நம்பத்தகுந்த இணைப்புகள் இல்லாத இடங்களில் MQTT யின் தகவல் வெளியிடு (Publish) – சந்தா சேர் (Subscribe) என்ற கருத்தியலைப் (paradigm) பயன்படுத்துவது உசிதம் என்று முன்னர் பார்த்தோம். ஸிக்பீ மற்றும் ஸிவேவ் சாதனங்கள் சந்தையில் பரவலாகக் கிடைப்பதால் இவற்றை MQTT யுடன் பயன்படுத்த முடிந்தால் நல்லது. ஆகவே நாம் ஸிக்பீ மற்றும் ஸிவேவ் நுகர்வி வெளியிடும் தகவல்களை MQTT யாக மாற்றி MQTT வழங்கிக்கு அனுப்ப என்ன வழி என்று பார்க்கலாம்.
ஸிக்பீ சாதனங்கள் வெளியிடும் தகவல்களை MQTT யாக மாற்றி வழங்கிக்கு அனுப்ப ஸிக்பீ MQTT பாலம் (Zigbee2MQTT) உதவுகிறது. மறுபக்கத்தில் வழங்கியிலிருந்து வரும் MQTT தகவல்களை மாற்றி ஸிக்பீ சாதனங்களுக்கும் அனுப்பும். இதேபோல ஸிவேவ் சாதனங்கள் வெளியிடும் தகவல்களை MQTT யாக மாற்றி வழங்கிக்கு அனுப்ப ஸிவேவ் MQTT பாலம் (ZWave2MQTT) உதவுகிறது. இவற்றைப் பற்றி விவரமாகக் கீழே பார்ப்போம்.
ஸிக்பீ MQTT பாலம்
சில தயாரிப்பாளர்களின் ஸிக்பீ சாதனங்கள் மற்ற தயாரிப்பாளர்களின் ஸிக்பீ சாதனங்களுடன் ஒருங்கிணைந்து வேலை செய்வதில்லை என்று முன்னர் பார்த்தோம். அந்தப் பிரச்சினைக்கும் இந்தத் திறந்த மூலப் பாலத்தைப் பயன்படுத்துவது ஒரு தீர்வாக இருக்கும். இது ஸிக்பீ யை MQTT யாகவும் அதேபோல MQTT யை ஸிக்பீ யாகவும் மொழிபெயர்ப்பு செய்யும்.
மேலும் நீங்கள் ஸிக்பீ சாதனத் தயாரிப்பாளர்களின் தனியுரிமை (proprietary) மென்பொருள் கொண்ட பாலம் (bridge) சாதனங்களையும் அதிக விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை.
ஸிக்பீ MQTT பாலம் உதவியாளர் (Zigbee2Mqtt Assistant) என்ற வரைபட இடைமுகம் இங்கு திறந்த மூலமாகக் கிடைக்கிறது. இது உங்கள் பிணையத்தை (network) வரைபடமாகக் காட்டும். அதிலுள்ள சாதனங்களின் நிலையையும் காட்டும்.
ஸிவேவ் MQTT பாலம்
இந்தத் திறந்த மூலப் பாலம் ஸிவேவ் வை MQTT யாகவும் அதேபோல MQTT யை ஸிவேவ் வாகவும் மொழிபெயர்ப்பு செய்யும். மேலும் நீங்கள் ஸிவேவ் சாதனத் தயாரிப்பாளர்களின் தனியுரிமை (proprietary) மென்பொருள் கொண்ட பாலம் (bridge) சாதனங்களையும் அதிக விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை. மேலும் இத்துடன் ஒரு கட்டுப்பாட்டகம் (control panel) சேர்ந்தே வருகிறது. இதைப் பயன்படுத்தி உணரிகள் மற்றும் இயக்கிகளுக்குப் பெயர் வைத்தல், இடம் குறித்தல் போன்ற பல வேலைகளைச் செய்ய முடியும்.
மேலும் நீங்கள் ஸிக்பீ மற்றும் ஸிவேவ் சாதனங்களை நேரடியாக மையக் கட்டுப்படுத்தியுடன் (controller) இணைப்பதிலுள்ள சில பிரச்சினைகளையும் இம்மாதிரி பாலங்கள் மூலம் இணைப்பது தீர்வு செய்கிறது. IoT கட்டுப்படுத்தியை மறு இயக்கம் (reboot) செய்யும்போது முழுப் பிணையத்திலுள்ள எல்லா சாதனங்களையும் மறு இயக்கம் செய்யத் தேவையில்லை.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: IoT யை இணையத்துடன் இணைப்பது உசிதமல்ல
நச்சுநிரல்கள் வராமலிருக்கத் தடுப்பு நடவடிக்கைகள். பாதுகாப்புக்குத் தயாரிப்பாளர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள். இணையத்தில் இணைக்க IoT சாதனங்களுக்குத் தனித்த அடையாளம் தேவை. பாதுகாப்புக் குறுநிரலை நிறுவ எளிய வழிகளும் தேவை.