தட(ள)ம் மாறும் இந்திய வங்கிகள் – யார் காரணம்?

ஏப்ரல் 8, 2014

கணினித் துறையில் ஒரு மிக முக்கிய நாள். தனது இயங்குதள பதிப்புகளிலேயே புகழ் பெற்றதும், நீண்ட நாட்களாய் புழக்கத்தில் இருக்கும் பெருமை பெற்றதும் ஆகிய Windows XP இயங்குதளத்திற்கான ஆதரவை மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் அன்றுடன் நிறுத்திக் கொண்டது.

இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகப் போவது வங்கித் துறை தான். இன்று உலகில் உள்ள பெரும்பாலான தன்னியக்க வங்கி இயந்திரங்கள் (ATM) Windows XP -ஐ அடிப்படையாகக் கொண்டு தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. Windows XP காலாவதியான பிறகு, அவை எப்படிப்பட்ட பாதுகாப்பு சீர்குலைவுகளுக்கு உள்ளாகும் என்று யாராலும் கணிக்க இயலவில்லை.

பிற நாடுகளின் வங்கிகள் பலவும் மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்திற்கு கோடிகளைக் கொட்டிக் கொடுத்து Windows XP தளத்தின்கான நீட்டிக்கப்பட்ட ஆதரவைப் பெற முயற்சி செய்கிறன.

ஆனால், நமது இந்திய வங்கிகள் அப்படிப்பட்ட ஆதரவு பெறுவதில் பெரிதாய் முனைப்பு காட்டவில்லை. மாறாக, அதன் மாற்றுத் தீர்வான லினக்ஸ் இயங்குதளங்களுக்கு மாறிக் கொள்ள முயன்று வருகிறன.

“இந்தியாவில் இன்று 1,15,000 ATM இயந்திரங்கள் உள்ளன. ஆனால், Windows XP-இன் முடிவு வங்கிகளையோ அல்லது இயந்தரங்களையோ பாதிக்காது. XP இல்லாத உலகிற்கு அவை தயாராகி விட்டன” என்கிறது இந்திய வங்கிகள் கூட்டமைப்பு (Indian Banks Association (IBA).)

Linux-ATM-Windows-XP-Support

மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் Windows XP இயங்குதளத்திற்கான ஆதரவை நிறுத்தினாலும், Windows XP Embedded பதிப்பிற்கான ஆதரவை 2016 வரை அளிக்கும். பெரும்பாலான வங்கி இயந்திரங்கள் Windows XP Embedded பதிப்பில் உள்ளவை. ஆகையால், இன்னும் சில காலம் ATM இயந்திரங்கள் மாறாது என்று தெரிகிறது.

சில வங்கிகள் ஏற்கனவே Windows 7 தளத்திற்கு மாறி விட்டன. சில Windows 7 அல்லது லினக்ஸ் இயங்குதளங்களுக்கு மாற முயன்று வருகிறன. வன்பொருள் மற்றும் மென்பொருள் மாற்றங்கள் மற்றும் அதற்கான செலவுகள் தான் வங்கிகளுக்கு பெரும் தலைவலியாக இருக்குறது. ஆனால், வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த மாற்றங்களால் பயன்பெறுவர்.

“வங்கிகள் ஏற்கனவே தயாராகி விட்டன. எந்த வங்கியும் மூடும் நிலைக்கு வராது. பழைய ATM களில் பிரச்சனை வரலாம். புதியவற்றில் பிரச்சனைகளுக்கு சாத்தியமில்லை” என்கிறார் வங்கித் துறையில் முதன்மை நிர்வாகியாக இருக்கும் MV Tanksale.

பல இந்திய வங்கிகள் தாமாக ATM களை இயக்குவதில்லை. மாறாக, Diebold, NCR முதலிய நிறுவனங்களிடம் புறத்திறனீட்டம் (outsourcing) முறையில் விட்டுவிடுகிறன.

“இந்தியாவைப் பொறுத்தவரை எல்லா ATM களும் இணையத்துடன் இணைக்கப்படவில்லை. எனவே, அதனை உடைக்க (Hack) வங்கியின் பிணைப்பினுள் புக வேண்டி இருக்கும். ஆனாங், அது அவ்வளவு எளிதானது அல்ல” என்கிறார் Diebold நிறுவனத்தின் தேசிய மேலாளர் கிரிஸ் சாவன் (Girish Chavan).

அவரது கூற்று நம்பிக்கையளித்தாலும், இன்றைய கணினி உள்நுழைத் தாக்குனர்கள் (Hacker) திறனை மிகவும் குறைத்து மதிப்பிடுகிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. சமீபத்தில் நடந்த Chaos Computing Congress மாநாட்டில் ஐரோப்பிய Hackers சிலர் தீங்கு விளைவிக்கும் நச்சுநிரல் பொருந்திய விரலிகளின் துணைகொண்டு (Malware loaded USB Drives) பணம் திருடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. Windows 8 தளத்தை விட Windows XP தளம் தீநிரலால் முடங்கும் அபாயம் எட்டு மடங்கு அதிகம்.

Windows XP காலாவதியாவதைப் பற்றி இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) சமீபத்தில் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. “Windows XP -இல் இயங்கும் கணிணிகள் தாக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். மைக்ரோசாப்ட் உதவியின்றி அவற்றைத் தடுப்பது கடினம். எனவே, பணிகள் பாதிக்கப்படும் அபாயம் நேரலாம்” என்று எச்சரிக்கிறது அந்த சுற்றறிக்கை.

Vortex என்னும் இந்திய நிறுவனம் குறைந்த சக்தியில் லினக்ஸ் மூலம் இயங்கும் ATM இயந்திரங்களை Ecoteller எனும் பெயரில் தயாரிக்கிறது. பல வளரும் நாடுகளில் இந்த இயந்திரத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாய் தமிழக அரசு ஒரு அரசு ஆணையைப் பிறப்பித்துள்ளது.

“அனைத்து தமிழக அரசு துறைகளும் BOSS லினக்ஸ் தளத்தை முதன்மை இயங்குதளமாக பயன்படுத்துவதைத் துவங்க வேண்டும். கட்டற்ற BOSS பயன்படுத்துதல் மூலம், Windows முதலிய தனியுரிமை மென்பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கலாம். இதன் மூலம் அதிக அளவிலான அரசு பணம் சேமிக்கப்படும்.” என்று அந்த அரசாணை பரிந்துரைக்கிறது.

மூலம் :
கட்டுரை : thehackernews.com/2014/03/indian-banks-switching-to-linux-rather.html

தமிழக அரசாணை : cms.tn.gov.in/sites/default/files/gos/it_e_1_2014.pdf

%d bloggers like this: