எண்ணிம நூலகவியல் 4 – மீதரவுச் சீர்தரங்கள் (Metadata Standards)

நூலகம், ஆவணகம், அருங்காட்சியகம் ஆகியன சேகரிக்கும் வளங்களை அடையாளப்படுத்தி, விபரித்து, வகைப்படுத்தும் பணியினை பட்டியலாக்கம் (cataloging) என்கிறோம். இவ்வாறு வளங்களைப் பற்றி உருவாக்கப்படும் தரவு மீதரவு (metadata) எனப்படுகிறது.  ஒரு நினைவு நிறுவனத்தில் உள்ள வளங்களை பயனர்கள் தேட, கண்டுபிடிக்க, அடையாளப்படுத்த, பெற மீதரவு பயன்படுகிறது.  வளங்களை நிர்வாகிக்க, பாதுகாக்க, அவை பற்றி அறிக்கையிடவும் மீதரவு அவசியமாகிறது.

ஒரு வளத்தைப் பற்றிய மீதரவினை, அவற்றின் பயன்பாடு பொறுத்து பின்வரும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: விவரண மீதரவு (Descriptive Metadata), கட்டமைப்பு மீதரவு (Structural Metadata), நிர்வாக மீதரவு (Administrative Metadata). ஓரு வளத்தின் தலைப்பு, ஆசிரியர், பதிப்பாளர், பதிப்புத் திகதி, வடிவம், வகைமை, பொருட் துறை போன்ற அந்த வளத்தின் உள்ளடக்கத்தையும் ஆக்கத்தையும் சுட்டி நிற்கும் தரவுகள் விவரண மீதரவு ஆகும். மீதரவு என்னும் பொழுது, இந்தத் தரவுகளையே நாம் பொதுவாகக் குறிக்கிறோம். பயனர்கள் வளத்தை தேட, அடையாளப்படுத்த விவரண மீதரவு பயன்படுகிறது.  கட்டமைப்பு மீதரவு ஒரு வளத்தின் உள்ளக கட்டமைப்பை பற்றிய தரவுகள் ஆகும்.  எடுத்துக்காட்டாக, வளத்தின் பக்கங்கள், பக்கங்களின் வரிசை, வளத்தின் பல்வேறு கோப்புக்கள் பற்றிய தகவல்கள் கட்டமைப்பு மீதரவு ஆகும்.  அந்த வளத்தை காட்சிப்படுத்த, வழி கண்டுபிடிக்க (navigate) கட்டமைப்பு மீதரவு உதவுகிறது.

நிர்வாக மீதரவு ஒரு வளத்தினை நீண்ட காலம் மேலாண்மை செய்ய பயன்படும் தரவு ஆகும்.  நிர்வாக மீதரவினை உரிமைகள் மீதரவு (Rights Metadata), நுட்ப மீதரவு (Technical Metadata), பாதுகாப்பு மீதரவு (Preservation Metadata) என்று மேலும் நுணுக்கமாகவும் அணுகலாம்.  ஒரு வளத்தின் எண்ணிமக் கோப்புக்கள் எப்பொழுது பெறப்பட்டன அல்லது உருவாக்கப்பட்டன, அவற்றின் தரம், கோப்பின் வடிவம் போன்ற நுட்ப விபரங்கள், வளத்துக்கான காப்புரிமை, யார் அணுகலாம் போன்ற விபரங்கள் நிர்வாக மீதரவில் அடங்கும்.  எண்ணிம வளங்களுக்கு அவற்றின் பாதுகாப்புத் தொடர்பான செயற்பாடுகளை Preservation Metadata கள் ஊடாக பதிவு செய்ய முடியும்.  இதில் முக்கியமானது கோப்புக்களின் சரிகாண்தொகையு (checksum) ஆகும். PREservation Metadata: Implementation Strategies (PREMIS – பாதுகாப்பு மீதரவு: செயற்படுத்தல் வியூகங்கள்) பாதுகாப்பு மீதரவுக்கான பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சீர்தரம் ஆகும்.

இந்தக் கட்டுரையில் விவரண மீதரவினையே சிறப்பாக நோக்கவுள்ளோம்.  விவரண மீதரவு என்னும் போது, ஒரு வளத்தைப் பற்றி என்ன விபரங்கள் தொகுக்கப்பட வேண்டும், எவ்வாறு தொகுக்க வேண்டும், எவ்வாறு பதிவுசெய்யப்பட்ட பரிமாறப்பட வேண்டும் என்பது தொடர்பான சீர்தரங்கள் ஆகும். இவற்றினை தரவு உள்ள்டக்கச் சீர்தரங்கள் (data content standards), தரவு மதிப்புச் சீர்தரங்கள் (data value standards), தரவுப் பரிமாற்றச் சீர்தரங்கள் (data exchange standards) என்று வகைப்படுத்தி அணுகலாம்.  ஒரு வளத்த்தைப் பற்றி தலைப்பு, ஆசிரியர், பதிப்பாளர், வெளியீட்டுத் திகதி, பொருட்துறை உட்பட்ட என்ன என்ன விடயங்கள் எவ்வாறு தொகுக்கப்பட வேண்டும் என்பதையும் உள்ளடக்கச் சீர்தரங்கள் விளக்குகின்றன.  எடுத்துக்காட்டாக ஒரு வளத்தின் தலைப்பை எவ்வாறு தீர்மானம் செய்வது.  நூற்களுக்கு அதன் முகப்பு பக்கத்தில் இருந்து எடுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.  இதழ்களுக்கு, இதழின் பெயரோடு அதன் திகதியைம் அல்லது தொடர் எண்ணையும் சேர்க்க வேண்டுமா?.  தலைப்பு இல்லாத வளங்களுக்கு எவ்வாறு தலைப்பை வழங்குவது?  இது போன்ற கேள்விகளுக்கு தரவு உள்ள்டக்கச் சீர்தரங்கள் வழிகாட்டுகின்றன.  IFLA International Standard Bibliographic Description (ISBD) மற்றும் Resource Description and Access (RDA) ஆகியவை நூலக வளங்களுக்கான தரவு உள்ளடக்க சீர்தரங்கள் ஆகும்.  RDA Toolkit பயன்படுத்த கட்டணம் அறவிடப்படுகிறது, ISBD வழிகாட்டல்கள் இலவசமாகக் கிடைக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தரவு மதிப்புச் சீர்தரங்கள் (data value standards) என்னும் போது, மீதரவு உருவாக்கத்தில் பயன்படுத்தக் கூடிய அதிகார வரையறைகளையே பெரிதும் சுட்டி நிற்கிறன.  எடுத்துக்காட்டாக நபர், அமைப்பு, இடம், மொழி, வகைமை, வடிவம், மொழி, பொருட்துறை போன்ற விடயங்களை குறிக்க பயன்படும் சீர்தரங்கள் ஆகும்.  அடுத்து, மீதரவினை கணினியில் எவ்வாறு குறியேற்றம் செய்வது, பரிமாறுவது தொடர்பான சீர்தரங்கள் ஆகும்.  இவற்றை metadata exchange standards என்பர்.  இவற்றுள் MARC, MODS, Dublin Core போன்றவை இன்று பரவலான பயன்பாட்டில் உள்ளன.  BIBFRAME தற்போது வளர்ச்சிபெற்று வரும் ஒரு தரவுப் பரிமாற்ற சீர்தரம் ஆகும்.

இவ்வாறு பல சீர்தரங்களை நோக்குகையில் எதை எங்கே பயன்படுத்துவது என்ற கேள்வி எழும். எண்ணிம நூலகங்களைப் பொறுத்த வரையில் DCMI metadata terms (டப்பிளின் மீதரவு வரையறைகள்) ஒர் எளிமையான, அதே வேளை பரவலாகப் பயன்படுத்தப்படும் சீர்தரமாக அமைகிறாது.  ஒரு தகவல் வளம் தொடர்பாக தொகுக்கப்பட வேண்டிய 15 அடிப்படை metadata elements ஐ இது முதன்மையாக வரையறைசெய்கிறது. அந்த வளத்தை விரிவாக விபரிக்க மேலதிகமாக 40 elements ஐயும் அது கொண்டுள்ளது.  அந்த elements இன் மதிப்புக்களை (values) நெறிப்படுத்தும் வண்ணம் அதிகார வரையறைகள் மற்றும் வகுப்புக்கள் (classes), குறியேற்ற சீர்தரங்களையும் (syntax encoding schemes) ஐயும் இது கொண்டிருக்கிறது.  டப்பிளின் மீதரவினை rdf, xml, json என்று பல்வேறு தரவு குறியேற்ற சீரதரங்களுக்கு ஏற்ப உருவாக்கி பகிரமுடியும்.

பல பயன்பாடுகளுக்கு டப்பிளின் மீதரவு வரையறைகள் பொருத்தமாக அமைந்தாலும், அது தலைப்பு இவ்வாறு அமைய வேண்டும், பெயர் இவ்வாறு குறிப்பிடப்பட வேண்டும் போன்ற வழிகாட்டல்களை வழங்காது.  அத்தகைய வழிகாட்டல்களுக்கு  International Standard Bibliographic Description (ISBD)  உதவியாக அமைகிறது.  எண்ணிம நூலகங்களில் Metadata Object Description Schema (MODS) சீர்தரமும் பயன்பாட்டில் உள்ளது. இன்று பல்வேறு சீர்தரங்களில் இருந்து தமது பயன்பாட்டுக்கு தேவையான மீதரவுக் கூறுகளை (metadata elements) எடுத்து, தமக்கான ஒரு metadata profile ஐ (எ.கா)  உருவாக்கிப் பயன்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது.  தேவைகளுக்கு ஏற்ப, ஒரு சீர்தரத்தில் இருந்து இன்னுமொரு சீர்தரத்துக்கு மாற்றிக் கொள்ளவும் (crosswalk) முடியும்.

மீதரவு உருவாக்கம் நிறைய துறையறிவையும் வளங்களையும் கோரி நிற்கும் ஒர் அறிவு உருவாக்கப் பணியாகும்.  ஒரு வளத்தினை புறவயமாக, நடுநிலையாக விபரிக்க விமர்சன அணுகுமுறை தேவை.  கணினி மயப்படுத்தப்பட்ட தேடல் வசதிகள் வளர்ந்த இன்றைய நிலையிலும், வளங்களை தேட, கண்டுபிடிக்க, அடையாளப்படுத்த, நிர்வாகிக்க, பாதுகாக்க மீதரவு அவசியமாக அமைகிறது.  தமிழ் மொழி வளங்களை சேகரிக்கும் நிறுவனங்கள் தமிழிலும் முழுமையாக மீதரவு வழங்குதல் இன்றியமையாதது ஆகும்.  மீதரவுகள் தொடர்பான சீர்தரங்களை அறிந்து, நடைமுறைப்படுத்தி, அதற்கு தேவையான கவனத்தையும், மதிப்பையும், வளங்களையும் வழங்கி முன்னெடுப்பது நினைவு நிறுவனங்களின் முக்கிய பணியாகும்.

உசாத்துணைகள்

விமலாம்பிகை பாலசுந்தரம். நூலகவியலில் பட்டியலாக்கம் (1992). மலர் பதிப்பகம். Retrieved April 22, 2024: noolaham.net/project/88/8735/8735.pdf

செல்வராஜா, என். (editor). நூலகவியல்: காலாண்டிதழ் தொகுதி 1 – 7. (2013). Retrieved April 22, 2024: noolaham.net/project/904/90384/90384.pdf

Sustainable Heritage Network. (n.d.). Types of Metadata. Retrieved April 22, 2024, from www.sustainableheritagenetwork.org/system/files/atoms/file/TypesofMetadata.pdf

Library of Congress. (n.d.). Metadata Standards and Applications – Part 2. Retrieved April 22, 2024, from www.loc.gov/catworkshop/courses/metadatastandards/ppt/MSA-rev-part2_final.ppt

Smith-Yoshimura, Karen. (2020). Transitioning to the Next Generation of Metadata. Dublin, OH: OCLC Research. Retrieved April 22, 2024, from ttps://www.oclc.org/content/dam/research/publications/2020/oclcresearch-transitioning-next-generation-metadata.pdf

Metadata: standards, schemas, and profiles (n.d.). York University. Retrieved April 22, 2024, from pressbooks.library.yorku.ca/metadata/chapter/metadata-standards-schemas-and-profiles/

MEAP Metadata Handbook (2024). UCLA Library. Retrieved April 22, 2024, from docs.google.com/document/d/1NYCFvt0nwRMCsq_1zldryvVwIZp7MGF1Ol5–oFX0IY/edit#heading=h.qi85zgfcl83y

Shreeves, S. L. (2007). Thoughts on Shareable Metadata, MODS, and RDA. IDEALS University of Illinois Urbana-Champaign. Retrieved from IDEALS University of Illinois

Strader, C. R. (2021). Cataloging to Support Information Literacy: The IFLA Library Reference Model’s User Tasks in the Context of the Framework for Information Literacy for Higher Education . Cataloging & Classification Quarterly, 59(5), 442–476. doi.org/10.1080/01639374.2021.1939828

ALA. (2024). Cataloging. ALA. www.ala.org/alcts/resources/guides/serstdsbib/cataloging

%d bloggers like this: