூலம் சுத்தமான, பராமரிக்கத்தக்க நிரலை அவசியமாக்குகிறது”. “நிறுவனத்துக்குள் எழுதும் நிரலைக்கூட திறந்த மூல நிரல் எழுதுவதாக நினைத்து எழுத வேண்டும்”.
- இரட்டை வேலையைக் குறைக்க: நீங்கள் உங்கள் அடிப்படைத் திறனில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் தனிப்பட்ட சிறப்பு என்ன? மற்றவர்களுக்கில்லாத வசதி உங்களுக்கு என்ன இருக்கிறது? எல்லோரும் செய்த வேலையை நீங்களும் திரும்பச் செய்வதில் பயனில்லை. தனிப்பட்ட கூறுகளைப் பகிர்ந்து கொள்ள அனுமதிப்பதால் திறந்த மூலம் இரட்டை வேலையைக் குறைக்கிறது – நிறுவனத்துக்குள்ளும், நிறுவனங்களுக்கிடையிலும். கொகா கோலாவின் தனிச்சிறப்பு அதன் பானக சூத்திரத்தில்தான், வலைப்பதிவுகளிலோ செய்தி வெளியீட்டிலோ அல்ல. திறந்த மூல உள்ளடக்க மேலாண்மைக் கட்டகம் (CMS) பயன்படுத்துவதாலோ, நிறுவனத்தில் எழுதிய வலைப்பதிவு கூறுகளின் நிரலை உலகெங்கும் பகிர்வதாலோ பெப்சியின் ருசி மாறப்போவதில்லை.
- தலை சிறந்த விளம்பரம்: வெற்றிகரமான திறந்த மூல திட்டங்களைப் பராமரிப்பவர்கள் இத்தொழில்துறையின் தலைவர்களாகக் கருதப்படுகிறார்கள். இதனால் ஒரு குறிப்பிட்ட மென்பொருள் பிரச்சினை பற்றிய உரையாடலை வடிவமைக்கும் ஆற்றல் இவர்களுக்கு கிடைக்கிறது. அவர்களின் நிறுவனத்தின் பெயரும் அத்தீர்வுடன் தொடர்பு செய்யப்படுவதால் பிரபலமாகிறது. ரூபி ஆன் ரெயில்ஸ் (Ruby on Rails) உருவாக்கியதில் 37 ஸிக்னல்ஸ் (37Signals) பிரபலமானது. ஹபாட் (Hubot) உருவாக்கியதில் கிட்ஹப் (GitHub) அறியப்படுகிறது. (“இரு நாட்களுக்குள் கிட்ஹப்-ல் 500 பார்வையாளர்களும் ஹேக்கர் செய்தியில் 409 ஆதரவு வாக்குகளும் கிடைத்தன. இது கிட்ஹப் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தி முன் எப்போதும் விட அதிகமான தீவிர ரசிகர்கள் சேர வாய்ப்பளித்தது”).
- திறமையாளர்களை ஈர்க்க: இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகளில் வேலை செய்யவே உருவாக்குநர்கள் விரும்புகிறார்கள். நீங்கள் எதிர்கொள்ளும் சுவாரசியமான சவால்களையும் மற்றும் அவற்றை தீர்வு செய்வது பற்றி நீங்கள் எப்படி சிந்தனை செய்கிறீர்கள் என்பதையும் நிரலாளர் சமூகத்துக்கு வெளிப்படுத்த திறந்த மூலம் உதவுகிறது. திறந்த மூல திட்டத்துக்கு நிரலாளர்கள் எளிதில் பங்களிக்க இயலும். கூடவே உங்கள் நிறுவனம் எவ்வாறு வேலை செய்கிறது என்றும், இந்த மாதிரி சவால்களில் வேலை செய்வது பற்றியும் தெரிந்து கொள்ளவும் இயலும். அவர்களுக்கு அது பிடித்திருந்தால் உங்கள் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அதிகம். வெளியிலிருந்து பார்த்தால் எதுவுமே தெரியாத கறுப்புப் பெட்டியாக உங்கள் நிறுவனம் இருந்தால், அங்கு வேலை செய்வது பற்றி அவர்களால் எப்படி அனுமானம் செய்ய இயலும்? “துடிப்பான நிரலாளர்கள் திறமையான நிரலுடன்தான் இருக்க விரும்புவார்கள்.”
- சிறந்த தொழில்நுட்ப பேட்டி: ஒரு உருவகப்படுத்திய பிரச்சினையை, கொடுத்த குறுகிய நேரத்தில் எவ்வாறு சமாளிக்கிறீர்கள் என்று பார்ப்பதுதான், பாரம்பரியமாக தொழில்நுட்ப நேர்முக தேர்வுமுறையாக இருந்து வருகிறது. வரையறைப்படியே இவை உண்மையாக உலகில் நடக்கும் பயன்முறைகளல்ல. மேலும் பிரச்சினைகளுக்கு தேர்வர் எவ்வாறு தீர்வு காண்கிறார் என்றும் குழுவில் எப்படி வேலை செய்வார் என்றும் பார்க்க இயலாது. கடந்த ஆறு மாதங்களாக தேர்வர் உங்கள் திறந்த மூல திட்டத்தில் பங்களித்து அது உங்களுக்கு பிடித்திருக்கிறது என்றால் மிகவும் நம்பிக்கையுடன் அவரை வேலையில் சேர்க்க முடியும். “ஆக, இருப்பதில் தலைசிறந்த தொழில்நுட்ப பேட்டி எதுவென்றால் வைக்காத பேட்டிதான்! ஏனெனில் அவர் ஏற்கனவே உங்கள் திறந்த மூல திட்டத்தில் அலட்டலாக நிரல் எழுதி வருவதால்.”
2. மாநில, நாட்டு அளவிலான பொருளாதார நோக்கங்கள்
ஒரேமாதிரியான அல்லது தொடர்புடைய முயற்சிகளை இணைப்பதாலும் வலுவாக்குவதாலும் ஒரு சமூகத்தின் மென்பொருள் உருவாக்கும் திறமையை திறந்த மூலம் உயர்த்துகிறது.
- பயன்திறன்: மேற்கூறிய நுண்பொருளியல் வாதங்கள் பலவும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பேரினப் பொருளியல் தாக்கத்தை ஏற்படுத்தும். நிறுவனங்கள் இன்னும் திறமையாக வேலை செய்யும்போது மென்பொருளை இன்னும் சிறந்ததாகவும், அதிகமாகவும் ஒரு பொருளாதாரம் தயாரிக்க முடியும். அனைத்து எளிதான பிரச்சினைகளும் ஏற்கனவே தீர்க்கப்பட்டு விட்டன என்று நீங்கள் நம்பினால், பொருளாதார அளவில் நிறுவனங்களை குறைமதிப்பு வேலையிலிருந்து உயர்மதிப்பு வேலைக்கு மாற்ற திறந்த மூலம் உதவுகிறது. ஒவ்வொரு தொழில்நுட்ப நிறுவனமும் அதே 5-10 பிரச்சினைகளை தீர்க்கும் ஆராய்ச்சியும் உருவாக்கமும் (R&D) செய்ய ஒரு சில ஆண்டுகள் செலவிட வேண்டும் என்றால் அது தேவையற்றதுதானே.
- தொழில்நுட்ப ஜாம்பவான்களின் உருவாக்கத்தை எடுத்து அதன் மேலே கட்டுங்கள்: இக்காலத்தில் புதுமையான, வாழ்க்கை தரத்தை மேம்படுத்தக்கூடிய தொழில்நுட்ப வகை, தொழில்நுட்பம் ஒரு வெற்றிடத்தில் உருவாக்கப்படுவது இல்லை. மூடிய மூல தொழில்நுட்பம் கூட, உங்கள் சட்டைப்பையிலுள்ள செல்பேசி முதல் நீங்கள் ஓட்டும் மகிழுந்து வரை மற்றும் அவற்றை உருவாக்கிய மிகப்பெரு நிறுவனங்கள் கூட, திறந்த மூலத்தை சார்ந்தே உள்ளன (என்னை நம்பவில்லை என்றால் உங்கள் செல்பேசியின் “அமைப்புகள் -> பற்றி” பக்கம் பாருங்கள்). தனியார்துறை பதிப்புரிமை வில்லங்கமில்லாத இயற்கணிதமும் கோணவியலும் தான் நுண்கணிதம் முதல் குவைய இயற்பியல் (quantum physics) வரை எல்லாவற்றுக்கும் வழி வகுத்தது. இது போலவே திறந்த மூலமும், ஏற்கனவே தீர்க்கப்பட்ட பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து, புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்க வழி வகுக்கிறது. தங்கள் சொந்த கள அறிவுக்கு அப்பால் மற்ற நிபுணர்களின் திறனையும் வைத்து நிரலாளர்கள் இம்மாதிரி புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்குவதும் சாத்தியமாகிறது.
- கருத்துகள் சந்தைக்கு சக்தியூட்டுங்கள்: மென்பொருள் என்பது தொழில்நுட்ப அறிவுதானே தவிர வேறொன்றுமில்லை. ஒரு காலத்தில் ரசவாதிகள் தனியுரிமம் என்று கூறி தங்கள் கண்டுபிடிப்புகளை கமுக்கமாக வைத்திருப்பார்கள். எடுத்துக்காட்டாக, காரீயம் உட்கொண்டால் மனித உடலில் ஏற்படும் கடுமையான விளைவுகளைப்பற்றி ஒவ்வொருவரும் கடினமான வழியில் தனித்தனியாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அந்த ரசவாதிகள் தங்கள் வேலையை பகிரத் தொடங்கிய போதுதான், நாம் அவர்களை அறிவியலாளர்கள் என்று கூறினோம், அறிவியல் புரட்சி பிறந்தது. கணிதம், இலக்கியம், மற்றும் கணினி மென்பொருளிலும் இதே கதைதான். இரண்டு நிரலாளர்கள் தனித்தனியாக வேலை செய்து ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு இரண்டு தீர்வுகளைக் கொண்டு வரலாம். ஆனால் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு மூலம், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த அறிவு மற்றும் அனுபவத்தைக் கொண்டு வருகையில், அவர்களே மூன்று, ஐந்து, அல்லது பத்து தீர்வுகளைக் கண்டறியக் கூடும். இது சமூகத்துக்கு மிக நல்லதுதானே?
3. அறமுறையான நோக்கங்கள்
கட்டற்ற திறந்த மூல மென்பொருள் (Free/Libre Open Source Software – FLOSS or FOSS) என்பதுதான் திறந்த மூலத்துக்கு முறையான பெயர். ஆகவே, திறந்த மூலத்துக்கு வலுவான அறமுறையான நோக்கங்கள் உண்டு.
- ஃப்ரீ (free) என்றால் கட்டற்ற என்று பொருள், இலவசம் என்று அல்ல: மென்பொருளுக்கு செலவு இல்லாமல் இல்லை. நாம் திறந்த மூல மென்பொருளை ஃப்ரீ (free) என்று சொல்லும்போது அது மென்பொருள் நுகர்வோர் பெறும் உரிமைகளைக் (பேச்சுரிமை போல) குறிக்கிறது, அவர்கள் என்ன விலை தரவேண்டும் என்று அல்ல. எடுத்துக்காட்டாக, அடோபி-யின் (Adobe) ஃப்ளாஷ் (Flash) இயக்கி, பொருளாதார நோக்கில் இலவச மென்பொருள் ஆகும். ஆனால் இதன் மென்பொருளும் தனியுரிமம் (உரிமை அல்லாத), தரவு வடிவங்களும் தனியுரிமம். குறிப்பாக ஃப்ரீ (free) மென்பொருள் என்பது நான்கு மைய உரிமைகளைக் குறிக்கிறது. மென்பொருள் இயக்க உரிமை, ஆய்வு செய்து மென்பொருளை மாற்றும் உரிமை, மென்பொருளை மறுவிநியோகம் செய்யும் உரிமை, செய்த மாற்றங்களையும் விநியோகிக்கும் உரிமை.
கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free Software Movement) வாதிடுவது போல, தனியுரிம வெளியீட்டாளர் மென்பொருளைக் கட்டுப்படுத்துவதால், அந்த மென்பொருள் பயனரைக் கட்டுப்படுத்தக்கூடும் என்ற இடர் உள்ளது. இதன்மூலம் அநியாய சக்தியின் ஒரு கருவியாக மென்பொருள் உருவாவது சாத்தியமாகிறது. இன்று பயனர்களை தனியுரிம மென்பொருள் உளவு பார்ப்பது என்பது வழக்கமில்லாதது அல்ல (எ.கா., பயனர்களுக்கு வெளிப்படையாகத் தெரியாமலும் மற்றும் அனுமதி இல்லாமலும் மென்பொருள் விற்பனையாளருக்கு தரவு அனுப்புதல்), மற்றும் அவர்களைக் கட்டுப்பாடு செய்தல் (எ.கா., எண்முறை உரிமைகள் மேலாண்மை – Digital Rights Management/DRM) அவர்களை தணிக்கை செய்தல் (எ.கா., பெருநிறுவன தீயரண்கள்) , அல்லது அவர்களின் அனுமதி இல்லாமல் சலுகை எடுத்துக்கொள்ளுதல் (எ.கா., தவிர்க்க வழி தராத விளம்பரங்கள்). பொருட்களின் இணையமும் பரவலாக வந்து கொண்டிருப்பதால் இது இன்னும் முக்கியமானதாகிறது. “தொலைபேசி மூல விற்பனையாளர்களின் இணையமாகவும்” மற்றும் “ஒட்டுக் கேட்பவர்களின் இணையமாகவும்” இந்த உலகம் மாறிவிடும் அபாயம் உள்ளது. கட்டற்ற மென்பொருள், பயனர் கைகளில் அதிகாரத்தைத் திருப்பிக் கொடுக்கும். பயனர்கள் மென்பொருளைக் கட்டுப்படுத்த இயலும்.
- நன்றிக்கடன்: திறந்த மூலம் ஒருவருக்கொருவர் உதவி செய்வதை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் திறந்த மூலத்தை பயன்படுத்தினால், அது ஒரு வழங்கியோ, மேசைப் பதிப்பு செயலியோ, அல்லது மென்பொருள் நிரல் தொகுப்போ எதுவாக இருந்தாலும், சமூகத்துக்கு திருப்பி அளிப்பது உங்கள் கடமை. எப்படிப் பார்த்தாலும், மற்றவர்கள் பங்களிப்பு இல்லாமல், எந்தப் பொருளாதார நோக்கமும் நிறைவேற வழியில்லை. நாம் திறந்த மூலம் என்று சொல்லும் இது, சுவடு தெரியாமல் அழிந்து போகும். இதுதான் நம் பொன்மொழி, அல்லது பாரம்பரிய தத்துவ அடிப்படையில் சொல்லப்போனால், நம் ஒழுக்கக்கடமை.
- அரசுகள், தாங்கள் உருவாக்கியதை, வரி செலுத்திய மக்களுக்கே திருப்பித்தர வேண்டும்: மேம்பாட்டு செலவுகள் செய்வது ஒரு அரசாங்கம் என்றால், திரும்பக் கொடுக்க மேலும் ஒரு கூடுதல் வாதமும் உள்ளது. இந்த சேவைகளை செய்ய மக்களிடமிருந்து வரிப்பணம் வாங்குகிறார்கள். அரசாங்கங்கள், மக்களுக்கு சில முக்கிய சேவைகளை செய்ய, அரசியலமைப்பினால் உருவாக்கப்பட்டவை. மக்களாகிய நாம்தான் மென்பொருள் வளர்ச்சிக்காகும் செலவை செலுத்துகிறோம் என்றால், நம் செலவில் உருவாக்கிய அந்த மென்பொருள் நியாயமாக நம் கைக்குத்தானே வந்து சேர வேண்டும்?
- அடுத்த தலைமுறையை தயார் செய்தல்: மென்பொருள் தொழிலில் இன்று மிக முக்கிய பொறியாளர்களாக இருக்கும் பலரும் திறந்த மூலத்தில்தான் வேலை செய்துதான் தங்கள் தொழில்நுட்ப அறிவைக் கூர்மைப்படுத்தினர். பார்வையிட வசதியாக மென்பொருளின் அடிப்படை நிரல் வெளியிடப்பட்டால், நுகர்வோர்கள் தங்களுக்குப் பிடித்த மென்பொருள் எப்படி வேலை செய்கிறதென்று அறிய முடியும். தொழிற்துறையின் அதிநவீன தொழில்நுட்பம் எப்படி கட்டப்பட்டுள்ளதென்று கணினி அறிவியல் கல்லூரிகளும் ஆய்வு செய்யலாம். அடுத்த தலைமுறை மென்பொருள் பொறியாளர்களை தயார் செய்வதில் இது பெரும் பங்காற்றும். திறந்த மூலம் இல்லாவிட்டால் மென்பொருள் உள்ளுக்குள் எப்படி வேலை செய்கிறதென்பதை வெறும் ஊகம்தான் செய்ய வேண்டியிருக்கும்.
4. ஒளிவுமறைவின்மை நோக்கங்கள்
செயல்முறையின் வெளிப்படைத்தன்மையை திறந்த மூலம் கூடுதலாக்குகிறது, அது ஒரு அரசாங்க நடவடிக்கையாக இருந்தாலும் சரி அல்லது பகுதியளவில் அரசாங்க நடவடிக்கையாக செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தின் மென்பொருளாக இருந்தாலும் சரி.
- வேலையை வெளிப்படையாக்குதல்: தொழிற்சாலைகளையும் மற்ற நிறுவனங்களையும் கட்டுப்படுத்தவும், குடிமக்களுக்கு சேவைகளை வழங்கவும் வரவர அரசாங்கம் அதிகளவில் தொழில்நுட்பத்தையே நம்பியுள்ளது. அதன் அடிப்படை வினைச்சரங்களையும் மற்றும் செயல்முறைகளையும் சோதனை செய்வது அவசியமாகிறது. என்னுடைய வருமான வரிகளை கணக்கிடவோ அல்லது ஒளிபரப்பு அலைவரிசைகளை ஒதுக்கவோ ஒரு மூடிய மூல மென்பொருள் தொகுப்பு பயன்படுத்தப்பட்டால், எனக்கு எப்படி அதன் செயல்முறை (நம் செயல்முறை) நியாயமானதாகவும் சரியானதாகவும் இருக்கிறது என்று தெரியும்? மனித செயல்முறைகளை பதிப்புரிமை செய்ய முடியாது. ஆனால் அதேசமயம் அது மூடிய மூலமாக இருந்தால் அந்த செயல்முறைகள், உள்ளே என்ன நடக்கிறதென்று தெரியாத, ஒரு கறுப்புப் பெட்டியாக ஆகிவிடும். இதை குடிமக்கள் எதிரீடு செய்யும் சாத்தியமும் குறைந்துவிடும்.
- மக்கள் நம்பிக்கைக்கான நிலைப்பாடுகள்: தனியார் பெருநிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மென்பொருட்கள் மக்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான நிலைகளில் மேலும் மேலும் வைக்கப்படுகின்றன. ஆகவே இந்த வெளிப்படைத்தன்மை கடமையை தனியார் துறைக்கும் நீட்டிக்க வேண்டியுள்ளது. வாக்கு இயந்திரம் சரியாக என் வாக்கை எண்ணியதா? எதைச்செய்தாலும் பிரச்சினைதான் என்ற இக்கட்டான கட்டத்தில் தானியங்கி மகிழுந்து சமூக நெறிமுறைப்படி முடிவெடுத்ததா? எடுத்துக்காட்டாக, குற்றம் நடந்த இடத்தில் எடுத்த டிஎன்ஏ (DNA)-வை ஒப்பிட்ட ஒரு மருத்துவ நிபுணரை குறுக்கு விசாரணை செய்ய முடியும். ஆனால் ஒரு மூடிய மூல மென்பொருள் தொகுப்பு பயன்படுத்தப்பட்டால் பதிப்புரிமை (அல்லது காப்புரிமை) சட்டத்தினால், நுண்ணாய்வு செய்ய இயலாமல் அதன் வினைச்சரம் பாதுகாக்கப்பட்டுவிடும். பகுதியளவு அரசாங்க செயல்பாடுகளை தனியார் நிறுவனங்கள் தானியக்கம் செய்யும்போது, குறிப்பிட்ட பாகங்களாவது திறந்த மூலமாக்குவது அத்தியாவசியமாகிவிடும்.
5. பங்கேற்பு நோக்கங்கள்
தொழில்நுட்பம் தெரிந்த மற்றும் அல்லாத மென்பொருள் பங்குதாரர்களுக்கு எந்த மென்பொருள் வளர்ச்சி திட்டத்தையும் வடிவமைக்கும் வாய்ப்பை திறந்த மூலம் அளிக்கிறது.
- நேரடி மக்களாட்சி: மக்கள் தொகை இருக்கும் அளவில், ஒவ்வொரு பிரச்சினையிலும் ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்கும், உண்மையான நேரடி மக்களாட்சி சாத்தியமில்லை. அதேபோல் தொழில்நுட்ப வரம்பெல்லைகளால், பெரும்பாலான பிரச்சினைகளில் குடிமக்கள் நேரடியாக பங்கேற்க முடிவதில்லை. சட்டமுறைகள் மற்றும் சேவை வழங்கல் விருப்பத்தேர்வுகளையும் விதிமுறைகளையும் தொகுத்தளிக்க மென்பொருளையே மேலும் மேலும் நம்பியிருக்கிறோம். எந்த மென்பொருள் வளர்ச்சித் திட்டத்திலும் பங்குதாரர்கள் நேரடியாக பங்கேற்க திறந்த மூலம் வழி செய்கிறது. மருத்துவக் காப்பீடு வாங்கும் செயல்முறை குழப்பமாக இருக்கிறதா? ஒரு பிரச்சினை சீட்டு எழுதுங்கள். அரசாங்கம் மேலும் திறந்த மூலம் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஒரு இழு கோரிக்கையை சமர்ப்பியுங்கள். வெள்ளை மாளிகை ஏற்கனவே எண்முறை சேவைகள் விதிமுறை கையேடு (Digital Services Playbook), ஹெச்டிடிபிஎஸ் (HTTPS), மற்றும் திறந்த தரவு கொள்கைகள் போன்ற பல தகவல் மையப்படுத்திய கொள்கைகளுக்கு இதைச் செய்கிறது.
- வாடிக்கையாளர் பின்னூட்டம்: தனியார் துறை வளர்ச்சி செயல்முறையில் ஒரு ஒருங்கிணைந்த, சக்திவாய்ந்த குரல் இருக்குமாறு திறந்த மூலம் நுகர்வோரை பலப்படுத்துகிறது. இதை மென்பொருளுக்கு யெல்ப் (Yelp) போல நினைக்கலாம். யெல்ப் இல்லாவிட்டால் ஒரு உணவகம் ஒற்றை வாடிக்கையாளரை அலட்சியம் செய்யலாம். ஒரு அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர் அதிகபட்சம் 5-10 மற்ற சாத்தியமான புரவலர்களை மனம் மாறச் செய்ய முடியும். யெல்ப் வந்தபின் முன்பின் தெரியாதவர்களின் விமர்சனங்களைப் படித்த பின்னரே எங்கே சாப்பிடுவதென்று வாடிக்கையாளர்கள் முடிவு செய்கிறார்கள். நுகர்வோருக்கும் வெளியீட்டாளருக்கும் உள்ள உறவில் நுகர்வோர் குரல் அதிகரிக்க திறந்த மூலம் உதவுகிறது. கிடைத்த பின்னூட்டத்தை வைத்து தனியார் நிறுவனமும் ஒட்டுமொத்த தயாரிப்பை மேம்படுத்த முடியும். நிறுவனங்கள் தங்கள் முற்றார்வ வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள திறந்த மூலம் ஒரு நேரடி வழி அமைக்கிறது.
6. தனிப்பட்ட நோக்கங்கள்
நீங்கள் ஒரு நிரலாளர் (அல்லது ஒரு நிரலாளர் ஆர்வலர்) என்றால், மென்பொருள் சமூகத்தில் உங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஒரு எளிதான மற்றும் இலவசமான பாதையை திறந்த மூலம் அமைத்துத் தர முடியும்.
- நிரல் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்: நிரல் எழுதக் கற்றுக் கொள்ள ஒரு சிறந்த வழி திறந்த மூலம். உங்களுக்குப் பிடித்த இணையதளம் எவ்வாறு வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இணைய உலாவியில் “நிரலைக்காட்டு (view source)” என்பதை சொடுக்கினால் நீங்கள் சரியான திசையில் முதல் அடியெடுத்து வைத்துவிட்டீர்கள். நீங்கள் அந்த மென்பொருளின் ஆவணத்தைப் படித்து அதன் நகலை நிறுவுவதும் சாத்தியமே. மேலும் அறிய வேண்டுமா? அந்த கட்டமைப்பு அல்லது நிரல் மொழியின் உள்ளூர் பயனர் குழுவில் சேருங்கள். ஒரு சிறிய வழுவை சரி செய்து அல்லது ஒரு புதிய அம்சத்தை சேர்த்து திட்டத்துக்கு ஒரு இழு கோரிக்கையை சமர்ப்பிப்பது இன்னும் சிறந்தது. இதற்கு நிச்சயமாக உங்கள் நேரத்தை செலவிட வேண்டும். ஆனால் மென்பொருளுக்கோ மற்ற எந்த நேரடி செலவோ இல்லாமல் திறந்த மூலத்தில் இதை செய்ய முடியும். ஒரு தனியுரிம சமூகத்தில், குறிப்பாக வெளியாளாக, இதைச் செய்ய முடியாது. பாரம்பரிய கல்வி நிலையங்கள் தவிர அனேகமாக மற்ற எல்லா கல்வி நிலையங்களும் இன்று திறந்த மூலம் கற்றுக்கொடுப்பதற்கு இதுதான் காரணமாக இருக்கிறது.
- இது கேளிக்கையானது: விக்கிப்பீடியாவின்படி, திறந்த மூலம் ஒரு பொழுதுபோக்கு. உண்மையில், திறந்த மூலம் பாரம்பரியமாக பொழுதுபோக்காளர்கள் தயாரித்தது என்றே புகழ் பெற்றது. ஆனால் இன்று அவ்வாறில்லை என்றே நான் விவாதிப்பேன். திறந்த மூலம் கேளிக்கையானது. நீங்கள் ஒரு கொந்தர் (hacker) என்றால் இது ரூபிக் கனசதுரம் (Rubik’s cube) போன்ற மாறிக்கொண்டேயிருக்கும் புதிர்களை வழங்குகிறது. புதிர்கள் (குறுக்கெழுத்து மற்றும் திகைப்பளி புதிர்) எவ்வாறு சிறுஅளவில் அறிவார்ந்த தப்பியோடலுக்கு வழி செய்கின்றனவோ அவ்வாறே திறந்த மூலத்தின் ஒழுங்கும் சமச்சீரும் கன்மலை தோட்டம் போன்றது (குறிப்பாக கால்பந்து போன்ற வெளி விளாயாட்டுகளில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு).
ஆக, திறந்த மூலத்தை பயன்படுத்தவும், வெளியிடவும், இணைந்து வேலை செய்யவும், ஆதரவு தரவும் பல காரணங்கள் உள்ளன. உங்கள் காரணம் இதில் எதுவாக இருந்தாலும் திறந்த மூலம் அடுத்த பெரிய சங்கதி அல்ல. திறந்த மூலம் ஏற்கனவே இங்கு பெரிய சங்கதியாகி விட்டது.
மூலக்கட்டுரை எழுத்தாளர் பற்றி: பென் பால்டர் (Ben Balter) – அரசாங்கம் மற்றும் தொழில்நுட்பத்தில் முதல் 25 மிகவும் செல்வாக்குள்ள நபர்களில் ஒருவர் என்று பெயரிடப்பட்டவர். மற்றும் அமெரிக்க தலைமை தொழில்நுட்ப அதிகாரியால் (US Chief Technology Officer) மிகச் சிறந்த புதுமைப் புனைவாளர் என்று விவரிக்கப்பட்டவர். வெள்ளை மாளிகை எண்முறை வியூக இயக்குநரால் (White House Director of Digital Strategy) “புட்டியில் அடைத்த மின்னல்” என்று புகழப்பட்டவர். உலகின் மிகப் பெரிய மென்பொருள் மேம்பாடு பிணையமான கிட்ஹப்-ல் (GitHub) அரசுத் திறை ஆர்வப் பரப்புநராக உள்ளார். அங்கு அவர் அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் திறந்த மூல தத்துவங்களை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு முன்னிலையில் இருக்கிறார்.
மூலம்: opensource.com தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்