மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 9: லேத் பட்டறையில் வேலையை மாற்றி மாற்றி ஏற்றி இறக்குவது போல!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 9

நான் தகவல் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு முன் ஒரு இயந்திர பொறியாளராக என் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினேன். நடுத்தர அளவிலான தொழிற்சாலையில் வேலை திட்டமிடல் எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். லேத் பட்டறை இயக்குபவரிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னார், “காலைல கிருஷ்ணன் சார் சொல்ற வேலையை ஏத்துவோம் சார். அதைக் கஷ்டப்பட்டு அலைன் பண்ணி முடிச்சு டூல் செட் பண்ணி கடைசல ஆரம்பிக்கலாம்னு இருப்போம். அப்பதான் சக்திவேல் சார் வந்து அதை இறக்கிட்டு வேற வேலைய ஏத்தச் சொல்லுவாரு. அப்புறம் மூர்த்தி சார் ரவுண்டு வருவாரு… ஆக கடைசல் பிடிக்கறது கம்மிதான் சார். ஏத்தி இறக்குற வேலைதான் ஜாஸ்தி.”

சில மேலாளர்கள் தங்களிடம் வந்த வேலைகளையெல்லாம் கீழே வேலை செய்பவர்களிடம் அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். முன்காலத்திலாவது பார்த்தால் கோப்புகள் மேசை மேல் அடுக்காகத் தெரியும். இப்பொழுது அதுவும் தெரிவதில்லை – மின் அஞ்சலிலோ அல்லது மின் ஆவணங்களிலோ கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து உள்ளன. எல்லா வேலையும் அவசரம், உடனே வேண்டும், நேற்றே வேண்டும். ஒரே ஒரு தலைவர் இருக்கும்போதே இப்படி என்றால் சிலருக்குப் பல தலைவர்கள் உண்டு. ஒவ்வொருவரும் தன் வேலையை முதலில் செய்து தர வற்புறுத்துவர்.

இது போதாதென்று வேலை செய்பவர்கள் சிலரும் தாங்கள் எவ்வாறு பல்பணியாக்கத்தில் அசகாய சூரன் என்றும் அஷ்டாவதானி என்றும் சொல்லி மார் தட்டுவர்.

ஆனால் ஆராய்ச்சிகளின்படி பல்பணியாக்கம் உற்பத்தித் திறனை மிகக் குறைக்கிறது. ஏனென்றால் நம்முடைய மூளை பல்பணியாக்கத்திற்கு தோதாக செய்யப்படவில்லை. நாம் பல்பணியாக்கம் செய்வதாக நினைக்கும்போது உண்மையில் ஒரு பணியிலிருந்து மற்றொரு பணிக்கு மிக வேகமாக முன்னும் பின்னும் தாவுகிறோம். நிரலாளர்கள் மட்டுமல்ல, அறிவு சார்ந்த வேலை செய்பவர் எவருமே எடுத்த வேலையை முழுவதும் முடித்துவிட்டு அடுத்த வேலைக்கு செல்வதே உற்பத்தித் திறனுக்கு சிறந்தது, அவர்களுடைய மன அழுத்தத்துக்கும் உகந்தது. ஆகவே தலை போகிற அவசரம் என்றாலொழிய செய்து கொண்டிருக்கும் வேலையை முடித்து விட்டு அடுத்த வேலைக்குச் செல்வதுதான் உசிதம்.

நிரலாக்கம் செய்வதற்கு நிரலாளர்கள் ஒரே நேரத்தில் நிறைய விஷயங்களை குறுகிய கால நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு விஷயங்கள் அவர்களால் நினைவில் வைக்க முடிகிறதோ அவ்வளவுக்கு அவர்கள் நிரலாக்க உற்பத்தித் திறன் அதிகம். முழு வேகத்தில் வேலை செய்யும் நிரலாளர்கள் எண்ணிலடங்கா விஷயங்களை தங்கள் நினைவில் வைத்து இருப்பார்கள் – மாறிகளின் பெயர்களில் இருந்து, தரவுக் கட்டமைப்புகள், முக்கியமான API-கள், அவர்கள் எழுதிய மற்றும் நிறைய அழைக்கும் பயனுடை செயல்பாடுகளின் பெயர்கள், இத்யாதி… இத்யாதி.

இதைத்தான் மன ஒருமை அல்லது முழுமையான ஒருமுக சிந்தனை என்று கூறுகிறோம். இதை ஆங்கிலத்தில் “flow” அல்லது “in the zone” என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் வேலை செய்பவர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியாமல் முழுமையாகத் தங்கள் பணியில் கவனம் செலுத்துவார்கள். நேரம் காலமே தெரியாமல் கடினமான வேலைகளையும் செய்து முடிப்பார்கள். எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், மற்றும் விளையாட்டு வீரர்கள் கூட மன ஒருமையைப்பற்றி சொல்வார்கள்.

Scrumஅருவி செயல்முறையில் தேவைப் பட்டியலில் முன்னுரிமை ஒன்று, இரண்டு, மூன்று என்று குறிப்பிடுவது வழக்கம். ஆனால் பலர் பெரும்பாலான தேவைகளை முன்னுரிமை ஒன்று என்றே குறிப்பிடுவர்.

மேற்கண்ட காரணங்களால்தான் மொய்திரள் விதிமுறை கிடக்கும் வேலைகளை வரிசைப்படுத்தச் சொல்கிறது. அதுவும் தயாரிப்பு உரிமையாளருக்கு மட்டும்தான் வரிசைப் படுத்தும் அதிகாரம் உண்டு. வேறு யாராக இருந்தாலும் முன்னுரிமை தேவைப்பட்டால் தயாரிப்பு உரிமையாளரிடம்தான் பேச வேண்டும். குறுவோட்டம் ஆரம்பிக்கும் வரை தயாரிப்பு உரிமையாளர் தலைகீழ் மாற்றங்கள் கூடச் செய்யலாம். ஆனால் வேலையை ஆரம்பித்தபின், அதாவது குறுவோட்டம் ஆரம்பித்தபின், தயாரிப்பு உரிமையாளர் கூட எந்த மாற்றமும் செய்ய முடியாது. இதுதான் மொய்திரளின் தனிச்சிறப்பு.

கென் ஷ்வாபர் குறுவோட்டத்தை ஒரு கொள்கலன் போன்று உருவகப்படுத்தியதை நினைவில் கொள்ளுங்கள். குழு உறுப்பினர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண முழு முயற்சி செய்ய ஏதுவாக எந்த வெளித் தொந்தரவும் வராமல் மொய்திரள் நடத்துநர் கொள்கலனைப் பாதுகாக்க வேண்டும்.

இதற்கு வழக்கமான விதிவிலக்கு ஒன்றே ஒன்று உண்டு. ஓடிக்கொண்டிருக்கும் தயாரிப்பில் வழு வெளிப்பட்டு பயனர்கள் வேலை செய்வது தடைப்பட்டால்  அதற்கு முன்னுரிமை கொடுத்தே ஆக வேண்டும். குறுவோட்டத்துக்குத் திட்டமிடும்போது சிலர் முன்யோசனையாக சுமார் 5 முதல் 10% நேரத்தை தயாரிப்பில் வழு வெளிப்பட்டால் சரி செய்வதற்கு ஒதுக்குவர். சிலர் திட்டமிட்ட வேலையில் ஒன்றை வெளியில் எடுத்துவிட்டு இம்மாதிரி நெருக்கடி வழுச் சீட்டை குறுவோட்டத்தில் சேர்ப்பர். ஆனால் அத்தியாவசியமான வழுவாக இருந்தால் மட்டுமே இந்த மாற்றம் செய்யலாம்.
வேறு ஏதாவது மாற்றம் செய்தே ஆக வேண்டுமென்றால் என்ன செய்வது? அசாதாரணமான சூழ்நிலைகளில், வேறு வழியே இல்லையென்றால், தயாரிப்பு உரிமையாளர் முழுக் குறுவோட்டத்தையும் ரத்து செய்து விட்டு அடுத்தக் குறுவோட்டத்தைப் புதிதாகத் தொடங்கலாம். ஆனால் இது குழுவுக்கு அதிர்ச்சிகரமான நடவடிக்கை. மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

– இரா. அசோகன் ( ashokramach@gmail.com )

மேலும் இந்த தொடரில் வந்த கட்டுரைகளை வாசிக்க : www.kaniyam.com/category/agile/

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: