மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 7: மென்பொருள் திட்டம் நிர்வகிக்க, மேம்பட்ட பாலிமர்கள் செய்யத் தெரிந்து கொள்ளுங்கள்!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 7

எவ்வளவு முயன்றும் அருவி செயல்முறை எதிர்பார்த்த விளைவுகளைத் தராததால் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கென் ஷ்வாபர் (Ken Schwaber) மொய்திரள் (Scrum) முறையை ஜெஃப் சதர்லாண்ட் (Jeff Sutherland)-உடன் சேர்ந்து உருவாக்கி செயல்படுத்தினார். அதைப் பயன்படுத்தியதில் திட்டங்கள் வெற்றிக்குப் பின் வெற்றியாக முடிந்தன. மென்பொருள் திட்டங்களுக்கு என்ன அடிப்படை நெறிமுறைகளால் அருவி முறையை விட மொய்திரள் மிகவும் வெற்றிகரமாக வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ள அவர் விழைந்தார்.

டூபாண்ட் நிறுவனத்தின் டெலாவேர் தொழில்நுட்ப மையத்தில் மேம்பட்ட செயல்முறை கட்டுப்பாடு வேலை செய்துகொண்டிருந்த அவரது நண்பர்களுடன் பேசினார். டூபாண்ட் நிறுவனம் ரேயான் போன்ற எளிய பாலிமர்கள் உற்பத்தியில் தேர்ச்சி பெற்றிருந்தது. அவர்களால் உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் அவற்றை உற்பத்தி செய்ய முடிந்தது. ஆனால் GoreTex போன்ற மேம்பட்ட பாலிமர்கள் உற்பத்தி மிகவும் சிக்கலானதாக இருந்ததால் பல இடங்களில் செய்ய முடியவில்லை. அவரது நண்பர்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.

எளிதில் கணிக்க முடியாத சிக்கலான செயல்முறைகளுக்கு அனுபவ செயல்முறை கட்டுப்பாடு (empirical process control) என்ற உத்தியே கையாளப்படுகிறது. மென்பொருள் உருவாக்குவதற்கு இதுவே தக்க செயல்முறை என்று பாலிமர் செயல்முறை நிபுணர்கள் பரிந்துரைத்தனர். ஏனென்றால் தேவைகள் மாறிக்கொண்டே உள்ளன, தொழில்நுட்பங்களும் சிக்கலானவை மற்றும் வேலை செய்பவர்கள் படைப்பு சிந்தனை செய்ய வேண்டியுள்ளது. இந்த அணுகுமுறை எதிர்பாராதவைகளைச் சமாளிக்கத் தோதானது. முன்னேற்றத்தை அடிக்கடி ஆய்வு செய்து பின்னர் அடுத்த படிகளை அதற்குத்தக அமைப்பதன் மூலம் வெளியீட்டை மேம்படுத்தலாம் என்று கூறினர்.

180px-Batch_reactor_STR.svg.png

கொள்கலன் என்பது ஒரு மூடிய இடம். இதற்குள், பிரச்சினையின் ஒட்டுமொத்த சிக்கலை பொருட்படுத்தாமல், வேலையை செய்து முடிக்க இயலும். மொய்திரள் செயல்முறையின் கொள்கலன் ஒரு குறுவோட்டம் (sprint). நாம் இந்தக் கொள்கலனில் வேலையைச் செய்யத் தேவையான அனைத்து திறமைகளும் உள்ள குழு உறுப்பினர்களை வைக்கிறோம். உயர்ந்த மதிப்புள்ள, தீர்வு காண வேண்டிய பிரச்சினைகளையும் நாம் இதே கொள்கலனில் வைக்கிறோம். உறுப்பினர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண முழு முயற்சி செய்ய ஏதுவாக நாம் எந்த வெளித் தொந்தரவும் வராமல் கொள்கலனைப் பாதுகாக்கிறோம். பிரச்சினையில் வேலை செய்ய அனுமதிக்கும் நேரத்தை முன்னரே தீர்மானிப்பதன் மூலம் நாம் கொள்கலனைக் கட்டுப்படுத்துகிறோம். கொடுத்த நேரத்தில் எவ்வளவு வேலை முழுவதும் செய்து முடிக்க இயலும் என்று எதிர்பார்க்கிறார்களோ அந்த அளவு வேலையை உறுப்பினர்கள் எடுத்துக் கொண்டால் போதும். கொடுத்த நேர முடிவில் நாம் கொள்கலனைத் திறந்து விளைவுகளை ஆய்வு செய்வோம். இதன் அடிப்படையில் நாம் கொள்கலனை அடுத்த குறுவோட்டத்துக்குத் தக மீட்டமைப்போம். இவ்வாறு அடிக்கடி மறுதிட்டமிடுதலால் நம்மால் திறனை அதிகப்படுத்த முடியும்.

இந்த முயற்சியின் மூலம் மொய்திரள் மற்றும் அதன் முக்கிய அங்கமான குறுவோட்டம் இரண்டுக்கும் கோட்பாடுகள் கொண்டு திடமான அடித்தளம் அமைத்தார்.

2010-ல் மொய்திரளுக்கு அறிவுத்தொகுப்பு இருந்தால் குறிப்புதவிக்கு எளிதாக இருக்கும் என்று ஜெஃப் சதர்லாண்ட்-உடன் சேர்ந்து மொய்திரள் கையேடு எழுதினார். மொய்திரள் ஒரு சட்டகம். ஆய்வு செய்யப்பட்ட அணுகுமுறைகள் உண்டு. பயன்படுத்தப்படும் விவரமான நடைமுறைகள், உத்திகள், செயல்முறைகள் கிடையாது.  சட்டகங்கள் சக்தி வாய்ந்தவை. ஏனென்றால் அவற்றில் போதுமான இணங்கு தன்மை இருப்பதால், நன்கு ஆய்வு செய்யப்பட்ட அணுகுமுறைகளைப் பயன்படுத்தி, மாறிவரும் நிலைமைகளுக்கு ஏற்ப அல்லது உங்கள் நிறுவனத்துக்கு தக அமைத்துக்கொள்ள முடியும். மொய்திரள் கையேடு மொத்தம் 16 பக்கங்கள்தான்! 2011-லும் பின்னர் 2013-லும் செயலாக்க அனுபவத்தின் அடிப்படையில் மொய்திரள் கையேட்டில் சில சிறிய மாற்றங்கள் செய்தனர்.

ஒரு அணியில், மொய்திரள் நடத்துனர் (Scrum Master) மற்றும் தயாரிப்பு உரிமையாளர் (Product Owner) தவிர, 3 முதல் 9 பேர் இருக்கலாம். மூன்றை விடக்குறைவாக இருந்தால் வேலையை முழுவதும் செய்து முடிக்கத் தேவையான திறமைகள் எல்லாம் இருக்குமா என்பது சந்தேகம். ஒன்பதை விட அதிகமாக இருந்தால் அணியை ஒருங்கிணைத்தல் கடினம். கருத்துக்களை பரிமாறுதல் மற்றும் தகவல்களை பகிர்தல் கடினமானதாக ஆகிறது.

மொய்திரளின் பயன்களைப் பற்றி கென் ஷ்வாபர் இவ்வாறு கூறுகிறார், “ஆர்வமுள்ள உருவாக்குநர்கள்* தங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக வேலை செய்து மிகவும் மதிப்புமிக்க, ஆக்கபூர்வமான மென்பொருட்களை உருவாக்க உகந்த வழி மொய்திரள். ஆனால் அருவி செயல்முறைக்கான கலாச்சாரத்தை பின்பற்றிய நிறுவனங்கள் மாறுவது மிகக் கடினமான பாதையாக உள்ளது. அக்கலாச்சாரத்தில் கட்டளையும் கட்டுப்பாடும் மற்றும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளும் அதிகம். எனினும் இந்தப் பாதையை அவர்கள் கடந்து வர முடிந்தால் வெகுமதிகளோ மிகப் பெரியவை. இந்த மாற்றத்தை மெனக்கெட்டு செய்யும் நிறுவனங்கள் சந்தைப் போட்டியில் வெல்வர், மற்றும் நிரலாளர்கள் அனைவரும் அங்கு வேலை செய்ய விரும்புவர்.”

இதனால்தான் மொய்திரளை புரிந்து கொள்வது எளிது ஆனால் செயலாக்கத்தில் தேர்ச்சி பெறுவது கடினம் என்று கையேடு சொல்கிறது.

* உருவாக்குநர்கள் என்ற பொதுவான சொல்லில் நிரலாளர்கள், சோதனையாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் மென்பொருள் திட்டங்களில் வேலை செய்யும் யாவரையும் சேர்த்தே குறிப்பிடுகிறோம்.

%d bloggers like this: