சிக்கலான உள் வடிவியல் கொண்ட பாகங்களுக்கு முப்பரிமாண அச்சிடல் இன்றியமையாதது
பொருளை அகற்றுவதற்குப் பதிலாக அடுக்குகளை உருவாக்குவதன் மூலம் பொருள்சேர் உற்பத்தி வேலை செய்கிறது. ஆகவே இத்தொழில்நுட்பம் சுழல் காற்றுக்குழல்கள் (spiral vents) மற்றும் உள்ளுக்குள் உள்ளான கூடுகள் (nested hollow cores) போன்ற சிக்கலான உள் வடிவியல் கொண்ட தயாரிப்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
மேலும் பொருள் நீக்கு உற்பத்தி செயல்முறையில் சில சிக்கலான வடிவமைப்புகளுக்கு இரண்டு, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய பாகங்களை உருவாக்கித் தொகுக்க வேண்டியிருக்கும். ஆனால் பொருள்சேர் உற்பத்தியில் இதை ஒரே பாகமாக உருவாக்கலாம். ஆகவே வேலை குறையும், செலவு குறையும், உற்பத்தியும் துரிதமாகும்.
முப்பரிமாண அச்சிடலில் விலையுயர்ந்த மூலப்பொருட்கள் சேதம் குறையும்
வெள்ளி, தங்கம், பிளாட்டினம் போன்ற விலையுயர்ந்த மூலப்பொருட்கள் வைத்து வேலை செய்யும்போது 3D அச்சிடல் சேதத்தை மிகவும் குறைக்கிறது. அதுவும் சிக்கலான வடிவங்கள் மற்றும் உட்கூடான பாகங்கள் தயாரிப்பில் பொருள்நீக்கு உற்பத்தியில் சேதம் மிக அதிகமாகும்.
பேரளவு தயாரிப்பில் (mass production) பொருள்நீக்கு உற்பத்திதான் செலவைக் குறைக்கும்
ஓரிரண்டு பாகங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டுமென்றால் பொருள்சேர் உற்பத்தியில் மிகவும் துரிதமாகவும் குறைந்த செலவிலும் தயாரிக்கலாம். ஆனால் நூற்றுக் கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான பாகங்கள் தயாரிக்க வேண்டுமென்றால் CNC பயன்படுத்தி பொருள்நீக்கு உற்பத்தி செய்வதுதான் துரிதமாக நடக்கும் மற்றும் செலவையும் குறைக்கும்.
சீரான மேற்பரப்புக்கு CNC எந்திரங்கள் தோதானவை
மரம், உலோகம் மற்றும் நெகிழி உள்ளிட்ட எந்தப் பொருளையும் நீங்கள் CNC எந்திரங்களில் பயன்படுத்தலாம். மேலும் CNC எந்திர வெட்டு நுணுக்கமான வேலைப்பாடுகளுக்கும், துல்லியமான அளவீடுகளுக்கும், சீரான மேற்பரப்புக்கும் மிகவும் தோதானது.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: அச்சிடுகையில் தாங்கும் பொருட்கள் (Support Substances)
உள்கூடான (hollow) பாகங்கள் உற்பத்திக்குத் தாங்கும் பொருட்கள் தேவை. 3D அச்சிடும் விளிம்புகள் (brims). சிக்கலான வடிவவியலுக்கும் (complex geometries) தாங்கும் பொருட்கள் தேவைப்படலாம். தாங்கும் பொருள் வகைகள்.