எளிய தமிழில் VR/AR/MR 14. மிகை மெய்ம்மை (AR) வகைகள்

மிகை மெய்ம்மை (AR) வகைகள்

மிகை மெய்ம்மை (AR) வகைகள்

குறிப்பி (marker) அடிப்படையிலான மிகை மெய்ம்மை (AR)

குறிப்பி அடிப்படையிலான (Marker-based) மிகை மெய்ம்மை அனுபவங்களுக்கு ஒரு தொடக்கல் (triggering) படம் தேவைப்படுகிறது. குறிப்பி என்பது QR குறியீடு போலவேதான், ஆனால் இன்னும் எளிமையாக இருக்கும். இதை ஒருவர் தங்கள் திறன்பேசியைப் பயன்படுத்தி AR செயலியின் மூலம் வருடலாம் (scan). படம் ஒத்திருந்தால் முன்கூட்டியே தயாரித்த AR காணொளி அல்லது அசைவூட்டத்தைக் காட்டலாம். குறிப்பி அடையாளம் காணல் வேலையை சாதனத்திலேயே செய்யலாம். அல்லது இணைய வழியாக மேகக்கணிமைக்கும் (cloud) அனுப்பலாம்.

குறிப்பியற்ற (markerless) AR

சுற்றுச் சூழலை தேடிப்பார்ப்பதன் மூலம் குறிப்பியற்ற (Markerless) AR செயல்படுகிறது. ஆகவே இதற்குத் தொடக்கல் படம் தேவையில்லை. எடுத்துக்காட்டாக, உட்புற வடிவமைப்பை (interior decoration) உருவாக்கும் செயலிகள் இம்முறையைப் பயன்படுத்துகின்றன. முதலில் உங்கள் திறன்பேசியின் படக்கருவி மூலம் வெற்று அறையைக் காணொளி மூலம் காட்டச் சொல்லும். பின்னர் அதன் தரையில் மெய்நிகர் அறைகலன்களை மேலடுக்காக வைக்கும்.

புவிநிலை (GPS) அடிப்படையிலான AR

இதுவும் குறிப்பியற்ற AR தான். ஆனால் அதிலேயே ஒரு சிறப்பு வகை. போக்கிமான் கோ (Pokemon Go) என்ற திறன்பேசி விளையாட்டு பற்றி முந்தைய கட்டுரையில் பார்த்தோமல்லவா? அதுவே நல்ல புவிநிலை (GPS) அடிப்படையிலான AR எடுத்துக்காட்டு. சுற்றுலாப் பயணிகளுக்குக் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தவுடன் காணொளிக் கையேடு காட்ட இது மிகவும் தோதான முறை.

ஒளிவீச்சு (Projection) அடிப்படையிலான AR 

எடுத்துக்காட்டாக ஒளிவீச்சு விசைப்பலகைகள் இம்முறையைப் பயன்படுத்துகின்றன. இது திரைப்படக்கருவி போன்ற ஒளிவீச்சுக் கருவிகளைப் பயன்படுத்துகிறது. இதற்காகவே  வடிவமைக்கப்பட்ட பணி மேற்பரப்பிலோ அல்லது பயனர் பணிபுரியும் பகுதிகளிலேயோ நேரடியாக ஒளியை வீசும். இது பணிகளுக்கு உடனடி வழிகாட்டுதலை வழங்குகிறது. இது தொழிற்சாலையில் தொகுத்தல் (Assembly), பழுதுபார்த்தல் (Maintenance), வெட்டுளி மாற்றுதல் (Tool changeovers) போன்ற வேலைகளுக்குத் தோதானது.

மேற்சுமத்தல் (Superimposition) அடிப்படையிலான AR

உடற்கூறியல் (anatomy) பாடத்தில் உடலிலுள்ள எலும்புகளின் அமைப்பைப் பற்றிக் கற்பிக்க வேண்டுமென்று வைத்துக் கொள்வோம். முழு மனித உடலின் படத்தில் கால்களின் எலும்புகளின் விவரத்தை மட்டும் கால்களின் மேல் காட்டலாம்.

இம்மாதிரி ஒரு பாகத்தை முழுவதுமோ அல்லது ஒரு பகுதியையோ மறைத்து அதன்மேல் AR படங்களைக் காட்டுவதை மேற்சுமத்தல் AR என்று சொல்லலாம்.

நன்றி

  1. Understanding the Types of Augmented Reality App

இத்தொடரில் அடுத்த கட்டுரை: விடுநிலைகள் (Degrees of freedom – DoF)

மூழ்கவைக்கும் அனுபவமும் விடுநிலைகளும். விடுநிலைகள் என்றால் என்ன?  பெயர்ச்சி இயக்கங்கள் (translational movements). சுழற்சி இயக்கங்கள் (rotational movements).

ashokramach@gmail.com

%d bloggers like this: