யூடியூப் “செயலி”யை மூடிய பிறகும் கேட்பது, விளம்பரம் இல்லாமல் கேட்பது எப்படி?

யூடியூப் தான் இன்றைய நிலையில் இரண்டாவது மிகப் பெரிய தேடுதல் பொறி. சமையலில் தொடங்கி, படம் வரைவது, படம் பார்ப்பது, பாடம் படிப்பது என்று யூடியூபைப் பல காரணங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், யூடியூப் தளத்தைப் பயன்படுத்துவதற்கும் யூடியூப் செயலியை அலைபேசியில் பயன்படுத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. யூடியூப் தளத்தைக் கணினியில் பார்க்கும் போது நாம் வேறு தத்தல்(Tab)களில் வேறு வேலைகள் பார்க்கலாம். யூடியூபைச் சுருக்கி(minimize) வைத்துக் கொள்ளலாம். ஆனால் இதெல்லாம் யூடியூப் செயலியில் செய்யவே முடியாது. யூடியூபைத் திறந்தே வைத்திருக்க வேண்டும்.

அலைபேசியின் மின்னளவு (charge) குறைவதோடு மட்டுமல்லாது, அலைபேசியில் வேறெந்த செயலியையும் நம்மால் பயன்படுத்த முடியாது. பின்னிரவுகளில் பாடல் கேட்கலாமே என்று யூடியூபைத் திறந்தால் – அலைபேசியின் வெளிச்சமே பின்னிரவின் அழகைக் கெடுத்து விடும் சிக்கல் வேறு! இது போதாதென்று இடையறாத விளம்பரங்களின் அணிவகுப்பு வேறு நம்முடைய தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும்.

இந்தச் சோதனைகளுக்கு எல்லாம் ஒரு விடிவே வராதா? என்று கேட்பவர்களுக்கு விடையாக வந்திருப்பது தான் ‘நியூபைப்‘ செயலி! எஃப்-டிராய்டில் எளிதாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.

யூடியூபில் விளம்பரம் இல்லாமல் பார்ப்பது, யூடியூபைப் பின்புறம்(Background) தள்ளி விடுவது, மேல் மீட்பாக(popup)ப் பார்ப்பது, யூடியூப் சேனல்களுக்கு வாடிக்கையாளர் ஆவது, வரலாற்றைப் பதிவது, என அத்தனையும் நியூபைப்பில் முடியும்.

குறிப்பு:
நியூ பைப் செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவ, முதலில், எஃப் – டிராய்டை நீங்கள் நிறுவ வேண்டும். எஃப்-டிராய்டு என்பது திறந்த மூல, கட்டற்ற செயலிகளைத் தொகுத்து வைத்திருக்கும் ஓரிடம். கூகுளின் பிளே ஸ்டோர் – தனியொருவனாகக் கோலோச்சிக் கொண்டிருப்பதைக் கொஞ்சம் மட்டுப்படுத்தியிருக்கும் சிறந்த செயலி.

நியூபைப் செயலியை நிறுவ: f-droid.org/packages/org.schabi.newpipe/

இணையத்தளம்: newpipe.schabi.org/

நன்றி: goinggnu.wordpress.com/2020/04/23/how-to-enjoy-youtube-without-ads/

%d bloggers like this: