வாகனத் துறை முப்பரிமாண அச்சிடலின் திறனைப் பல பத்தாண்டுகளாகப் பயன்படுத்துகிறது. முப்பரிமாண அச்சிடல் விரைவான முன்மாதிரிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மற்றும் புதிய வாகன மாதிரிகளில் வடிவமைப்பு நேரத்தையும் முன்னீடு நேரத்தையும் (lead time) கணிசமாகக் குறைக்கும் திறனை நிரூபித்துள்ளது.
வாகன பாகங்களுக்குப் பல தனிப்பயன் வழியுறுதிகள் (jigs) மற்றும் நிலைப்பொருத்திகள் (fixtures) தேவை
தொழில்துறையில் உற்பத்திப் பணிப்பாய்வுகளை (workflow) 3D அச்சிடல் திறன்படுத்தியுள்ளது. முன் காலத்தில் வாகன பாகங்கள் தயாரிக்க தனிப்பயன் வழியுறுதிகள், நிலைப்பொருத்திகள் மற்றும் பிற கருவிகள் தேவைப்பட்டன. குறிப்பாக உயர்-செயல்திறன் கொண்ட இயந்திரங்களைப் பொறுத்தவரை, வரிசையாகப் பல தனிப்பயன் கருவிகள் தேவைப்பட்டன. இவை செலவைக் கூட்டி, செயல்முறையை ஒட்டுமொத்தமாக மேலும் சிக்கலாக்கும்.
எண்ணிம பணிப்பாய்வுகளின் தரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
எண்ணிம பணிப்பாய்வுகளின் தரம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொருட்கள் மேம்பட்டு, மேலும் மலிவு விலையில் செயல்படுவதால், கார்களில் மேலும் மேலும் 3D அச்சிட்ட பாகங்களைக் காண்போம். வடிவமைப்பு தனிப்பயனாக்கலுக்கான (customization) செயற்பரப்பு அதிகரித்து, அதன் விளைவாக சிறந்த செயல்திறன் கிடைக்கும்.
பேரளவில் விருப்பமைவு செய்தல் (Mass customization)
ஹென்ரி போர்டு (Henry Ford) உருவாக்கிய தொகுப்புவரிசை (assembly line) உற்பத்திமுறையில் ஒரே ஒரு மாதிரி கார், கருப்பு வண்ணத்தில் மட்டுமே தயார் செய்தார். ஆனால் இக்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு காரிலும் பல மாதிரிகளும் (models), ஒவ்வொரு மாதிரியிலும் பல வண்ணங்களும், அவற்றில் பல மாற்றங்களும் (variants) தேவைப்படுகின்றன. பேரளவு உற்பத்தியும் (mass production) செய்யவேண்டும், அதில் விருப்பமைவும் (customization) செய்ய வழியிருக்கவேண்டும் என்றால் 3D அச்சிடல் அவசியம் தேவைப்படுகிறது.
தயாரிப்பு மேம்பாட்டை விரைவுபடுத்துவது நிறுவனங்களின் முதன்மையான கவனமாக உள்ளது. ஆகவே இது 3D அச்சிடல் உத்திகளுக்கு வழிவகுக்கிறது. பெருமளவிலான தனிப்பயனாக்கம் மற்றும் கொள்முதல் ஆணைக்கு ஏற்றபடி மாற்றியமைத்தல் (configure-to-order) மற்றும் கொள்முதல் ஆணைக்கு ஏற்றபடி உருவாக்குதல் (engineer-to-order) உத்திகளுக்கான ஆதரவு ஆகியவை சந்தையில் முக்கியமாக ஆகி வருகின்றன. இவற்றுக்காக உற்பத்தியில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பது, இன்று பொருள்சேர் உற்பத்தி உத்திகளுக்கு உந்துதல் அளிக்கிறது.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: மருத்துவத் துறைப் பயன்பாடுகள்
எலும்பு மூட்டு சாதனங்களும் (orthosis) செயற்கை உறுப்புகளும் (prosthesis). திசு மற்றும் உறுப்பு மாதிரிகளை அச்சிடுதல். பல் மருத்துவத்தில் 3D அச்சிடல். அறுவை சிகிச்சையைத் திட்டமிடல்.