அமேசான் இணையச்சேவைகள் – S3 – எளிய சேமிப்பகச்சேவை

நிரல்வழிச் செயல்முறைக்கு முன்னதாக, எளிய சேமிப்பகச்சேவையின் (S3) அடிப்படையை தெரிந்துகொள்வது அவசியம். எனவே இப்பதிவில் S3 பற்றி தெரிந்துகொண்டு, அடுத்தபதிவில் செயல்முறையைப் பார்க்கலாம்.

அமேசானில் பெருமளவு பயன்படுத்தப்படும் சேவைகளில் எளிய சேமிப்பகச்சேவையும் ஒன்று. இதன் அடிப்படைப் பயன்பாடு கோப்புகளைச் சேமித்துவைப்பதாக்கும். S3இல் நமக்கென கொள்கலன்களை (Buckets) உருவாக்கிக்கொண்டபிறகு, அவற்றில், கோப்புகளைச் சேமித்துவைக்கலாம். இவற்றை கோப்பகங்களில் ஒருங்கிணைத்து வைக்கவும் முடியும். மேலும், ஒவ்வொரு கோப்பைப் பற்றியும், கோப்பகத்தைப் பற்றியும், சில தகவல்களையும் அவற்றோடு சேர்த்து சேமிக்கலாம்.

ஒரு வலைத்தளத்தில், பயனர்கள், தங்கள் ஆவணங்களையோ, படங்களையோ, பதிவேற்றி வைத்துக்கொள்ளும் வசதியைத் தரவிரும்பும்போது, அதற்கென இச்சேவையை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வெளிப்புறத்தோற்றத்திற்கு கோப்புகளையும், கோப்பகங்களையும் இட்டுவைக்கிற, ஒரு கோப்பு சேமிப்பகமாகத் (File Storage) தோன்றினாலும், அமேசான், இதனை ஒரு பொருள் சேமிப்பகமாகச்  (Object Storage) செயல்படுத்தியிருக்கிறது. கோப்பு சேமிப்பகத்தில், நாம் சேமிக்கும் கோப்பகங்களும், கோப்புகளும், படிநிலை அமைப்பில் (Hierarchy) சேமித்துவைக்கப்படுகின்றன. ஒரு மூலக்கோப்பகத்தில் தொடங்கி, அதற்குள்ளாக, மேலும், கோப்பகங்களையும், கோப்புகளையும் இணைத்துகொண்டே போகும்போது, அவை மரம்போன்ற படிநிலை அமைப்பில் சேமித்துவைக்கப்படுகின்றன. இதனால், அடிமட்டத்திலுள்ள கோப்புகளை அணுகுவதற்கு அதிகநேரமெடுக்கிறது.

ஆனால், பொருள் சேமிப்பகத்தில், கோப்புகளனைத்தும் தட்டையாக சேமிக்கப்படுகின்றன. அதாவது, ஒவ்வொரு கோப்பும், அதன் தனிப்பட்ட அடையாளத்தைக்கொண்டு அணுகப்படுகிறது. எனவே, மூலக்கோப்பகத்திலிருக்கும் கோப்புகளையும், படிநிலையில் கீழ்மட்டத்திலுள்ள கோப்பகத்திலிருக்கும் கோப்புகளையும், ஒரேமாதிரி அணுகமுடிகிறது.

எளிய சேமிப்பகச்சேவையைப் பயன்படுத்துமுன், அதன் துறைசார் சொற்களை அறிந்திருப்பது அவசியம்.

  • பொருள்கள் – Objects
  • கொள்கலன்கள் – Buckets
  • திறப்புகள் – Keys
  • பிராந்தியங்கள் – Regions

பொருள்கள்

நாம் முன்னமே அறிந்ததுபோல, இச்சேவையைக்கொண்டு நாம் சேமிக்கும் கோப்புகளை பொருள்கள் என அழைக்கிறோம். நாம் சேமிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான தரவும் (object data), அதைப்பற்றிய தரவும் (metadata) இருக்கும். எடுத்துக்காட்டாக, நாம் ஒரு படக்கோப்பினைச் சேமிக்கிறோமென்றால், அக்கோப்பில் எதைப் படமெடுத்திருக்கிறோம் என்பது அப்பொருளுக்கான தரவு. அதேநேரம், அக்கோப்பின் நீள, அகலங்கள், அதன் கொள்ளளவு, அது எப்போது உருவாக்கப்பட்டது, எப்போது பதிவேற்றப்பட்டது என்பன போன்ற விவரங்கள் அக்கோப்பினைப் பற்றிய தரவுகளில் சேமிக்கப்படும். சேமிக்கப்படும் பொருளைப்பற்றி அமேசான், தானாக சேர்க்கும் தரவுகளோடு, நமது தனிப்பயனுக்கான தரவுகளையும், நம்மால் சேர்க்கமுடியும்.

கொள்கலன்கள்

நாம் சேமிக்கும் பொருள்கள், கொள்கலனில் தான் போட்டுவைக்கப்படுகின்றன. கொள்கலன்களுக்கு வெளியே எந்தவொரு பொருளையும் சேமிக்கமுடியாது. கொள்கலன்களை, கோப்புச்சேமிப்பகத்தின் மூலகோப்பகத்தோடு ஒப்பிடலாம். சேமிக்கப்படும் பொருள்களை யாரெல்லாம் அணுகமுடியுமென்பதைத் தீர்மானிப்பதில் கொள்கலன்கள் முக்கியபங்குவகிக்கின்றன.

ஒரு கொள்கலனை உருவாக்கும்போது, அதற்கென ஒரு பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அக்கொள்கலன் அப்பிராந்தியத்தோடு மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். ஆனாலும், கொள்கலனின் பெயர், உலகளவில், தனிப்பட்ட பெயராக இருக்கவேண்டும். வேறொரு பிராந்தியத்திலிருக்கும் கொள்கலனின் பெயரைக்கூட பயன்படுத்தமுடியாது.

திறப்புகள்

கொள்கலன்களில் சேமிக்கும் ஒவ்வொரு பொருளையும் தனித்து அடையாளம் காணவும், அப்பொருளை இற்றைப்படுத்தவும், அழிக்கவும் திறப்புகள் பயன்படுகின்றன. கொள்கலனின் பெயர், திறப்பு, பொருளின் பதிப்பெண் (version) ஆகியவற்றைக்கொண்டு, ஒரு பொருளைக் கண்டறியலாம். எடுத்துக்காட்டாக, “http://bucket.s3.amazonaws.com/myimage/2017/chennai.jpg?versionId=3452t5923” என்ற சுட்டியில்,

  • bucket – கொள்கலனின் பெயர்
  • myimage/2017/chennai.jpg – பொருளுக்கான திறப்பு
  • 3452t5923 – பொருளின் பதிப்பெண்

பிராந்தியங்கள்

ஒவ்வொரு கொள்கலனும், அது எந்த பிராந்தியத்தில் உருவாக்கப்பட்டதோ, அதே பிராந்தியத்திலேயே சேமிக்கப்படுகிறது. எனவே, கொள்கலன்களை உருவாக்குவதற்கான பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, நமக்கு அருகாமையிலுள்ள பிராந்தியத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும், ஒரு பிராந்தியத்தில் சேமிக்கப்படும் பொருள்களை, நாமாக வேறொரு பிராந்தியத்திற்கு மாற்றினாலேயொழிய, அவை அப்பிராந்தியத்தை விட்டு வெளியேறுவதில்லை.

%d bloggers like this: