கணிச்சொற் விளக்கம் – 2

இயங்கு தளம் – Operating Systemதங்களின் கணினியை இயக்கத் தேவையான அடிப்படை நிரல்களையும் பயன்பாடுகளையும் கொண்டது இயங்கு தளமாகும். பிரபலமாகக் கிடைக்கப் பெறும் கட்டற்ற இயங்கு தளங்கள் லினக்ஸ் கருவினைப் பயன்படுத்துகின்றன.

 

கரு – Kernel

இயங்கு தளங்களின் பிரதான பகுதி கருவென்று அழைக்கப்படும். கணினியின் வளங்களை பராமரிப்பது கருவின் முக்கியப் பணிகளுள் ஒன்று. எளிமையாக வன்பொருள் மற்றும் மென்பொருட்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றங்களை நிர்வகிக்கும் பொறுப்பு கருவினுடையது எனலாம்.

 

மேலோடு – Shell

இடப்படும் ஆணைகளை இயக்க உதவுவது மேலோடு-ஷெல் எனப்படுகிறது. ஆணைகளை இனங்கண்டு கொள்ள பயன்படும் ஷெல் ஒரு நிரலாக்க மொழியும் ஆகும். ஒரு வரியொடுக்கியாக (interpreter) ஷெல் பல்வேறு ஆணைகளுக்கான இடைமுகப்பாக திகழ்கிறது. இத்தகைய பயன்பாடுகளை ஒருசேர இயக்க உதவும் வாய்ப்பையும் தருவதால் ஒரு நிரலாக்க மொழியாகவும் கருதப்படுகிறது. உடனுரையாடும் (interactive) விதமாவும் அது இல்லாத பிற வழிகளிலும் மேலோடுதனைப் பயன்படுத்தலாம். உடனுரையாடும் விதமாகப் பயன்படுத்திடும் போது ஆணைகளை விசைப்பலகையினின்றும் அதல்லலாத நிலையில் கோப்பொன்றிலிருந்தும் ஆணைகளை பெற்று மேலோடு இயக்கும். bash குனு லினக்ஸ் இயங்கு தளங்களில் பரவலாகக் கிடைக்கப் பெறும் மேலோட்டின் பெயராகும்.

 

வழங்கி – Server

கோருவோருக்கு குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதால் வழங்கியென்று அழைக்கலாம். தரப் படும் சேவைகள் பல விதமாக இருக்கலாம். உதாரணத்திற்கு இணைய வழங்கி. இணையச் சேவைகளை வழங்குதற்கு இது பயன்படுகிறது. அபாச்சி இன்று உலகம் நெடுகிலும் பரவலாகப் பயன்படுத்தப் படும் இணைய வழங்கியாகும்.

 

வாங்கி – Client

சேவைகளை வழங்குவது வழங்கி எனக் கொண்டால் அதனைப் பெற்றுக் கொள்ளும் கருவிகளை வாங்கி என அழைக்கலாம். மடல்களை பரிமாறிக் கொடுக்கும் மையமாக ஒரு இடத்தில் மடல் வழங்கியினை நிறுவிக் கொள்ளலாம். மடல்களை நம்மிடத்திலிருந்து அனுப்ப பெற்றுத் தர மடல் வாங்கியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவை வழங்கியின் மூலமாக பரிமாறப்படும்.

 

உலாவி – Browser

அகில உலக இணையத்திலோ உட் பிணையமொன்றிலோ இருக்கக் கூடிய இணைய தளமொன்றின் இணையப் பக்கத்தில் கிடைக்பெ பெறும் உரைகள், படங்கள், பதிவொளிகள் (வீடியோ), இசை போன்ற பலவகைப்பட்ட தரவுகளையும் அணுகி பார்வையிட்டு அவற்றுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள உதவும் பயன்பாடாக உலாவிதனை விவரிக்கலாம். பயர்பாக்ஸ், கான்கொயரர், எபிபனி போன்றவை கட்டற்று கிடைக்கும் பிரபல உலாவிகளாகும். இதனை ஆங்கிலத்தில் பிரவுஸர் என வழங்குவர்.

 

இணையரங்கம் – Internet Relay Channel

இணையத்தின் மூலம் பலரும் உடனுரையாடுதற்கான ஒரு ஏற்பாடு இணையரங்கம் ஆகும். இதனை ஆங்கிலத்தில் இன்டர்நெட் ரிலே சானல் என வழங்குவர். இணைய வழங்கியொன்றில் பல இணையரங்குகள் இருக்கும். தங்களுக்கு உகந்ததாக ஒருவர் தேர்வு செய்யும் அரங்கமொன்றினுள் நுழைந்து யார் வேண்டுமானாலும் அவ்வரங்கினுள் இருக்கும் பிற எவருடனும் உரையாட இயலும். பிரபலமாகப் பயன்படுத்தப் படும் இணையரங்க வழங்கியாக irc.freenode.net தனை கருதலாம்.

 

அளிக்கை – Presentation

ஆங்கிலத்தில் பிரஷன்டேஷன் என சொல்வதை நாம் அளிக்கை எனச் சொல்கிறோம். எடுத்துக் கொண்ட பொருளை முன்னே அமர்ந்திருப்போருக்கு நல்ல முறையில் அளித்திட உறுதுணையாக இருப்பதால் அளிக்கை என கொள்ளப்பட்டது.

 

 

மென்களஞ்சியம் – Software Repository

பிரபலமாக வழங்கப்பெறும் குனு/ லினக்ஸ் இயங்கு தளங்கள் கிடைக்கப்பெறும் மென்பொருட்களை பல்வகைப் படுத்தி காத்து வைக்கும் இணைய இடங்களுக்கு மென் களஞ்சியங்கள் எனப் பெயர். இணையத்தில் இருந்த வாறே பொதிகளை நிறுவிட, பதிவிறக்கிட இவைப் பயன்படுத்தப் படுகின்றன.

 

வழங்கல் – Distribution

குனு/ லினக்ஸினை அடிப்படையாகக் கொண்டு கிடைக்கப்பெறும் இயங்கு தளங்களை பொதுவாக வழங்கல் எனக் கருதுகிறோம். டெபியன் லினக்ஸ் வழங்கல், ரெட்ஹாட் லினக்ஸ் வழங்கல் என குனு/ லினக்ஸ் வழங்கல்கள் அழைக்கப்படுவதுண்டு.

 

ஆமாச்சு

 

கட்டற்ற மென்பொருள் தழைத்தோங்க உழைப்பவன் –

ஆமாச்சு இன்பிராசாப்ட் சர்வீசஸ் மூலம் கட்டற்ற மென்மக் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்கிறேன் – கட்டற்ற முறையில் தமிழ்க் கணிமை வளர நாட்டம் கொண்டு இயற்றல், மொழிபெயர்த்தல், பயிற்றுவித்தல், நிரலாக்குதல், ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறேன். இவற்றை அடையும் பொருட்டு உற்றோருடன் யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளையைத் yavarkkum.org தோற்றுவித்திருக்கிறேன்.

%d bloggers like this: