எளிய தமிழில் Car Electronics 18. CAN உட்பிணையம்

இது நிகரிடைப் பிணையம் (Peer-to-peer network)

CAN உட்பிணையம் (bus) என்பது ஒரு நிகரிடைப் பிணையம் (Peer-to-peer network) தகவல் பரப்பு அமைப்பாகும். அதாவது இதில் இணைந்திருக்கும் எந்தவொரு கட்டுப்பாட்டகமும் (ECU) தகவலை அனுப்பவும் பெறவும் முடியும். பிணையத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு ECU வையும் பொதுவாகப் பிணையத்திலுள்ள ஒரு கணு (node) என்று கருதலாம். இது 125 kbps இலிருந்து அதிகபட்சம் 1 Mbps வரை தகவலை அனுப்ப முடியும். இதில் அதிகபட்சமாக 2048 தனிப்பட்ட அடையாளம் கொண்ட தகவல்களை அனுப்ப இயலும். ஒவ்வொரு ECU வும் பிணையத்தில் வரும் தரவுகள் யாவற்றையும் வாங்கி, சோதித்துப் பார்த்து, தனக்கான தகவல்களை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை விட்டுவிடும்.

nodes-on-can-bus

ECU தகவல் அனுப்புதலும், வாங்குதலும்

எளிதாக மாற்றியமைக்கவும் கூடுதல் கணுக்களைச் சேர்க்கவும் முடியும்

இது நெகிழ்வானது. அதாவது அனுப்பப்பட்ட அனைத்து செய்திகளையும் பெறுவதற்கும், பொருத்தத்தைத் தீர்மானிப்பதற்கும் அதற்கேற்ப செயல்படுவதற்கும் ஒவ்வொரு ECU விலும் ஒரு சில்லு (chip) உள்ளது. இது எளிதாக மாற்றியமைக்கவும் கூடுதல் கணுக்களைச் சேர்ப்பதற்கும் அனுமதிக்கிறது.

மையமாக ஒரே இடத்தில் பிழை கண்டறிதல், தரவுகளைப் பதிவு செய்தல், உள்ளமைவு (configuration) செய்தல் ஆகியவை இயலும்

இது மையப்படுத்தப்பட்டது. அதாவது CAN உட்பிணைய அமைப்பு வழியாக அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து ECU க்களிலும் மையமாக ஒரே இடத்தில் பிழை கண்டறிதல், தரவுகளைப் பதிவு செய்தல், உள்ளமைவு (configuration) செய்தல் ஆகியவை இயலும்.

முக்கிய செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது

இது திறமையானது. அதாவது முக்கிய செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு போன்ற அதிக முன்னுரிமையுள்ள செய்திகள் குறுக்கீடு இல்லாமல் விரைவாகப் போய்ச்சேரும்.

இரண்டு கம்பிகள் கொண்ட அமைப்பு 

தகவல் தொடர்புக்கு இரண்டு கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அதிக மின்னழுத்தம் (CAN Hi), குறைந்த மின்னழுத்தம் (CAN Lo) என அழைக்கப்படுகின்றன. இவற்றில் மின்னழுத்த நிலைகள் மாறுவதை வைத்துக் கட்டுப்படுத்திகள் சமிக்ஞைகளைப் படிக்கின்றன. 

நன்றி

  1. CAN BUS PROTOCOL – 10 MINUTE LESSON

இத்தொடரில் அடுத்த கட்டுரை: ஓடும்போது பழுது கண்டறிதல்

பழுது கண்டறியும் சாதனங்கள். பழுதுக்குறியீடும் பழுதுப்பதிவும். பழுது கண்டறியத் திறந்தமூல மென்பொருட்கள்.

ashokramach@gmail.com

%d bloggers like this: