ஈமேக்ஸ் (emacs) – இதை என்னவென்று அறிமுகம் செய்வது? வெறும் உரைதிருத்தி (text editor) என்று கூறிவிட முடியாது; அதையும் தாண்டிப் பலவற்றைச் செய்யவல்லது. கிட்டத்தட்ட ஓர் இயங்குதளத்திற்கு இணையான மென்பொருள். ஆம், எழுத்துக் கோப்புகள் (text documents) தொடங்கி, JPEG, PNG போன்ற படக்கோப்புகள், PDF ஆவணங்கள் எனப் பல வகையான கோப்புகளைக் கையாள வல்லது.
கோப்புகளைப் பார்ப்பதும் திருத்துவதும் வெறும் சிறு பகுதிதான். இதைக்கொண்டு மின்னஞ்சல் அனுப்பலாம், கிட் (git) போன்ற version control systemகளைக் கையாளலாம், முனையத்தைப் (terminal) பயன்படுத்தலாம். மேலும் நாள்காட்டி, கணிப்பான்(calculator), விளையாட்டுகள் எனப் பல வசதிகளை உள்ளடக்கியது. அதனைக் கிட்டத்தட்ட ஓர் இயங்குதளத்திற்கு இணையாதென நான் கூறியதன் காரணம் இப்போது புரியும் என்று நினைக்கிறேன்
இதற்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டின் தந்தையென அழைக்கப்படும் ரிச்சர்ட் ஸ்டால்மன் அவர்களால் உருவாக்கப்பட்டு, GPL உரிமத்துடன் (இதுவும் அவர் வடிவமைத்ததே) வெளியடப்பட்ட முதல் மென்பொருள் ஈமேக்ஸ்.
இத்தகைய சிறப்பான ஒரு மென்பொருளைக் கற்றுக்கொள்ள இன்னும் ஏன் தாமதிக்க வேண்டும்? வாருங்கள் ஈமேக்ஸ் உலகத்திற்குள் புகுவோம்.
நிறுவுதல்
பல குனு/லினக்ஸ் இயங்குதளங்களில் தொகுபதிவகத்திலேயே (repository) ஈமேக்ஸ் கிடைக்கும். அந்தந்த இயங்குதளத்தின் பொதி மேலாண்மை மென்பொருள் வாயிலாகவே நிறுவிக்கொள்ள முடியும். உபுண்டு இயங்குதளத்தில் நிறுவ, முனையத்தில் கீழ்க்காணும் கட்டளையை இடவும்:
sudo apt-get install emacs23
ஈமேக்ஸ் கட்டளைகள்
ஈமேக்ஸ் கட்டளைகளைப் பார்க்கும் முன்பு, இரு குறியீடுகளை அறிந்து கொள்வது பயனுள்ளதாய் இருக்கும்.
குறியீடு |
பொருள் |
C-x |
Ctrl விசையுடன் சேர்த்து x விசையை அழுத்தவும் |
M-x |
Meta (Alt) விசையுடன் சேர்த்து x விசையை அழுத்தவும் |
கோப்பைத் திறத்தல்
C-x அழுத்தியதும் நிலைகாட்டி (cursor) சாளரத்தின் கீழ்ப்குதியில் வந்து நிற்கும். அங்கே திறக்கவேண்டிய கோப்பிற்கான பெயரை இடவும்.
கோப்பை சேமித்தல்
கோப்பில் மாற்றங்கள் செய்தபின் அதனை சேமிக்க, C-x C-s (C-x அழுத்தியபின் C-s அழுத்தவும்).
கோப்பை மூடுதல்
சேமித்த கோப்பை மூட C-x C-k Enter
ஈமேக்ஸை விட்டு வெளியேற C-x C-c
உரை திருத்துதல்
உரையின் ஒரு பகுதியை select செய்ய, எப்போதும் போல Shift-ஐ அழுத்திக்கொண்டு அம்புக்குறிகளைப் (arrow keys) பயன்படுத்தலாம். அல்லது, அப்பகுதியின் தொடக்கத்தில் நிலைகாட்டியை வைத்து C-<space> அழுத்திவிட்டு, பின்னர் அம்புக்குறிகளைக் கொண்டு தேர்வு செய்யலாம்.
தேர்வு செய்த பகுதியை நகலெடுக்க M-w, தேர்வு செய்த பகுதியை அழிக்க C-w. மற்ற உரைதிருத்திகளில் இருப்பது போல் அல்லாமல், cut செய்வதும் delete செய்வதும் ஈமேக்ஸைப் பொறுத்தவரையில் ஒன்றே. அதாவது delete செய்யப்படும் எந்த ஓர் உரையும் clipboard-ல் இருக்கும். ஏற்கனவே வெட்டப்பட்ட அல்லது நகலெடுக்கப்பட்ட உரையை paste செய்ய C-y (y = yank)
உலாவுதல் (navigation)
பொதுவாகப் பயன்படுத்தப்படும் அம்புக்குறிகள், Home, End ஆகிய விசைகள் அல்லாமல் ஈமேக்ஸிற்கென்றே உரித்தான சில விசைகள் உள்ளன. அவற்றுள் சில:
ஓரெழுத்துப் பின்னால் செல்ல C-b
ஓரெழுத்து முன்னால் செல்ல C-f
முந்தைய வரிக்குச் செல்ல C-p
அடுத்த வரிக்குச் செல்ல C-n
வரியின் தொடக்கத்திற்குச் செல்ல C-a
வரியின் இறுதிக்குச் செல்ல C-e
இவை முதலில் சற்றுக் கடினமாகத் தோன்றினாலும், பழகிக்கொண்டால் விரைவாகத் தட்டச்சு செய்ய முடியும் (விசைப்பலகையில் அம்புக்குறிகள் இருக்கும் ஓரமாகக் கையை நகர்த்த வேண்டியதில்லை).
விக்னேஷ் நந்த குமார் ஓர் இணைய வடிவமைப்பாளர் (web designer), கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டின் மேல் அசையாத நம்பிக்கை கொண்டவர். கட்டற்ற இணைய வடிவமைப்புத் தொழில்நுட்பங்களான HTML, CSS, Javascript ஆகியவற்றுடன் விளையாடுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். வலைப்பதிவுகள் எழுதுதல், புகைப்படம் எடுத்தல், வலை உலாவல் ஆகியன இவரது ஓய்வுநேரச் செயல்கள்.
மின்னஞ்சல்: viky.nandha AT gmail DOT com
வலைத்தளம்: vigneshnandhakumar.in