முப்பரிமாணப் பொருளை அச்சிட, ஒரு 3D அச்சுப்பொறிக்கு பொருளின் எண்ணிம வரைபடம் தேவை. இது வடிவியல், நிறம், அமைப்பு மற்றும் மூலப்பொருட்கள் போன்ற நம் பாகத்தைப் பற்றிய அனைத்து தொடர்புடைய தரவுகளையும் சேமிக்கும் ஒரு கோப்பு. அத்தகைய தரவை வைத்திருக்கக்கூடிய பல கோப்பு வடிவங்கள் உள்ளன.
உங்களிடமுள்ள வடிவமைப்பு மென்பொருட்கள் எந்தவிதமான கோப்பு வகையில் சேமிக்க முடியும் அல்லது ஏற்றுமதி செய்ய முடியும் என்று பாருங்கள். மேலும் நீங்கள் பயன்படுத்தப்போகும் சீவுதல் மென்பொருள் மற்றும் முப்பரிமாண அச்சு எந்திரத்தில் எந்தவிதமான கோப்பு வகையை உள்ளீடு செய்ய முடியும் என்று பாருங்கள். இவற்றைப் பொருத்து எந்தக் கோப்பு வடிவத்தில் சேமிப்பது என்று முடிவு செய்யலாம்.
STL கோப்பு வடிவம்
வழக்கமான ஒருவகை அச்சுக்கலைக்கு Lithography என்று பெயர். அச்சிட்ட மின்சுற்றுப்பலகை (printed circuit board) தயாரிப்புக்கும் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. இதேபோல முப்பரிமாணத்தில் அச்சிடுவதால் Stereolithography என்று பெயர் வைத்தனர். ஆகவே இதற்கான கோப்புகளுக்கு .STL என்று பெயர் வைத்தனர். இதற்கு ஒளித் திண்மமாக்கல் (photo-solidification) என்ற மற்றொரு பெயருமுண்டு. இந்தக் கோப்பு வடிவம் வளைந்த மேற்பரப்பைக் குறிப்பதற்கு படத்தில் காண்பது போல் முக்கோண ஓடுகளைப் பயன்படுத்துகிறது. மேற்பரப்பு சீர்மை தேவைக்கு ஏற்ப சிறிய முக்கோணங்களைப் பயன்படுத்தலாம்.
OBJ கோப்பு வடிவம்
STL கோப்பு வடிவத்தில் வண்ணத் தகவலைச் சேமிக்க முடியாது என்பதால், OBJ வடிவம் பல வண்ணங்களில் ஒரு பாகத்தை அச்சிடுவதற்கு தோதான கோப்பு வடிவமாகும்.
AMF கோப்பு வடிவம்
இந்த Additive manufacturing file format (AMF) கோப்பு வடிவம் தொழில்துறை செந்தரமாக (industry standard) உருவாக்கப்பட்டது. நிறம், மூலப்பொருட்கள், பின்னல்கள் (lattices) போன்ற அம்சங்களுக்கு ஆதரவைக் கொண்டுள்ளது.
3MF கோப்பு வடிவம்
இது தொடக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. பின்னர் ஒரு தொழில்துறை கூட்டமைப்பை (industry consortium) உருவாக்கி அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்தத் தரநிலை தொடர்ந்து கட்டற்ற திறந்த மூலமாக இருக்குமா என்று கவனித்துப் பார்க்க வேண்டும்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: திறந்தமூல சீவுதல் (slicing) மென்பொருள்
ஸ்லைசர் (Slic3r). தொழில்துறை உற்பத்திக்கு அல்டிமேக்கர் கியூரா (Ultimaker Cura). நுகர்வோருக்கு புரூசா ஸ்லைசர் (PrusaSlicer). சூப்பர் ஸ்லைசர் (SuperSlicer).