நிரலாக்கத்தில் அதிமேதாவியாக இல்லாமல் திறவூற்றுக்கு பங்களிக்க 14 வழிகள்

 

திறவூற்றுக்கு பலர் தங்களது பங்களிப்பை அளிக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எங்கே ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. உங்களது தொழில்நுட்ப அறிவில் உங்களுக்கு நம்பிக்கை இல்லா விட்டாலும், எப்படியெல்லாம் திறவூற்றுக்கு உதவலாம் என்று நாம் இப்போது பார்ப்போம்.

 

கணிமையையும், உலகையும் திறவூற்று மென்பொருள்கள் மாற்றி இருக்கின்றன. உங்களில் பலரும் பங்களிக்க விரும்புகின்றீர்கள். ஆனால் ஒரு திட்டப்பணியில் நுழைய பல தடைகள் இருப்பதாக, நீங்கள் நினைத்துக் கொண்டு துரதிர்ஷடவசமாக உங்களது ஊக்கத்தை இழந்து விடுகின்றீர்கள். பெரும்பாலும் பங்களிக்க விரும்புவோர், தாங்கள் பங்களிக்க முடியாததற்கு பின்வரும் மூன்று காரணங்களைச் சொல்கின்றனர்:

 

 1. நான் ஒரு சிறந்த நிரலாளர் அல்ல
 2. எனக்கு போதுமான அளவு நேரம் கிடைப்பதில்லை
 3. எந்த திட்டப்பணியில் வேலை செய்வது என்று தெரியவில்லை

 

நீங்கள் பங்களிக்க வாய்ப்புகளைத் தேடும் போது, பின்வரும் மூன்று முக்கிய விதிகளை நினைவில் கொள்க.

 

 1. திட்டப்பணிகளுக்கு பங்களிப்புகள் பல்வேறு திறனுடையவர்களிடமிருந்தும், பல்வேறு துறைகளில் வெவ்வேறு நிலைகளில் உள்ளவர்களிடமிருந்தும் தேவைப்படுகின்றன.
 2. மிகச் சிறிய பங்களிப்பு கூட ஒன்றுமே செய்யாமல் இருப்பதை விடப் பெரியது.
 3. நீங்கள் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு மென்பொருளே, உங்கள் பங்களிப்பைத் தொடங்க மிகச் சிறந்த திட்டப்பணி

 

 

திறவூற்றுக்கு பங்களிக்க நிரலாக்கத்தில் அதிமேதாவியாக இருக்க வேண்டும் என்ற கருத்து புதியவர்களிடையே பரவலாக இருந்து வருகின்றது. அது உண்மை அல்ல. திறவூற்று உலகில் கொடி கட்டிப் பறக்கும் சிலர், நிரலாக்கத்தில் அதிமேதாவிகளே. என்றாலும் நம்மைப் போல பெரும்பாலானோர் அவ்வாறு இல்லை. நாமெல்லாம் பல்வேறு வகையான காரியங்களை முடிக்கும் சாதாரணமானவர்கள். சில சமயங்களில் அவை சிறியதாக இருக்கும், சில சமயங்களில் அவை பெரிய காரியங்களாக இருக்கும். சில சமயங்களில் அவை நிரலாக்கமாக இருக்கலாம், சில சமயங்களில் அவை நிரலாக்கமல்லாத பிற காரியங்களாகவும் இருக்கலாம்.

உண்மையான வேலையும், திட்டப்பணி விஷயங்களுக்காக செலவிடப்படும் நேரமுமே திறவூற்றுகளை உருவாக்குகின்றன. இவற்றில் பெரும்பாலான விஷயங்களுக்கு சிந்தனையோ, லாரி வால் (Perl-ஐ உருவாக்கியவர்) அல்லது டேவிட் ஹீன்மீர் ஹேன்சனின்(Rails-ஐ உருவாக்கியவர்) தொலைநோக்குப் பார்வையோ தேவையில்லை. ஒரு புதிய நிரலாக்க மொழி அல்லது ஒரு இணைய கட்டமைப்பை(web framework) வடிவமைக்க அகத்தூண்டுதலே போதுமானதாக இருந்தாலும், அவற்றை செயல்படுத்தி வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்பவை பங்களிப்புளே(எடுத்துக்காட்டாக Perl மற்றும் Rails போன்ற திட்டப்பணிகள்). இந்த மாதிரியான பங்களிப்புகள் உங்களை உடனடியாக புகழின் உச்சிக்கு கொண்டு செல்வதில்லை; ஆனால் நாட்கள் செல்ல செல்ல உங்களது பங்களிப்புகள் கவனிக்கப்படும்.

 

கவனித்தல்

திறவூற்றில் எல்லா விஷயங்களும் மற்றவர்களையும் உள்ளடக்கியது. நீங்கள் ஒரு அணியில் சேர வேண்டுமென்றால், அதன் குழுமத்தைப் பற்றி அறிந்தும், அது எவ்வாறு வேலை செய்கிறது என்று தெரிந்தும் இருக்க வேண்டும். ஒரு திட்டப்பணிக்குள் நுழைந்து, ‘ஹலோ! இந்தத் திட்டப் பணியை இப்படித் தான் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்’என்று சொல்வது பொதுவாக நல்லதல்ல. சில திட்டப்பணிகளில் இந்த வகையான அணுகுமுறை ஏற்றுக் கொள்ளப்படலாம். ஆனால் பல வருடங்களாக செயல்பட்டு வரும் ஒரு திட்டப்பணியில் இந்த மாதிரியான கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் குறைவே. ஒரு திட்டப்பணிக்குத் தேவையானவற்றைத் தெரிந்து கொள்ள மிகச் சிறந்த வழி ‘கவனிப்பது’ ஆகும்,

 

 1. மடலாடற் குழுவில் சேருங்கள்:

  பெரும்பாலான திட்டப்பணிகளில், திட்டப்பணி உருவாக்கம் தொடர்பாக கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள மடலாற்குழுவே பயன்படுத்தப்படுகிறது. பெரிய திட்டப்பணிகளில், பல மடலாடற் குழுக்களிலிருந்து ஏதாவது ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டி வரலாம். எடுத்துக்காட்டாக, PostgreSQL திட்டப்பணியில் 12 பயனர் மடலாடற் குழுக்களும், 6 உருவாக்குபவர் குழுக்களும் அதன் மடலாடற் குழு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கிய பயனர் குழுவிலும், உருவாக்குபவர் குழுவிலும் இணைந்து, திட்டப்பணியைக் கவனிக்கத் தொடங்குங்கள்.

 

 1. வலைப்பதிவைப் பின்தொடருங்கள்:

  உருவாக்குபவர்களால் நிர்வகிக்கப்படும் வலைப்பதிவுகளில், வரும் வெளியீடுகளில் என்னென்ன வெளிவருகின்றன மற்றும் அதற்காக என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன போன்ற செய்திகளை அறியலாம். கோள் தளம் (Planet Site) ஒரு திட்டப் பணி தொடர்பான செய்திகளையும், வலைப் பதிவுகளையும் பல மூலங்களிலிருந்து திரட்டுகின்றது. planet.gnome.org அல்லது planet.mysql.com போல கோள் தளமிருந்தால் அங்கிருந்தே ஆரம்பிக்கலாம். கூகுளில் ‘planet திட்டப்பணியின் பெயர்’ என்று தேடிப் பாருங்கள்.

 

3) இணையத் தொடர் அரட்டைத் தடத்தில்(IRC Channel) சேருங்கள்: பெரும்பாலான திறவூற்று மென்பொருள் திட்டப்பணிகள், உருவாக்குபவர்களும் பயனர்களும் பிரச்சினைகள் மற்றும் உருவாக்கத்தைப் பற்றி விவாதிப்பதற்காக, இணையத் தொடர் அரட்டைத் தடங்களை அர்ப்பணித்திருக்கின்றன. தடம் என்னவென்று அழைக்கப்படுகிறது மற்றும் எந்த இணையத் தொடர் அரட்டை வலையமைப்பில் இடம்பெற்றிருக்கிறது என்று திட்டப்பணியின் இணைய தளத்திலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.

 

வழு பின்தொடரும் அமைப்பில்(Trouble Ticket System) பணியாற்றுதல்

எந்த ஒரு திறவூற்றுத் திட்டப்பணிக்கும் நிரலே, இதயம் போன்றது. ஆனால் நிரல் எழுதுவது ஒன்றே பங்களிக்க ஒரே வழி என்று நினைத்து விடாதீர்கள். புது பண்புக்கூறுகளை உருவாக்கும் போதும், வழுக்களை சரி செய்யும் போதும் சமயங்களில் நிரல் மற்றும் அதைச் சுற்றியுள்ள அமைப்புகளைப் பேணுதல் கவனிக்காது விடப்படுகின்றன. திட்டப்பணியில் உங்கள் கால்களைப் பதிக்க, இந்த பகுதிகளே எளிய வழிகளாகும்.

திட்டப்பணியின் இணையதள முகப்புப் பக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் மற்றும் ஆவணமாக்கம்(Documentation) உள்ளடக்கியிருக்கும் வெளிப்படையான வழு பின்தொடரும் அமைப்பை பெரும்பாலான திட்டப்பணிகள் கொண்டிருக்கும். இதுவே பயனர்களுக்கும், உருவாக்குபவர்களுக்கும் இடையே முதன்மையான தகவல் தொடர்பு தடமாக விளங்குகிறது. இதை இற்றை செய்வது, திட்டப்பணிக்கு உதவிட சிறந்த வழியாகும். பின்தொடரும் அமைப்பில் உள்ள சீட்டுகளை சரி செய்ய உதவுகிறேன் என்று சொன்னால், திட்டப்பணி தலைவர்கள் பின்தொடரும் அமைப்பில் உங்களுக்குத் தேவையான சிறப்பு அணுகு அனுமதியை வழங்க முன் வருவார்கள்.

 

4) வழுக்களைக் கண்டறியுங்கள்:

வழுக்கள் சில சமயங்களில் சரியாக எடுத்துரைக்கப்படுவதில்லை. வழுக்களைக் கண்டறிவதும், அதற்கான காரணங்களைக் அதில் குறிப்பிடுவதும் உருவாக்குபவர்கள் பிரச்சனைகளை ஆராய செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்தும். ‘நான் X-ஐ செய்யும் போது மென்பொருள் வேலை செய்யவில்லை’. கொஞ்ச நேரத்தை செலவு செய்து எதனால் அந்த பிரச்சனை வருகிறது என்று கண்டுபிடியுங்கள். திரும்பத் திரும்ப அந்த பிரச்சனை வருகிறதா? அந்த பிரச்சனையைத் திரும்பக் கொண்டு வர வழிமுறைகள் இருக்கிறதா? இந்த உலாவியில் அல்லது இந்த டிஸ்ட்ரோவில் மட்டுமே இந்தப் பிரச்சனை என்று வகைப்படுத்துவது, வழுக்களை விரைவில் சரி செய்ய உதவியாக இருக்கும். வழு தொடர்பாக என்னென்ன கண்டுபிடிக்கிறீர்களோ அதையெல்லாம் வழு பின்தொடரும் அமைப்பில் கொடுத்து விடுங்கள். உங்களால் பிரச்சனைக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், அதற்காக நீங்கள் முயற்சித்த போது கிடைத்த தகவல்கள் பிறருக்கு அதை எளிதில் சரி செய்ய உதவும்.

5) சரி செய்யப்பட்ட வழுக்களை மூடிவிடுங்கள்:

சமயங்களில் சரி செய்யப்பட்ட வழுக்கள், வழு பின்தொடரும் அமைப்பில் இற்றை செய்யப்படாமலிருக்கும். இவ்வாறான வழுக்களை இற்றை செய்வதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொண்டாலும், இந்தப் பணி, திட்டப்பணியின் மதிப்பை உயர்த்துவதாக அமையும். ஒரு வருடத்திற்கு பிந்தைய வழுக்களை, வினவல் மூலம் வழு பின்தொடரும் அமைப்பிலிருந்து எடுத்து, அவை இன்னும் இருக்கின்றனவா என்று பாருங்கள். திட்டப்பணியின் மாற்றப்பதிவுகளில்(ChangeLog) சரி செய்யப்பட்டுள்ள வழுக்களில் இவை இடம்பெற்றிருந்தால், அவற்றை மூடி விடலாம். அந்த மென்பொருளின் சமீபத்திய பதிப்பில் அந்த வழு இருக்கிறதா என்று சோதனை செய்யுங்கள். இருந்தால் இந்தப் பதிப்பிலும் பிரச்சனை இருக்கிறது என்று அந்த வழுவில் பதிவு செய்து விடுங்கள். இல்லாவிட்டால் இந்தப் பதிப்பில் பிரச்சனை இல்லை என்று அந்த வழுவை மூடி விடுங்கள்.

நிரலாக்கத்தில் ஈடுபடுவது

பல்வேறு அனுபவ நிலைகளில் உள்ள நிரலாளர்கள், திட்டப்பணியின் நிரலாக்கத்திற்கு உதவ முடியும். உங்களுக்கு பிடித்தமான திட்டப்பணிக்குப் பங்களிக்க நீங்கள் நிரலாக்கத்தில் அதிமேதாவியாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். உங்களது வேலை நிரலில் மாற்றங்கள் செய்வதாக இருந்தால், திட்டப்பணி எந்த முறையில் பங்களிப்பாளர்களிடமிருந்து நிரலைப் பெறுகிறது என்று ஆராயுங்கள். ஒவ்வொரு திட்டப்பணியும் ஒவ்வொரு வரைமுறைகளை உடையதாக இருப்பதால், உங்களது நிரலை அளிப்பதற்கு முன் அதை எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டாக PostgreSQL திட்டப்பணி மிகக் கடுமையான செயல்முறையைக் கொண்டுள்ளது. மடலாடற் குழுவிற்கு அனுப்பப்பட்ட ஒட்டு(Patch) வடிவிலான நிரல் மாற்றங்கள், முக்கிய உருவாக்குபவர்களால் ஒவ்வொன்றாக பரிசோதிக்கப்படும். மாறாக Parrot போன்ற திட்டப்பணிகளில் நிரலை ஒப்படைக்கத்(commit) தேவையான சிறப்புரிமைகளே(privilege) எளிதில் கிடைத்து விடும். திட்டப்பணி GitHub-ஐ பயன்படுத்தினால், அதிலுள்ள இழுக்க அனுமதி(pull request) பண்புக்கூறை செயல்முறைகளில் ஒன்றாகக் கொள்ளலாம்.

நிரலை மாற்றும் போது பொறுப்புள்ள குழும உறுப்பினராக நடந்து கொள்ள வேண்டும். உங்களது நிரல் பாணி(style) மற்ற நிரல்களுடன் ஒத்திருக்கும் படி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சேர்க்கும் அல்லது மாற்றிய நிரல் மற்றவைகளைப் போலவே இருத்தல் அவசியம். bracing style அல்லது இடைவெளிகளைக் கையாலும் விதம் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் மற்ற நிரலாக்கத் தரங்களுடன் ஒத்துப் போகாத நிரலை ஒப்படைப்பது பெரிய தவறாகும். அவ்வாறு செய்வது ‘எனக்கு உங்களது பாணி பிடிக்கவில்லை. எனது பாணியே சிறந்தது என்று நான் நினைக்கிறேன். நீங்களும் எனது பாணியையே பின்பற்ற வேண்டும்’ என்று சொல்வதற்கு ஒப்பாகும்.

6) Release candidate அல்லது Beta பதிப்பை சோதியுங்கள்:

பல பணித்தளங்களில்(platform) இயங்குமாறு வடிவமைக்கப்பட்ட எந்தவொரு திட்டப்பணியும் பல்வேறு வகையான பெயர்வுத்திறன்(portability) பிரச்சனைகளைக் கொண்டிருக்கும். வெளியீடு நெருங்கும் வேளையில், beta அல்லது release candidate பதிப்பு வெளியிடப்பட்டிருக்கும் போது அது பலரால் பல பணித்தளங்களில் சோதனை செய்யப்படும் என்று திட்டப்பணித் தலைவர் நம்பிக் கொண்டிருப்பார். நீங்களும் அவர்களில் ஒருவராகலாம், அது உங்களுடைய பணித்தளத்தில் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று சோதிப்பதின் மூலம்.

பொதுவாக அந்த மென்பொருளை பதிவிறக்கி, உருவாக்கி(build), சோதிக்கும் படியாக இருக்கும். நீங்கள் வழக்கத்திற்கு மாறான distribution அல்லது வன்பொருளில் சோதிக்கும் போது திட்டப்பணியின் மதிப்பை அது அதிகரிக்கும். இந்த பதிப்பில், இது சரியாக வேலை செய்கிறது என்று அறிக்கையை சமர்ப்பிப்பது, நிலுவையிலுள்ள பதிப்பு நம்பத்தகுந்தது என்று திட்டப்பணித் தலைவர்கள் தெரிந்து கொள்ள உதவும்.

7) வழுவை சரி செய்யுங்கள்:

பொதுவாக பங்களிப்பாளர்கள் நிரலில் வேலையை ஆரம்பிப்பதற்கு முன் இதையே செய்வார்கள். ஆர்வத்தைத் தூண்டும் வழுவை பின்தொடரும் அமைப்பிலிருந்து தேர்ந்தெடுத்து, அதை சரி செய்ய முயலுங்கள். தேவையெனில் சரி செய்த பின் நிரலிலேயே அதை ஆவணப்படுத்துங்கள்.

Test Suite-ல் ஒரு சோதனையை நீங்கள் நிரலை சரி செய்த இடத்திற்காக சேர்ப்பது சிறந்த யோசனை; சில திட்டப்பணிகளில் வழுக்கள் களையப்படும் போது அதனுடன் அதற்கான சோதனைகளும் சேர்க்கப்பட வேண்டும். உங்களுக்கு பரீட்சயமில்லாத நிரலுக்குள் நுழைந்து சரி செய்ய முயலும் போது குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் சரி செய்ய இயலாமல் போனாலும், சரி செய்யும் முயற்சியில் நீங்கள் கண்டறிந்தவற்றை ஆவணப்படுத்துங்கள். அவை உங்களுக்கு பின்னால் வருபவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

8) சோதனையை எழுதுங்கள்:

பெரும்பாலான திட்டப்பணிகளில் நிரலை சோதிக்க test suite இருக்கும். புதிதாக சோதனைகளை சேர்க்கத் தேவையில்லாமல் இருக்கும் test suite கற்பனை செய்ய முடியாத ஒன்று. C-க்கு gcov அல்லது Perl-க்கு Devel::Cover போன்ற test coverage கருவிகளைப் பயன்படுத்தி, மூல நிரலில் test suite-ஆல் சோதிக்கப்படாத இடங்களைக் கண்டுபிடித்து, அதற்கான சோதனையை test suite-ல் சேர்க்க வேண்டும்.

9) தொகுப்பு எச்சரிக்கைகளை மறைத்து விடுங்கள்:

C அடிப்படையிலான சில திட்டப்பணிகள், உருவாக்கத்தின் போது சமயங்களில் விந்தையான தொகுப்பு எச்சரிக்கை செய்திகளை திரையில் உமிழும். இந்த எச்சரிக்கைகள் பெரும்பாலும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டுவது இல்லை. ஆனால் பிரச்சனைகளைப் போன்று தோற்றமளிக்கும். அதிகப்படியான எச்சரிக்கைகள் தொகுப்பியை ஓலமிடும் ஓநாயைப் போல் ஆக்கி விடும். உண்மையிலேயே இந்த எச்சரிக்கைகள் வழு ஏதாவது மறைந்திருப்பதைக் காட்டுகிறதா என்று ஆராயுங்கள். இல்லையெனில் நிரலில் மாற்றங்கள் செய்து, அவற்றை மறைத்து விடுவது தவறான சந்தேகங்களைத் தவிர்க்க உதவும்.

10) குறிப்புரையை சேருங்கள்:

நீங்கள் நிரலைப் படிக்கும் போது, சில இடங்கள் குழப்பமானவைகளாக உங்களுக்குத் தோன்றலாம். மற்றவர்களும் அதே இடங்களில் குழப்பமடைய வாய்ப்புகள் உண்டு. எனவே நிரலில் குறிப்புரைகளை சேர்த்து, அவற்றை ஆவணப்படுத்தி ஒரு patch-ஐ ஒப்படையுங்கள்.

ஆவணப்படுத்துதல்

ஆவணப்படுத்துதலே ஒரு திட்டப்பணியில் விரைந்து முடிக்கப்படும் வேலையாகும். பயனர்களைக் கருத்தில் கொள்ளாது, திட்டப்பணியை நன்கு அறிந்தவர்களின் பார்வையிலிருந்து ஆவணப்படுத்துவதால், சில சமயங்களில் ஆவணங்களைப் படிக்கும் போது, பயனர் ‘இந்த ஆவணத்தின் படி, இதைப் படிப்பதற்கு முன்னர் எனக்கு அந்த பொதியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்’ என்று நினைக்கக் கூடும். சில நேரங்களில் புதியவர்கள் ஆவணங்களில் உள்ள, திட்டப்பணிகளில் வேலை செய்பவர்களால் கண்டுபிடிக்க முடியாத குறைகளைக் கூட எளிதில் கண்டறிந்து விடுவார்கள்,

11) எடுத்துக்காட்டை உருவாக்குங்கள்:

எந்தவொரு திட்டப்பணியும் அதிகப்படியான ‘எப்படி-பயன்படுத்த-வேண்டும்’ எடுத்துக்காட்டுகளைக் கொண்டிருப்பதில்லை. இணைய பயன்பாட்டு நிரலாக்க இடைமுகப்போ(Web API), நிரல் நூலகமோ அல்லது கட்டளையோ, அதை எப்படி பயன்படுத்துவது என்று எடுத்துரைக்கும் சிறந்த எடுத்துக்காட்டு, பல பக்கங்களைக் கொண்ட ஆவணங்களைக் காட்டிலும் அவற்றின் பயன்பாட்டை விரைவாகவும், தெளிவாகவும் தெரிந்து கொள்ள உதவும்.

பயன்பாட்டு நிரலாக்க இடைமுகப்பு அல்லது நூலகத்திற்கு, அதைப் பயன்படுத்தி ஒரு எடுத்துக்காட்டு நிரலை உருவாக்குங்கள். அந்த எடுத்துக்காட்டை மூல நிரலிலிருந்தே பிரித்தெடுக்கும் படியாக, அதனுடன் இணைத்து விடுங்கள். ஒரு கருவியாக இருப்பின், அதை எப்படி நடைமுறையில் பயன்படுத்தலாம் என்று எடுத்துக் காட்ட வேண்டும். பயன்பாடுகளை நிறுவுதல் போன்ற முக்கியமான செயல்களுக்கு திரைப்பிடிப்புகளை(screen shot) உருவாக்கிக் கொடுப்பதும் நன்று.

குழுமத்தில் செயல்படுதல்

திறவூற்றின் ஒரு பகுதியே நிரல் சம்பந்தப்பட்டது. மற்றபடி அதன் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிப்பது, குழுமமே. இதோ அதன் மேம்பாட்டிற்கு உதவ சில வழிகள்.

12) கேள்விக்கு பதிலளியுங்கள்:

குழும உருவாக்கத்திற்கு உதவ சிறந்த வழி, பிறருக்கு உதவுவது. கேள்விகளுக்கு பதிலளிப்பது, அதுவும் புதிய பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது திட்டப்பணியின் வளர்ச்சிக்கு செய்யும் பேருதவியாகும், ஆவணங்களைப் படித்துத் தெரிந்து கொள் என்று சொல்லாமல், ஒரு புதியவரின் கேள்விக்கு பதிலளிக்க நீங்கள் ஒதுக்கும் நேரம், பின் வரும் நாட்களில் குழுமத்திற்கு ஒரு துடிப்பான உறுப்பினர் கிடைக்க வழி வகுக்கும்.

13) வலைப்பதிவு எழுதுங்கள்:

உங்களுக்கென்று ஒரு வலைப்பதிவு இருப்பின், அதில் நீங்கள் பயன்படுத்தும் திட்டப்பணியுடனான உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். ஒரு மென்பொருளை பயன்படுத்தும் போது உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை, அதை நீங்கள் எப்படி சரி செய்தீர்கள் என்று சொல்லுங்கள். திட்டப்பணியை உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருப்பது மற்றும் எதிர்காலத்தில் இதே பிரச்சனையை சந்தித்து, அதை சரி செய்ய இணையத்தில் தேடுபவருக்காக பதிவு செய்வது என இரண்டு வழிகளில் இது உதவிகரமாக இருக்கும். (உங்களது தொழில்நுட்ப அனுபவங்கள் நிறைந்த வலைப்பதிவானது, வேலை தேடும் வேளையில் குறிப்பிட்ட அந்த மென்பொருளில் உங்களுக்கு உள்ள அனுபவங்களைத் தெரிவிக்க சிறந்ததொரு வழியாகும்.)

14) இணையதளத்தை மேம்படுத்துங்கள்:

பெரும்பாலான நிரலாளர்கள் வரைபட வடிவமைப்பில் சிறந்தவர்கள் அல்ல. நீங்கள் இணைய வடிவமைப்பில் திறமையானவராக இருந்தால் திட்டப்பணியின் இணைய தளத்தை மேம்படுத்த உதவுவதின் மூலம் மக்களுக்கு திட்டப்பணியின் மீதான படிமத்தை மேம்படுத்த உதவலாம்.

திறவூற்றுக்குப் பங்களிக்க பல வழிகள் இருக்கின்றன. எனவே திறவூற்றைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அவரவர் திறமைக்கேற்ப தங்களால் இயன்றதை குழுமத்திற்கு பங்களித்து, கணிமையின் இன்றியமையாததொரு பகுதியான திறவூற்றுக்கு உதவ முன் வர வேண்டும்.

ஆங்கில மூலம் :- www.softwarequalityconnection.com/2012/03/14-ways-to-contribute-to-open-source-without-being-a-programming-genius-or-a-rock-star/

 

இரா.சுப்ரமணி. மூத்த மென்பொருள் வல்லுனராக ASM Technologies நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன்.  மதுரை க்னு/லினக்ஸ் பயனர் குழுவின் உறுப்பினர்.

[ glug-madurai.org ]

கணியம் மேன்மேலும் வளர வாழ்த்துகள்.

மின்னஞ்சல் : subramani95@gmail.com
வலைப்பதிவு : rsubramani.wordpress.com

%d bloggers like this: