எளிய தமிழில் Computer Vision 10. வடிவியல் வடிவங்களை அடையாளம் காணுதல்

ஹ்யூ உருமாற்றம் (Hough transform)

முதன்முதலில் ஹ்யூ உருமாற்றம் படத்தில் உள்ள கோடுகளை அடையாளம் காண்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. ஆனால் பின்னர் இது வட்டங்கள், நீள்வட்டங்கள் போன்ற வடிவங்களையும் அடையாளம் காண விரிவாக்கப்பட்டது. மேலும் சமதளங்களையும் மற்றும் உருளைகள் (Planes and cylinders) போன்ற முப்பரிமாணப் (3D) பொருட்களையும் கூடக் கண்டறிய முடியும்.

ஆக கோடுகள், வட்டங்கள், நீள்வட்டங்கள் போன்ற, அளவுரு சமன்பாடு (Parametric equation) மூலம் குறித்துக் காட்ட இயலும் எல்லாவித வடிவங்களையும், ஹ்யூ உருமாற்றம் பயன்படுத்திக் கண்டறிய முடியும். 

ஹ்யூ உருமாற்றத்தின் செயல்திறன் பெரும்பாலும் உள்ளீட்டுத் தரவின் தரத்தைப் பொறுத்தது. இது நன்றாக வேலை செய்ய விளிம்புகள் நன்கு கண்டறியப்பட வேண்டும். படங்களில் இரைச்சல் இருந்தால் ஹ்யூ உருமாற்றம் சரியாக வேலை செய்யாது. முதலில் இரைச்சலை நீக்க வேண்டும். 

வடிவியல் வடிவங்கள்

வடிவியல் வடிவங்கள்

உருவ வரம்பு கண்டறிதல் (Contour detection)

படத்தின் ஒரு சிறிய பகுதியில் விளிம்பு என்ற கருத்துருவைப் பயன்படுத்துகிறோம். ஆனால் படத்திலுள்ள முழு உருவத்தின் வடிவத்தை அடையாளம் காண உருவ வரம்பு என்ற கருத்துருவைப் பயன்படுத்துகிறோம்.

ஆக ஒரு பொருளின் உருவத்தை முழுமையாக சூழ்ந்துள்ள வெளி விளிம்பை உருவ வரம்பு என்று சொல்கிறோம். ஒளிர்வு மாற்றம் (luminance change), இழையமைப்பு மாற்றம் (texture change), புலனுணர்வு தொகுத்தல் (perceptual grouping) மற்றும் மாயையான உருவ வரம்பு (illusory contour) ஆகியவை உருவ வரம்பு கண்டறியும் நான்கு ஏற்கப்பட்ட வழிமுறைகள். 

ஓபன்சிவி பைதான் உருவ வரம்பு கண்டறிதல் பயிற்சிகள் இங்கே உள்ளன.

படத்தின் முன்னணியில் உள்ள பொருளைப் பின்னணியில் இருந்து வேறுபடுத்தல்

பல வேலைகளுக்கு ஒரு படத்தில் இருக்கும் எல்லாவற்றையும் பற்றி நாம் தெரிந்து கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் ஒரு படத்தில் நமக்குத் தேவையான பகுதிகள் மனிதர்கள், கார்கள், உரை போன்ற அதன் முன்னணியில் (foreground) உள்ள பொருட்கள்தான். ஆகவே கணினிப் பார்வைத் துறையில் முன்னணி கண்டறிதல் (Foreground detection) ஒரு முக்கியப் பணியாகும், இதன் நோக்கம் முன்னணியை மேலும் செயல்படுத்துவதற்காக பிரித்தெடுப்பதுதான். 

நன்றி

  1. Detecting simple shapes in an image by Calum Knott

இத்தொடரில் அடுத்த கட்டுரை: படங்களை வகைப்படுத்தல் (image classification)

இருவகைப்படுத்தல் (binary classification). பல வகைப்படுத்தல் (multiclass classification). படத்தின் மேல் கோடுகள், செவ்வகங்கள், வட்டங்கள் மற்றும் உரையை வரைதல்.

ashokramach@gmail.com

%d bloggers like this: