எண்ணிம நூலகவியல் 2 – அதிகார வரையறை (Authority Control)

பட்டியலாக்கம் (cataloging) அல்லது மீதரவு உருவாக்கத்தில் (metadata creation) நபர், நிறுவனம், இடம், பொருட்துறை போன்றவற்றை குறிக்க வேண்டி இருக்கும். மீதரவு உருவாக்கத்தில் இவ்வாறு பயன்படுத்தப்படும் பொருட்களை உருபொருட்கள் (entities) என்பர்.  ஒரு உருபொருள் பல வடிவங்களில் எழுதப்படலாம்.  எடுத்துக்காட்டாக தந்தை பெரியார் எழுதிய “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற நூலைப் பற்றிய மீதரவுப் பதிவில், அதன் ஆசிரியரான (author) தந்தை பெரியாரை எப்படி குறிப்பிட வேண்டும்? பெரியார், தந்தை பெரியார், ஈ. வெ. இராமசாமி, ஈரோடு வெங்கடப்பா இராமசாமி, அல்லது இராமசாமி ஈ. வெ. என்றா குறிப்பிடுவது என்ற கேள்வி எழுகிறது.  இவ்வாறு பல்வேறு வடிவங்களில் குறிப்பிடக்கூடிய ஒர் உருபொருளை நெறிப்படுத்த பயன்படும்  செயலாக்கமே அதிகார வரையறை (authority control) ஆகும். அதிகார வரையறை (authority control) என்ற சொல்லுக்கு மாற்றாக கட்டுபடுத்தப்பட்ட சொற்றொகுதி (controlled vocabulary) என்ற சொல்லும் பயன்பாட்டில் உள்ளது.

அதிகார வரையறை என்பது மீதரவு உருவாக்கத்தில் பயன்படுத்தப்படும் நபர், நிறுவனம், தலைப்பு, பொருட் துறை, வகை உட்பட்ட பல்வேறு உருபொருட்களை சீர்தரங்களுக்கு (standardization) ஏற்ப விபரித்து, தனித்துவமாக (uniqueness) அடையாளப்படுத்தி, அவைகளுக்கு இடையேயான தொடர்புகளை (linkages) ஏற்படுத்துவற்கான செயலாக்கம் ஆகும். தொழில்நுட்பங்களைப் பொறுத்து இது நடைமுறைப்படுத்தும் விதம் மாறுபட்டாலும், இது நூலவியலில் நீண்டகாலம் பயன்பாட்டில் இருக்கும் நடைமுறை ஆகும்.

எடுத்துக்காட்டாக பெரியாருக்கான காங்கிரஸ் நூலகத்தின் அதிகார வரையறைப் பதிவு  (authority record)  id.loc.gov/authorities/names/n81080159 ஆகும். அந்த இணைய உரலி ஊடாக சென்று பார்த்தால், பெரியார் பற்றிய பல அடிப்படைத் தகவல்களை அது பகிர்கிறது.  பெரியாரைக் குறிப்பதற்கான நிலைத்த அடையாளங்காட்டி, பெயரின் பிற வடிவங்கள், பிறப்பு/இறப்புத் திகதி, தொடர்புடைய மொழி, தொடபுடைய இடம், அவர் பங்களித்த துறைகள் உட்பட்ட பல விடயங்களை அது பகிர்கிறது.  இதர பிற அதிகார வரையறைகளை சுட்டுகிறது.  பெரியாருக்கான Virtual International Authority File இன் அதிகார வரையறை viaf.org/viaf/37995753 ஆகும், விக்கித்தரவின் பக்கம் www.wikidata.org/wiki/Q737280 ஆகும்.  இதே போன்று மனித உரிமைகள் – இலங்கை என்ற பொருட்துறைக்கான (subject) அதிகார வரையறைப் பதிவு id.loc.gov/authorities/subjects/sh2008122054 ஆகும்.  புதினம் அல்லது நாவல் என்ற வகைமைக்கான (genre) அதிகார வரையறைப் பதிவு vocab.getty.edu/page/aat/300202580 ஆகும்.

அட்டை நூற்பட்டியல்கள் (card catalogue) நூலகங்களில் பயன்பாட்டில் இருந்த பொழுது தலைப்புக்களை சீரான வடிவத்தில் எழுதுவது அவசியமானது.  அதாவது ஒர் எழுத்தாளரின் பெயரைக் குறிப்பிட ஒரு வடிவத்தை தேர்தெடுத்த பின்பு, அந்த வடிவத்தையே எல்லா இடங்களிலும் பயன்படுத்துவது ஆகும்.  அந்தப் பெயரின் பிற வடிவங்களில் இருந்து முதன்மை வடிவத்தைக் கண்டைவதற்கான அணுக்க முனைகளைத் (access points) தருவதும், வெவ்வேறு வழிகளில் தேடுபவர்கள் வளங்களை கண்டைய அவசியமாகும். இவ்வாறு சீராக விபரிக்கப்பட்டாலே, ஒர் எழுத்தாளரின் அனைத்து படைப்புக்களையும், அல்லது ஒரு பொருட்துறையின் கீழ் வரும் அனைத்து வளங்களையும் கண்டையக்கூடியதாக இருக்கும்.  ஒரு வளத்தை தேட, கண்டுப்பிடிக்க மட்டும் இல்லாமல், நூற்பட்டியல்களை உருவாக்கவும் பராமரிக்கவும் அதிகார வரையறைகள் உதவுகின்றன.

நூற்பட்டியல்கள் கணினி மயமாக்கப்பட்ட பின்பு, அதிகார வரையறைகளுக்கான தருவுத்தளங்கள் பரவலான பயன்பாட்டுக்கு வந்தன.  இந்தத் தரவுத் தளங்களில் இருந்து தமக்குத் தேவையான அதிகார வரையறைப் பதிவுகளை தேர்தெடுத்து தமது நூலகங்களில் உள்ள வளங்களை நூலகர்கள் விபரிக்கலானார்கள்.  இவ்வாறான தரவுத்தளங்கள் பெரும்பாலும் மேற்குநாட்டு நிறுவனங்களாலேயே உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. அதிகார வரையறை சேவைகளைகளுக்கு Library of Congress Authorities, Virtual International Authority File, Getty Art & Architecture Thesaurus  ஆகியவை சிறந்த எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.

இன்று இணைப்புத் தரவு அடிப்படைகளைப் பயன்படுத்தியே பெரும்பாலானா அதிகார வரையறைகள் வெளியிடப்படுகின்றன.  திறந்த முறையில், கூட்டாக உருவாக்கப்படும் விக்கித் தரவும் (wikidata) அதிகார வரையறைக்கு ஒத்த சேவைகளை வழங்குகிறது.

மேற்குநாட்டு அதிகார வரையறைத் தரவுத்தளங்களில் தமிழ்ச் சூழலுக்குத் தேவையான அதிகார வரையறைகள் விரிவாக இல்லை.  அதே வேளை, தமிழ் நினைவு நிறுவனங்கள் எவையும் அதிகார வரையறைச் சேவைகளை வழங்குவது இல்லை.  பல தமிழ் நினைவு நிறுவனங்கள் கூட்டாக உருவாக்கி, பராமரித்து, பயன்படுத்தக் கூடிய  தமிழ் அதிகார வரையறைகளுக்கான சேவை இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு முக்கிய பணியாகவே எம்முன் உள்ளது.  அவ்வாறான ஒரு சேவை சாத்தியமாகும் வரை, ஒவ்வொரு நினைவு நிறுவனமும் தாம் உருவாக்கும், பயன்படுத்தும் அதிகார வரையறைகள் தொடர்பான சீர்தரங்களையும் செயல்முறைகளையும் தெளிவுபடுத்தி செயற்படுவது அவசியம் ஆகும்.  குறைந்த பட்சம் நபர் (person), நிறுவனம் (corporate body), இடம் (place), பொருட் துறை (subject), வகைமை (genre), வகை (resource type) ஆகியவற்றை வரையறுக்கப்பட்ட பட்டியலாக நிர்வகிக்க வேண்டும்.  மேலும், தமது அதிகார வரையறைகளை இதர பிற அதிகார வரையறைகளோடு தொடர்புபடுத்தும் இணைப்புக்களை வழங்குவதும் பயன்பாட்டை மேம்படுத்தும்.

நிலைத்த அடையாளங்காட்டி (persistent identifier) மற்றும் அதிகார வரையறைகளுக்கான (authority control) தேவைகளை நாம் இதுவரை பார்த்தோம்.  இவை எண்ணிம நூலகங்கள், ஆவணகங்கள், அருங்காட்சியகங்கள் தங்கள் வளங்கள் தொடர்பான தரவுகளை இணையம் ஊடாக தேட/கண்டுபிடிக்க (find/search), அடையாளப்படுத்த (identify), தேர்தெடுக்க (select), பெற (obtain), தொடர்புபடுத்த (explore) உதவுகின்றன.  இணைப்புத் தரவு அடிப்படையிலான தரவு மாதிரியும் (data model) தொழில்நுட்பங்களும் இவற்றுக்கு அடிப்படையாக அமைகின்றன.  இணைப்புத் தரவு பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

உசாத்துணைகள்

Wiederhold, R. A., & Reeve, G. F. (2021). Authority control today: Principles, practices, and trends. Cataloging & Classification Quarterly, 59(2-3), 129-158. Retrieved from www.tandfonline.com/doi/full/10.1080/01639374.2021.1881009

Maxwell, R. L. (2002). Maxwell’s guide to authority work. American Library Association. Retrieved from www.ala.org/aboutala/sites/ala.org.aboutala/files/content/publishing/editions/samplers/Maxwell_MGAW.pdf

Durance, C. J. (1993). Authority control: beyond a bowl of alphabet soup. Archivaria. Retrieved from www.archivaria.ca/index.php/archivaria/article/download/11883/12836

Tillett, B. B. (2012). Authority control: State of the art and new perspectives. Authority Control in Organizing and Accessing Information, 51-98. Retrieved from web.archive.org/web/20170829113242id_/http://polaris.gseis.ucla.edu/gleazer/461_readings/Tillett_AC.pdf

%d bloggers like this: