அடுத்து கணினிப் பார்வை அமைப்புகளைத் தொழில்துறையில், மேலும் குறிப்பாகத் தயாரிப்பில், பயன்படுத்தும் சில வழிமுறைகளைப் பார்ப்போம்.
பார்வை சோதனை அமைப்புகள் என்றால் என்ன?
பார்வை சோதனை அமைப்புகள் (இயந்திரப் பார்வை அமைப்புகள்) பல்வேறு தொழில்துறை மற்றும் உற்பத்தி வேலைகளில் பட அடிப்படையிலான சோதனையைத் தானியங்கி முறையில் வழங்குகின்றன. 2D மற்றும் 3D இயந்திரப் பார்வை அமைப்புகள் இப்போது பொதுவாகத் தானியங்கி சோதனை (automated inspection), எந்திரன் வழிகாட்டுதல் (robot guidance), தரக் கட்டுப்பாடு (quality control), தரம் மற்றும் அளவு வாரியாகப் பிரித்தல் (sorting) மற்றும் பல வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
பார்வை சோதனை அமைப்புகள் என்ன செய்ய முடியும்
இம்மாதிரி திறன் சோதனை அமைப்புகள் (intelligent inspection systems) படக் கருவிகள் மற்றும் ஒளி அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளன. கணினிப்பார்வை அமைப்புகள் பாகங்களை அளவிட முடியும், பாகங்கள் சரியான நிலையில் உள்ளனவா என்று பார்க்க முடியும், மற்றும் பாகங்களின் வடிவத்தைக் கண்டறிய முடியும். மேலும், அதிவேகத்தில் பாகங்களை அளவிடவும் மற்றும் வகைப்படுத்தவும் இயலும்.
பொதியல் சோதனை (Packaging inspection)
மாத்திரைகள் மற்றும் பொதிமருந்து மாத்திரைகளை (capsules) புட்டிகளில் நிரப்பும் போது துல்லியமாக எண்ணுவது மருந்து தயாரிப்பில் மிகவும் முக்கியமான வேலை. மேலும் உடைந்த அல்லது ஓரளவே உருவான மாத்திரைகளைக் கண்டுபிடித்து நீக்க வேண்டும்.
ஒரு மாத்திரை குறைபாடுடையதாகக் கருதப்பட்டால் அதை நீக்குவதையும் மற்றும் எண்ணுவதையும் கணினிப்பார்வை ஆய்வு முறை செயல்படுத்துகிறது.
துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி (CMOS – Complementary Metal Oxide Semiconductor) பட உணரிகள் கொண்ட உயர் செயல்திறன் படக்கருவிகள் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக விலை குறைந்துள்ளன. இது உற்பத்தியின் போது உயர் தெளிவுத்திறனில் (higher resolution) ஆய்வு செய்ய வழி செய்கிறது.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: தயாரிப்பு மற்றும் பாகங்களைத் தொகுத்தல் (Product and Component Assembly) முப்பரிமாணப் புள்ளி மேகம் (3D Point Cloud). கலனிலிருந்து பாகங்களை எடுத்தல் (Bin Picking) இப்போது இயந்திரப் பார்வையைப் பயன்படுத்துகிறது.