கணிச்சொற் விளக்கம்

நிரல்

 

குறிப்பிட்ட பணியினை செய்திடும் பொருட்டு கணினிக்கு இடப்பட வேண்டிய ஏவற்களின் தொகுப்பை நிரல் என்கிறோம். இதனை செய்நிரல் எனவும் வழங்குவர். நிரல் எழுதுவதை தொழிலாக கொண்டவர் நிரலாளர் ஆவார். இங்ஙனம் நிரலாக்குதற்கு பல்வேறு நிரலாக்க மொழிகள் துணை புரிகின்றன. சி, சி++, பைதான், ஜாவா, பேர்ல், ரூபி, பிஎச்பி இவற்றுள் குறிப்பிடத் தக்கவை.

மென்பொருள்

குறிப்பிட்ட பயனைக் கருத்திற் கொண்டு இயற்றப்படும் நிரட் கோப்புகளின் ஆவணமாக்கத்தோடு கூடிய முறையானத் தொகுப்பு மென்பொருள் ஆகும். மென்பொருட்கள் மூல வடிவிலும் முறையாக ஒடுக்கப்பட்ட இரும வடிவிலும் கிடைக்கும்.

நிரலகம்

மென்பொருள் உருவாக்கத்தின்போது குறிப்பிட்ட பணிகளை செய்ய வல்ல நிரட் துண்டுகளை பல இடங்களிலும் பயன்படுத்த நேரிடும். அங்ஙனம் பல இடங்களிலும் மீண்டும் மீண்டும் இத்தகைய நிரட் துண்டுகளைப் பயன்படுத்தாது அவற்றை மையப்படுத்தி ஒரு இடத்தில் காத்து பின்னர் வேண்டிய விடத்தில் அவற்றை அழைத்து பயன்படுத்திக் கொள்வது வழக்கம். இங்ஙனம் மென்பொருள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் நிரட் துண்டுகள் காக்கப்படும் இடத்திற்கு நிரலகம் என்று பெயர். உதாரணத்திற்கு குனு/ லினக்ஸ் இயங்கு தளங்களில் இன்று பரவலாக பயன்படுத்தப் படும் குநோம் பணிச்சூழல் ஜிடிகே எனப்படும் நிரலகத்தினைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.

பயன்பாடு

கணினியினை பயன்படுத்துவோருக்குத் தேவையானப் பணிகளைக் கருத்திற் கொண்டு உருவாக்கப்படும் மென்பொருட்களுக்கு பயன்பாடுகள் என்று பெயர். செயலிகள் எனவும் இவை வழங்கப் பெறுகின்றன. இணையம் நெடுகே பயணிக்க உதவும் பயர்பாக்ஸ உலாவி, உரையாக்கத்திற்கு பயன்படும் ஓபன்ஆபீஸ் முதலானவை பரவலாக பயன்படுத்தப் படும் பயன்பாடுகளுள் குறிப்பிடத்தக்கவை.

பொதி

குனு லினக்ஸ் இயங்கு தளங்களில் மென்பொருட்களை எளிதில் நிறுவிடும் பொருட்டு முன்னரே அவற்றை முறையாக நிறுவத்தக்க ஒரு கோப்பாக தொகுத்து தருவது வழமை. நிறுவத் தயாரான நிலையிற் கிடைக்கும் இத்தகைய மென்பொருட் கோப்புகள் பொதிகள் என வழங்கப்பெறுகின்றன.

கட்டற்ற மென்பொருள்

 

ஒரு மென்பொருளானது அதனைப் பயன்படுத்துவோருக்கு, அதனை உருவாக்கியவரைகச் சாராமல், எப்பொருட்டும் பயன்படுத்த, கற்க, மாற்ற, மறுவிநியோகம் செய்ய அனுமதிக்குமானால் அது கட்டற்ற மென்பொருள் ஆகும். பெரும்பாலும் இலவசமாக இணையத்திலிருந்து பதிவிறக்கக் கிடைக்கும் இவற்றை வணிக ரீதியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணம்: குநோம் பணிச்சூழல்.

திறந்த மூல மென்பொருள்

கட்டற்ற மென்பொருளுக்கும் திறந்த மூல மென்பொருக்கும் இடையே அதன் ஆதரவாளர்களிள் நடைமுறை அணுகுமுறையைத் தவிர்த்து வேறெதுவும் வித்தியாசம் இல்லை. திறந்த மூல ஆதரவாளர்கள் தற்சமயம் மாற்றில்லாத தனியுரிம மென்பொருட்களோடு கூட்டாக செயல்படுவதை பொதுவாக ஏற்பர். கட்டற்ற மென்பொருள் ஆதரவாளர் அதற்கு மாற்றான கட்டற்ற மென்பொருளை உருவாக்குவதே தீர்வெனும் நிலைப்பாடு கொள்வர்.

பொதுவுடைமை மென்பொருள்

பதிப்புரிமை பெறாத மென்பொருட்களை பொதுவுடைமை மென்பொருளாக கொள்ளலாம். இவை கட்டற்ற மென்பொருளாக இருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லாமலும் இருக்கலாம். கட்டற்று இருக்கும் பொதுவுடைமை மென்பொருளொன்றைப் பெறும் ஒருவர் அதனை மீண்டும் விநியோகிக்கும் பொழுது எப்படி வேண்டுமானாலும் மாற்றி விநியோகிக்க இயலும். அவை கட்டற்றுதான் இருக்க வேண்டும் எனும் கட்டாயம் இல்லை. மேலும் பொதுவுடைமை என்பது சட்ட ரீதியாக காபிரைட் இல்லாததை குறிக்க பயன்படுத்தப்படுவதால் இப்பதப் பிரயோகத்தை குறிக்க இச்சொல்லை தவிர்ப்பது நல்லது.

இலவச மென்பொருள்

பெரும்பாலும் பயன்படுத்துதற்கு மட்டும் இலவசமாக கிடைக்கும் மென்பொருட்கள் இவை. கட்டற்ற மென்பொருளின் இலக்கணங்களை ஏற்றொழுகாது. இலவச மென்பொருள் என்பதை கட்டற்ற மென்பொருளோடு தொடர்பு படுத்துவது வேறு வேண்டாத பொருட்களுக்கு இட்டுச்செல்லுமாகையால் உகந்தது அல்ல.

தனியார் மென்பொருள்

ஒரு நிறுவனமோ அல்லது தனிநபரோ தமது தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி கொள்ளும் பொருட்டு தனிப்பட்ட நிலராளரையோ நிரலாக்கும் நிறுவனத்தையோ அணுகி செய்துக் கொள்ளும் மென்பொருளை இவ்வாறு அழைப்பது வழக்கம்.

ஆமாச்சு

 

கட்டற்ற மென்பொருள் தழைத்தோங்க உழைப்பவன் –

ஆமாச்சு இன்பிராசாப்ட் சர்வீசஸ் மூலம் கட்டற்ற மென்மக் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்கிறேன் – கட்டற்ற முறையில் தமிழ்க் கணிமை வளர நாட்டம் கொண்டு இயற்றல், மொழிபெயர்த்தல், பயிற்றுவித்தல், நிரலாக்குதல், ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறேன்.

 

 

இவற்றை அடையும் பொருட்டு உற்றோருடன் யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளையைத் yavarkkum.org தோற்றுவித்திருக்கிறேன்.

 

 

%d bloggers like this: